Monday, July 19, 2010
பிஎஸ்என்எல் ஊழியர்கள் அக்டோபர் 19 - 21 உள்ளிருப்பு வேலைநிறுத்தம்
புதுதில்லி, ஜூலை 19-
பிஎஸ்என்எல்-ஐப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரும் அக்டோபர் 19-21 தேதிகளில் மூன்று நாட்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வார்கள் என்று புதுதில்லியில் நடைபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் சிறப்பு மாநாடு பிரகடனம் செய்திருக்கிறது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் திங்கள் அன்று காலை சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் வி.ஏ.என். நம்பூதிரி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘அரசு, சென்ற வேலைநிறுத்தத்தின் போது அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தான் அளித்த வாக்குறுதியை மீறியதன் மூலம் துரோகம் செய்துவிட்டது. அது மட்டுமல்ல பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்குத் தாரை வார்த்து முழுமையாக ஒழித்துவிடவும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
பிஎஸ்என்எல் நிர்வாகம் தன்னுடைய வணிகக் கொள்கைகளைத் தீர்மானித்திடவும், இறுதிப்படுத்திடவும் முழு சுதந்திரம் அளித்திட வேண்டும். நாட்டின் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு அரசுத்துறை மற்றும் அரசுத்துறையைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே சேவைகளைப் பெற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனிக் கார்பரேஷனாக்கும்போது கொடுத்த உறுதிமொழியின்படி உரிமக் கட்டணங்களிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக் கட்டணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கட்டாயமாகப் பெற்றுள்ள 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசு, திருப்பித்தர வேண்டும்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்குத் தாரைவார்த்து, கடைசியில் நிறுவனத்தையே இல்லாதொழித்திட வகைசெய்யும் பிட்ரோடா குழுவின் பரிந்துரைகளை அரசு முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெறும் இத் தேசிய மாநாடு வரும் அக்டோபர் 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நாடு முழுதும் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கிறது. ஒரு வேளை அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், நேரடி நடவடிக்கைகள் இறங்கிற பொறுத்தமான முடிவினை மேற்கொள்ள கூட்டு நடவடிக்கைக் குழுவிற்கு தேசிய மாநாடு முழு அங்கீகாரம் அளிக்கிறது.
இவ்வாறு தேசிய மாநாட்டின் பிரகடனத்தை வி.ஏ.என். நம்பூதிரி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா மாநாட்டைத் துவக்கி வைத்தார். சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே வாழ்த்துரை வழங்கினார்.
அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் பிரகடனத்தின் மீது விவாதம் நடத்தியபின், பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
(ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment