Monday, October 13, 2008

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



புதுடில்லி, அக். 13-
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் திங்கள் அன்று புதுடில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
நாட்டின் மிக நெருக்கடியான கால கட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. ஒரிசா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கிறித்துவ சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மத மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயத்தில், நாட்டின் தலைநகர் டில்லியிலும் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகர்களிலும்
நடைபெற்ற தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கடும் சவாலாக எழுந்துள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழ்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூடியுள்ளது. உண்மையில், இக்கூட்டத்தை இதற்கு முன்னமேயே நடத்தி இருக்க வேண்டும். நாட்டில் சீர்குலைந்து வரும் நாட்டு ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் அது தன் பொறுப்பை உணர்ந்து தன் கடமையைச் செய்ததாகக் கூற முடியாது. குறிப்பாக நாட்டின் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் ஒரிசாவில் கிறித்துவ சிறுபான்மை இனத்தினருக்கு எதிரானத் தாக்குதல்கள் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வந்தபோதிலும், அதில் மத்திய அரசாங்கம் தலையிடத் தவறிவிட்டது.
ஆயினும், இக்கூட்டத்திற்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலில் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் அனைத்து மோதல்களும், பதட்ட நிலைமைகளும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. குறுகிய நேரமே நடைபெறக்கூடிய இக்கூட்டத்தில், முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் - அவை என்னதான் முக்கியமான பிரச்சனைகள் என்ற போதிலும் -விவாதிப்பது என்பது நிச்சயமாக சாத்தியமில்லை.
சமூக நீதி, சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், பிராந்திய வெறிக்குத் தீனி போடும் பிராந்திய ரீதியிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சச்சார் குழு அறிக்கை தெளிவுபடுத்தி இருப்பதுபோல் மதச் சிறுபான்மையினர் நலன்களை முன்னேற்றுவதற்குப் போதிய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய இந்த அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தெளிவான முறையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் முன்பும், பகிரங்கமாகவும் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே நாளுக்கு நாள் -அதிலும் குறிப்பாக நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கத் துவங்கியபின் - சீரழிந்துகொண்டே வந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் அமைக்கப்பட்டிருந்த பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் கைகழுவி விட்டதன் மூலம், பிராந்திய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தன. அதன் விளைவு, நாட்டின் பல பாகங்களில் பிரிவினை சக்திகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன. தாராளமயக் கொள்கையின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மத்திய - மாநில உறவுகள் போற்றப்படவில்லை. ஏழை - பணக்காரர்க்கிடையேயான பொருளாதார இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன, வேலைவாய்ப்புகள் கடுமையாகச் சுருங்கி இருக்கின்றன. இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு குழுக்களுக்கும் இடையே மோதல்கள் கூர்மையாகி, சமூக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டையே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பத்தாம்பசலி கோஷமான ‘‘மண்ணின் மைந்தர்’’ கோஷமானது, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புதிய முறையில் மிகவும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சிறுபான்மையினர் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் சிபாரிசுகள் பலவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு இப்பிரச்சனைகள் அனைத்தும் சரியான கண்ணோட்டத்தில் அவசரமாக விவாதிக்கப்படவேண்டும் என்ற போதிலும்கூட, இன்றைய மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இரண்டே இரண்டு அம்சங்கள் குறித்து மட்டும் விவாதிக்க நம்மை நாம் சுருக்கிக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.
ஒரிசா, கர்நாடகா மற்றும் பல பகுதிகளில் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடரும் அதே சமயத்தில், அஸ்ஸாமிலிருந்தும் மதவன்முறைச் சம்பவங்கள் குறித்து மிகவும் கொடூரமான அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை, 50 பேர் உயிர்ப்பலியாகி இருக்கிறார்கள். இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைத் துறந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் மூத்த குடிமக்களான போடோ பழங்குடியினர், உள்ளூர் மக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் மாநிலத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகைய மத மோதல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் மோசமான முறையில் ஊறு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றையும்விட மிகவும் பயங்கரமானமுறையில் சமீபத்தில் வந்துள்ள அறிக்கை காணப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் பைஷா நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு முஸ்லீம்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இங்கே இதுவரை பத்துபேர் மதவெறி வன்முறைக்குப் பலியாகி இருக்கிறார்கள். மகாராஷ்ட்ரா துலே மாவட்டத்தில் மத வன்முறை வெறியாட்டங்கள் அப்பாவி மக்கள் பலரின் உயிரைக் குடித்திருக்கிறது. மிகப் பெரிய அளவில் அவர்களது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்குள்ளேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற மூன்றாவது வகுப்புவாத வன்முறைச் சம்பவமாகவும் இது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருந்து வரும் தகவல்கள் அங்கு வகுப்புவாத மோதல்களால் பதட்ட நிலைமை தொடர்கிறது. இதேபோன்று அறிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கவலையளிக்கக்கூடிய விதத்திலேயே தொடர்ந்து மதவெறி இயக்கங்கள் தங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில், கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங் தளத்தினர் மீது பாஜக தலைமையிலான மாநில அரசாங்கம் மிகவும் ‘‘மென்மை’’யாக நடந்துகொள்வதாக, சிறுபான்மையினர் தேசிய ஆணையம் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அட்டூழியங்கள் நடைபெற்ற பின்னர், கர்நாடகக் காவல்துறையினர் பஜ்ரங் தள மாநில கன்வீனரைக் கைது செய்தனர். ஆயினும் உடனடியாக அவர், பிணையிலும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில், மதவெறிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி கிறித்துவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரிசா தொடர்பாகவும், சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில், வீடுகளை இழந்து விரட்டியடிக்கப்பட்ட தலித் கிறித்துவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமானால், அவர்கள் தங்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளத்தினர் அவர்களை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு திடீரென்று பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டிருப்பதானது, நாட்டின் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆழமான ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலமாக இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்திட வேண்டியது அவசியமாகும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நாட்டின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் காலதாமம் செய்திட அனுமதிக்கக் கூடாது. மாநில அரசுகளுடன் கலந்துபேசி, இப்பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
அதேபோன்று பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பயிற்சி பெறும் வசதிகளைப் பெற்றிருப்பதற்கு எதிராகவும் கடுமையானமுறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
ஆயினும், அதே சமயத்தில், நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதிய ஒருவர், சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று பரவலாக நம்பப்படுகிறது. இவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக மதவெறி உணர்வை ஊட்டுவது, துரதிர்ஷ்டவசமாக, அனுமதிக்கப்பட முடியாத பயங்கரவாத எதிர்நடவடிக்கையாகும். பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் முறியடிக்கப்படவேண்டிய ஒன்று என்று கூறுகிற அதேசமயத்தில், மாநில நிர்வாகம் இதனை எப்பக்கமும் சாயாது நடுநிலையில் நின்று பாரபட்சமுறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. இது தேசவிரோதமானது. சமீபத்தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்து பயங்கரவாதிகள் மீதான சந்தேகத்தை இயற்கையாகவே எழுப்பியுள்ளன. சமீபத்தில் மலேகான் என்னுமிடத்தில் ரம்சான் விரதத்தை முடித்துவிட்டு வெளியே வந்த முஸ்லீம் ஜனத்திரள் மீது, நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், நான்கு முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள், மகாராஷ்ட்ரா கூடுதல் காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) தலைவரை வினவியபோது, அவர் ‘‘இந்தக் கட்டத்தில், அதற்கான வாய்ப்பில்லை என்று கூறுவதற்கில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட காவல்துறையினரின் புலனாய்வுகள், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் - 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானி, ஜல்னா மற்றும் ஜலகான் மாவட்டங்கள், 2005இல் உத்தரப் பிரதேசத்தில் மாவ் மாவட்டம், 2008இல் நாண்டட் மாவட்டம், 2008 ஜனவரியில் தென்காசி, திருநெல்வேலியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவம், 2008 ஆகஸ்ட்டில் கான்பூரில் நடைபெற்ற சம்பவம் - ஆக அனைத்து சம்பவங்களிலும் - பஜ்ரங்தளம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கின்றன.
இந்த வழக்குகள் அனைத்தும் பாரபட்சமற்ற முறையிலும், தீவிரமாகவும் விசாரிக்கப்படுவதன் மூலமாகவே நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். கிடைத்திருக்கக்கூடிய தகவல்களிலிருந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் பஜ்ரங்தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்பே குறிப்பிட்டதைப்போல, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆயினும், மிக முக்கியமாக, இவற்றை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொண்டிட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த அமைப்பாக இருந்தாலும், அவர்களின் மதப் பின்னணியைப் பாராது, ஒரே அளவுகோலுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், முஸ்லீம் சிறுபான்மை இனமக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதையோ, துன்புறுத்துவதையோ, தண்டிப்பதையோ அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவில் பல்வேறு இன மக்களிடம் காணப்படும் வேற்றுமைப் பண்புகளினூடே இழையோடும் பொதுப் பண்புகளை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மதரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ சீரான தன்மையைத் திணிக்க முயற்சித்தால், அது நாட்டைத் துண்டாட முயலும் சக்திகளுக்கு அற்புதமான தீனியாகும் என்று உறுதிபடக் கூற முடியும்.
நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசுத் தளத்தைப் போற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகக் குழுக்களும், சிவில் சமூகத்தினரும் இந்தியாவின் வேற்றுமைப் பண்புகளைச் சீராட்டி, பாராட்ட வேண்டுமேயொழிய, அது குறித்து புலம்பக் கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது விதியைப் பயன்படுத்துவதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது. இதனைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்திடும் வகையில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது. ஆயினும், இதுதொடர்பாக, ஒரிசா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் 355ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்நடவடிக்கையின் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு கூறும் பதில் என்ன? பதில் கூறவில்லை எனில், ஏன் கூறவில்லை?
நான் மேலே பரிந்துரைத்த அடிப்படையில், அனைத்து முக்கிய பணிகள் தொடர்பாகவும், நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் மதவெறி மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பிசிறற்ற ஆதரவை அளிக்கிறது என்று கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச. வீரமணி)

No comments: