Sunday, August 7, 2016

மேற்கு வங்கத்தில் விரிவடையும் பாசிஸ்ட் வெறித்தன வன்முறை


மேற்கு வங்கத்தில்
விரிவடையும் பாசிஸ்ட் வெறித்தன வன்முறை


(இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும், ஓர் அரசியல் அமைப்பை மற்றும் அதன் இயக்கங்களை அழித்து ஒழித்திட இவ்வாறு திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சியின் கீழ் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் பாதுகாப்பாக இல்லை.)
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் அவர்களை ஆதரித்து வந்த மக்களும், சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் திரிணாமுல் காங்கிரசால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்குப் பின்னர், அங்கே நடைபெறும் அட்டூழியங்களை பிரதான ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருவதால் அம்மாநிலத்திற்கு வெளியே உள்ளவர்களால் அங்கு விரிவான அளவில் நடைபெற்று வரும் வன்முறைகள் மற்றும் அராஜக நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.
இதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2016 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை மேற்கு வங்கத்தின் கட்சிக்கும், இடது முன்னணிக்கும் ஒருமைப்பாடு தெரிவித்து நாடு முழுதும் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் மூலமாக மக்கள் மத்தியில் அங்கே நடைபெற்று வரும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் தொடர் வன்முறைகள் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப் பட்டிருக்கின்றன.
தீவிர வன்முறை வெறியாட்டம்
மேற்குவங்கம், ஐந்தாண்டுகளுக்கு முன், 2011 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு, மம்தா பானர்ஜி தலைமையில் அரசாங்கம் அமைந்ததிலிருந்தே, மேற்கு வங்கத்தில் இடது முன்னணியை நசுக்குவதற்காக வன்முறை வெறியாட்டங்களும், அதற்கான முயற்சிகளும் தொடர்கின்றன. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகளுக்குப்பின் அவை மேலும் தீவிரம் அடைந்து, விரிவாகி இருக்கின்றன.
தேர்தலில் வெற்றிபெற்றதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடதுசாரி அமைப்புகளையும் மாநிலத்தில் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திரிணாமுல் காங்கிரஸ் தற்போதைய தாக்குதலைத் திட்டமிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தெளிவாக இரண்டு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இடது முன்னணி வலுவாக இருந்து, வாக்குகள் அதிகம் பெற்றுள்ள இடங்களில் மக்களை அச்சுறுத்துவது, அதன்மூலம் மக்களை அடிபணியவைக்க முயற்சிப்பது. இரண்டாவதாக, கட்சி அமைப்புகள், தொழிற்சங்க மற்றும் வெகுஜன அலுவலகங்களைக் கைப்பற்றி, அழிப்பது. இந்த நோக்கங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலகங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன, சூறையாடப்பட்டிருக்கின்றன அல்லது கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
மற்றொரு உத்தி
தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐந்து இடது முன்னணி உறுப்பினர்கள் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் இதுவரை கொல்லப்பட்ட கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 186 பேர்களாகும். மூவாயிரத்திற்கும் மேலானோர் காயம் அடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதல்களில், பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். 31 பாலியல் வன்புணர்வுகள் நடந்துள்ளன. மானபங்கப்படுத்துதல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் (physical attacks) 746 நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. குழந்தைகள்கூட தாக்குதல்களிலிருந்து தப்பவில்லை.தாக்குதல்கள் இடது முன்னணிக்கு ஆதரவாக நிற்கும் சாதாரண ஆதரவாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்கள் பல மக்களின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் கட்டப்பட்டவைகளாகும். அவற்றை நிர்மூலமாக்குவதன்மூலம் அவர்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை அச்சுறுத்துவதற்கான மற்றொரு உத்தி, குடும்பத்தினரை அவர்களது இல்லங்களிலிருந்து விரட்டி அடிப்பதாகும். தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப்பின்னர், கடந்த இரண்டு மாதங்களில், 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவர்களது இல்லங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய ஒடுக்குமுறையின் மற்றொரு கோரமான வடிவம், இவர்கள் இடது முன்னணி ஆதரவாளர்களிடமிருந்தும், சாமானிய மக்களிடமிருந்தும் அபராதம் வசூலித்து வருவதாகும். இவ்வாறு வழிப்பறி மற்றும் வலுக்கட்டாயமாக வசூலித்துள்ள தொகை ஜூலை இறுதி வரைக்கும் ரூ.3.5 கோடியைத் தாண்டி இருக்கிறது.
பாசிஸ்ட் வெறித்தனம்
கம்யூனிஸ்ட்டுகளையும் இடதுசாரிகளையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற இவர்களது பாசிஸ்ட் வெறித்தனமான முயற்சிகளுக்கு கட்சி மற்றும் இடது முன்னணி ஆதரவாளர்களும் ஆளாகியுள்ளார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி ஆதரவாளர்களின் ஆயிரக்கணக்கான கடைகள் சூறையாடப்பட்டிருக்கின்றன அல்லது கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களிலேயே பயிர் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் தங்கள் நிலங்களிலிருந்து பல இடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த கிராமங்களே தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளன அல்லது கொளுத்தி விடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு 70 கிராமங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும், ஓர் அரசியல் அமைப்பை மற்றும் அதன் இயக்கங்களை அழித்து ஒழித்திட இவ்வாறு திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட வில்லை. மேற்கு வங்கத்தில் நடைபெற்றுவருபவை ஜனநாயகத்தின் மீதும், மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான அவர்களது உரிமைகள் மீதும் ஏவப்பட்டுள்ள கொடூரமான மற்றும் நன்கு திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களாகும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சியின் கீழ் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எதுவும் பாதுகாப்பாக இல்லை.
வீரத்துடன் எதிர்கொள்ளல்
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் மற்றும் இதர ஜனநாயக சக்திகளும் மக்களைத் திரட்டி இத்தாக்குதல்களை துணிவுடன் எதிர்த்து நிற்கின்றன. ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடியினர், ஆயிரக்கணக்கான தொழிலாளர் வர்க்கத்தின், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் லட்சியத்திற்காகவும் இக்கொடூரமான தாக்குதல்களை வீரத்துடன் எதிர்த்துநின்று போரிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாட்டிலுள்ள இடதுசாரிகள், ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் முழுமையான ஆதரவும் ஒருமைப்பாடும் தேவை. இப்போது நாடு முழுதும் நடைபெற்றுவரும் அத்தகைய ஒருமைப்பாட்டு இயக்கம் இந்த செய்தியை நாடு முழுதும் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழில்: ச. வீரமணி



No comments: