ஒற்றுமை சம்பந்தமாக, அதன்அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒருசில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.
ஒரு தோழர் - அவர் நாசவேலை செய்பவராகவோ அல்லது இயக்கத்திற்கு எதிராகப் போனவராகவோ இல்லாதபட்சத்தில் - அவரைக் கட்சியின் நடவடிக்கைகளுடன் ஒன்றுபடுத்துவது தொடர்பாக ஒரு நேசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, நம் அணுகுமுறை என்பது ஓர் இயக்க வியல் அணுகுமுறையாக இருக்க வேண்டுமேயொழிய, இயக்கமறுப்பியல் அணுகுமுறையாக இருக்கக் கூடாது.
இயக்கவியல் அணுகுமுறை என்று சொல்வதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்?
இதன் பொருள், ஒவ்வொன்றை குறித்தும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான், ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்காக அவரை முழுமையாக மறுதலித்திடக் கூடாது. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை என்று லெனின் ஒருசமயம் கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது. வேலியிட வேண்டுமென்றால் அதற்கு மூன்று பக்கங்களிலும் மரமுளைகளைக்கொண்டு இறுக்குவதுபோல், ஒரு திறமைசாலிக்கும் மூன்று பேர்களின் உதவி தேவைப்படுகிறது. தாமரைப் பூ அழகானதுதான், ஆனால் அது இலைகளுடன் இருக்கும்போது மேலும் அழகுபெறுகிறது என்பது சீனப் பழமொழி. எல்லாம் அறிந்தவர் என்றோ அல்லது சகலகலா வல்லவர் என்றோ ஒருவர் தன்னை நினைத்துக்கொண்டால், அவர் மிதப்பில் இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.
தவறு செய்யும் தோழரிடம் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது? நாம் அவர் மேற்கொண்ட தவறுகளை ஆய்வுக்கண்ணோட்டத்துடன், இயக்கமறுப்பியல் அணுகுமுறையைப் பின்பற்றாது, இயக்கவியல் அணுகுமுறையுடன் ஆய்ந்திட வேண்டும். ஒருகாலத்தில் நம் கட்சியும் இயக்கமறுப்பியல் சகதியில், வறட்டுத் தத்துவாதச் சேற்றில் மூழ்கி வெளிவரமுடியாமல் தத்தளித்தது. பின்னர்தான், நாம் வறட்டுத்தத்துவாதச் சேற்றிலிருந்து மீண்டு, இயக்கவியல் குறித்து சற்றே கற்றுக் கொண்டோம். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதே இயக்கவியலின் அடிப்படை சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்தின்படி, தவறு இழைக்கும் ஒரு தோழரிடம், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
முதலாவதாக, அவரது தவறான கருத்துக்களை அவர் விட்டொழித்திட போராட்டத்தை நடத்திட வேண்டும். இரண்டாவதாக, அவருக்கு நாம் உதவிடவும் வேண்டும். முதலில் அவருடன் போராடு, அடுத்து அவருக்கு உதவிடு. நல்ல எண்ணத்துடன், அவர் தன் தவறுகளைக் களைந்திட உதவுவதன் மூலமே, தவறான நிலைபாட்டிலிருந்து அவரை வெளிக்கொண்டுவர முடியும். ஆயினும், வேறுவகையான பேர்வழிகள் குறித்த அணுகுமுறை என்பது வேறு. அதாவது, டிராட்ஸ்கி போன்றவர்களைப் பொறுத்தவரை, ஓர் இணக்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லை, ஏனெனில் அத்தகையவர்கள் சீர்திருத்த முடியாத அளவிற்கு சீர்கேடடைந்துவிட்டவர்கள். அதேபோன்றுதான் ஹிட்லர், சியாங்கே ஷேக், ஜார் போன்ற இழிபிறவிகளும் தூக்கி எறியப்பட வேண்டியவர்களாவார்கள். ஏனெனில், நாமும் அவர்களும் ஒருவர்க்கொருவர் பொருத்தமற்றவர்களாவோம். நமக்கும் அவர்களுக்கும் எவ்விதத்திலும் ஒற்றுமை ஏற்பட வழி கிடையாது.
அதேபோன்று, இறுதியாக ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைகள், சோசலிச அமைப்பு முறையால் மாற்றியமைக்கப்பட வேண்டியதும் உண்மை. இது, தத்துவார்த்த நிலைபாட்டிற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதம், பொருள் முதல் வாதத்தால், ஆத்திகம், நாத்திகத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும். இங்கே நாம் நம்முடைய இறுதி இலட்சியம் (strategy) குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதனை அடைவதற்கான உத்திகளுக்கான கட்டங்கள் (tactics) வித்தியாசமானவை. எங்கு சமரசம் தேவையோ அங்கே சமரசம் செய்துகொள்ளப்பட வேண்டும். உத்திகளுக்கான கட்டங்கள் ஒவ்வொன்றின்போதும், போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அதே சமயத்தில் சமரசங்களைச் செய்து கொள்வதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனையும் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது தோழர்கள் தொடர்பான பிரச்சனைக்கு மீண்டும் திரும்புவோம். தோழர்களுக்கிடையே புரிந்துணர்வில் பிழை ஏற்பட்டிருப் பின், ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்து விட்டாலே, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்றும், அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டிற்கோ, தப்பபிப்பிராயங்களுக்கோ இடம் இல்லை என்றும் சிலர் நினைப்பதுபோல் தோன்றுகிறது. மேலும் அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைவருமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை, வேறுபாடுகளின்றி எங்கும் ஒரே சீராகக் கெட்டியாயுள்ளவர்கள் என்றும் எனவே இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை என்றும் கருதுவதுபோல் தோன்றுகிறது. கட்சிக்குள் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டாரானால் அவர் நூறு சதவீதம் மார்க்சிஸ்ட்டுகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவதுபோன்று தோன்றுகிறது. ஆனால், நடைமுறையில் நூறு சதவீத கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் என்றபோதிலும், 90, 80, 70, 60 அல்லது 50 சதவீத மார்க்சிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள், ஏன் சில இடங்களில் 10 அல்லது 20 சதவீத மார்க்சிஸ்ட்டுகள் கூட இருக்கிறார்கள். ஒரு சிறிய அறையில் நம்மில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட உட்கார்ந்து ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதில்லையா? பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணமுடியாமல் போனதில்லையா? மார்க்சிசம்-லெனினிசக் கொள்கைக்கு ஊறு ஏற்படாத வகையில், பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது, மற்றவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் கொண்டிருந்த கருத்துக்கள் கைவிடப்பட வேண்டியதாக இருந்தால், கைவிட்டுவிட வேண்டும்.
தவறு செய்த ஒரு தோழரைக் கையாளும்போது, நம் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும். ஒரு கை அவருடன் போராடும் அதே சமயத்தில், மற்றொரு கையால் அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தின் குறிக்கோள், மார்க்சிசத் தத்துவத்தை உயர்த்திப்பிடிப்பதுதான் - அதாவது அந்தத் தோழரை தத்துவார்த்தத்தின் அடிப்படையில் கெட்டிப் படுத்துவதுதான். அது ஒரு கை. மற்றொரு கை, அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ளுதல். ஒற்றுமையின் குறிக்கோள் அவரைத் தன்னுடைய தவறான நிலைபாட்டிலிருந்து வெளிக்கொணர்தலேயாகும். அவரோடு சமரசம் செய்துகொள்ளுதல் அதாவது சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தத்துவத்தை நெகிழ்வுத்தன்மையுடன் இணைத்தல் என்பதே மார்க்சிச - லெனினிசத் தத்துவமாகும். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இதுவேயாகும். எந்த ஒரு உலகமாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக ஒரு வர்க்க சமுதாயத்தில், முரண்பாடுகள் பல்கிப் பெருகியிருக்கும்.
சிலர், சோசலிச சமூகத்தில் கூட முரண்பாடுகள் ‘‘காணப்படுகிறதே’’ என்று கூறுகிறார்கள். இவர்கள் விஷயத்தைத் தவறான வகையில் முன்வைக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது பிரச்சனை அல்ல. முரண்பாடுகள் காணப்படாத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. அதேபோன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாத நபர் என்றும் எவரும் கிடையாது. அப்படி ஒருவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று ஒருவர் நினைத்தால், அவர் இயக்கமறுப்பியல்வாதியாவார். அணு என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை - இரு எதிர்மறைகளின் - நியுக்ளியஸ் மற்றும் எலக்ட்ரான்களின் - ஒற்றுமை என்பது உங்களுக்குத் தெரியும். நியுக்ளியஸிலும்கூட, மீண்டும் இரு எதிர்மறைகளின் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது புரோட்டான்களுக்கும் நியுட்ரான்களுக்கும் இடையிலான ஒற்றுமை. அதேபோன்று நியுட்ரானிலும் நியுட்ரான்கள் - ஆன்ட்டிநியுட்ரான்களின் ஒற்றுமை காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது எங்கும் காணப்படுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமை என்கிற சித்தாந்தம் - இயக்கவியல் - விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். அதாவது இயக்கவியலை குறுகிய சிறு தத்துவவாதிகளின் வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து விரிந்த அளவில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன். இந்தப் பிரச்சனை அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழு மற்றும் கட்சியின் அனைத்து மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கட்சியின் கிளைச் செயலாளர்கள் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டு, தாங்கள் கிளைக் கூட்டங்களுக்குத் தயாரித்திடும் வேலை அறிக்கைகளின்போது, அவற்றில் வழக்கமாக இரு இனங்களையும் - முதலாவதாக தன் கிளை புரிந்திட்ட சாதனைகளையும், இரண்டாவதாக, செய்திட்ட பலவீனங்களையும் எழுதிட வேண்டும். இதுவே உலகம் முழுதும் உள்ள நிகழ்ச்சிப்போக்காகும். இதுவே இயக்கவியலாகும்.
***
(1957 நவம்பர் 18 அன்று, மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில், தோழர் மாசேதுங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். )
தமிழில்: ச.வீரமணி
இயக்கவியலும் இயக்கமறுப்பியலும்
(Dialectics and metaphysics)
தர்க்கவியல் என்றும் இயக்கவியல் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்னும் டைலக்டிக்ஸ் (DIALECTICS) என்னும் ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியில் உள்ள டையலெகோ (DIALEGO) என்பதிலிருந்து வந்ததாகும். எதிரிகளின் வாதத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் வாயிலாக உண்மையைக் கண்டறியும் கலைக்கு பண்டைக் காலத்தில் ‘டைலக்டிக்ஸ்’ என்று கூறுவதுண்டு. சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று எதிரான கருத்துக்களை மோதவிடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த முறை என்று பழங்காலத் தத்துவவாதிகள் நம்பினர். சிந்தனைகளின் உண்மையைக் கண்டறிவதற்குக் கையாளப்பட்ட இந்த முறை, பிற்காலத்தில் இயற்கைத் தோற்றங்களின் உண்மையைக் கண்டறிவதற்கும் கையாளப்பட்டது.
இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியான மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்றும் இந்த இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. மேலும், இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிர்எதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்றும் இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது.
இயக்க மறுப்பியல் அல்லது மாயாநிலைத் தத்துவம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படும் METAPHYSICS இதற்கு நேர்மாறான தத்துவம் ஆகும். பொருள் இயலுக்கு (materialism) அப்பாற்பட்டது என்று பொருள்தரும் கிரேக்க சொல்லிலிருந்து உண்டான சொற்றொடர் மெடாபிசிக்ஸ் என்பதாகும். அதாவது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதுதான் மெடாபிசிக்ஸ்.இந்தப் பெயர் கிடைத்தது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தற்செயலான நிகழ்ச்சியால்தான். தர்க்க சாஸ்திரத்தைப் பற்றிய விரிவுரை என்ற நூலை எழுதிய அரிஸ்டாடில் நிறைய எழுதியிருக்கிறர். அரிஸ்டாடில் இறந்தபிறகு, அவரது சீடர்கள் அவரது நூல்களை வகை வகையாகப் பிரித்துத் தொகுத்துப் பட்டியலிட்டார்கள். பொருள் இயல் (பிசிக்ஸ்) என்ற தலைப்பின் கீழ் அரிஸ்டாடில் எழுதிய ஒரு நூல் இருந்தது. அதோடு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிய வேறொரு நூலொன்றும் இருந்தது. அதற்குத் தலைப்பு ஒன்றும் கிடையாது. சீடர்கள் பார்த்தார்கள். பொருளியலுக்கு என்று நூல் இருக்கிறது. ஆகவே இந்த நூலுக்குப் பொருளியலுக்கு அப்பாற்பட்டது என்று தலைப்புக் கொடுப்போமே என்று கருதி ‘‘மெடாபிசிக்ஸ்’’ என்று பெயர் கொடுத்து வகைபிரித்து விட்டார்கள்.
***