Saturday, October 18, 2008

சங்பரிவாரக் கும்பலின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்கு எதிராக
















புதுடில்லி, அக்.18-
சங் பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் மதச்சிறுபான்மையினரின் பரந்த மேடையைக் கட்டிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
தலைநகர் டில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்தில் சனியன்று மாலை வகுப்புவாதம் மற்றும் ஜனநாகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகச் சிறப்புமாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, தெலுங்கு தேசக் கட்சியின் சார்பில் எர்ரநாயுடு, டில்லி கிறித்துவ கவுன்சில் செக்ரடரி ஜெனரல் ஜான் தயால், ஜாமியா மிலியா பல்கலைக் கழகத் துணை வேந்தர் நூருல் ஹாசன், மூத்த பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், இளம் பத்திரிகையாளர் சீமா முஸ்தபா மற்றும் டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கன்செஸ்ஸா மற்றும் பலர் உரையாற்றினார்கள். சிறப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது பிரகாஷ்காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
மதச்சிறுபான்மையினரைக் காப்பதற்கான போராட்டம் என்பது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று பொருள். பல்வேறு மாநிலங்களிலும் சங்பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தடுத்திடத் தவறிவிட்டன. மத்திய அரசும் உரியமுறையில் தலையிட மறுக்கிறது.
தேசப்பற்று என்ற பெயரில் பஜ்ரங்தளம் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராயில்லை.
காங்கிரஸ்கட்சி தலைமையில் உள்ள ஐமுகூ அரசாங்கம் இதே பாதையைத் தொடருமானாலும் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மேலும் அது செல்வாக்கு இழக்கும் என்பது நிச்சயம்.
பெரும்பான்மை மதவெறியர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, ஒரு வழிமுறையாக இன்று இத்தகைய பரந்த மேடை டில்லியில் உருவாகி இருக்கிறது. இதுபோன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்த மேடையைக் கட்டிடுவோம்.
இவ்வாறு மதச்சார்பற்ற சக்திகளும், மதச்சிறுபான்மையினரும் ஒன்றுபட்டால் நாட்டின் மதச்சார்பின்மையைக் காத்திட முடியும், நாட்டின் ஜனநாயகத்தைக் காத்திட முடியும், நாட்டின் மதச் சிறுபான்மையினரையும் காத்திட முடியும், பெரும்பான்மை மதவெறி சக்திகளின் அட்டூழியங்களுக்கு மிக எளிதாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும். அந்தத் திசைவழியில் இன்று டில்லியில் தொடங்கியுள்ள இந்தத் திசைவழியில் முன்னேறுவோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
தொடர்ந்து மதச்சிறுபான்மையினரைக் காத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், மதவெறித் தீயை உசுப்பிவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயங்கரவாத நடவடிக்கைசகளில் ஈடுபடும் அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: