Sunday, August 21, 2016

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குழம்பிய குட்டையாகி இருக்கிறது -சீத்தாராம் யெச்சூரி




இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குழம்பிய குட்டையாகி இருக்கிறது
-சீத்தாராம் யெச்சூரி
{சீத்தாராம் யெச்சூரி (வயது 64) சென்ற ஆண்டு ஏப்ரலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1974இல் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த காலத்திலேயே, அரசியலுக்கு வந்துவிட்டார். 1975இல் அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன் பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பைக் கைவிட்டு விட்டார்.
சென்னையில் தெலுங்கு பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்த சீத்தாராம் யெச்சூரி, ஹைதராபாத்தில் வளர்ந்தார்.
1969இல் நடைபெற்ற தெலங்கானா கிளர்ச்சி அவரை தில்லிக்குக் கொண்டு வந்தது. இங்கே அவர் சிபிஎஸ்இ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவராக வந்தார். பின்னர் தில்லியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டத்தையும், ஜேஎன்யு-வில் எம்ஏ பட்டத்தையும் பெற்றார்.
சீத்தாராம் யெச்சூரி 1974இல் இந்திய மாணவர் சங்கத்தில் (எஸ்எப்ஐ) தன்னை இணைத்துக் கொண்டார். ஓராண்டுக்குப்பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவசரநிலைப் பிரகடனத்திற்குப்பின், ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணியைக் கட்டுவதில் சீத்தாராம் யெச்சூரி, முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்துக்கு உண்மையான வாரிசாகத் திகழ்கிறார். 2005 ஜூலையில் மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகளிடையே மிகவும் பிரபல்யமான பேச்சாளர்களில் ஒருவராக அவர் மாறி இருக்கிறார்.
அவர் கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி ஸ்டேட்ஸ்மேன் நாளிதழுக்கு பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவை ஆகஸ்ட் 21 இதழில் வெளிவந்துள்ளன. அவற்றின் சாராம்சங்கள் வருமாறு:}
கேள்வி: சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்தபின்னர், இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் நிலை என்னவாக இருக்கிறது?
பதில்: இன்றைய தினம் நாட்டில் மோடி அரசாங்கத்தால் மிகவும் வெறித்தனமாகப் பின்பற்றப்பட்ட வரும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி இயக்கத்தின் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகள், மக்கள் விரோதக் கொள்கைகள் என்று நாங்கள் சொல்வதற்குக் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பின்பற்றிய கொள்கைகள் அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் நுழைவதற்காக கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருப்பதை வைத்தும்,  அந்நிய மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டும் விதத்தில் நம்முடைய வளங்கள், நம்முடைய மூலப் பொருள்கள் மற்றும் நம்முடைய உழைப்பாளிகளின் திறன்கள் அந்நிய நிதி மூலதனத்திடம் அடகு வைக்கப்பட்டிருப்பதை வைத்திருப்பதை வைத்தே அவ்வாறு கூறுகிறோம். இதன் நிகர விளைவு என்பது, நாட்டில் உள்ள இருவிதமான இந்தியர்களுக்கும் இடையே (அதாவது ஒளிரும் இந்தியர்களுக்கும், வறுமையில் வாடும் இந்தியர்களுக்கும் இடையே) பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்திருக்கிறது என்பதேயாகும். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையும் கடுமையாகக் குறைந்துவிட்டது. இது, தொழில் உற்பத்தியில் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருப்பதுடன், எதிர்மறை உற்பத்தி (negative manufacturing) அல்லது குறைந்த வேலைவாய்ப்புக்கும் இட்டுச் சென்றிருக்கிறது.
விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாகவும்,  அதிக அளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் இடதுசாரிகள் பின்னே அணிவகுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்காக அல்லாமல் நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காக மக்கள் இடதுசாரிகளின் பின்னே அணிவகுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, நாட்டில் தற்போது மதவெறி சக்திகள் தலைதூக்கி இருப்பதை எதிர்த்து முறியடிக்க வேண்டியதும் இடதுசாரிகளின் முக்கிய அம்சமாக மாறி இருக்கிறது. இடதுசாரிகளின் மதச்சார்பற்ற மாண்புகள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள்.  போலி தேசியவாதம் என்ற பெயரில் இருந்தாலும் சரி, அல்லது, தேசியவாதம் என்ற பெயரில் மதவெறி சிந்தனைகளை நுழைத்தாலும் சரி, பல்கலைக்கழகங்களில் தாக்குதல்களைத் தொடுத்தாலும் சரி அங்கெல்லாம் முன்னணியில் நின்று போராடுவது இடதுசாரிகள்தான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில், தலித்துகள் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இடதுசாரிகள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும், பசுப் பாதுகாப்பு, புனித ஜிகாத் காதல் அல்லது கர் வாப்ஸி (வீட்டிற்குத் திரும்புவோம்) என்ற பெயர்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலாக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இடதுசாரிகள்தான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனினும் தேர்தல் கண்ணோட்டத்தில் மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை, பலவீனமாகவே இருக்கிறோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம். இந்தப் பலவீனத்தைக் களைந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் இப்போது நாங்கள் இறங்கி இருக்கிறோம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடனான ஒற்றுமை கீழ்மட்ட அளவில் (ground level) வலுவாக வளர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இடதுசாரிகள் ஓர் அரசியல் சக்தியாக கேந்திரமான பங்கினைச் செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.


கேள்வி: காஷ்மீர் பள்ளத்தாக்கு தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கக்கூடிய அதே சமயத்தில் இந்தோ - பாகிஸ்தான் உறவுகள் குறித்து விவாதித்திடுவதில் பிரதமர் நரேந்திர மோடி பலுசிஸ்தான் மற்றும் கில்ஜிட் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறாரே? 
பதில்: காஷ்மீர் பிரச்சனையை இந்த அரசாங்கம் கையாளும் விதம் மிகவும்மோசமான முறையில் விமர்சிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
காஷ்மீரத்து மக்கள் நாட்டின் இதர பகுதி மக்களிடமிருந்தும் தில்லியில் உள்ள அரசியல் தலைமையிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போல் ஏன் உணர்கிறார்கள் என்று நாடாளுமன்றத்திலும் நான் கேட்டேன். எங்கள் கட்சியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்திடாமல், இதரர்கள் மீது குறை கூறுவது பிரச்சனையைத் தீர்த்திட உதவாது.
மக்களின் மனதில் இடம்பிடித்திட, மக்கள் மீது மிருகத்தனமான முறையில் பெல்லட் குண்டுகளை வீசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கூறிக்கொண்டிருக்கிறோம். மேலும் மக்கள் வாழும் பகுதிகளில்  ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) அமல்படுத்தாது திரும்பப் பெறுங்கள் என்றும் அச்சட்டத்தை எல்லை தாண்டிய பயங்கரவாதம் நடைபெறும் எல்லைப் பகுதிகளில் மட்டும் பயன்படுத்துங்கள் என்றும் வலியுறுத்திக்  கொண்டிருக்கிறோம். இதுபோன்று சில நடவடிக்கைகளை எடுங்கள்.  அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது பிரதமரிடம் நான், பாகிஸ்தான் பிரதமரிடம் எங்கள் விவகாரத்தில் தலையிடாதீர்கள், அந்நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று  ஹாட் லைனில் பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
கடந்த பல ஆண்டுகளாக, காஷ்மீர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகள் மீதும், அதாவது அரசமைப்புச் சட்டம் 370 குறித்தும், சுயாட்சி மற்றும் வளர்ச்சி குறித்தும், பல்வேறு குழுக்கள் எண்ணற்ற அறிக்கைகளை அளித்திருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 2010இல் நடைபெற்ற சம்பவங்களுக்குப்பிறகு காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து ஒரு விவரமான அறிக்கையை பல்துறை அறிஞர்கள் குழு ஒன்று அளித்தது. அந்த அறிக்கையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்த அரசாங்கம் விவாதம் நடத்தத் தயாராக இருந்தால் அவை அனைத்தையும் கொண்டுவாருங்கள் என்று அரசாங்கத்திடம் நாங்கள் கூறிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒத்துழைப்போம். இல்லாவிடில், அம்மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் சில நடவடிக்கைகள் எடுங்கள். அதற்கு நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நம்பிக்கைகளையும்  பெற வேண்டியது அவசியமாகும். இதேபோன்று கடந்த காலங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அரசாங்கம், காஷ்மீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் தூதுக்குழுவிற்கு தலைமை ஏற்று செல்ல முடியும். ஆனால் அரசாங்கமோ இதில் எதையுமே கேட்க மறுக்கிறது. இதில் எதையும் பரிசீலனை செய்யக்கூட அது தயாராயில்லை என்பது போலவே தோன்றுகிறது.
நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, சடலங்களிடமிருந்து ரத்த வாடை வீசுவதை அறியும்போதுதான் வல்லூறுகள் அவற்றைக் கொத்தித் தின்பதற்காக வரும் என்ற உதாரணத்தைக் கூறினேன். ரத்தம் இங்கே சிந்தப்படுவதால், எல்லை தாண்டி வல்லூறுகள் வருகின்றன. எனவே முதலில் அங்கே ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துங்கள் என்று பேசினேன். பாகிஸ்தானைக் குற்றம் சொல்வதால் மட்டும் இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டிட முடியாது. இங்கேயுள்ள பிரச்சனைகளை நாம் தீர்த்திட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த ஜம்மு – காஷ்மீரும் சுதந்திரம் அடைந்த சமயத்தில் நாட்டின் ஓர் அங்கமாக இருந்தது என்றும், இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும் என்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இப்போது இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது? இந்த அரசாங்கம் திடீர் திடீர் என்று கொள்கை நிலையை மாற்றிக்கொண்டே இருக்கிறது. திடீரென்று பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் அவரது பிறந்த நாள் அன்று  மதிய உணவு அருந்துவதற்காகப் பறந்து செல்வார். பின்னர் திடீரென்று அதிகாரிகள் மற்றும் அயல்துறை அமைச்சர்கள் அளவிலான இந்தோ – பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும். என்னே, இவர்கள் கொள்கை? முழங்காலுதறல் கொள்கை, இது நாட்டிற்கு நல்லதல்ல, மிக மோசமான ஒன்றாகும். பலுசிஸ்தான், கில்ஜிட் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தெல்லாம் பேசுவது இதற்கு விடையல்ல. நாம் நம்முடைய காஷ்மீர் பகுதி குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோமா, அவர்கள் பகுதி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோமா? இது என்ன தீர்வினைக் கொண்டுவரும்? அரசியல் ரீதியாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள். முதலில் இந்தியாவிற்குள் பேச்சுவார்த்தையை நடத்துங்கள். பின்னர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொள்ளலாம். இதுவே முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த அரசாங்கம் அதனைச் செய்ய வில்லை.
கேள்வி: இந்த அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையைக் கையாள்வது தொடர்பாக என்ன கருதுகிறீர்கள்? அது தொடர்பாக கடும் விமர்சனம் வந்திருக்கிறதே.
பதில்: இந்த அரசாங்கத்தின் கீழ் அயல்துறைக் கொள்கை குழம்பியக் குட்டையாகிக் கிடக்கிறது.  தீவிரமாக உலகத்தைச் சுற்றிவரல்தான் அயல்துறைக் கொள்கை என்ற ஒரு மாயையில் நம் பிரதமர் இருப்பதுபோல் தோன்றுகிறது.  அவர் பல நாடுகளுக்குச் சென்று தலைவர்களை ஓர் அரை நாளில் அல்லது முழு நாளில் பார்ப்பது அயல்துறைக் கொள்கை அல்ல. நிறைய அம்சங்கள் அதில் அடங்கி இருக்கின்றன. இரு நாடுகளின் தூதரகங்களுக்கு இடையே எண்ணற்றவை நடந்தாக வேண்டும். அயல்துறைக் கொள்கை என்பதும் உள்நாட்டுக் கொள்கையின் ஒரு விரிவாக்கம்தான்.  இவற்றையெல்லாம் இந்த அரசு முறையாகச் செய்வதாக நாங்கள் நினைக்கவில்லை.
மாறாக. கடந்த ஈராண்டு காலமாக மிகவும் ஆபத்தான போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது அமெரிக்க அரசின் முந்தானை முடிச்சாக வேமாக மாறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் கையெழுத்திட்ட இந்தோ – அமெரிக்க ஒப்பந்தங்கள் இந்தியாவை, அமெரிக்காவின் போர்த்தந்திர கூட்டாளியாக மாற்றி இருக்கிறது. எந்தவொரு நாடும், இன்னொரு நாட்டுடன் தங்களுக்கு ஒரு பொது எதிரி இருந்தால் அவரை எதிர்ப்பதற்காக கூட்டணி வைத்துக் கொள்ளும்.  இப்போது கூறுங்கள், இரு நாடுகளுக்கும் யார் பொது எதிரி? அவ்வாறு பொது எதிரி என்று எவரும் இல்லை என்றால் இதர நாடுகளுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் என்ன கூற விழைகிறீர்கள்? தென் சீனக் கடலில் அமெரிக்காவுடனும், ஜப்பானுடனும் இணைந்து கடற்படை பயிற்சி மேற்கொள்வதற்கு என்ன அர்த்தம்? இதற்கு மலபார் பயிற்சி என்று வேறு பெயர் வைத்திருக்கிறீர்கள். மலபார் என்றால் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியும். இதன்மூலம் நீங்கள் சீனாவிற்கு சொல்ல விரும்பும் செய்தி என்ன? அமெரிக்காவும், ஜப்பானும் சீனாவைக் குறி வைத்தால் இந்தியா அவர்களுடன் இருக்கும் என்று இதற்கு அர்த்தமா?
கேள்வி: மாநிலங்களவையில் தோல்வி அடைவதைத் தவிர்ப்பதற்காக இந்த அரசு சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவை நிதி சட்டமுன்வடிவாக கொண்டுவர இருப்பதாக தங்கள் கட்சி ஐயுறுகிறதே. இதில் உங்கள் நிலை என்ன?
பதில் : மாநிலங்களவையை ஓரங்கட்டுவதற்காக பாஜக அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். மாநிலங்களவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. எனவே,  மக்களவை சபாநாயகரால் சரக்கு சேவை வரி சட்டமுன்வடிவை நிதி சட்டமுன்வடிவு என்று கூற வைத்து, மக்களவையில் நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  மக்களவையில் பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, நவீன தாராளமய சீர்திருத்தங்களைத் திணிப்பதற்காக அரசு மேற்கொண்டிடும் இத்தகைய திருகு வேலைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்திடும்.
(தமிழில்: ச. வீரமணி)






No comments: