Thursday, July 15, 2010
செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்
விலைவாசி உயர்வைக் கண்டித்து
செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்தம்
மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசு ஊழியர் அமைப்புகள் பிரகடனம்
புதுதில்லி, ஜூலை 15-
மத்திய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்தக் கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் செய்திட, புதுதில்லியில் நடைபெற்ற தொழிலாளர்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்திருக்கிறது.
சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய மத்தியத் தொழிற் சங்கங்களும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டாவது தேசிய சிறப்பு மாநாடு, வியாழன் அன்று புதுதில்லியில் மாவலங்கார் அரங்கில் நடைபெற்றது. ஏ. கே. பத்மனாபன் (சிஐடியு) உட்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தலைமைக்குழுவாக இருந்து மாநாட்டை வழிநடத்தினர். மாநாட்டில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் எம்.கே. பாந்தே, ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா மற்றும் பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:
‘‘அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் ஒரு நடவடிக்கையாக அனைவருக்குமான பொது விநியோக முறை மூலம் அத்தியாவசியப் பொருள்களை மான்ய விலையில் அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.
உலகப் பொருளதார நெருக்கடியின் விளைவாக, தொழில் முனைவோருக்கு ஊக்க நிவாரணம் அளிப்பது போன்று, வேலையிழப்புக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களைக் காப்பாற்றிட, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
எவ்வித விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களைக் கடுமையாக அமல்பமுடுத்த வேண்டும், அதனை மீறுவோர் மீது தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
முறைசாராத் தொழிலாளர்கள் அனைவரையும் பாதுகாக்கக்கூடிய விதத்தில் 2008 முறைசாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்,
லாபத்தை அள்ளித்தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது.
என்னும் ஐந்து முக்கிய கோரிக்கைகள் மீது அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும் இணைந்து சென்ற 2009 செப்டம்பர் 14 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரம்மாண்டனமான அளவில் முதல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 2009 அக்டோபர் 28 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம், 2009 டிசம்பர் 16 அன்று தர்ணா, 2010 மார்ச் 5 அன்று சிறைநிரப்பும் போர், ஆகியவை மிகவும் சக்தியாக நடைபெற்றன.
விலைவாசியைக் குறைக்கக் கோரியும், குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. ஆயினும் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்துள்ளன. இது தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
முதலாளிகளால் தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படுவதற்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தபோதிலும், அதைப்பற்றி அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை, தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது, வேலைகளை வெளியே கொடுத்து (அவுட்சோர்சிங் முறையில்) வாங்கிக் கொள்வது அதிகரித்து வருகின்றன.
லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தாரை வார்க்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. உதாரணமாக அரசு, கோல் இந்தியா லிட்,. பிஎஸ்என்எல், செயில், என்எல்சி, இந்துஸ்தான் காப்பர். என்எம்டிசி முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும், அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதுடன் அதன் மீதிருந்த கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டது.
எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்களின் 2வது தேசிய மாநாடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் வரும் 2010 செப்டம்பர் 7 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறது.
நாட்டில் உள்ள அனைத்துத் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர்களும் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை மாபெரும் அளவில் வெற்றியாக்கிட வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது. அரசு அதன்பின்னும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர்/டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணியை சக்தியாக நடத்திடுவது என்றும் மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் ஆர்.முத்துசுந்தரம், (பொதுச் செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்), சுகுமால் சென் (முன்னாள் பொதுச் செயலாளர்,
அ.இ.மா.அ.ஊ.சம்மேளனம்), ஆர்.சிங்காரவேலு. பி.எம்.குமார் உட்பட அனைத்து சிஐடியு-வின் தமிழ் மாநில கமிட்டி உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
(ச.வீரமணி).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment