Wednesday, October 15, 2008

சிங்கூர்: மக்கள் விரோத அரசியலைத் தோற்கடித்திடுவோம்





மேற்கு வங்கத்தில் இடது முன்னணிக்கு எதிரான சக்திகள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி தலைமையில், சிங்கூரிலிருந்து டாடா கார் உற்பத்தித் தொழிற்சாலையை விரட்டியடிப்பதில் துரதிஷ்டவசமாக வெற்றி பெற்றுள்ளன.
இவ்வாறு, இழப்பீட்டுக் காசோலையை பெற மறுத்த பத்து சதவீதத்தினருக்கும் குறைவானவர்களின் ஆதரவுடன், அப்பகுதி மக்களுக்கு முன்னேற்றகரமான வாழ்வாதாரத்தையும், எதிர்கால சுபிட்சைத்தையும் அதேபோன்று தொழில்மயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றனர். நாம் இப்பகுதியில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப்போல, நந்திகிராம் மற்றும் சிங்கூரில் இவர்கள் மேற்கொண்ட சீர்குலைவு வன்முறைகள் அரசியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களின் மூலமாக திரிணாமுல் காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களுடைய ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இறுதியாக, எத்தகைய அரசியல் தங்களுக்குத் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மேற்கு வங்க மக்களேயாவர்.
மமதா பானர்ஜி, நானோ கார் உற்பத்தித் திட்டத்தை மட்டும் வங்கத்திலிருந்து விரட்டியடிக்கவில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதானக் கட்சியான பாஜகவின் விசுவாசமிக்க கூட்டணிக்கட்சி என்ற முறையில், நானோ திட்டத்தை குஜராத்தில் அமைப்பதற்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அவர் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதன் மூலம், பாஜகவின் நரேந்திர மோடி அரசாங்கம் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறிப் படுகொலைகளை, சரி என்று ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைவிற் கொள்க.
வங்கத்திலிருந்து, டாடா தன்னுடைய நானோ கார் உற்பத்தித் திட்டத்தை வேறிடத்திற்கு ஏன் எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல், பெரு முதலாளிகளின் கார்பரேட் ஊடகங்கள், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறை வாரி இறைப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ‘‘மமதாவை மட்டும் குறை சொல்லாதீர்கள்’’ என்று தி எகனாமிக் டைம்ஸ் அலறுகிறது. வேறு சிலர் சற்றே தணிந்த குரலில் குறை சொன்னாலும், மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் மமதா பானர்ஜியை, கோலியத்திற்கு எதிராகப் போராடிய டேவிட் போன்றவர் என்றும், தி இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு அவரை ‘‘இந்தியாவின் காப்பாளர்’’ என்றும் புகழாரம் சூட்டியிருக்கின்றன. இதனை அந்த ஏடு ‘‘நிலத்தை ஒப்படைக்க விரும்பாத விவசாயிகளை’’ காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ படத்தின் கீழ் வந்த அடிக்குறிப்பை ஆதாரமாகக் காட்டி தன் புகழாரத்தை நியாயப்படுத்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதிலும், இத்தகைய இழிவான செயல்களில் அவை இறங்கின.



இதுபோன்ற சித்தரிப்புகள் நமக்கு 1970களின் ஆரம்ப காலங்களில் வியட்நாமுக்கு எதிராக சைகோனை அமெரிக்க ராணுவத்தினர் முற்றுகையிட்ட சமயங்களில், பாங்காக்கிலிருருந்த பிரஸ் கிளப் ‘‘நேரில் கண்ட காட்சிகளாக’’ வெளியிட்ட சாட்சியங்களைத்தான் நினைவுபடுத்துகின்றன. ஆனால் நடந்தது என்ன? இறுதியில் அமெரிக்காவின் இராணுவத்தினை, நிர்மூலமாக்கி, சைகோனையும் நாட்டின் பிற பகுதிகளையும் அமெரிக்காவிடமிருந்து வென்றெடுத்தது வியட்நாம்.
இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய கடுஞ்சொற்களை இவை பிரயோகிக்கும் அதே சமயத்தில், சில அடிப்படைப் பிரச்சனைகளும் முன்னுக்கு வந்துள்ளன. முதலாவதாக, இடது முன்னணி அரசாங்கம், தரிசு நிலத்தை கையகப்படுத்துவதற்குப் பதிலாக, விளை நிலங்களை ஏன் கையகப்படுத்தின? விடை மிகவும் எளிதான ஒன்றுதான். மேற்கு வங்கத்தில் தரிசு நிலம் என்று இருப்பது இரு சதவீதத்திற்கும் குறைவாகும்.


