Friday, July 23, 2010
பாதுகாப்பு அம்சங்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் மக்களின் உயிருடன் விளையாடும் ரயில்வே துறை
மேலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டு, 60 உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது, நூற்றுக்கணக்கானோர் கடுங் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். ஆயினும், மத்திய ரயில்வே அமைச்சர், ‘இது மேலும் ஒரு சதித்திட்டம்’ என்று கதையளந்து கொண்டிருக்கிறார். ஐமுகூ-2 அரசாங்கத்தின் தற்போதைய அரசியல் தலைமைக்கோ, அதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கோ, மனித உயிர்கள் மிகவும் மலிவானதாகிவிட்டன. விபத்தில் இறந்தவர்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலையோ அனுதாபமோ கூட காட்டாமல் திமிருடன் பதிலளிப்பது மிகவும் வெட்கக் கேடானதாகும், இவ்வாறு விபத்துக்கள் நடைபெறும்போது மனச்சான்றின் உறுத்தல் சிறிதுகூட இல்லாமல், வழக்கமாகத் தெரிவிக்கப்படும் வருத்தம் கூட தெரிவிக்காமல், ‘‘இது எதிரிகளின் நாசவேலை’’ என்று கூறிக்கொண்டிருக்கிறார். ரயில்வே வாரியத்தின் தலைவரும், அமைச்சரின் கூற்றை அடியொட்டி, விபத்து தொடர்பாக, ‘நாசவேலை நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
ஐமுகூ-2 அரசாங்கம் பொறுப்பேற்ற பின் 2009 மே மாதத்திற்கும் 2010 ஜூலை மாதத்திற்கும் இடையில் பெரிய அளவிலான ரயில் விபத்துக்கள் 16 நடைபெற்றிருக் கின்றன. 269 பேர் இவற்றில் பலியாகி இருக்கிறார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுங் காயங்கள் அடைந்திருக்கிறார்கள். சிறிய விபத்துக்கள் உட்பட அனைத்தையும் சேர்த்தோமானால், 2009 மே மாதத்திற்குப் பின் மொத்தம் 162 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன, இவற்றில் 428 பேர் இறந்திருக்கின்றனர்.
மத்திய ரயில்வே அமைச்சர் இவ்விபத்துக்கள் குறித்து பொறுப்புணர்ச்சியுடனோ அல்லது தார்மீக வேதனையுடனோ எவ்விதக் கவலையும் படாது, விபத்து நடைபெற்ற இடத்தில், ‘‘விபத்துக்கான காரணம் குறித்து நான் சந்தேகிக்கிறேன், என் மனதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன, எது நடந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என்று கூறியிருக்கிறார். 2010 மே 28 அன்று மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு மற்றொரு ரயிலுடன் மோதி 149 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘இந்த ரயில் விபத்துக்குப்பின்னே ஓர் அரசியல் சதி இருக்கிறது. இந்த நாசவேலையைச் செய்தவர்கள், பல உயிருடன் விளையாடியவர்கள் மன்னிக்கப்படக் கூடாது’’ என்று பேசினார். அதற்கு முன்னதாக, 2009 அக்டோபர் 21 அன்று கோவா எக்ஸ்பிரஸ் - மேவார் எக்ஸ்பிரஸ் மதுரா அருகில் மோதிக்கொண்டதில் 21 பேர் கொல்லப்பட்டபோது, அமைச்சர், ‘‘ரயில் சங்கிலியைப் பிடித்து இழுத்ததுதான் இதற்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள், சிலர் இது ஒரு ‘சிக்னல்’ பிரச்சனை என்கிறார்கள். இது ஒரு கிரிமினல் குற்றமாகக் கூட இருக்கலாம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தீர்மானிக்க இதனை நான் விட்டுவிடுகிறேன்’’ என்றார். புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் இறந்தபோதும், பலர் காயம் அடைந்தபோதும், மீண்டும் ஒருமுறை இவர் எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமின்றி, ‘‘இது நிர்வாகத்தவறால் ஏற்படவில்லை, இத்தகைய குழப்பங்களுக்கு மக்கள்தான் பொறுப்பு. இத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்துவது கடினம்’’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
உத்தர் வங்க எக்ஸ்பிரசுடன் வனஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ரயில்வே அமைச்சர் கூறும் சந்தேகங்களை நிராகரித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், விபத்துக்கு ரயில்வே ஊழியர்களுக்கும், ரயில்வே சாதனங்களுக்கும் இடையே தொடர்பாக ஏற்படாததால் ஏற்பட்ட கோளாறே (ளலளவநஅ கயடைரசந) காரணம் என்று தெரிவித்திருக்கிறது. ரயில்வே அமைச்சரின் கூற்றினை உள்துறை அமைச்சகம் நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்பு ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளானபோது, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்தபோதும், இதேபோன்று உள்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது.
ஆனால் அதனைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாது, ரயில்வே அமைச்சரும், அவருடைய திரிணாமுல் காங்கிரசும் விபத்துக்களுக்குப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இடதுசாரிக் கட்சிகளையும் குறி வைத்து, சதித்திட்டங்கள் இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் நகராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்தின்போதும் இவ்வாறே கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தல்களில் ஆதாயம் அடைந்தது திரிணாமுல் காங்கிரஸ்தான். அப்படியானால் சந்தேகத்தின் கூர்முனை எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும்? சதித் திட்டங்கள் இருப்பதாகக் கூறும் திரிணாமுல் காங்கிரசின் கூற்றுக்களிலிருந்தே, இது யார் பக்கம் திரும்பியிருக்கிறது என்பது தெளிவாகும். கொல்கத்தாவில் ஒவ்வோராண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டிடும் வருடாந்திர கூட்டத்திற்கு இரு நாள்களுக்கு முன் மீண்டும் இதுபோன்றதொரு துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்திருக்கிறது.
இப்போது நடைபெற்றுள்ள விபத்து குறித்தும், மற்ற விபத்துக்களைப்போலவே பல முக்கிய கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் விடையில்லை. இவை அனைத்தும் முன்பு பலமுறை விரிவாகக் கூறப்பட்டிருப்பதால் இப்போது மீண்டும் அவற்றைக்கூற வேண்டிய தேவை யில்லை. கடந்த ஓராண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் அனைத்துமே, பெரிய அளவில் நிர்வாக எந்திரத்தில் உள்ள கோளாறுகளை (ளலளவநஅ கயடைரசந) சுட்டிக் காட்டுகின்றன. உலகில் மிகப் பெரிதான நம்முடைய ரயில்வே துறையைத் திறம்பட இயக்கிட போதுமான அளவிற்குக் கவனம் செலுத்தப்பட வில்லை என்பதையே இவ்விபத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்திய ரயில்வேயில், சரக்குப் போக்குவரத்து தவிர, ஒவ்வொரு நாளும் 1 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. சுமார் 90 ஆயிரம் பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக இருக்கின்றன. இவற்றை நிரப்பிட ரயில்வே அமைச்சருக்கு நேரமே கிடைக்கவில்லை. இப்பணியிடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை பாதுகாப்பு அம்சங்கம் சம்பந்தப்பட்டவைகள் என்பதைக் கேள்வியுறும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இப்போது ரயில்வே அமைச்சராக இருப்பவர் இதற்கு முன்பும் இதேமாதிரி அமைச்சராக இருந்த சமயத்தில், கொங்கண் ரயில்வேயில் முன்னாள் மேலாண் இயக்குநராக இருந்தவர், இரு ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுத்திடும் வகையில் தானியங்கி தடுப்பு சாதனம் (ஹஊனு - யவேi-உடிடடளைiடிn னநஎளைந) ஒன்று கண்டுபிடித்து பரிந்துரைத்தார். கொங்கண் ரயில்வேயில் மட்டம் இந்த சாதனம் இப்போது பயன்படுத்தப்பட்ட வருகிறது. ஆயினும் இதனை மற்ற ரயில்வேக்களிலும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வமோ அல்லது அதற்கான நேரமோ ரயில்வே அமைச்சகத்திற்கு இல்லை.
நாட்டில் மிகவும் கேந்திரமான பங்களிப்பினைச் செய்து வரும் ரயில்வேயில் நிலைமைகள் இவ்வளவு மோசமாக இருப்பதை அனுமதித்திட முடியாது. மத்திய ரயில்வே அமைச்சர், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை, தான் உறுதிமொழி எடுத்துக்கொண்டபடி, உண்மையான முறையில் ஆற்றவில்லை. நிர்வாக எந்திரம் செம்மையாகச் செயல்படுவது தொடர்பாக அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு என்ற போதிலும், தனிப்பட்ட முறையிலும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் பிரதமர் அவர்கள் இதனை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் உத்தரவாதப்படுத்த வேண்டியது, மேலும் ஒரு காரணத்தாலும் அவசியமாகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது மாவோயிஸ்ட் வன்முறை என்று பிரதமர் அடிக்கடி பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார். மாவோயிஸ்ட் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பலவற்றின் மூலம், மேற்கு வங்கத்திற்குள் ஊடுருவிட தங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவியது என்பதையும், அதனுடன் உயிரோட்டமான தொடர்பினை வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தெளிவுபட உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய முரண்பாட்டினை பிரதமர் அவர்கள் தெளிவுபடுத்திட வேண்டியதும் அவசரத் தேவையாகும்.
நாட்டின் நலன் கருதி, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் இந்தியன் ரயில்வேயில் நாள்தோறும் பயணித்திடும் இரண்டு கோடி மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி, இவை தொடர்பாக ஐமுகூ-2 அரசாங்கமும், பிரதமரும் ஓர் அறிவிப்பினைச் செய்திட வேண்டியது அவசியமாகும். நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் அபாயத்தை உண்டாக்கும் முறையில் மிகவும் பொறுப்பற்றதன்மையுடன் தொடர்ந்து நடந்து கொள்பவர் குறித்து நாடு இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது, மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment