Showing posts with label Modi. Show all posts
Showing posts with label Modi. Show all posts

Thursday, May 2, 2019

மதவெறி விஷத்தைக் கக்கும் மோடியின் தேர்தல் பிரச்சாரம்



சீத்தாராம் யெச்சூரி
சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம் என்று உலகம் முழுதும் உள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் போராட்டங்களின்மூலம் ஒருவர்க்கொருவர் ஒருமைப்பாட்டை இம் மே தினத்தன்று தெரிவித்துக்கொண்டுள்ள அதே சமயத்தில், அத்தகைய மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்திடும் விதத்தில் பாஜகவும் நரேந்திர மோடியும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் மதவெறி விஷத்தை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகளில் முதல் மூன்று கட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. இவற்றில் மொத்தம் உள்ள 543 இடங்களில், 302 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றுள்ளதைப் பார்த்தோம். இந்தத் தொகுதிகளில் பாஜக தற்போது 113 இடங்களைப் பெற்றிருக்கிறது.
அடுத்து நான்கு கட்ட வாக்குப் பதிவுகளில் மீதம் உள்ள 241 இடங்களுக்குத் தேர்தல் நடந்து, வரும் மே 19உடன் நிறைவடைகின்றன. இவற்றில் பாஜக, தற்போது 161 இடங்களைப் பெற்றிருக்கிறது. அதாவது, மூன்றில் இரண்டு பங்கு இடங்கள். இந்த இடங்களைப் பாஜக-வினால் தக்கவைத்துக் கொள்ள முடியாது போகுமாயின், அதனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அவா அதற்கு நிறைவேறாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் நடைபெற்றுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவுகளிலும், அதற்குத் தற்போது இருக்கும் இடங்களில் 50 சதவீதத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனைப் பாஜகவும் மிகவும் துல்லியமாக உணர்ந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக, அடுத்த நான்கு கட்ட வாக்குப் பதிவுகளின்போதும், மக்கள் மத்தியில் மதவெறி விஷத்தைக் கக்கியாவது, மக்களின் வாக்குகளைப் பறித்திட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் எதையுமே நிறைவேற்றாது மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதும், அதன் மிகவும் பயங்கரமான மற்றும் மிகவும் பரிதாபகரமான ஆட்சி பரிபாலனமும், இந்தியப் பொருளாதாரத்தையே முழுமையாக நாசப்படுத்தியுள்ளமையும், ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமும், ஜிஎஸ்டி கொண்டு வந்ததன் மூலமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் மீது பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்திருப்பதும், மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மத்தியில் மிகவும் ஆழமான அளவிற்கு சகிப்பின்மையை உருவாக்கியிருப்பதும் இந்த மோடி  அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடையே கணிசமான அளவிற்கு எதிர்ப்பு உணர்வைக் கட்டி எழுப்பியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் ஒரு பக்கத்தில் நம் ராணுவத்தினரின் வீரதீரச் செயல்களைக் கூறி மக்களின் வாக்குகளைக் கோருவதுடன் தங்களால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்திட முடியும் என்று காட்டிக் கொண்டு வருகின்றன. (இது குறித்து ஏற்கனவே நாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளோம்.)
மற்றொரு பக்கத்தில் மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறிவிட்டு அதன்மூலம் வாக்குகளைக் கவர்ந்திட முயல்கின்றன. இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும்கூட இவர்கள், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  தங்களுடைய வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இவற்றில் அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 370 மற்றம் 35-ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்தல் மற்றும் நாடு முழுதும் ஒரேமாதிரியான உரிமையியல் (சிவில்) சட்டம் கொண்டுவருதல் முதலானவையும் அடங்கும். மேலும் கூடுதலாக, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில்,  முஸ்லீம்களுக்குக் குடியுரிமையை மறுக்கும் விதத்தில் மத அடிப்படையில் மிகவும்  மோசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவையும் சட்டமாக நிறைவேற்றிவிடுவோம் என்றும் உறுதிமொழி அளித்திருக்கின்றனர்.
வெறிபிடித்த வெறுப்புப் பிரச்சாரம் மூலம் மக்களிடையே துவேஷத்தை உருவாக்கும் முயற்சி
இவ்வாறான இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கிணங்க, தற்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் இந்து வகுப்புவாத வாக்குவங்கியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்கிற மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியலில் இறங்கியுள்ளனர். இவ்வாறு நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும்  மிகவும் கேடுகெட்ட முறையில் மதவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், தேர்தல் ஆணையமோ நரேந்திர மோடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இதுவரையிலும் முன்வரவில்லை. இது இந்திய ஜனநாயக நலனுக்கான தீய அறிகுறியாகும்.
இந்துத்துவா வகுப்புவாத வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான், பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது நோயாளியாக இருப்பதாகக் கூறி பிணையில் வந்துள்ள பிரக்யா சிங் தாகூர் என்கிற சாமியாரினி மத்தியப் பிரதேசம், போபால் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சங்கதியாகும். இவ்வாறு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டியுள்ள நரேந்திர மோடி, அவரை, நம் நாகரிகப் பாரம்பர்யத்தின் அடையாளம் என்று புகழ்ந்திருக்கிறார்.
மோடியின் புகழுரையால் புளகாங்கிதம் அடைந்துள்ள சாமியாரினி பிரக்யா சிங் தாகூர், தன் மதவெறிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு இந்த அரசியல் மேடையையும் பயன்படுத்தத் துவங்கி விட்டார். ‘மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புக்குழு’வின் தலைவராக இருந்த நேர்மையான மற்றும் துணிவு மிக்க ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்காரே அவர்களையே – அவர்தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரையே - மிகமோசமாகத் திட்டிக் கண்டிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டார். ஹேமந்த் கர்காரேதான் மாலேகான் வெடிகுண்டு விபத்து தொடர்பான வழக்கைப் புலனாய்வு செய்து, இவற்றினைச் செய்தது பிரக்யா சிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவா வெறியர்கள் என்பதை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அவர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தவர்.  பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நபர், என்ன தைர்யம் இருந்தால் ‘ஓர் இந்து தேசத்தில்,’ ‘இந்து மதத் தலைவரான’ என்மீது ஹேமந்த் கர்காரே வழக்கு தொடர்வார்! நான் இட்ட ‘சாபம்’தான் அவர் இறப்பதற்குக் காரணம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தரம் தாழ்ந்த பேர்வழியாவார். 26/11 மும்பை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவினருக்கு கர்காரே பிரதான குறியாக இருந்தவர் என்பதும், அவர்களால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இத்தகைய மதவெறியர்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களாக அமைந்துள்ளன.    
முன்னாள் மத்திய அரசு ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர், குடியரசுத் தலைவருக்கு இவர் தொடர்பாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில், இவர் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கும்,  அதிலும் குறிப்பாக, அவரைத் தேர்வு செய்திருப்பதை மிகவும் உற்சாகத்துடன்  நாட்டின் பிரதமரே வரவேற்றிருப்பதற்கும் தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் மேலும் சக குடிமக்களுக்கு, நாட்டின் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் பிரிவினை சூழ்நிலை உருவாக்கப்பட்டுப் பரப்பப்பட்டு வருவதை நிராகரித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள், நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து மதத்தினரும் தங்கள் மத வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு நின்று, நமக்கு நாமேதான் நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டோம் என்றும் அதனை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும், என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான தங்கள் கடிதத்திற்கு இவர்கள் அளித்துள்ள தலைப்பு, ‘நம் பாரம்பர்யம், பயங்கரவாதத்தால் உருவானது அல்ல,’ என்று குறிப்பிட்டிருப்பதுடன் மோடி மீது அவரது செயவ்களுக்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி, மேலும் வியப்பூட்டும் விதத்தில் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். என்ன தெரியுமா? இந்துக்கள் என்பவர்கள் எந்தக்காலத்திலுமே வன்முறையாளர்களாக இருந்ததில்லையாம்! தான் பிரதமர் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, மோடி இந்தியாவின் வரலாறு என்பது மிகக் கொடூரமான யுத்தங்களும் போர்க் களங்களும் நிறைந்தவை என்பதை அழிக்கப் பார்க்கிறார்.  ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரான மோடி, போதனை செய்து வந்த ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரு புராணங்களுமே அல்லது இதிகாசங்களுமே வன்முறையுடன் நிகழ்ந்த யுத்தங்களும் மோதல்களும் நிறைந்தவை என்பதை எப்படி மறந்தார் என்பதே ஆச்சர்யமாகும். நம்முடைய வரலாற்றிற்கு தற்போது ஆதாரமாக இருப்பதே இந்த இரு இதிகாசங்களும் மட்டும்தான். இந்திய வரலாற்றில் ‘மௌரியப்’ பேரரசின் முதல் மாமன்னராகத் திகழ்ந்த அசோகர், கலிங்கப் போரின்போது ஏற்பட்ட ரத்தக் களரியைக் கண்டு மனம் வெதும்பி, பின்னர் புத்தமதத்தைத் தழுவியதை நினைவு கூர்க.   இந்துயிசத்தைத் துறந்து, புத்திசத்தைத் தழுவிய பின்னர்தான் அசோகர், சகிப்புத்தன்மை, பிறரிடம் பரிவு காட்டுதல் மற்றும் பரஸ்பரம் மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றின் மூலமாக  வாழ்க்கையின் உன்னத லட்சியத்தைக் கண்டார்.   தன்னுடைய இந்தச் செய்தியை ஸ்தூபிகளில் செதுக்கப்பட்ட வெட்டெழுத்துக்கள் மூலமாக உலகம் முழுதும் கொண்டு சென்றார். அந்த ஸ்தூபிகளில் உள்ள வெட்டெழுத்துக்களில், நான், மக்களை படைகளைக்கொண்டு கட்டாயப்படுத்தி வெல்வதைவிட, அவர்களிடையே அன்பு செலுத்துவதன் மூலமாக (தர்மத்தின் மூலமாக) அவர்களை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்,என்று செதுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், அசோகரின் அடையாளமாக விளங்கும் சக்கரம் இன்றையதினம் நம் மூவர்ணத் தேசியக் கொடியில்வ பெருமைமிகு இடத்தைப் பெற்றிருக்கிறது. அசோகரின் ஸ்தூபிகளில் உள்ள நான்கு சிங்கங்கள்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ அடையாளமாகும். அவருடைய ஒரு ஸ்தூபியில் உள்ள பொன்மொழிகளில் ஒன்று, ஒருவன் தன் இனத்தின் மீதான அர்ப்பணிப்பின் காரணமாக, அதனைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனை மதிப்பதும், அதே சமயத்தில் இதர இனங்களைக் கண்டிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவானேயானால் அவன் தன் சொந்த இனத்திற்கே மிக அதிகமான அளவில் ஊறு விளைவிக்கிறான்,என்று கூறுகிறது.
ஆனால் ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பலின் இன்றைய நடவடிக்கைகள் அனைத்தும் அசோகர் ஸ்தூபிகளில் பொறித்து வைத்துள்ள பொன்மொழிகளுக்கு முற்றிலும் எதிரானவைகளாக இருந்து வருகின்றன.
அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்” - “HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”
இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என இப்போது மோடி அடக்கி வாசித்தாலும், இந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருவதென்பதற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. வினாயக் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துத்துவா என்னும் சொல்லை உருவாக்கியவர். ஒரு தத்துவார்த்த அரசியல் கொள்கைத்திட்டத்திற்கான குணத்தையும் அதற்கு அவர் அளித்திட்டார். இவ்வாறு இவர் அளித்திட்ட இந்துத்துவா கொள்கைக்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.  இதனை எய்துவதற்கு இவர் முன்வைத்த முழக்கம்தான், அனைத்து அரசியலையும் இந்துமயமாக்குங்கள், இந்துஸ்தானை ராணுவமயமாக்குங்கள்(“HINDUISE ALL POLITICS, MILITARISE HINDUDOM”) என்பதாகும்.   இதனால் உத்வேகம் பெற்றவரும், ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் கே.பி. ஹெக்டேவார் அவர்களின் மூளையாகச் செயல்பட்டவருமான பி.எஸ். மூஞ்சே என்பவர், பாசிஸ்ட் சர்வாதிகாரி பெனிடோ முசோலினியை சந்திப்பதற்காக, இத்தாலிக்குப் பயணம் செய்தார். இவர்களிடையே சந்திப்பு 1931 மார்ச் 19 அன்று நடைபெற்றது. மூஞ்சே தன்னுடைய சொந்த நாட்குறிப்பில்  இதனை 1931 மார்ச் 20 என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர் எழுதியுள்ள தன்னுடைய நாட்குறிப்பில் இத்தாலியப் பாசிசம் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும், தன்னை மிகவும் ஈர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா திரும்பிய பின்னர், மூஞ்சே, 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்வி சங்கம் (Central Hindu Military Education Society) என்ற ஒன்றை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும்.  இவை  அனைத்தும் பயங்கரவாதம் தொடர்பான ரேடாரின் மூலம் புலனாய்வு செய்யப்பட்டவைகளாகும். ஆர்எஸ்எஸ்-இன் குருவாகத் திகழும் கோல்வால்கர், 1939இல் நாசி பாசிசத்தின்கீழ்  ஹிட்லர் யூதர்களைக் களையெடுத்த நடவடிக்கைகளைக் கண்டு களிபேருவகை கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் சிஷ்யர்களுக்கு, இந்துஸ்தானில் உள்ள நாம் கற்றுக் கொள்ளவும், ஆதாயம் அடையவும் இவை நமக்கு நல்ல பாடங்களாக  அமைந்திடும், என்று கூறியிருக்கிறார். இதன்பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து, அவர் 1970இல், பொதுவாகக் கூறுவதென்றால்6, தீய சக்திகள் (இங்கே இந்துக்கள் அல்லாதவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்) நல்ல விதமாக, இனிய மொழியில் கூறினால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.  அவர்களை வன்முறை மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும், என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்துத்துவா மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள்
2000, ஜனவரி 22இல் தேதியிட்ட எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி இதழில் வெளியாகியிருந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மர்சியா கசோலரி (Marzia Casolari),  இந்துத்துவா குழுக்களின் மீது பாசிஸ்ட் தத்துவார்த்த செல்வாக்குகள் இருப்பதை சான்றாவணங்களின் மூலமாக நிறுவியிருக்கிறார்- இந்துத்துவாவின் தத்துவார்த்தத் திட்டங்களையும் கொள்கைகளையும் இத்தாலியப் பாசிசமும், ஜெர்மன் நாசிசமும் வடிவமைத்திருக்கின்றன என்று அக்கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் அவர், 1920இன் தொடக்கத்தில் துவங்கி, இரண்டாம் உலகப் போர் வரையிலும், இந்து தேசியவாதிகள், பாசிஸ்ட் இத்தாலியின் அரசியல் எதார்த்த நிலைமைமையும் அதன் பின்னர் நாசி ஜெர்மனியையும் தங்களுக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக விளங்குவதைப் பார்த்தார்கள், என்றும் கூறுகிறார். இந்துத்துவா சித்தாந்தத்தில் பாசிஸ்ட் செல்வாக்கு எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்றால், அது, நாட்டில் வாழ்கின்ற இதர இனத்தினரையும், மதத்தினரையும் தங்கள் எதிரிகளாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ‘உள்ளார்ந்த எதிரி’ என்கிற சொற்றொடர் ஏன்கனவே சாவர்க்கரின் இந்துத்துவா சித்தாந்தத்திலும் ஒளிந்திருக்கிறது என்பது உண்மைதான் என்ற போதிலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மன் இனவெறிக் கொள்கையும், ஜெர்மனியின் யூதர்கள் பிரச்சனையை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, பாசிஸ்ட் தத்துவார்த்தத்தின் அடிப்படையில் மிகவும் துல்லியமானமுறையில். அந்நாட்டின் பாசிசத்தைத் இந்தியாவிற்கேற்ப மாற்றி, ‘உள்ளார்ந்த எதிரி’ கருத்தாக்கத்தை வளர்த்தெடுக்க கொண்டு சென்றுள்ளன.
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தத்துவார்த்தப் பின்புலம் என்பது முசோலியின் பாசிசம் மற்றும் ஹிட்லரின் நாசிசம் ஆகியவற்றுடன் மிகவும் ஆழமானமுறையில் பின்னிப்பிணைந்தது என்று உரிய சான்றாவணங்கள் மூலமாக, இவ்வாறு மிகவும் ஆணித்தரமான முறையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்பிட இவ்வாறு இந்துத்துவா தத்துவார்த்த அடிப்படை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அத்தகைய இந்தியாவை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூஞ்சே சொல்வது என்ன தெரியுமா?
அந்தக் காலத்து சிவாஜி போன்ற சர்வாதிகாரி அல்லது இந்தக்காலத்து முசோலினி அல்லது ஹிட்லர் போன்று சர்வாதிகாரிகள் இல்லாமல் இத்தகைய தத்துவார்த்த அடிப்படையில் நாம் நம் சொந்த இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட முடியாது.  … ஆனால் இவ்வாறு கூறுவதால் அத்தகைய சர்வாதிகாரிகள் உருவாகும்வரை நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாம் அதற்கானதொரு திட்டத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இத்தாலியில் ‘பாசிஸ்ட்டுகள்’ என்ன செய்தார்களோ, ஜெர்மனியில் ‘நாஜிக்கள்’ என்ன செய்தார்களோ அவற்றை எதிர்கால இந்தியாவில் சங்கிகள் செய்வார்கள் என்று நம்புவதாக. மூஞ்சே கூறியிருப்பது என்பது மிகையான ஒன்று அல்ல.
மூஞ்சே, 1934இல் போன்ஸ்லா ராணுவப் பள்ளி என்னும் தன்னுடைய சொந்த நிறுவனத்தை அமைப்பதற்கான வேலையைத் துவக்கினார். இதற்காக, அதே ஆண்டில், மத்திய இந்து ராணுவக் கல்விச் சங்கத்தையும் அமைத்தார்.  அதன் நோக்கம், இந்துக்கள் மத்தியில் ராணுவரீதியிலான புத்துயிராக்கத்தைக் கொண்டுவர வேண்டும் மற்றும் இந்து இளைஞர்களை இந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையில் வலுவானவர்களாக உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
அப்போது இந்து மகா சபையில் தலைவராக இருந்த சாவர்க்கரும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையையே இந்துத்துவாவின் கொள்கைக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொண்டிருப்பதையும் கட்டுரையாளர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். சாவர்க்கர் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்திலும் ஹிட்லரின் யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர் இந்தியாவில் முஸ்லீம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை 1938 அக்டோபர் 14 அன்ற அவர் கீழ்க்கண்டவாறு பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு தேசம், அங்கே பெரும்பாலானவர்களாக வாழ்பவர்களால் அமைக்கப்படுகிறது. ஜெர்மனியில் யூதர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் ஜெர்மனியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெர்மனியில் ஜெர்மானியர்களின் இயக்கம் தேசிய இயக்கமாக இருக்கிறது. ஆனால் அதுவே அங்கே வாழ்ந்த யூதர்களுக்கு ஒரு வகுப்புவாத இயக்கமாகும்.  
பின்னர் சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: தேசிய இனம் என்பது பெரும்பகுதியான பூகோளப் பகுதியை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அவர்களின் சிந்தனை, மதம், மொழி மற்றும் கலாச்சாரத்திலும் ஒற்றுமை இருந்திட வேண்டும். இதன் காரணமாகத்தான் ஜெர்மானியர்களும், யூதர்களும் ஒரே இடத்தில் வசித்த போதிலும் ஒரே நாட்டினராக – ஒரே தேசிய இனத்தினராக -   கருத முடியவில்லை.
பாஜகவைத் தோற்கடிக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்
நரேந்திர மோடியும் அவர் தற்போது அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளும் எங்கிருந்து உத்வேகம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் தேவை? தேர்தல் ஆதாயத்திற்காக ‘இந்துக்களின்’ பெயரால் இந்துத்துவா பயங்கரவாதிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தும் மாக்கியவெல்லியின் சூழ்ச்சியாகும். பாரதம் என்கிற இந்தியாவைப் பாதுகாத்திட இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ச.வீரமணி

Friday, January 4, 2019

பிரதமர் மோடி, வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம் -சீத்தாராம் யெச்சூரி பிர



தமம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் ஒரு ஜோடிக்கப்பட்ட நேர்காணலை வெளியிட்டிருப்பதன் மூலமாக தன் பசப்பு வார்த்தைகளை அரங்கேற்றத் தொடங்கிவிட்டார். 2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஓர் ஒளிமிகுந்த ஆண்டாக இருந்ததாக அவர் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதே போன்று இந்தியா ஒளிர்கி
றது என்று வாஜ்பாயி தம்பட்டம் அடித்தபின் 2004இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்பதை அனைவரும் அறிவோம். பிரதமர் மோடியும் இவ்வாறு ‘சுவரில் எழுதியிருந்ததைப்’ படித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த நேர்காணலில், பிரதமர் தானோ அல்லது தங்களுடைய பாஜக கட்சியோ 2014இல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்தோ மற்றும் அதில் ஒன்றைக்கூட இதுவரையிலும் ஏன் நிறைவேற்ற வில்லை என்பது குறித்தோ எதுவும் குறிப்பிடவே இல்லை. இதுதான் பின்-உண்மை (post-truth) என்கிற பிரச்சார உத்தியாகும். இதுபோன்ற பிரச்சார உத்தியின்போது, மக்கள் மத்தியில் பொய்த்தகவல்களை அவர்கள் நம்பக்கூடிய விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்படும்.
விவசாயக் கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு ஒரு தடவை விவசாயக் கடன் தள்ளுபடி என்று கோருவதை, லொல்லிபாப்” (“lollipop”) என்று மிகவும் தடித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் பிரதமர் குறிப்பிட்டார். கடன் தள்ளுபடிக்கான இந்தக் கோரிக்கை கடன் சுமைகளால் நசுங்கிக் கொண்டிருக்கின்ற விவசாயிகள், நாடு முழுதும் மிகவும் விரிவான  அளவில் போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே உருவாகியிருந்தது. விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்திருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மரணங்களைத் தடுப்பதற்கு, ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்வதன் மூலம், நமக்கு அன்னமிடும் உழவர்களைப் பாதுகாத்திட ஓரளவிற்கு உதவிடும். நாடு முழுதும் மிகவும் விரிவான அளவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை எழுப்பப்பட்டது. அது என்னவெனில், 2014இல் பிரதமர் அளித்திட்ட வாக்குறுதியின்படி, விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை, உற்பத்திச்செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும்  என்பதாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இதனை இவர்கள் செய்திடவில்லை. விவசாய நெருக்கடி இந்த அளவிற்கு ஆழமாகியிருப்பதற்கு, ஆட்சியாளர்கள் கிராமப்புற மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பதே நேரடியான காரணமாகும். இது, விவசாயம் அல்லாத பிரிவுகளில் உள்ள கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை அவர்களுக்குக் கிடைத்துவந்த வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதிலிருந்து நன்கு அறிய முடியும்.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு என்னும் சுனாமி இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக நாசப்படுத்திய ஒட்டுமொத்த அனுபவத்திற்கு எதிராக, பிரதமர் அதனை மாபெரும் வெற்றி என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் அதிசயமானவிதத்தில், இவ்வாறு பணமதிப்பிழப்பு காரணமாகத்தான் கறுப்புப்பணம் முழுவதும் வங்கி அமைப்புமுறைக்கு வந்துவிட்டது என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதைவிட மாபெரும் பொய்ப்பித்தலாட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. பிரதமரின் பணமதிப்பிழப்பு உத்தரவின்மூலமாக, கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுவந்த முதலைகள் எல்லாம், அவர்களின் ‘கறுப்புப்பணம்’ முழுவதையும் ‘வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு வகை செய்து தந்திருக்கிறார். இவ்வாறு, சட்டத்தை மீறி கறுப்புப்பணத்தை வைத்திருந்தவர்களை, சட்டரீதியாக வைத்துக்கொள்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறார்.
இவ்வாறு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, நம் நாட்டில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாமானிய மக்களாகும். நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் வேலையினை அளித்துவந்த முறைசாராத் தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது முறைசாராத் தொழில்கள்தான். பணமதிப்பிழப்பு இதில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துவிட்டது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளுடன்தான் தங்கள் இயல்புவாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி  அடைந்ததற்கும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே பிரதான காரணமாகும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் நள்ளிரவு சிறப்புக் கூட்டத்தொடரை பிரதமர் நடத்தினார்.  இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் புரட்சிகரமானதாக மாறும் என்றும், வரி வசூலிப்பதன் மூலமாக வருவாய் பெருகும் என்றும் கூறினார். வரி விதிப்பு வலை விரிவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனாலும் நிலைமை என்ன? மக்கள் தாக்கல் செய்திடும் அறிக்கைகள் (returns) அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் வரி வசூல் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2019 ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில், ஜிஎஸ்டி வசூல் என்பது சராசரியாக மாதத்திற்கு 96,800 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கிறது. இது பட்ஜெட் குறியீடான மாதத்திற்கு 1,06,300 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதைவிடக் குறைவேயாகும். அடுத்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக 1,34,900 கோடி ரூபாயாக இருந்திட வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறியீட்டை எட்டிட முடியும்.
பிரதமர் தன்னுடைய நேர்காணலில் ஜிஎஸ்டியையும் புகழ்ந்துதள்ளியிருக்கிறார். இது வரி வசூல் முறையை எளிதாக்கிவிட்டது என்றும், மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணம் அளித்திருக்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமானதாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தத் தொடங்கியபின்னர், நாட்டின் நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில்பிரிவுகள் முடங்கிவிட்டன. நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பினை அளித்து வந்தவை இந்த நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகளாகும்.  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர். மேலும் பிரதமர் நாட்டில் ஐநூறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர்கூறியிருக்கும் 500 பொருள்களில் 490 பொருள்களுக்கும் அதிகமானவற்றிற்கு எப்போதுமே வரி கிடையாது. எனவே இவ்வாறு இவர் பீற்றிக்கொண்டிருப்பதும் அபத்தமான ஒன்றேயாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம்
நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் கூறவில்லை. ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்தப் பிரதமர்தான் இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளுக்கு இவ்வாறு பத்து கோடி  பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, பெரிய அளவில் ஆலைகள் மூடல், முறைசாராத் தொழில்கள் அழிக்கப்பட்டமை, நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகள் நாசம் செய்யப்பட்டமை – இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையை உருவாக்கி இருக்கின்றன. கடந்த இருபதாண்டுகளில் இப்போதிருக்கக்கூடிய அளவிற்கு வேலையின்மைக் கொடுமை முன்னெப்போதும் இருந்ததில்லை என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இவற்றின்காரணமாக வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான தொழிலாளர்நல பீரோவின் ஆண்டறிக்கைகளும் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் அவை நாட்டிலுள்ள மிகவும் மோசமான எதார்த்த நிலைமைகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் என்பதால் இவ்வாறு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களின் எதிர்காலம், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இந்த இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்கால சிற்பிகள். இவர்களின் வீர்யத்தை இவ்வாறு அழித்திருப்பது என்பது நம் நாட்டின் எதிர்காலத்தையே ஆட்சியாளர்கள் நாசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே பொருளாகும்.
கூட்டுக் களவாணி முதலாளித்துவம்
பிரதமரின் நேர்காணலில், பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை.  2014க்கும் 2019க்கும் இடையே கார்ப்பரேட்டுகள் வங்கிகளிடம் வாங்கிய கடன் நான்கு மடங்காக அதிகரித்தது. கடன்களை வாங்கியபின் நாட்டைவிட்டே பறந்தோடிவிட்டார்கள். அவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுக்கின்றனர். அவற்றை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவோம் என்று பிரதமர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். ஆனால், இன்றுவரையில், எவரும் நம் நாட்டிற்குத் திரும்பிடவில்லை. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும், அவர்கள் பெற்ற கடன்களை மீளவும் வங்கிகளில் திருப்பிச் செலுத்தவும் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கமானது அவர்களின் கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டு வந்திருக்கிறது. மேலும் கூடுதலாக, அவ்வாறு தாங்கள் கடன்களைப் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாது தள்ளாடிக்கொண்டிருக்கும் வங்கிகளை, ஏலம் விடுவதன் மூலமாக, அதிக அளவில் ஏலத்தொகையைக் கூறுபவர்களிடம் கொடுத்திடும் வகையில், அவர்களிடமே ஒப்படைப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ‘முடிவெட்டும் கொள்கை’ (‘hair cut’ policy) என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பின்பற்றிட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு வங்கிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிட இருக்கும் கார்ப்பரேட்டுகள் யார்?  இதில் பிரதானமாகப் பயனடையப்போவது பிரதமரும் அவருடைய கூட்டுக்களவாணி முதலாளிகளும்தான்.
இவ்வாறு கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த வங்கிகளின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவற்றுக்கு மறுமூலதனம் அளித்திட, பொதுப் பணம் மீண்டும் இதற்குள் புகுத்தப்படுகிறது. இவ்வாறு உட்புகுத்தப்படும் பணம் மீளவும் சூறையாடப்படும். முதலாவதாக, வங்கிகளில் கோடிக்கணக்கான இந்தியர்களால் சேமிப்பாக போடப்பட்டிருந்த பணம், கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டன. பின்னர் இதனைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில் இவ்வங்கிகளில் மீளவும் மக்களின் பொதுப்பணம் செலுத்தப்படுகிறது.
ரபேல் ஊழல்
மிகவும் சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில், பிரதமர், இந்த ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே தெளிவாக்கிவிட்டது என்றும், எனவே இதில் ஊழல் என்ற பிரச்சனைக்கே இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.  இது மிகவும் சுத்தமான ஒப்பந்தம் என்றும் இதில் இடைத்தரகர்கள் எவரும் கமிஷன் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் யார் பணம் பெற்றது என்று இப்போது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் பிரதமரும், அவருடைய அரசாங்கமும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, தேர்தல் பத்திரங்களைஅறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரங்களை எவர் வேண்டுமானாலும் வங்கியிலிருந்து வாங்கிக்கொள்ள முடியும், பின்னர் அவர்கள் ஓர் அரசியல் கட்சிக்கு அதனை அளித்திட முடியும், அந்த அரசியல் கட்சி அதனைக் காசாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு தங்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் கொடுத்தது என்று அந்த அரசியல் கட்சிகள் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு பிரதமரும், பாஜக அரசாங்கமும் அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டனர். இந்த ரபேல் ஊழலில் மிகவும் ஆதாயம் அடைந்திருப்பது பாஜக என்பது வெளிப்படையாகவே நன்கு தெரிகிறது. எப்படியெனில், தேர்தல் பத்திரங்கள் வங்கிகள் மூலமாக இதுவரை மொத்தம் 222 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 210 கோடி ரூபாய்க்கும் அதிகமான பத்திரங்களை, அதாவது மொத்த பத்திரங்களில் 94.5 சதவீதத்தை, பாஜக-தான் பெற்றிருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பது உண்மையானால், பின் ஏன் பிரதமர் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு அமைத்திட மறுக்கிறார்? கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதமரும், பாஜகவும் வலுவாக எதிர்ப்பதிலிருந்தே, நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் கூறமுடியாதவிதத்தில் இதன் பின் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பது புலனாகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆறேழு மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திட, தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பிரதமர் இப்போது கூறியிருக்கிறார்.   முன்னாள் ஆளுநர் வெளியேறிய பின்னர், இப்போது வந்திருக்கும் ஆளுநர் பிரதமரால் பொறுக்கி எடுக்கப்பட்ட நபர் என்பது உறுதியாகியிருக்கிறது.    ரகுராம் ராஜனும் பிரதமருக்கு வேண்டியவர்தான். எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும்  நாட்டின் நிதி அமைப்புமுறையை முறைப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதையும் அழித்து ஒழித்திட அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அவரை அப்பதவியில் நீடித்திருப்பதற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
பிரதமரும், அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கின்ற மத்திய ரிசர்வ் நிதி மீது குறியாக இருக்கின்றன. அதிலிருந்து பெரும் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில் இது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது. ஜிஎஸ்டிக்குப் பின்னர், ஆண்டு பட்ஜெட் நிதி பற்றாக்குறை குறியீடு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வங்கிகளை மீளவும் முழுமையாகச் செயல்பட வைத்திட அவற்றிற்கு மறுமூலதனம் அளித்திட வேண்டியதும் அவசியமாகும். இதற்கும் அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. இவ்விரண்டு காரணங்களுக்காகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் நிதியை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யப்பட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கியைக் கடுமையாகப் பாதித்திடும், நம் பொருளாதாரத்தின்  அடிப்படைகள் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். நம் நாட்டின் நிதிச் சந்தைகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். எல்லாம் சேர்ந்து, நாட்டில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் புதிய  அலையை உருவாக்கிடும்.
மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்
அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, பிரதமர் மிகவும் ஆபத்தான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தபின்னர்தான் கோவில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதா அல்லது சட்டம் கொண்டுவருவதா என்று அரசாங்கம் பரிசீலனை செய்திடும் என்று பிரதமர் கூறுகிறார். இது, நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்கும் செயலாகும். ஒருவேளை நீதிமன்றம் பாதகமான தீர்ப்பினை அளித்திட்டால், அத்தீர்ப்பினை தந்திரமாக முறியடித்திடும் விதத்தில் அரசாங்கம் சட்ட பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று பிரதமர் கூறிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பிரதமரின் கூற்றின்படி, நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் அங்கே கோவில் கட்டப்படும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இதன்பொருள், தேர்தலுக்கு முன் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதேயாகும். அப்போதுதான் அவர்களால் தங்களுடைய இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்திட முடியும். இந்தவிதத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள் அமைந்திடும்.
குண்டர் கும்பல்கள் கொலைபாதக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக பிரதமர் அளித்துள்ள கருத்துக்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை மேலோட்டமாக அவர் கண்டித்திடும் அதே சமயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்திருக்கிறார். இம்மாநிலங்களில் பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரிலும், அறநெறி போலீசார் என்ற பெயரிலும் குண்டர்களடங்கிய தனியார் ராணுவங்கள் பாஜக அரசாங்கத்தின் ஆதரவுடன் நன்கு கொழுத்து வளர்ந்திருக்கின்றன. இத்தகைய குண்டர் கும்பல்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமரால் கூறப்படவில்லை. அதேபோன்று சமூகத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரிக்கக்கூடிய விதத்தில் குண்டர் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும் ஒரு வார்த்தை கூட  அவர் உதிர்த்திடவில்லை.
அதேபோன்று பெண்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும், சிறுகுழந்தைகள் கூட கூட்டு வன்புணர்வுக் கொடுமைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும், ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. மேலும், பாஜக அரசாங்கங்களால் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதைக்குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. அதே சமயத்தில் இவற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்கள்.
முத்தலாக் மற்றும் சபரிமலை
நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டமுன்வடிவு, முஸ்லீம் பெண்களுக்கு அரசமைப்புச்சட்டத்தின் மூலம் சமத்துவ உரிமையை அளிப்பதற்காக இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், இது பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலானது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், இதே பாலின சமத்துவப் பிரச்சனை சபரிமலை கோவிலுடன் தொடர்புபடுத்தி எழுப்பப்படுகையில், இவை கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். உண்மையில் பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிப்பது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமை என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பையே நிராகரிக்கிறார். இவ்வாறு இவர் இரட்டை நாக்கில் பேசுவது என்பது இவர்களின் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலை மீளவும் தெளிவானமுறையில் உறுதிப்படுத்துகிறது. பாஜக தற்போது கேரளாவில் ஸ்தல மட்டத்தில் மக்களிடையே அமைதியின்மையையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட வெறித்தனமான முறையில் இறங்கியிருக்கிறது.
2019 தேர்தல்கள்
வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டு மக்கள் நல்ல முடிவு  மேற்கொள்வார்கள் என்று ஒரு தெளிவான அறிக்கையை பிரதமர் அளித்திருக்கிறார். உண்மைதான், மக்கள் எப்போதுமே எல்லாத் தேர்தல்களிலும் தெளிவான முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதும், இந்த அரசாங்கம் எந்தவிதத்திலாவது தூக்கியெறியப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதும்,  அவ்வாறான அவர்களின் விருப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறான நிர்ப்பந்தம் வந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தையும், பாஜகவையும் வரவிருக்கும் தேர்தல்களில் படுதோல்வியடையச் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றன. இதற்குப் பிரதான காரணம், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்துள்ள அதிருப்தியேயாகும்.  அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் பெரும்திரளாகப் பங்கேற்றதில் இதனை நன்கு காண முடிந்தது.
வரவிருக்கும் ஜனவரி 8 – 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை மீளவும் ஒருமுறை எடுத்துக்காட்டிடும். அதே நாட்களன்று விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கிராம அளவிலான பாரத் பந்த்நடத்திடவும் அறைகூவல் விடுத்திருப்பதும், மோடி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிடவும், மக்கள் நலன் காத்திடும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களை ஆட்சியில் அமர்த்திடவும் மக்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. நாட்டு மக்களுக்குத் தேவை ஒரு தலைவர் இல்லை, மாறாக அவர்கள் விரும்புவது தங்களைப் பாதுகாத்திடும் கொள்கைகளைத்தான்.
2019 தேர்தல்கள் பிரதமருக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் இடையேயான போட்டியாக அமைந்திடும்.
ஷேக்ஸ்பியர் ஒருதடவை சொல்லியதைப்போல, என்னதான் அராபிய வாசனைத் திரவியங்களைப் பூசினாலும், உங்களின் கைகளில் உள்ள ரத்தக்கறையைத் துடைத்தெறிந்திட முடியாது, பிரதமர் அவர்களே.
(தமிழில்: ச.வீரமணி)


Sunday, May 27, 2018

பாஜக மத்திய அரசாங்கத்தின் நான்காண்டுகள்: மோடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்: சீத்தாராம் யெச்சூரி





 சீத்தாராம் யெச்சூரி
பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக மத்திய அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.  அதாவது, அது 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் – எந்த வாக்குறுதிகளை மக்களிடம் கூறி மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்ததோ – அவ்வாறு மக்களுக்கு அளித்த அந்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் - கிட்டத்தட்ட முழுமையாக அது துரோகம் செய்திருப்பதாகும். 
‘நல்ல காலம் பிறக்குது‘ என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. வளர்ச்சியும், வளமும் நாட்டிற்கு வந்துசேரும் என்று உறுதிமொழி அளி அளித்தது. சுதந்திரத்திற்குப் பின்  கடந்த எழுபது ஆண்டுகளில் எவராலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு. நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசென்று ஒரு வலுவான நாடாக மாற்றுவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது.  “அனைவரும் ஒன்றுபட்டு, அனைவருக்குமான வளர்ச்சியை”யைக் கொண்டுவருவோம் என்று நாட்டிற்கு உறுதிமொழி அளித்தது. இந்த முழக்கங்கள் அனைத்துமே எவ்வளவு உள்ளீடற்ற வெறுமையான முழக்கங்கள் என்பதைக் கடந்த நான்காண்டு காலம் காட்டிவிட்டது. அனைத்து உறுதிமொழிகளுக்கும் துரோகம் இழைத்து விட்டது.
கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். கடந்த நான்காண்டுகளிலும் நான்கு முனைகளிலிருந்து மக்கள் மீது மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதும் தொடர்கிறது.   (1) நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக்கட்டக்கூடியவிதத்தில் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மிகவும் குரூரமானமுறையில் பின்பற்றி வருவதன் மூலமாகவும், (2) நம் நாட்டில் அனைத்து மக்களும் சாதி – மத – இன – மொழி வேறுபாடுகளுக்கும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் சமூக நல்லிணக்க வலைப்பின்னலை சுக்குநூறாகக் கிழித்தெறிந்திடக்கூடிய விதத்தில் மக்கள் மத்தியில் சாதி வெறியை, மத வெறியை, இன வெறியை, மொழி வெறியை உருவாக்கி வகுப்புவாதப் பதட்டநிலைமையைக் கூர்மைப்படுத்துவதன் மூலமாகவும், (3) நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச்சட்ட அதிகார மையங்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் அனைத்துவிதமான தாக்குதல்களையும் ஏற்படுத்தியிருப்பதன் மூலமாகவும், மற்றும் (4) இந்தியாவின் அயல்துறைக் கொள்கையையும் நம் நாட்டின் இறையாண்மையையும்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அதன்கீழ் முழுமையாகச் சரணாகதி அடைந்திருப்பதன் மூலமாகவும் – இவ்வாறு நான்கு முனைகளிலும் மக்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பது தொடர்கிறது. இவ்வாறு நம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது.  
இவர்களின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே, நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்காலத்தில் பாதுகாத்திட முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறது.
மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல்கள்
நாட்டின் பொருளாதார அடிப்படைகளுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் (demonetization). பொருள்கள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜி.எஸ்.டி. (GST) என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீளவும் இழந்த நம் பொருளாதாரத்தை மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில்களில்  (informal sector) ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த      முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் இன்றைய தினம் சின்னா பின்னமாகிக்  கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப்பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட முழுமையாக முடமாக்கி இருக்கிறது.
அந்நிய நேரடி முதலீடு நம் பொருளாதாரத்தின் அனைத்துத்துறைகளுக்கும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கிட்டத்தட்ட இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தை கொல்லைப்புற வழியாக  முழுமையாகக் கைப்பற்றக்கூடிய விதத்தில் நுழைந்திருக்கிறது.  இந்தியாவில் சில்லரை வர்த்தகத்துறை நான்கு கோடிக்கும் மேலான மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பை அளித்து வந்தது. இதன் பொருள், நம் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பன்னாட்டு நிறுவன  பகாசுரன்களால் இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதாகும். சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் சர்வதேச பகாசுரனான – வால்மார்ட் – இந்தியாவில் செயல்பட்டுவந்த ஃபிலிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தைக் கையகப்படுத்தி இருப்பதானது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய மூலதன நுழைவினை சட்டபூர்வமானதாக மாற்றி இருக்கிறது.
நாட்டின் விவசாய நெருக்கடி மிகவும் அச்சந்தரத்தக்க அளவிற்கு மிகவும் மோசமாகி இருக்கிறது.  நாட்டுப்புற ஏழை மக்களின் உண்மை ஊதியம் ஜீவனாம்ச அளவைவிட மிகவும் கீழான நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நம் விவசாயிகளுக்கு விளைபொருள்களுக்கு, உற்பத்திச்செலவைவிட ஒன்றரைமடங்கு விலை நிர்ணயம் செய்து,  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்போம் என்று ஆட்சியாளர்கள் அளித்திட்ட உறுதிமொழியை அமல்படுத்து மறுப்பது,  பல லட்சக்கணக்கான விவசாயிகளை தாங்கள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை மீளவும் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன்வலையில் சிக்கி,  வெளிவர முடியாது தற்கொலைப் பாதைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது.  பெரிய கார்ப்பரேட்டுகள் தாங்கள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்திடும் அதே சமயத்தில், விவசாயிகள் வாங்கிய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்திட மறுத்து வருகிறது.  அந்நிய மற்றும் உள்நாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகுத்துத் தந்திருப்பதன் காரணமாக, நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அச்சந்தரத்தக்க அளவிற்கு வளர்ந்திருக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள், ஏழைகள் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2017இல் நாட்டில் உருவாக்கப்பட்ட கூடுதல் வளத்தில் 73 சதவீதம் நாட்டு மக்கள் தொகையில் வெறுமனே 1 சதவீதத்தினராகவுள்ளவர்களால் வளைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாட்டின் வளங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டுக் களவாணி முதலாளித்துவம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.  11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கார்ப்பரேட்டுகளால் பெறப்பட்ட கடன்கள், அநேகமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்கள், திருப்பி வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமலிருக்கின்றன. ஒவ்வொரு அடிப்படைப் பொருளாதார ஆய்வுக் கருவிகளும் ஒன்று வீழ்ச்சியை அல்லது தேக்கநிலையைக் காட்டுகின்றன. இவ்வாறு, கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அரசாங்கம் மிகவும் மட்டரகமான முறையில் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலமாக மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.     
மதவெறி கூர்மைப்படுத்தப்படுதல்
மக்கள் மத்தியில் நிலவிவந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் மகத்தான பண்பின் மீது மதவெறித் தீயைத் தொடர்ந்து  விசிறிவிடுவதன் மூலம் தலித்துகள் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது கொலைபாதகத் தாக்கதல்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘பசுப்பாதுகாப்பு’ மற்றும் ‘ரோமியோ எதிர்ப்புக் குழுக்கள்’ என்ற பெயர்களில் தனியார் ராணுவங்கள் அமைக்கப்பட்டு,  இளைஞர்கள் மத்தியில் என்ன  சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும், யாருடன் நட்புகொள்ள வேண்டும் போன்றவற்றைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். மதவெறி நஞ்சு, நம் சமூகத்து மனிதர்களின் சிறப்பியல்புகளையே இழக்கும்படிச் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இளம் சிறுமிகள் மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள் இவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறைகளின் மீது தாக்குதல்கள்   
நம் சமூகத்தில் மனிதர்களின் சிறப்பியல்புகளை இழக்கும்படிச் செய்திடும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், பகுத்தறிவாளர்கள் மீதான தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மதவெறி அடிப்படையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் மீதான தாக்குதல்களும் ஏவப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றை, இந்து புராணங்களில் கண்டுள்ள சம்பவங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற தெய்வ ஆளுகை சார்ந்த பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ஆக மாற்றுவதை ஏற்கச்செய்வதற்கான அடிப்படையிலேயே இவ்வாறு மதவெறியின் அடிப்படையில் மக்களின் சிந்தனையை மாற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய தாக்குதல்கள் இன்றைய இந்தியாவை அழித்துவிடும் என்பதை இன்றையதினம்  நாம்  அனைவரும் அறிவோம். அனைவரும் ஒன்றுபட்டு அனைவருக்குமான வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கடந்த நான்காண்டுகளில் இவர்கள் செய்ததெல்லாம், தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினர் போன்றவர்களை இதர  மக்கள் திரளினரிடமிருந்து ஒதுக்கி வைத்திடும் விதத்தில் இந்துத்துவா தாக்குதல்களைத் அதிகரித்திருப்பதேயாகும்.    
அனைவருக்குமான வளர்ச்சியா?
கடந்த நான்காண்டுகளில் மத்திய அரசாங்கம் சமூகநலத்திட்டங்களுக்கு அளித்துவந்த செலவினங்களைக் கடுமையாக வெட்டிக்குறைத்திருப்பதையும் அதன்மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நேரடியாகவே பாதிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மோடி  அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கான செலவினத்தை உயர்த்திடுவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், மாறாக, நடந்துள்ளது என்ன?  2014-15ஆம் ஆண்டில் 0.55 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 0.45 சதவீதமாக வீழ்ச்சி  அடைந்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட் சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், 2014-15இல் 4.1 சதவீதமாக இருந்தது, 2018-19இல் 3.6 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அளிக்கப்படும் என்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் படாடோபமாக தம்பட்டம் அடிக்கப்பட்டபோதிலும், எதார்த்த நிலைமைகள் இதற்கு நேரெதிராக இருக்கிறது. தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு, 2014-15இல் 10 ஆயிரத்து 892 கோடி ரூபாய்களாக இருந்தது, 2018-19ஆம் ஆண்டிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.  அதாவது 36 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட  கழிப்பிடங்களில் பத்தில் ஆறில் தண்ணீர் வசதி கிடையாது என்று 2015-16ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு ஸ்தாபனத்தின்  ஆய்வறிக்கை காட்டியிருக்கிறது. இவ்வாறு இந்த முழக்கங்கள் அனைத்துமே தேர்தல்காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட ‘ஜும்லாஸ்’ (‘jumlas’) எனப்படும் பித்தலாட்ட வாக்குறுதிகளேயாகும்.
அதேபோன்றே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளும் போதுமானவை அல்ல. இவற்றில் மிகவும் மோசமானவை, தலித் மற்றும் பழங்குடியினரின் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளாகும்.  துணைத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் முற்றிலும் போதுமானவையல்ல.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
கடந்த நான்காண்டுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  நாடாளுமன்ற நடவடிக்கைகளே  நகைப்புக்குரியவிதத்தில் செயலற்றதாகக் குறைந்துவிட்டது. அரசாங்கம் தான் செய்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்வதிலிருந்து  ஒதுங்கிக் கொண்டுள்ளது. முன்னெப்போதும் கேள்விப்படாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  எந்தவொரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் விவாதத்திற்கு அனுமதித்திடவில்லை. மாநிலங்களவையின் கூர்ந்தாய்வுக்காக வருவதிலிருந்து தப்பித்திட வேண்டும் என்பதற்காக பல சட்டமுன்வடிவுகளை, நிதிச் சட்டமுன்வடிவுகளாக கடத்திச் சென்றுவிட்டனர். தேர்தல் ஆணையம்  போன்ற பல அரசமைப்புச்சட்ட அதிகாரக் குழுமங்கள் தங்களுடைய பங்களிப்புகளின் மூலமாக கேள்விக்குறியானவைகளாக மாறியிருக்கின்றன. இதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு, முன்னாள்  தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, மக்களின் முன் தேர்தல் ஆணையத்திற்குரிய நம்பகத்தன்மையைப் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். நாட்டிலுள்ள அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகச்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
பல்வேறுவிதமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் தொல்லைகள் அளிப்பதுடன் பணத்தை வாரி இறைப்பதன் மூலமும் பாஜக கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் பின்னர் பீகாரில் தேர்தல்களில் தோல்வி அடைந்தபின்னரும் அரசாங்கங்களை அமைப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
மக்களுக்குப் பதில் சொல்லும் விதத்திலும், ஊழலற்ற விதத்திலும்  அரசாங்கங்களை அமைப்போம் என்று அளித்த வாக்குறுதிகள்  அனைத்தும் முழுமையாக குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க உறுதிபூண்டிருக்கிறது என்று பிரதமர் அடிக்கடி வாய்கிழிய பேசியபோதிலும், இதுநாள்வரையிலும், 2013 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் அறிவிக்கை அளிக்கப்பட்ட லோக்பால், லோக் அயுக்தா சட்டங்களை இதுவரை நடைமுறைப்படுத்திடவில்லை. ஊழல் தடுப்புச்சட்டம் 2016இல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலமாக பலவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்களைப் பாதுகாத்திடும் சட்டம் (The Whistle Blowers Protection Act) இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பலர் ஊழலைப் புரிந்த கயவர்களால் உயிர்களை இழந்துள்ளார்கள். மோடி அரசாங்கம் குறைதீர்க்கும் சட்டமுன்வடிவு (Grievance Redressed Bill),  தகவல் அறியும் உரிமைச் சட்டம் திருத்தப்பட்டு மீளவும் அறிமுகப்படுத்துவதில் தோல்வி அடைந்திருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தில் (Central Information Commission) மொத்தமே 11 ஆணையர்கள்தான். இதில் நான்கு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 2018இல்  அதன் தலைவர் உட்பட நான்கு பேர் ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவற்றின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவற்றதாக மாற்றிட அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகும்.
மோடி  அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் கடுமையான மாற்றங்களைச் செய்து, அரசியல் ஊழலை சட்டபூர்வமாக  மாற்றியிருக்கிறது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பெரிய அளவிற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குக் கணக்குச் சொல்வதற்குப் பதிலாக, அரசாங்கம் அவற்றை மூடிமறைத்திடும் விதத்தில் சட்டத்தை இயற்றியிருக்கிறது. இவற்றை இந்த அரசாங்கம் நிதிச்சட்டமுன்வடிவின் மூலம் நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. இதன் மூலமாக அரசியலில் பொதுவாகவும், தேர்தலில் குறிப்பாகவும்  பணத்தை வாரியிறைப்பதை சட்டபூர்வமாகவே மாற்றிவிட்டது.
நான்கு ஆண்டு கால அனுபவம்
இந்த பாஜக அரசாங்கம் தூக்கி எறியப்பட  வேண்டும். மக்களுக்கு  அது அளித்திட்ட எந்தவொரு வாக்குறுதியையும்  அது நிறைவேற்றாமல் துரோகம் செய்ததுமட்டுமல்லாமல், ஒரு வலுவான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பையும் குழி தோண்டிப் புதைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், நம் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்களையும் தொடுத்துள்ளது.  இவ்வாறு இந்த மோடி அரசாங்கம் மக்கள் விரோத  அரசாங்கமாகவும், அரசமைப்புச்சட்ட விரோத அரசாங்கமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு எல்லாவிதத்திலும், நாட்டு மக்கள் முன் உள்ள மிகவும் பிரதான முன்னுரிமை என்பது, இந்த அரசாங்கத்தின் கடைசி ஆண்டான வரவிருக்கும் இறுதி ஆண்டில், இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், இதன் தாக்குதல்கள் அனைத்திற்கும் எதிராக, மக்களின் கிளர்ச்சிப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பதேயாகும்.
 (தமிழில்: ச.வீரமணி)

Sunday, February 25, 2018

மோடிகளின் மோசடியும் சலுகைசார் முதலாளித்துவமும்





தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும் கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது பலருக்கு நன்கு தெரியும். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்துவரும் அனில் அம்பானிக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்கள். சலுகைசார் முதலாளித்துவமும் ஊழல் அரசியல்வாதிகளுடன் அதற்குள்ள பிணைப்பும் நாட்டில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வங்கித்துறையின் நெருக்கடிக்கு மூலவேர்களாகும்.


இந்திய வங்கித்துறையின் வரலாற்றில் முன்னெப்்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் வெட்கங்கெட்டமுறையிலும் அதிர்ச்சியளிக்கக்கூடியவிதத்திலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரும்அளவில் மோசடி நடந்திருக்கிறது. இந்தியாவின்பணக்காரர்கள் வரிசையில் 85ஆவது நபராக இருக்கக்கூடியபேர்வழியான நீரவ் மோடியும் அவரது மாமா மொகுல்சோக்சி என்பவரும் வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்து,பலமுறை போலி புரிந்துணர்வு கடிதங்களைப் பெற்று 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப்பணத்தை மோசடியாகக் கையாடல் செய்திருக்கின்றனர்.2011ஆம் ஆண்டிலேயே துவங்கிய இவர்களின் மோசடி, இப்போது 2017இல் மோடியின் ஆட்சியில் உச்சத்திற்கு வந்திருக்கிறது. மோடியின் புதிய இந்தியாவில் “வணிகத்தை எளிதாகச் செய்வது” என்கிற முழக்கத்தின் பொருள் இதுதானோ?
மோடியின் நிகழ்ச்சியில்...
மோடி அரசாங்கத்தின்கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள உத்திகளின்படி, நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ-ஆல்)அவர்கள் ஈடுபட்ட கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாகப் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஜனவரி முதல்வாரத்திலேயே, இந்நாட்டை விட்டு மிகவும் சௌகரியமானமுறையில் வெளியேறிவிட்டார்கள். இதேபோன்றுதான் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையாஆகியோரின் வழக்குகளிலும் நடைபெற்றன. இதில் மிகவும் கபடத்தனமான செயல் என்னவென்றால், இவ்வாறுமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நீரவ் மோடி, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியுடனும் இதரஇந்திய வர்த்தகப் பிரமுகர்களுடனும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் என்பது அதோடுமுடிந்துவிடவில்லை. அது பல வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும்கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கறார் விதிமுறைகள் கை கழுவப்பட்டது
வங்கித்துறையில் தாராளமயம் மற்றும் வங்கிகள் எப்படியாவது இலாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான நெறிமுறைகளையும் மீறிஅளிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் இவ்வாறு கடுமையான பாதிப்புகளை உருவாக்கி இருப்பதையே நடைபெற்றுள்ள ஊழல்கள் காட்டுகின்றன. வங்கிகள் சமீப காலத்தில் மேற்கொண்ட அதிவேகமான தாராளமய நடவடிக்கைகள் இடர்மிகுந்த முதலீடுகளை ஏற்பதற்கும், அவை வழக்கமாக மேற்கொள்ளும் நுண்ணிய கறாரான விதிமுறைகளை கைகழுவுவதற்கும் இட்டுச் சென்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ளதுபோலவே பல வங்கிகளிலும் ஊழல்கள் நடைபெற்றிருப்பதற்கு, அடிப்படையான காரணம் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் என்று கூறுவதற்குப் பதிலாக, நவீன தாராளமயக் கொள்கையைத் தூக்கிப்பிடித்திடும் பேர்வழிகள் இப்போதுதங்களுக்கு கடன்கள் வழங்கிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், பொதுத்துறை வங்கிகளையும் தாக்கத் துவங்கியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும் குரல்எழுப்பத் துவங்கியுள்ளனர். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், வங்கிகளில் ஊழல் நடைபெறுவதைத் தவிர்த்திட, அவற்றின்மீது தனியாரின் பங்களிப்பினைஅதிகரித்திட வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
தனியார் வணிக வங்கிகளின் செயல்பாடுகள்...
இவ்வாறு கூறுபவர்கள் கடந்த காலங்களில் தனியாரிடம் இருந்த வணிக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வது நலம் பயக்கும். சுதந்திரம் பெற்றபின் 1969வரை செயல்பட்டுவந்த 559 தனியார் கமர்சியல்வங்கிகள் தகர்ந்து தரைமட்டமாகின. இதன் காரணமாக அவற்றில் முதலீடு செய்திருந்த சேமிப்பாளர்கள்நிலை அதோகதியானது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைச் சந்தித்த 25 தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. இதில், “புதிய தலைமுறை தனியார் வங்கி” என்றுகூறப்பட்ட தி குளோபல் டிரஸ்ட் வங்கியும் அடக்கம்.வங்கி ஊழல்களுக்கு மூலக் காரணம், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதேயாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் ஆய்வுசெய்திடும் துறை(இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்) இதுகுறித்து வாயைத் திறக்காமல் மவுனம் சாதிக்கிறது. வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும்(NBFCs-Non-Banking Financial Companies)சுயமாகவே சான்றிதழ்கள் கொடுப்பது அனுமதிக்கப்பட்டன. இவை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று விதி இருந்தாலும், இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது நடைமுறையில் பெயரளவில்தான் இருந்தன.
சுக்குநூறான மோடியின் வீறாப்பு
வங்கித்துறையில் நிலவிவந்த போட்டிச்சூழலானது எப்படியாவது இலாபம் ஈட்டவேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல பொதுத்துறை வங்கிகளை, நுண்ணிய முறையில்ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாது, இடர்மிகுந்த வழிகள்பலவற்றை மேற்கொள்வதற்கு உந்தித்தள்ளின.மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ரபேல் போர்விமானங்கள் வாங்கியது தொடர்பான பேரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் மறைத்திருப்பதைத் தொடர்ந்து, இப்போது நீரவ் மோடி மற்றும் மொகுல் சோக்சி ஆகியோரின் கையாடல்களும் சேர்ந்து ஊழலற்றஆட்சியை அளித்திடுவோம் என்கிற மோடி அரசாங்கத்தின்வீறாப்பை சுக்குநூறாக்கி இருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது பலருக்குநன்கு தெரியும். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்துவரும் அனில் அம்பானிக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்கள். சலுகைசார் முதலாளித்துவமும் ஊழல் அரசியல்வாதிகளுடன் அதற்குள்ள பிணைப்பும் நாட்டில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வங்கித்துறையின் நெருக்கடிக்கு மூலவேர்களாகும்.
(பிப்ரவரி 21, 2018)
 தமிழில்: ச.வீரமணி