இரண்டாவதாக, இடது முன்னணி அரசாங்கம் ஏன் நில உரிமையாளர்களுக்கு டாடா நிறுவனம் மூலமாக பணம் கொடுக்க முயலவில்லை? இதற்கும் விடை மிக எளிது. நாட்டில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒரு புதிய மத்தியச் சட்டம் தேவைப்படுகிறது. 1894இல் பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்தபோது, ரயில் பாதை அமைப்பதற்காக, நாடு முழுதும் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமாகத்தான் தற்போதும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. (கடந்த மூன்றாண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.) தற்காலத்திற்கொவ்வாக இத்தகைய சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. அவ்வாறு நிலம் அளிப்போருக்கு இழப்பீடு தரப்படுவதுடன், மேற்படி தொழிற்சாலையில் வேலை உத்தரவாதம் அளிப்பதற்கும் வகை செய்யக்கூடிய வகையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். இதனைச் சட்டரீதியாகச் செய்திட வேண்டியிருக்கிறது. இதனை தனிப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு மேற்கொள்ள அனுமதித்திட முடியாது. இதற்கு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டியது அவசியம்.


துரதிர்ஷ்டவசமாக, கடந்த நான்கு ஆண்டு காலமாகவே, குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தல் பிரச்சனை மிக உக்கிரமாக வந்த சமயத்திலேயே, இவ்வாறு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போதாவது அதனை அவசரமாகச் செய்திட வேண்டியது தேவையாகும்.


மூன்றாவதாக, டாடா நிறுவனத்திற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால்தான் அந்நிறுவனம் சிங்கூரிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்று ஒரு பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது. ரத்தன் டாட்டாவே ஒப்புக்கொண்டிருப்பதுபோல இது காரணமல்ல. உண்மையில், போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வந்தது. ஆயினும், டாட்டா ஒரு நிலைபாட்டினை மேற்கொண்டார். அதாவது, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்காவிடில், தாங்கள் சிங்கூரில் தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்று கூறினார். நிச்சயமாக இத்தகு நிலைபாட்டினை ஏற்காமல் ஒருவர் மறுத்திட முடியும். ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அங்குள்ள அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு தந்தால்தான், தன் வீட்டில் வந்து எதையும் திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால்தான் வீடு கட்டுவேன் என்று எவரும் கூறுவதில்லை. ஆயினும், மமதா பானர்ஜியைப் போன்றே, டாட்டாவிற்கும் பகுத்தறிவுக்கொவ்வாத நிலைபாட்டினை மேற்கொள்வதற்கு முழு உரிமையும் உண்டு.


மொத்தத்தில், வங்கமும் அதன் மக்களும் தற்காலிகமாக அதிலும் குறிப்பாக இந்தத் திட்டத்தைப் பொறுத்து இதனால் ஏற்பட இருந்த வாய்ப்பு வளங்களைப் பெற மறுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, வங்கமும் அதன் மக்களும் முன்னேற வேண்டுமானால் அங்கு மிகவிரைவான முறையில், நிலச்சீர்திருத்தங்களால் விளைந்துள்ள பயன்பாடுகளை ஒருமுகப்படுத்தி, வேளாண்மை உற்பத்தியை அதிகப்படுத்தி, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில்மயத்தை ஏற்படுத்துவதும் அவசியம். இடது முன்னணி மற்றும் மக்கள் மத்தியில் நீண்ட நெடிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு இம்முடிவுக்கு இடது முன்னணி வந்திருக்கிறது. இப்பிரச்சனையை முன்வைத்துத்தான் சென்ற சட்டமன்றத் தேர்தலை இடது முன்னணி சந்தித்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் இதனை மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையு.டன் தேர்வு செய்தார்கள். இப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதென்றால், அது மக்களின் உறுதிமொழியை மறுதலிப்பதேயாகும்.
எனவே, தாங்கள் அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, அதற்கு எதிர்ப்பு வந்தால் அதனை நிராகரிப்பதா அல்லது அதனை ஏற்றுக்கொள்வதா என்று முடிவெடுப்பதும் வங்க மக்களேயாவர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நானோ திட்டத்தை வங்கத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதற்கு எந்த அரசியல் முன்வந்ததோ, அந்த அரசியலையும் வங்கத்தின் மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, வேறு இடத்திற்கு அப்புறப்படுத்துவது அவசியமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: