Thursday, October 9, 2008

அக்டோபர் 4 - கறுப்பு தினம்:

அக்டோபர் 4 - கறுப்பு தினம்:
டில்லியில் மாபெரும் கண்டனப் பேரணி
புதுடில்லி-
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் அக்டோபர் 4 அன்று இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளால் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. புதுடில்லியில் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் ஹைடு சட்டத்தில் அடங்கியுள்ள ஷரத்துக்கள் உட்பட இந்தியாவை அடிமைப்படுத்தக் கூடிய அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன. தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. எரிபொருள் இருப்பு வைத்துக்கொள்வதற்கும் எவ்வித வழிவகைகளும் கிடையாது. எந்த ஒரு சுயமரியாதை உள்ள அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் பல இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அரசின் சார்பில் அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் சனிக்கிழமையன்று டில்லி வருகிறார்.
கண்டலீசா வருகை மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவதைக் கண்டித்தும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நாடு முழுதும் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்புக் கொடி ஏற்றியும் கறுப்பு தினம் அனுசரிக்குமாறும் கண்டன இயக்கங்கள் நடத்திடுமாறும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக புதுடில்லியில் மண்டி ஹவுஸ் என்னுமிடத்திலிருந்து மாபெரும் கண்டனப் பேரணி புறப்பட்டு பெரோசா ரோடு வழியாக, ஹைதராபாத் ஹவுஸ் நோக்கிச் சென்றது. பேரணியில் சீத்தராம் யெச்சூரி, மது, தபன்சென் (மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்), து. ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்), மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி, தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் அணிவகுத்து வந்தனர்.
பேரணி, வித்யார்த்தி பவன் அருகே வந்தபோது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா கண்டன உரையாற்றினார்கள்.

No comments: