அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் முதலான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து, பணவீக்கம் 17 விழுக்காடு அளவிற்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசானது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தி சாமானிய மக்கள் மீது கொடூரமானமுறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இது அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை மேலும் உயர்த்துவதற்கு இட்டுச் சென்று, பணவீக்கத்தின் விகிதத்தை மேலும் உயர்த்திடும். சாமானிய மக்கள் மீது சிறிதாவது அக்கறையுள்ள எந்த வொரு அரசும் இவ்வாறு விலைகளை உயர்த்தி மக்கள் விரோத நடவடிக்கையை எடுத்திடாது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல் என்பதன் பொருள், மக்களை பன்னாடடு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் பெறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளிவிடுவது என்பதாகும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு முன் வைக்கும் காரணங்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகளாகும், மக்களை திசைதிருப்பும் ஏமாற்று வேலைகளாகும். நாட்டின் நலன் கருதியே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாக பிரதமர் விலை உயர்வை நியாயப்படுத்தி இருக்கிறார். நாட்டு மக்களில் 77 விழுக்காட்டினர் செலவு செய்வதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில்தான் பிரதமர் இவ்வாறு கூறுகிறார். அதுமட்டுமல்ல, இத்தகைய சீர்திருத்தங்களை இதற்கு முன்னரே செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் முந்தைய ஐமுகூ அரசாங்கம் இடதுசாரிக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்து வந்ததாலும், அவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும்தான் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் அவர் கூற்று அமைந்திருக்கிறது. அப்போது இடதுசாரிக் கட்சிகள் அளித்து வந்த நிர்ப்பந்தத்தின் காரணமாக மண்ணெண்ணெய்யின் விலையை ஒரு காசு கூட அவர்களால் உயர்த்த முடியவில்லை. ஆனால் இன்று என்ன நிலைமை? ஐமுகூ-2 அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் நாடகமாடிக்கொண்டு, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை நிறைவேற்றத் துணை போய்க் கொண்டிருக்கின்றன. இதுதான் இவர்கள் மக்கள் மீது வைத்துள்ள கரிசனங்கள்! மக்கள் விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்போதெல்லாம் அங்கே எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், வெளியே வந்து எதிர்ப்பதுபோல் நாடகமாடுவார்கள். உண்மையில் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு இவர்களும் உடந்தையே!
காங்கிரஸ் ஏட்டின் ஆசிரியர், இவ்வாறான அரசின் கொள்கையை சோனியா காந்தி ஒருவரால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவரது ஒப்புதல் இல்லாமல் இத்தகைய முடிவுகளைப் பிரதமர் எடுக்க மாட்டார் என்பது சிறுபிள்ளைகளுக்குக்கூட நன்கு தெரியும். காங்கிரஸ் கட்சியும் அதன் ஒட்டுமொத்த தலைமையும் இதற்கு முழுப்பொறுப்பாகும். ‘சாமானிய மக்களுக்காக’ என்று சொல்லிக் கொண்டே ‘பெறு நிறுவனங்களுக்கான’ கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள்.
மக்களை ஏமாற்றும் வஞ்சகம்
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் அளித்திருக்கிறார். அதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மக்கள் ஆதரவு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக அரசுப் பணத்தில் வெளியிடப்பட்டுள்ள வஞ்சகம் மற்றும் மோசடியான விளம்பரமாகும். விலை உயர்வு குறித்து அவர்கள் பல்வேறு காரணங்களை அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றையும் இப்போது நாம் ஆராய்வோம்.
முதலாவது பொய்: சர்வதேச விலைகள்
‘‘நாட்டிற்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்களில் 80 விழுக்காடு இறக்குமதிகள் மூலம் சரி செய்யப்படுகிறது. இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தாற்போல் விலைகளின் தாக்கமும் இருப்பது இயற்கையே’’ என்று அவ் விளம்பரத்தில் கூறப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சர்வதேச விலை உயர்வுக்குத் தகுந்தாற்போல் நம் நாட்டிலும் விலை உயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறது அரசு.
சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் அடிக்கடி ஏறும் இறங்கும் என்று சொல்லப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்று இப்போது ஆராய்வோம். ஐமுகூ-2 அரசாங்கம் 2009 மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, சர்வதேச கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 70 டாலருக்கு விற்றது. (அன்றைய தினம் ஒரு டாலரின் மதிப்பு 49 ரூபாயாகும். எனவே ஒரு லிட்டர் 21 ரூபாய் 43 காசுகள் என்ற விதத்தில் இருந்தது.) இன்றைய தினம் ஒரு பேரல் 77 டாலர்களாகும். (இன்றைய தினம் ஒரு டாலரின் மதிப்பு 46 ரூபாய் 22 காசுகள். அப்படியானால் ஒரு லிட்டர் 22 ரூபாய் 13 காசுகள் ஆகும்.) ஒரு பேரல் என்பது தோராயமாக 160 லிட்டர்களாகும். எனவே, சர்வதேச கச்சா எண்ணெய் இதுவரை லிட்டருக்கு வெறும் 70 காசுகளே ஏறியிருக்கிறது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில், ஆட்சியாளர்கள் சர்வதேச எண்ணெய் சந்தையில் விலைகள் அடிக்கடி ஏறும் இறங்கும் என்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு, கடந்த நான்கு மாதங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 6.44 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4.55 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு விலையை 35 ரூபாயும் இப்போது உயர்த்தி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச சந்தையில் எந்த விலை உயர்வும் கிடையாது. பின் ஏன் இந்தியாவில் மட்டும் விலை உயர்வு? உண்மையில், சர்வதேச விலைக்கும், அரசு இப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அரசு விளம்பரத்தில், இந்தியா பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா கச்சா எண்ணெய்யைத்தான் இறக்கமதி செய்கிறது. அது பெட்ரோலியப் பொருட்களை இறக்கமதி செய்திடவில்லை. கச்சா எண்ணெய்யானது பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருள்களாக சந்தைக்கு அனுப்பப்படுவதற்கு முன் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்தியா தன் தேவையில் சுமார் 75 - 80 விழுக்காடு அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஆயினும், சுத்திகரிப்பைப் பொறுத்தவரை, நம் நாட்டின் தேவைக்கு அதிகமாகவே சுத்திகரிப்பு செய்கிறோம். 2009-10ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 28 மில்லியன் டன்கள் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.
இரண்டாவது பொய்: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் பாதுகாத்திட வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது.
பிரதமரும் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவும் இவ்வாறு கூறுகின்றனர்: ‘‘நவரத்தினாக்கள் என்றும் மகாரத்தினாக்கள் என்றும் அழைக்கப்படுகின்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை, அவை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டின் ஒட்டுமொத்த நலனின் அக்கறை கொண்டு இவ்வாறு விலைகளை உயர்த்தி இருக்கிறது.’’ இது உண்மையா? பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் இருக்கின்றனவா? பெட்ரோலிய அமைச்சகம் 2009-10 ஆண்டு அறிக்கையில் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) குறித்து என்ன கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.
‘‘2008-09 ஆம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு நிகர லாபம் 2950 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல், பொது விநியோக முறையில் மண்ணெண்ணெய் விநியோகம், மான்ய விலையில் சமையல் எரிவாயு ஆகியவற்றை 2 லட்சத்து 85 ஆயிரத்து 337 கோடி ரூபாய்க்கு விற்றதில் இவ்வாறு 2950 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருக்கிறது. உலகில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களில் 18ஆவது இடத்தை ஐஓசி பிடித்துள்ளது. 2009-10ஆம் ஆண்டில், விற்பனையின் மொத்த அளவு 208289.46 கோடி ரூபாயாகும். அதில் (2009 டிசம்பர் வரைக்கும்) வரிகளைக் கழித்த பின் நிகர லாபம் 4663.78 கோடி ரூபாயாகும்.’’
2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளின்படி, (Audited Financial Results) ஐஓசி-யின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இத்துடன் 49 ஆயிரத்து 472 கோடி ரூபாய் ரிசர்வ் மற்றும் உபரி (reserve and surplus) தொகையாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
2009-10இல் ஐஓசி, அரசுக்கு கலால் தீர்வையாக 26 ஆயிரத்து 050 கோடி ரூபாயும், இதர வரிகளாக 4 ஆயிரத்து 049 கோடி ரூபாயும் அளித்திருக்கிறது. மேலும் அரசுக்கு டிவிடண்ட் தொகையாக 656 கோடி ரூபாய் 2007-08இலும், 910 கோடி ரூபாய் 2008-09இலும் அளித்திருக்கிறது. வரும் 2009-10இல் மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் குறையாத விதத்தில் ‘டிவிடண்ட்’ அளிக்க இருக்கிறது.
மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (எச்பிசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பிபிசி) ஆகியவையும் 2009 ஏப்ரல் - டிசம்பர் மாதத்தில் முறையே 544 கோடி ரூபாயும் 834 கோடி ரூபாயும் லாபம் ஈட்டியுள்ளன.
உண்மையில் நம் பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு வளமாக இருக்கக்கூடிய சமயத்தில்தான் நம் பெட்ரோலியத்துறை அமைச்சர் இவை திவாலாகிக் கொண்டிருப்பதாகக் கூறுவதில் வக்கிரமான முறையில் மகிழ்ச்சிகொள்கிறார். இவ்வாறு ‘‘திவாலாகிக் கொண்டிருக்கும்’’ கம்பெனிகள்தான் ராபரேலியில் நிறுவப்படும் ராஜீவ்காந்தி பெட்ரோலியம் இன்ஸ்டிட்யூட்டிற்கு தலா 250 கோடி நன்கொளை அளிக்குமாறு அரசால் கோரப்பட்டிருக்கின்றன. என்னே விநோதம்!
மேலும் ஐஓசி-இன் ஆண்டு அறிக்கையில் ஐஓசி நிறுவனமானது இந்திய அணுசக்தி கார்பரேஷனுடன் (Nuclear Power Corporation of India)இணைந்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறது.
உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் மீது அக்கறையுள்ள அரசாக இது இருக்குமானால் அவற்றின் லாபம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அது கருதுமானால், அவற்றிடமிருந்து அது அபரிமிதமாக வசூலித்திடும் கலால் தீர்வைகளை அது கைவிடட்டும்.
மூன்றாவது பொய்: ‘‘திரும்பப் பெறுதல்’’ (“ரனேநச சநஉடிஎநசல”) என்னும் கற்பனாவாதம்
கடந்த சில ஆண்டுகளாக, எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாக ‘‘‘‘திரும்பப் பெறுதல்’’ (“Under recovery”) என்னும் கற்பனாவாதச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இது எந்த நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பிலும் (க்ஷயடயnஉந ளுhநநவ) இடம் பெறாது. ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பவை எண்ணெய் நிறுவனங்கள் அடைந்திட்ட நட்டங்கள் என்று அரசாங்கமானது தன்னுடைய பெறுநிறுவன ஊடகங்களின் வாயிலாக மக்களை வஞ்சமாக நம்பவைத்திடுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திரா காந்தி, 1976இல் பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ போன்ற அந்நிய பெரும் எண்ணெய் நிறுவனங்களைத் தேசியமயமாக்கினார். தேசியமயமாக்குவதற்கு முன் இந் நிறுவனங்கள், நம் நாட்டு நுகர்வோரிடம் சர்வதேச விலைக்கு பெட்ரோலியப் பொருட்களை விற்று கொள்ளை லாபம் ஈட்டின. ‘இறக்குமதி விலை முறை’ (Import paritry pricing system) என்று இதற்குப் பெயரிட்டிருந்தனர். பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் லாபத்தை அதிகரித்திடும் வண்ணம், விலைகளை நிர்ணயித்து வந்தார்கள். இது உலகில் உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். 1976இல் ‘இறக்குமதி விலை முறை’ நிறுத்தப்பட்டு விட்டது. பின்னர் அரசு அதற்குப் பதிலாக ‘நிர்வாக விலை ஏற்பாடு’ (Administrative Pricing Mechanism) ஒன்றைக் கொண்டு வந்தது. இதன்படி, அந்நிய நிறுவனங்களிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உள்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோலியப் பொருட்களை உருவாக்கி மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை, அதனை சுத்திகரிப்பதற்கான செலவு ஆகியவற்றுடன் சிறிது லாபம் வைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவ்வாறுதான் இந்தியாவில் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
1991இலிருந்து மன்மோகன் சிங் தலைமையில் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை அடுத்து நம் நாட்டைச் சேர்நத மற்றும் அந்நிய நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் நுழைவு அதிகரித்தது. இவர்கள் இத்தகைய ‘நிர்வாக விலை ஏற்பாட்டினை’ அரசு கைவிட வேண்டும் என்றும் மீண்டும் பழைய ‘இறக்குமதி விலை முறை’க்கே திரும்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். 2002இல் பாஜக ஆட்சிக் காலத்தின்போது ‘நிர்வாக விலை ஏற்பாடு’ கைவிடப்பட்டது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு ‘இறக்குமதி விலை முறை’ மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதன் பொருள், நம் நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் இனி சர்வதேச சந்தையில் உள்ள பெட்ரோலியப் பொருட்களின் விலைக்குச் சமமாக நிர்ணயிக்கப்படும். உண்மையில் இன்றையதினம் நாம் நம்முடைய ‘ஓஎன்ஜிசி’ மற்றும் ‘ஆயில் இந்தியா’ நிறுவனங்கள் மூலமாக மிகவும் மலிவான கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறோம். அவற்றை மிகவும் குறைந்த செலவினத்தில் சுத்திகரிப்பும் செய்கிறோம். எனவே நம்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திச் செலவினம் மிகவும் குறைவாகும். ஆயினும் சர்வதேச சந்தை விலைக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்திட இந்நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பது இறக்குமதி ‘சரிசமநிலை விலை’க்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். ‘‘திரும்பப் பெறுதல்’’ என்பது நட்டம் அல்ல. உள்நாட்டு விலைகளை சர்வதேச விலைகளுக்குச் சமமாகக் கணக்கிட்டால் வரக்கூடிய வருவாயைத்தான் இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது. நாட்டில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அளவிடற்கரியவிதத்தில் கொள்ளை லாபத்தை ஈட்டியுள்ளன, ஈட்டிக்கொண்டும் இருக்கின்றன. உண்மை இவ்வாறிருக்கையில், அவை நட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறுவது வடிகட்டிய வஞ்சனையாகும்.
2002க்குப் பின், ‘ரிலயன்ஸ்’ , ‘எஸ்ஸார்’ போன்ற நம்நாட்டு தனியார் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீது அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை மேலும் தளர்த்திட வேண்டும் என்று கோரி வந்தன. பாஜக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. கிரித் பாரிக் என்பவர் தலைமையில் குழு ஒன்று இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மத்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு, மீண்டும் ‘இறக்குமதி சரிசமநிலை விலை’ (iஅயீடிசவ யீயசவைல யீசiஉந)யை அமல்படுத்தியிருக்கிறது. இவ்வாறு நம் நாட்டு மக்கள் சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.
இவ்வாறு நாம், மீண்டும் அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது இருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பர்மா ஷெல், கால்டெக்ஸ், எஸ்ஸோ நம்மைவிட்டுப் போயிருக்கலாம். ஆயினும் அவை நிர்ணயித்த ‘இறக்குமதி சரிசமநிலை விலை’ மீண்டும் திரும்பி வந்திருக்கிறது.
நான்காவது பொய்: இந்தியாவிலும் மற்ற நாடுகளுக்கு இணையாகத்தான் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன
அரசாங்கமானது தன் விளம்பரத்தில் நம் அண்டை நாடுகள் சிலவற்றுடன் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை ஒப்பிட்டிருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின்மீத அவை விதித்துள்ள வரி முறையை அது குறிப்பிட்டிருக்க வேண்டும்.
உதாரணமாக, பெட்ரோல் மீது அதன் மொத்த விலையில் இலங்கை 37 விழுக்காடும், தாய்லாந்து 24 விழுக்காடும், பாகிஸ்தான் 30 விழுக்காடும் வரி விதித்திருக்கக்கூடிய நிலையில், இந்தியாவோ 51 விழுக்காடு வரி விதித்திருக்கிறது.
அதேபோன்று டீசல் மீது அதன் மொத்த விலையில் இலங்கை 20 விழுக்காடும், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் 15 விழுக்காடும் வரி விதித்திருக்கும்போது, இந்தியாவோ 30 விழுக்காடு வரி விதித்திருக்கிறது.
இவற்றிலிருந்து இந்தியா, மற்ற நாடுகளை விட அதிக அளவில் வரி விதித்திருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
பின் ஏன் இந்தியா இவ்வாறு உலக சந்தை விலைக்கு மாறிச் செல்ல வேண்டும்? நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் குறைந்த வருமானத்தில் வாடிக்கொண்டிருக்கும்போது, அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, சர்வதேச சந்தை விலைக்கு அனுமதித்திருப்பதன் அவசியம் என்ன? சர்வதேச ஊதியம் எதையும் இந்திய மக்கள் பெறாத நிலையில், அத்தியாவசியப் பொருள்களை சர்வதேச விலைக்கு விற்றால், பணவீக்கத்தால் வாங்கும் சக்தியை வெகுவாக இழந்துள்ள மக்களால் அவற்றை எப்படி வாங்க முடியும்?
ஐந்தாவது பொய்: அரசாங்கம் 53 ஆயிரம் கோடி ரூபாயைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அமைச்சகத்தின் விளம்பரத்தில், ‘‘இவ்வாறு விலைகளை உயர்த்தியபின்னரும்கூட, அரசாங்கம் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சுமையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
அமைச்சகம், அடிப்படையான கணித அறிவையே மறந்துவிட்டது. மக்கள் மீது அபரிமிதமான சுமைகளை ஏற்றியிருப்பதன் மூலம் அரசாங்கம் கொள்ளை லாபம் ஈட்டியிருக்கிறது. 2009-10ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு, நம் பொதுத்துறை நிறுவனங்கள் வரிகள், தீர்வைகள், டிவிடண்ட், போன்றவற்றின் மூலமாக 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக அளித்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் வரிகளை உயர்த்தியபின், இத்தொகை 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயைவிட அதிகமாக இருக்கும். யார், யாருக்கு மான்யம் அளிக்கிறார்கள்? பின் எங்கே இருந்து இந்த 53 ஆயிரம் கோடி ரூபாயை அரசாங்கம் கண்டுபிடித்திருக்கிறது?
பொய்களுக்குப் பின்னேயுள்ள உண்மை
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா ஒரு தேசிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விலை உயர்வுக்கான உண்மையான காரணங்களை கூறியிருப்பதற்கு நாம் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம். ‘‘சுதந்திர சந்தை முறையை அமல்படுத்துவதால் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனியார்துறை நிறுவனங்களுக்கும் இடையே போட்டி உருவாகியிருக்கிறது. இது சேவைத்துறையை வளர்த்திடும், விலை யுத்தத்திற்கும் (price war) இட்டுச் செல்லும்’’ என்று தியோரா கூறியிருக்கிறார்.
விலை யுத்தத்தில் நம் பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தியோராவும், அரசாங்கமும் முதலைக் கண்ணீர் விடுகின்றனர். ஆட்சியாளர்கள் ரிலயன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள் நவீன உயர்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திட அனுமதிக்கப்பட்ட அதே சமயத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் அவ்வாறு தங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்திட அரசு அனுமதித்திடவில்லை. மேலும் தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் ஆட்சியாளர்களை எந்த நேரத்திலும் போய் சந்திக்க முடியும், தங்களுக்குத் தேவையான வரிச் சலுகைகளைப் பெற முடியும். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் அவ்வாறு சென்று எவரையும் சந்தித்திட முடியாது.
ஏனெனில் இன்றைய அரசாங்கமானது மக்களுக்கான அரசாங்கம் அல்ல. மாறாக இது, பெரும் நிறுவனங்களுக்காக, பெரும் நிறுவனங்களால், பெறும் நிறுவனங்களின் அரசாங்கமாக மாறியிருக்கிறது என்பதே உண்மை. இதுவே அரசாங்கம் கூறும் பொய்களுக்குப்பின்னேயுள்ள உண்மையாகும்.’’
(சிபிஎம் மத்தியக் குழு வெளியிட்டுள்ள சிறுபிரசுரம்)
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment