2010 கோடைக்காலம் என் இதழியல் வாழ்வை
மாற்றி அமைத்தது. நக்சல்களின் மையமான தளமாக இருந்த கட்சிரோலி என்ற இடத்தில் எனக்கு
எங்கள் ஊடக நிறுவனம் அளித்திருந்த பணியை முடித்து அப்போதுதான் திரும்பியிருந்தேன்.
என் வாழ்க்கையில் என்னை மிகவும் உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, என் அருமை நண்பர் சாகித்
அஸ்மி படுகொலை செய்யப்பட்ட தகவல் வந்தது. அன்று மாலை நான் அவரைச் சந்திப்ப தாக இருந்தேன்.
பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கும்
பழங்குடியினர் பற்றியும், அவர்களுக்காக வாதாடிய அறிவுத்தளத்தினர் குறித்தும் அவருடன்
உரையாடுவதாக இருந்தேன். ஆனால் என் அண்ணனின் ஏழு வயது மகள் மிகவும் வற்புறுத்தியதால்
நான் வீட்டிலேயே தங்க வேண்டியதாயிற்று. அன்று அவளு டையபிறந்த நாள்.
என் கைப்பேசியில் ஏராளமான ‘மிஸ்டு கால்’ அழைப்புகள் பதிவாகியிருந்தன.
நிறைய எஸ்எம்எஸ் தகவல்கள் வந்திருந்தன. ‘சாகித் அஸ்மி தொடர்பான தற்போதைய செய்தி என்ன’என்று
கேட்ட அந்தத் தகவல்களை நான் பின்னர்தான் பார்த்தேன். ‘பிரேக்கிங் நியூஸ்’’ அளித்துக்
கொண்டிருந்த சேனல்களும் அந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்தன. ‘தேச விரோதிகள்’ எனப்படு
வோரின் வழக்குகளை எடுத்துக்கொண்டதற்காக, அடையாளம் தெரியாத நபர்களால் சாகித் சுட்டுக்
கொல்லப்பட்டார். மும்பை ரயில் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் பிணைக்கப்பட்டிருந்த
அப்பாவிகள் சாகித்தின் வாதத்திறமையால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். சாகித் கொலை
செய்யப்பட்ட திட்டத்திற்கு மூளை யார் என்பது இன்று வரையிலும் புரியாத புதிர்.
ஒருவரின் இழப்பை மறக்க பல வழிகள் இருக்கின்றன. அழலாம், துக்கம் அனுசரிக்கலாம்,
அதிலிருந்து விலகிச் செல்லலாம், வேலையில் கூடுதலாக ஈடுபட்டு ஆறுதல் காண முயலலாம். நான்
கடைசி வழியைத் தேர்ந்தெடுத்தேன். அஸ்மி இறந்த மூன்றாவது நாள், நான் நாக்பூருக்குச்
சென்று கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இதழியலாளர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான செய்திக்கதையை
மேற்கொள்ளத் தயாரானேன். மாணவர்களின் கைது சம்பந்தப்பட்டது அது. அவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள்
என்று குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதற்கு ஆதாரமாக காவல்துறை
தாக்கல் செய்த சாட்சியத்தை சொன்னால் சிரித்துவிடுவீர்கள். அவர்கள் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் எழுதிய புத்தகங்களை வைத்திருந்தார்களாம்!
அவர்களைப் பற்றி எழுதுவது, அஸ்மியின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிற செயலாக எனக்குத்
தோன்றியது.
எனினும், எதிர்பாரா வகையில் என்னை ஒரு நோய் தாக்க, அது என்ன நோய் என்னவென்றே
கண்டுபிடிக்க முடியாமல்போன நிலையில் விரைவில் நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.நல்வாய்ப்பாக,
புகழ்பெற்ற மருத்துவர் சிட்னிஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. பரிசோதனை அறிக்கைகளைப்
படித்துப்பார்த்த அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி கேட்டார்: ‘‘உங்களை சங்கடப்படுத்திக்
கொண்டிருக்கும் பிரச்சனை என்ன?’’‘‘ஒன்றுமில்லை டாக்டர். நான் மிகவும் வறண்டு போய் நலிவடைந்ததாக
உணர்கிறேன், என்னில் என்ன நடக்கிறது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை,’’ என்றேன்
நான்.ஒரு மெல்லிய புன்னகையுடன் அவர், ‘‘இதுபோல உங்களுக்கு நீங்களே பரிதாபப்படுவதிலிருந்து
விடுபடுங்கள். இதுபோன்ற பரிசோதனைகளில் உங்கள் காசைக் கரியாக்குவதையும் விட்டுவிடுங்கள்.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள்.
மறுபடி பணிக்குச் செல்லுங்கள். அதுதான் உங்களுக்கு மருந்து.’’ என் அம்மா
என்னை சுறுசுறுப்பாக்கத் தீர்மானித்தார். என் அம்மா என்னுடைய உற்ற நண்பர்களில் ஒருவராகத்
திகழ்பவர். படுக்கையில் எனக்கு அருகே அமர்ந்தபடி ‘இன்குலாப்’ (முன்னணி உருது நாளேடு)
இதழைப் படிக்கத் தொடங்கிய அம்மா, ‘இந்த சொராபுதீன்செய்தியைப் படித்தாயா’ என்று கேட்டாள்.
அந்தப் பெயர் என் ஆர்வத் தைத் தூண்டியது. நம் காலத்தில் மிகவும் பிரச்சனைக்குரியவரான
நரேந்திர மோடியுடன் என் முதல் சந்திப்பின்போதே ஒருவித மோதல் போன்ற நிலை ஏற்பட்டதற்குக்
காரணமான பெயர் அது. 2007-ல் சிறிய ரவுடியான சொராபுதீன் ஒரு போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது
தொடர்பாக, ரஜ்னிஷ் ராய் என்கிற காவல்துறை அதிகாரியால் குஜராத் காவல்துறையின் உயர்நிலை
அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டார்கள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் இருவரும் சிறைக்
கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டார்கள். நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது
அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக செயல்பட்டவர்கள்.
அவ்வாறு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்வரை ஊடகங்கள் அவர்களைப்
புகழ்ந்துகொண்டிருந்தன. தினசரி செய்தியாளர் சந்திப்புச் செய்திகளில் அவர்களது படங்கள்
இடம்பெற்றன. இவர்கள் 2004ல் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வந்திருந்த ஜிகாதிஸ்ட்டுகளை
வெற்றிகரமாகக் கண்டுபிடித்துக் கொல்லக்கூடிய அளவுக்கு வல்லமை படைத்த அதிகாரிகளாக இருந்தார்கள்.
அப்படிப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது இயல்பாகவே தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
2007ல்
ஒரு செய்தித் தொலைக்காட்சியில் வேலை கிடைத்தது. எனக்குத் தரப்பட்ட முதல் பணி, அவ்வாண்டின்
குஜராத் தேர்தல்கள் குறித்து செய்திகள் அனுப்புவதாகும். 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட
கலவரங்கள் சமுதாயத்தை மதரீதியாகப் பிரித்து, பெரும்பான்மையான இந்துக்களின் மனங்களில்
நரேந்திர மோடியை ஒரு மாபெரும் நாயகராக நிறுத்தியிருந்தன.
எங்கள் ஒளிப்பதிவாளருடன் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேரணிச் செய்திக்காகச்
சென்றிருந்தேன். நரேந்திர மோடி மேடையில் அவரது வலதுகரமாக விளங்கிய அமித் ஷா உள்ளிட்ட
அமைச்சர்களுடன் வீற்றிருந்தார். தில்லியில் உள்ள என்னுடைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்,
மோடி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவதில் வல்லவர் என்று கூறியிருந்தார்கள்.‘...சொராபுதீன்!
சொராபுதீன் போன்ற பயங்கரவாதியை நான் என்ன செய்ய வேண்டும்?’ இப்படி மோடி உணர்ச்சி பொங்கக்
கேட்கக் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.‘அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்,’
என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினார்கள். மோடி தன் பேச்சை முடித்து மேடையிலிருந்து
இறங்கியபோது அவருடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நான் என்னைத் திணித்துக்கொண்டேன். ஒளிப்பதிவாளரும்
கஷ்டப்பட்டு உள்ளே வந்தார்.‘மோடிஜி, மோடிஜி, ஒரு சவாலான கேள்வி’ என்று கத்தி னேன்.
தன்னுடைய விசிறிகளாலும், பரிவாரங்களாலும் பாது காப்பாக அழைத்துச் செல்லப்பட்ட
மோடி என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘மோடிஜி, மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சொராபுதீனை போலி என்கவுண்ட்டரில் கொன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
நீங்கள் ஆற்றியஉரையில் சொன்ன கருத்துகளை இப்போதும் நியாயப்படுத்துகிறீர்களா?’பதிலை
எதிர்பார்த்து அவர் முன் மைக்கை நீட்டினேன். ஆனால் ஒளிப்பதிவாளர்கள் படமெடுப்பதற்கான
நிகழ்வாக அந்த சில நிமிடங்கள் அமைந்துவிட்டன. என்னை சுமார் பத்து நொடிகள் முறைத்துப்
பார்த்த மோடி எதுவும் செல்லாமல் சென்றுவிட்டார்.
இன்று நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் என்கவுண்ட்டர்’ இவ்வாறு அமைந்தது. சொராபுதீன் கதை தெளிவாகக் கூறப்பட வேண்டியது. சொராபுதீன்
தொடர்பான அனைத்துக் கண்ணிகளும் சிபிஐ புலனாய்வு பற்றியும், குஜராத் காவல்துறையின் உயரதிகாரிகளில்
ஒருவரான அபய் சூடாசாமா கைது குறித்தும் பேசின. ஓராண்டுக்கு முன்பு, குஜராத் வெடிகுண்டுத்
தாக்குதல் வழக்கில் அவருடைய நட்சத்திர சாட்சிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூலத்தை
நான் வெளியிட்டிருந்தேன். அதற்காக தொலைபேசியில் சூடாசாமாவின் மிரட்டலுக்கு உள்ளானேன்.
அவர் அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு நெருக்கமானவர். புகழ்
பெற விரும்புகிற மற்றவர்களின் வழிகளிலிருந்து சூடாசாமா வித்தியாசமானவர். வஞ்சக வழிகளில்
ஹவாலா கணக்குகளுடன் வசதியாக வாழ்ந்தவர். அவரது நம்பிக்கையைப் பெற்றவர்களில் ஒருவராக
இருந்து வந்த சொராபுதீன்தான் என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டிருந்தார்.எங்கள் நிகழ்ச்சிப்
பொறுப்பாசிரியர்களுக்கு இந்த வழக்கு குறித்துத் திரும்பவும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை
அனுப்புவது அவசியம் என்றும் ஒரு குறிப்பு அனுப்பினேன். அவர்கள் நான் எதிர்பார்த்ததைவிட
அதிகமாகவே ஊக்கப்படுத்தினார்கள். நான் மீண்டும் அகமதாபாத்திற்குச் சென்றேன்.
நான் அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள்ளேயே, இரண்டு முக்கிய ரகசியங்களை வெளிப்படுத்தினேன்.
தங்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்ட சில அதிகாரிகளின் உதவியுடன் உயர்மட்ட
தொலைபேசி அழைப்பு விவரங்களையும் ரகசியக் குறிப்புகளையும் தோண்டி எடுத்தேன். விளைவுகள்
எந்தஅளவுக்குப் போகும் என்று தெரிந்தேதான் கவனமாக இந்த முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனாலும்
கடமை உணர்வோடு செயல்பட விரும்பும் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடக்கூடிய
ஒரு மாநிலத்தில், அவ்வளவு எளிதாக நம்பிக்கை வந்துவிடாது.
விஷயத்தை மேலும் சிக்கலாக்கிய அம்சம் என்னவெனில், நான் ஒரு ‘தெஹல்கா’
செய்தியாளராகச் சென்றிருந்தேன் -அதாவது நான் எங்காவது ரகசியக் கேமரா மறைத்து வைத்திருக்கக்கூடுமே!
(தெஹல்கா நிறுவனம் ரகசிய கேமராவில் பல பேட்டிகளைப் படம்பிடித்து வெளியிட்டு ஊழல்களையும்
பல்வேறு கொடுமைகளையும் அம்பலப்படுத்தி வந்தது.)மனித உரிமை அக்கறையாளர்களும், சிலஅதிகாரிகளும்
செய்த உதவிகளுடன், 2010ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பான ஆவணத்தை வெளிச்சத்திற்குக்
கொண்டுவந்தேன். அது, என்கவுண்ட்டர்கள் நடந்த சமயங்களில், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக
இருந்த அமித் ஷாவுக்கும் உயரதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களின்
பதிவாகும்.
அந்தப் பதிவில், அரசாங்க ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ், இந்தக் குறிப்பு
எழுதப்பட்டிருந்தது: ‘என்கவுண்ட்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களுக்குப்
பயங்கரவாதிகள் என முத்திரை குத்த வேண்டும் என்கிற கபடத்தனமான சதித்திட்டம்.’ இது அம்பலமானதும்
அரசியல் அரங்கில் அதிர்வலைகள் எழுந்தன. தெஹல்காவிற்கு சிபிஐ அலுவலகத்திலிருந்து எண்ணற்ற
தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அந்தப் பதிவுகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு
சிபிஐ கேட்டு வாங்கியது. பின்னர் அவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நான்
அகமதாபாத்தில் ஓட்டல் அம்பாசடர் அறையில் தங்குவது தொடர்ந்தது. அது என்னுடைய இரண்டாவது
வீடாகியிருந்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அந்தப் பகுதி, நான் தங்கியிருப்பதற்கு
ஏற்ற, அதிகமாகக் கவனத்தை ஈர்க்காத இடமாக இருக்கும் எனக் கருதினேன். மாநில பாஜக அலுவலகம்
மிக அருகில் இருப்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன்.பலராலும் பேசப்படுவதாக எனது பெயர்
பிரபலமடைந்தது. சதித் திட்டத்தை அம்பலப்படுத்திய அய்யூப் என்கிற இளைஞன் யார் என்றுபாஜக
தலைவர்கள் விசாரித்தார்கள். அதை எழுதியவர் ஒருபெண்ணாக இருக்கக்கூடும் என்று அவர்கள்
மனதிற்குப்படவில்லை. அது எனது வேலையில் கவனம் செலுத்துவதற்குத் தோதாகவே இருந்தது. ஆனாலும்
அது நீடிக்கவில்லை. சில நாட்களிலேயே எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து இப்படியொரு
குறுஞ்செய்தி வந்தது: ‘நீ எங்கே இருக்கிறாய் என்று எங்களுக்குத் தெரியும்.’ அன்றிலிருந்து
என் வாழ்க்கை மாறத் தொடங்கியது. அதன்பின்னர் மூன்று நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில்
நான் தங்குவதில்லை. இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்கினேன். பின்னர் மும்பையில்
தங்கி, என் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பிவிடத் தீர்மானித்தேன்.
ஆனால், காலம் எனக்கு வேறு வேலைகளை வைத்திருந்தது. என்கவுண்ட்டர் சதி வெளிச்சத்திற்கு
வந்த சில வாரங்களுக்குள், சிபிஐ அதிகாரிகளால் அமித் ஷா கைது செய்யப்பட்டார். சுதந்திர
இந்தியாவின் வரலாற்றில் பதவியில் இருந்த உள்துறை அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது
அதுவே முதன்முறை. ஒரே இரவில் அது பெரும் பரபரப்புச் செய்தியானது. தேசிய ஊடகங்கள் அனைத்தும்
காந்திநகரில் சிபிஐ தலைமையகம் முன்பாகக் குவிந்தன. நான் குஜராத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று
-அமித் ஷா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமைகள் குறித்து எழுதுவதற்காக.
அமித் ஷா கைது, அவரது நிர்வாகத்தில் அவதிகளைச் சந்தித்த பல காவல்துறை அதிகாரிகள், முன்பு
செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தவர்கள், இப்போது பேசுவதற்குத் துணிச்சல்
பெற்றார்கள். அதுவரையில் வெளியாகியிருந்த என்கவுண்ட்டர் தகவல்கள் அதற்கு முன் நடந்த,
பதிவு செய்யப்படாத கொடுமைகளின் ஒரு சிறு துளியே என்பது தெரிய வந்தது.
இதைக் காட்டிலும் மோசமான சதித் திட்டங்கள் பல்வேறு கோப்புகளில் புதைக்கப்பட்டுவிட்டது
என தெரிய வந்தது. குஜராத்தின் கலவரங்கள் - என்கவுண்ட்டர்கள் - அரசியல் படுகொலைகள் இவை
ஒவ்வொன்றின் பின்னணியிலும் கசப்பான உண்மைகள் வெளி வரக் காத்துக்கொண்டிருந்தன.இதழியலின்
அடிப்படை விதியே ஆதாரம்தான். என்னிடமோ எந்த ஆதாரமும் இல்லை. அந்த கசப்பான உண்மைகளை
நிரூபிப்பது எப்படி? இதைப் பற்றி யோசித்தபோதுதான் நான் என் அடையாளத்தை மாற்றிக் கொள்ள
முடிவு எடுத்தேன். ராணா அய்யூப் ஆகிய நான், கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி
என்ற ஒரு காயஸ்தா சமூகப் பெண்ணாக மாறினேன். அமெரிக்கன் திரைப்படக் கல்லூரியில் பயில்வதாகவும்,
மோடி செல்வாக்கு உலகம் முழுவதும் இந்தியர்களிடையே பெருகிவருவது குறித்து ஒரு திரைப்படம்
தயாரிக்க வந்துள்ளதாகவும் கூறிக்கொண்டேன்.
(தொடரும்)
நன்றி: தீக்கதிர்