Wednesday, July 7, 2010
ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம்: மாபெரும் வெற்றி
பிரகாஷ் காரத்
ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியைத் தவிர அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். வேலைநிறுத்தம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையுமே - வடகிழக்கே மணிப்பூரில் தொடங்கி வடமேற்கே ஜம்மு வரையிலும், தெற்கே கேரளா தொடங்கி வடக்கே இமாசலப்பிரதேசம் வரையிலும் - பாதித்திருக்கிறது. இம்முறை அகில இந்திய வேலைநிறுத்த அறைகூவலுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்து வருவதன் காரணமாக மிகவும் நொந்துபோயுள்ள மக்கள் முழுமையான ஆதரவினை அளித்துள்ளார்கள். ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே விலை உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவித நிவாரணமும் கிடையாது.
மக்கள் மீதான சமீபத்திய தாக்குதல் என்பது, மூன்று மாத காலத்திற்குள்ளேயே மீண்டும் இரண்டாவது தடவையாக இந்த அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியதாகும். இந்தத் தடவை, மண்ணெண்ணெய்யையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. இவை எல்லாவற்றையும்விட மிகவும் கொடுமையான அம்சம், பெட்ரோல் விலைநிர்ணயத்தின் மீது அரசு கட்டுப்பாட்டை நீக்கியிருப்பதாகும். இது பிரதானமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்திடும் என்பதோடு நுகர்வோரை சந்தை சக்திகளின் தயவிற்குத் தள்ளிவிட்டுவிடும்.
பெட்ரோலியப் பொருட்ளை விலை உயர்த்தியதற்கும், அவற்றின் மீது அரசுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்கும் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அத்தனை வாதங்ளும் பொய்யானவை என்பது தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டன. இந்தப் பிராந்தியத்திலேயே அதிக வரி விதிப்பின் விளைவாக இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம். ஒவ்வொரு தடவை விலையை உயர்த்தும்போதும் அரசு வருவாய் பல்கிப் பெருகியிருக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தை ஈட்டியிருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் திரும்பப் பெறுதல் ("under recovery") என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் கற்பனாவாதமே. விலை உயர்வுகள், ஏற்கனவே இரு இலக்கமாகியுள்ள பணவீக்க விகிதத்தை மேலும் அதிகப்படுத்திடும். உணவுப் பாதுகாப்பு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருந்தால் அதனை அரித்து இல்லாது ஒழித்துவிடும்.
அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, பெறுநிறுவனங்களின் ஊடகங்கள் வழக்கமான விமர்சனத்தை ஊதிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இவ்வாறு கூப்பாடு போடுவது யார்? சென்ற பட்ஜெட்டின்போது பல்லாயிரம் கோடி ரூபாய்களை வரிச் சலுகைகளாகப் பெற்றவர்களும், நேரடி வரிவிதிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் யாருக்கு மேலும் எண்ணற்ற ஆதாயங்களை அளிக்க இருப்பதாக அரசு சார்பில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தகைய பெறுநிறுவனங்கள்தான் இவ்வாறு கூப்பாடு போடுகின்றன. 2009-10 பட்ஜெட்டில் பெறுநிறுவனத் துறைகளுக்கு மட்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எண்ணற்ற விதங்களில் வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மற்றொரு தாக்குதல் இடதுசாரிகள் மீது வீசப்பட்டிருக்கிறது. இடதுசாரிகள் பாஜக-வினருடன் கைகோர்த்துக்கொண்டு விட்டார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. கொள்கை அடிப்படையில் செயல்படுவதாக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு என்ன வந்தது என்று பெறுநிறுவன ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன.
மதவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் மதவெறி அரசியலுக்கு எதிராக எவ்விதச் சமரசமுமின்றி செயல்பட்டு வருவதையும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள். இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கோ சமரசத்திற்கோ இடமில்லை.
பிரதான பிரச்சனையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மதவெறி சக்திகளுடன் இடதுசாரிகள் கைகோர்த்துக்கொண்டு விட்டனர் என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது. அரசாங்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை நிர்ணயிக்கும் அடிப்படையையே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த சமயத்தில், அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கப்போவதாக அறிவித்தபோது, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. எண்ணெய் இருப்பு பற்றாக்குறையைக் குறைத்திட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் கட்சி சுட்டிக்காட்டியது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதனை அமல்படுத்தவில்லை. ஏனெனில் அவ்வாறு அறிவிக்கையை வெளியிட்டபின் அதனால் ஆட்சியில் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியவில்லை. ஆயினும் 2002இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்த சமயத்தில் நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப்பட்டதை அடுத்து, பெட்ரோலியப் பொருட்கள் விலை மீதான அரசின் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கடுமையாக எதிர்த்து, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து 2004இல் கட்டுப்பாடு நீக்கம் (deregulation) கொள்கை கைவிடப்பட்டது.
இப்போதும்கூட, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கிட முடிவெடுத்துள்ள மன்மோகன்சிங் அரசாங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது.
மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் மற்றும் சுங்கத் தீர்வைகளை உயர்த்தி அறிவித்தபோது, இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியால் 13 கட்சிகள் சந்தித்து ஏப்ரல் 27 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இது, ஐமுகூ-2 அரசாங்கம் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபின்னர் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரிய அளவிலான முதல் அகில இந்திய எதிர்ப்பு இயக்கமாகும்.
இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தும் அதனை உதாசீனப்படுத்திவிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது இப்போது மீண்டும் தடித்தனமானமுறையில், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தி, மக்கள் மீது சொல்லொண்ணாத அளவிற்கு சுமைகளை ஏற்றி நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க மறுப்பதோடு இதுவும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் இடதுசாரிக் கட்சிகள், அஇஅதிமுக, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதிக்கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், அஸாம் கண பரிசத் மற்றும் இந்திய தேசிய லோக் தளம் ஆகிய ஏழு கட்சிகளுடன் இணைந்து ஜூலை 5 அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான கடும் தாக்குதலுக்கு எதிராக நடைபெறும் அகில இந்திய எதிர்ப்பியக்கத்தில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நிற்க எந்த வொரு எதிர்க்கட்சியாலும் இருக்க முடியாது. மற்ற எதிர்க்கட்சிகளும், பிரதானமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பந்த்துக்கு அறைகூவல் விடுத்தன.
ஐமுகூ அரசாங்கத்தை ஆதரித்து ஆர்ஜேடி மற்றும் எல்ஜேபி ஆகிய கட்சிகளும் கூட பீகாரில் ஜூலை 10 அன்றைக்கு பந்த்துக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.
பிரம்மாண்டமான முறையில் எதிர்க்கட்சிகள் நடத்திய எதிர்ப்பியக்கத்தினால் மிகவும் அரண்டுபோயுள்ள காங்கிரஸ் கட்சியும், அதன் பெறுநிறுவன ஊடக ஆதரவாளர்களும் ‘‘இடதுசாரிக் கட்சிகள் - பாஜக ஒற்றுமை’’ என்னும் பூதம் உருவாகிவிட்டது என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அநேகமாக மதச்சார்பற்ற அனைத்து எதிர்க்கட்சிகளுமே கலந்து கொண்டன என்பதை அவை வசதியாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால் மக்கள் ‘‘இடதுசாரிகள்-பாஜக ஒற்றுமை’’ என்னும் பிரச்சாரத்தால் அப்படி ஒன்றும் குழம்பிப்போய்விடவில்லை. அவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியையுமே, இவ்வாறு விலை உயர்வு மூலமாக தங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டிருக்கும்போது, தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக உண்மையில் எவை எவை தங்களுக்காகப் போராடுபவை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். மக்களின் நலன்களுக்காக இருப்பதாக அடிக்கடி பாவ்லா செய்திடும் திரிணாமுல் காங்கிரஸ், மக்கள்மீது தாக்குதல் வரும் சமயத்தில் மத்திய அரசின் ஓர் அங்கம் என்ற வகையில் மக்கள் விரோத நடடிக்கைகளுக்கு முழுமையா ஆதரவு அளித்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, இத்தகைய பிரச்சாரங்கள் அவற்றின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திட முடியாது. விலை உயர்வு மற்றும் மிகவும் கேடுபயக்கக்கூடிய அரசின் பெட்ரோலியப் பொருள்கள் விலைக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாடு ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை உயர்வுக்கு எதிராக ஆகஸ்டில் பிரச்சாரம் மேற்கொள்ள அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரம் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான அடிப்படையை வகுத்திடும். அதேசமயத்தில், இடதுசாரிக் கட்சிகள், இதர மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளுடன் இணைந்துநின்று, வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்திலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுப் பிரச்சனையை எடுத்துக்கொள்ளும். இவை அனைத்துடனும் இக்கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இயக்கத்தை எந்தத் திசைவழியில் விரிவாக்கி வளர்த்து எடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்தாலோசனைகள் செய்திடும்.
(தமிழில்: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment