Sunday, November 9, 2008

உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற



உலக நிதி நெருக்கடி என்பது இப்போது ஆழமான அளவிற்கு உலகப் பொருளாதார நெருக்கடியாக உருக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. உலகின் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகள் என்று சொல்லப்பட்டவை எல்லாம், தற்போது நீண்ட நெடிய பொருளாதார மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தியா உட்பட உலகில் உள்ள வளர்முக நாடுகளும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகும் நிலை வரவிருக்கிறது.
இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டிட ஐமுகூ அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன. ஆரம்பத்தில் உலக நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்று மறுத்தபோதிலும், அதனைத் தடுத்து நிறுத்திட, அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளானது, இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் இல்லாது மாறாக பெரும் நிதி நிறுவனங்களின் நலன்களைக் காப்பாற்றத் துடிக்கக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. நாட்டின் பணவீக்கத்தைக் அது மேற்கொண்டுள்ள ஒரேயொரு பொருளாதார நடவடிக்கை என்பது வங்கிகளின் வட்டிவீதத்தைக் குறைத்திருப்பதுதான். இதனால் எந்தப் பயனும் இல்லை.
ஐமுகூ அரசாங்கம், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, யோசனைகள் கூறுவதற்கு, கார்பரேட் பெரும்புள்ளிகள் மற்றும் வங்கியாளர்களை மட்டுமே இதுவரை அழைத்திருக்கிறது. மாநில அரசாங்கங்களையோ அல்லது மற்ற அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய - மாநில அரசுகளின் மற்ற நிதிசார்ந்த அமைப்புகளையோ அழைத்துக் கலந்து பேச வேண்டுமென்று அதற்குத் தோன்றவே இல்லை. மக்களின் நலன்கள் மீது கட்டப்படும் கார்பரேட் நிறுவனங்களின் லாபங்கள் உலகம் முழுதும் கடுமையாக வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஐமுகூ அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் இன்னும் அத்தகைய நபர்களையே விடாது பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் நிலை தொடர்கிறது. வீழ்ந்து கொண்டிருக்கும் உலகப் பொருளதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற இந்த வழிப் பயனளிக்காது என்கிற சூழ்நிலையில், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தத்தின் கடுமையான பாதிப்பிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்க்கண்டவாறு துல்லியமான பரிந்துரைகளை முன்வைக்கிறது.
பரிந்துரைகள்
மத்திய அரசு, ஒரு சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்திட வேண்டும். அதன்படி, பொது செலவினத்தை அதிகரித்து அதன் மூலம் உழைக்கும் மக்களின் வருமானம் மற்றும் நுகர்வு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், வேண்டும்.
மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசாங்கங்களும் நிதிப் பற்றாக்குறையை அதிகரித்திட இது சரியான தருணமாகும்.
நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM Ac t) சட்டத்தை ரத்து செய்திட வேண்டும். மாநில அரசாங்கங்களுக்காக ஓர் ஒருங்கிணைந்த கடன் நிவாரணத் திட்டத்தைக் கொண்டுவந்து, மாநில அரசாங்கங்கள் விரிவடைந்த வகையில் நிதி மேலாண்மையைப் பின்பற்றிட ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இருக்கும் பணியிடங்களைப் பாதுகாத்திட...
உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழலில் நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்திட, அரசாங்கம் முன்னுரிமை அளித்திட வேண்டும்.
தொழில்நிறுவனங்கள் ஆலைமூடல் அல்லது ஊதிய வெட்டு போன்றவற்றைச் செய்யாது தடுத்திடக்கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, சட்டம் (moratorium) ஒன்றை அரசு அறிவித்திட வேண்டும். ஏனெனில் தொழில்நிறுவனங்கள் ஆலை மூடல் அல்லது ஊதிய வெட்டு நடவடிக்கைளை மேற்கொண்டால், அது மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்து, நிலைமைகளை மேலும் கேடாக்கிடும். மாநில அரசாங்கங்களும் நடப்பிலுள்ள தொழிலாளர்நலச் சட்டங்களைக் கடுiமாக அமல்படுத்தி, ஆலை மூடல் மற்றும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
நிதிச் செலவினங்களைச் சரிசெய்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அரசு முதலில், சமீககாலத்தில் ஊதிப் பெருத்துள்ள தொழில்நிறுவனங்கள் அடைந்திடும் லாபம் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் ஆகியவற்றில்தான் கை வைக்க வேண்டும். நாட்டில் ஒரு வருமானங்கள் கொள்கை (Incomes Policy)யைக் கொண்டுவர வேண்டும். அதன்கீழ் அதிகாரிகளின் ஊதியம், ஏறும் விலைவாசி மற்றும் தொழிலாளர்கள் ஈட்டிடும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.
உண்மையான பொருளாதாரத்தை உயர்த்தத் திட்டமிடல்
வேலைவாய்ப்பு அதிகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிதாக வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் பொது முதலீட்டை அதிகப்படுத்தி, புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் வேலையிழப்போரை இந்நிறுவனங்களில் அமர்த்திட வேண்டும்.
வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்: தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் வலுப்படுத்தப்பட்டு, அதனை நகர்ப்புரங்களுக்கும் விரிவாக்கிட வேண்டும். நூறு நாட்களுக்கு மேல் வேலை அளிப்பதற்கும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
வேளாண்மை: உணவு தான்யங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும். நாடு முழுதும் அனைத்து முக்கிய பயிர்களுக்கும் பொது கொள்முதல் நடவடிக்கைகள் விரிவாக்கப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புத் திட்டப்பணிக்கான ஒதுக்கீடுகள் மற்றும் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் கணிசமான அளவில் விரிவாக்கப்பட வேண்டும். பாசனத்திற்கான பொது முதலீடும் கணிசமான அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும். பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பணப் பயிர்களுக்கு, உயர் சங்கவரி மூலமாக இறக்குமதிக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும். ரப்பர், முந்திரி போன்ற பணப் பயிர்களுக்கும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்து, விலைவீழ்ச்சியிலிருந்து அவற்றைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கக்கூடிய வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உணவு மற்றும் எரிபொருள் விலைகள்: டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் முறையே ரூ.4 மற்றும் ரூ.2 உயர்த்தப்பட்டது, மேலும் தாமதமின்றி குறைக்கப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதனால் இங்கும் விலைகளைக் குறைத்திட வேண்டும். (ஒரு பேரலுக்கு 60 டாலருக்குக் கீழ் விலை குறைந்திருக்கிறது) பொது விநியோக முறையை அனைவருக்கும் சீரானதாக்கி, மான்ய விலையில் உணவுதான்யங்கள் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதியினருக்கும் சென்றடைந்திட வேண்டும். பொருளாதாரத்தில் நுகர்வுத் தேவையைப் பெருக்கிட இந்நடவடிக்கை அவசியம்.
சில்லரை வர்த்தகம்: நுகர்வு வளர்ச்சி மெதுவாக இருப்பதனால், சிறிய மற்றும் சாலையோர வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், பெரும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள்சில்லரை வணிக வளாகங்களை விரிவுபடுத்தி, சந்தையின் பெரும்பகுதியை அபகரிக்க அனுமதிப்பது, நிலைமையை மேலும் கேடாக்கிடும். எனவே நாட்டில் உள்ள சிறிய மற்றும் சாலையோர வியாபாரிகளைப் பாதுகாத்திடக் கூடிய வகையில் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்குக் கடிவாளமிடுவது அவசியம்.
சிறிய அளவிலான தொழில்கள் : சிறிய அளவிலான தொழில்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடியினால் அதிகமான அளவிற்கு வேலைஇழப்புகள் ஏற்பட்டு, அதனைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.குறிப்பாக ஏற்றுமதி சார்ந்த தொழில்களான ஆடைகள் மற்றும் தோல் தொடர்பான தொழில்நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன. இவற்றை மனதில் கொண்டு, நிவாரண நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஏற்றுமதி இறக்குமதி வரிகள் மூலம் பாதுகாப்பு: பொது முதலீடு மூலமாக பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, உள்நாட்டுத் தொழிலகங்களைப் பாதுகாத்திட, உரிய ஏற்றுமதி இறக்குமதி வரிக் கொள்கை அவசியம்.
நிதித்துறையில் உள்ள விதிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். நிதித் துறைமீது அரசின் கட்டுப்பாடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். நிதிநிறுவனங்கள் வளமானவர்களுக்கு நுகர்வுப் பொருள்கள் வாங்குவதற்கு கடன்கள் அளிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, வேளாண்மை மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடிய வகையில் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.
மூலதனக் கணக்கு மாற்றத்தக்க தன்மை (Capital Account Convertibility): தாராபூர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மூலதனக் கணக்கைத் தாராளமயப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மூலதனம் உள்வரவு மற்றும் வெளிச்செல்லுதல் (டிரவகடடிற) தொடர்பாக கடும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட வேண்டும்.
அநாமதேயக் குறிப்புகள் (Participatory Notes) : PNs எனப்படும் அநாமதேயக் குறிப்புகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும். ஊக வணிகத்திற்கு இடம் கொடுக்கும் அனைத்து நடைமுறைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளைப் பாதுகாத்தல்: வங்கி முறைப்படுத்தல் (திருத்தச்)சட்டமுன்வடிவு, பாரத ஸ்டேட் வங்கி (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துதல் போன்ற வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையை அழித்திடக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும்.
ஓய்வூதியச் சீர்திருத்தம்: ஐமுகூ அரசாங்கம் ஓய்வூதியச் சீர்திருத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம் சட்டமுன்வடிவு (PFRDA Bill) ரத்து செய்யப்பட வேண்டும்.. அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி

No comments: