Sunday, January 20, 2008

மாக்சிம் கார்க்கி: கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ?-வீ.சிவகாமியின் செல்வி

மாக்சிம் கார்க்கி: கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ?
-வீ.சிவகாமியின் செல்வி

மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல, உண்மை. இந்தியாவில் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ், பிரேம்சந்த், கிருஷ்ண சந்தர் போன்றவர்களும், அமெரிக்காவில் ஹெமிங்வே, ஸ்டீன்பேக் போன்றோரும் கார்க்கியினால் உத்வேகம் அடைந்தவர்களாவார்கள். இன்னும் பலர் அவர் பாணியைக் கடைப்பிடித்தாலும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. கார்க்கியைப் பொறுத்தவரை எழுத்தாளர்களும் உழைப்பாளர்கள்தான், ஆனால் மக்களைப் பதப்படுத்தும் பணியைச் செய்யும் உழைப்பாளர்கள் (creative labour) எழுத்தாளர்கள் போரை வெறுக்க வேண்டும், சமாதானத்தை விரும்ப வேண்டும், ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கு எதிராகத் தங்கள் படைப்புக்களைப் படைக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு உன்னத இடத்தை அளித்திருப்பதை அவரது எழுத்துக்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியம் என்றால், அது மனிதன் தன்னைப் பற்றிப் புரிந்து கொள்ள, தன்மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, உண்மையைத் தேடும் முயற்சியை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். ஒருவனிடம் இருக்கும் இழிகுணங்களைப் போராடிப் போக்கிக் கொள்வதற்கும், நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதற்கும் உதவிட வேண்டும். கார்க்கியின் படைப்புக்களை ஒருவர் பரிசீலிக்கும்போது மனிதனது உள்மன அகவளர்ச்சிக்கு உற்ற துணையாயிருந்ததை உணர்ந்து கொள்ள முடியும்.

கார்க்கி, தன்னுடைய காலத்தில் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டங்களின் அனுபவங்களுக்கு உருவம் கொடுத்து. உன்னத மனிதர்களை உருவாக்கினார். சாமானியமான ஒருவன் கார்க்கியின் படைப்புக்களைப் படிக்கத் தொடங்கினான் என்றால், மிக விரைவில் உருக்கு போன்ற லட்சிய மனிதனாக அவன் உருவாவான் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

கார்க்கி ஒரு மாபெரும் கலைஞன். சோசலிசம், மனிதசமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்திட அல்லும் பகலும் அயராது போராடிய கலைஞன்.இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? கார்க்கியின் வார்த்தைகளில் சொல்வதென்றால். இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவு பரஸ்பரம் உதவி செய்துகொள்ளக் கூடியவைகளாகும். (The relations between literature and society are reciprocal). இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும். (Literature is not only the effect of social causes; it is also the cause of social effect.)

கார்க்கிக்குக் முன்பும் பலர், உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பவர்கள் உலகில் தோன்றியுள்ள அனைத்து இலக்கியங்களிலும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்தான். ஆனால் மற்றவர்கள் எல்லாம் உழைப்பாளியை சமூகத்தினால் ஒடுக்கப்பட்டவனாக, இழிவாக நடத்தப்படுபவனாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் கார்க்கியும் கார்க்கிக்குப் பிறகு கார்க்கியின் அடிச்சுவட்டில் எழுதியவர்களும்தான் உழைக்கும் வர்க்கத்தை வரலாற்றை உருவாக்குபவர்களாக, சமூக அநீதிக்கு எதிராக வீரத்துடன் போரிடுபவர்களாகப் படைத்திட்டார்கள். மனிதகுலத்தின் மீதான பிரியம் என்பது கார்க்கியைப் பொறுத்தவரை, ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களைப் பார்த்து, பரிதாபம் கொண்டு, கண்ணீர் சிந்துவதோடு நின்றுவிடவில்லை. அதேபோன்று வசதி படைத்தோர், இல்லாதோர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்கிற முறையிலும் இல்லை. கார்க்கியின் கருத்துப்படி உண்மையான மனிதாபிமானம் என்பது, துன்பத்தில் வாடும் மக்களைப் பார்த்து கண்ணீர் சிந்துவதல்ல, மாறாக அவர்களின் துன்பத்தைத் துடைத்திட, தங்கள் ரத்தத்தையும் சிந்தத் தயாராயிருப்பதேயாகும். இத்தகைய மனிதாபிமானத்தை அவர் ‘சோசலிச யதார்த்தவாதம்’ என்று அழைத்தார். சோசலிச யதார்த்தவாதம் என்பது மார்க்சிசத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சோவியத் படைப்புக்கள் சோசலிய யதார்த்தவாதக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன. கார்க்கி, 1934இல் சோசலிச யதார்த்தவாதத்திற்கு என்று ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியை அவர் உருவாக்குவதற்கும் முன்பே இந்தக் கலைநுட்பத்தை அவர், தன்னுடைய தாய் நாவலில் பயன்படுத்தினார்.கார்க்கியின் சம கால எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ், விளாடிமீர் கொரலன்கோ போன்றோரும் சமூகத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் கார்க்கிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தாஸ்தாவ்ஸ்கி என்ற எழுத்தாளர், புரட்சிகரப் போராட்டமானது மக்கள் மத்தியில் துவேஷ உணர்ச்சியை வளர்த்து, அவர்களை காட்டு மிராண்டிகளாக மாற்றிவிடுமோ என அஞ்சினார். மாறாக கார்க்கி, புரட்சிகரப் போராட்டமானது விலங்கு நிலையில் உள்ள மனிதனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, உயர்வடையச் செய்கிறது என்றார். கார்க்கியின் படைப்புக்களில் மிக முக்கியமான தாய் நாவல் இருநூறு தடவைகளுக்கும் மேல் மறுபதிப்பு அச்சாகியிருக்கிறது, உலகின் பல மொழிகளிலும் சுமார் 70 லட்சம் பிரதிகள் வெளியாகியிருக்கின்றன. நாவல் ஒரு குறிக்கோளுடன் எழுதப்பட்டிருப்பது என்பதும், சோவியத் புரட்சியின் வளர்ச்சியைப் படிப்படியாக நாவல் சித்தரிக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். வாளின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதை மெய்ப்பித்தவர் கார்க்கி.

சோவியத் யூனியன் உருவான பிறகு, சோவியத் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதுபோல் உலக இலக்கியங்களும் தங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் விரும்பினார்கள். எனவே தங்கள் படைப்புக்களை வெளிநாட்டு மொழிகளில் ஏராளமாக மொழியாக்கம் செய்தார்கள், அதேபோன்று வெளிநாட்டு இலக்கியங்களைத் தங்கள் நாட்டின் மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். கார்க்கியின் பெயரில் இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இன்ஸ்டிட்யூட்டும் நிறுவப்பட்டது. ரஷ்ய மக்களின் ரத்தத்துடனும் சதையுடனும் கார்க்கியின் பெயர் இரண்டறக் கலந்து விட்டது. அவர் பிறந்த இடமான நிஷ்னி நோவோகிராத் என்னுமிடத்தை கார்க்கி என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்கள். கார்க்கியின் நூல்களை ஆய்வு செய்வதற்காக சோவியத் அரசாங்கம் ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமே நிறுவியிருந்தது. அவர்கள் பல நூல்கள் அச்சிட்டு உலகம் முழுதும் இலவசமாகவே அனுப்பி வந்தார்கள். அவர்கள் நோக்கம் அவற்றின் மூலம் பணம் பண்ணுவது அல்ல. மாறாக சோசலிச சிந்தனைகளைப் பரப்புவதுதான். ஆனால், சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. சோவியத் யூனியனில் செயல்பட்டு வந்த அனைத்து இலக்கியப் பள்ளிகளும், பல்கலைக் கழகங்களும் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.

கட்டுரையாளர் தன் ஆய்வுக்கட்டுரைக்காக, இணைய தளம் மூலம் முயற்சித்தபோது, அவை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கார்க்கியின் பெயரிடப்பட்ட நகரம் கூட இப்போது பழைய பெயரான நிஷ்னி நோவோகிராட் என்று மாற்றப்பட்டிருக்கிறது.இணைய தளங்களின் விஷமப் பிரச்சாரம்இணைய தளத்தில் கார்க்கி குறித்தும், கார்க்கியின் படைப்புக்கள் குறித்தும் ஏராளமான விவரங்கள் கிடக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அவரைப்பற்றி விஷமப்பிரச்சாரம் செய்பவைகளாகவே இருக்கின்றன. இணைய தளத்தில் காணப்படும் கார்க்கி தொடர்பான அவதூறுகளில் முக்கியமான ஒன்றை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

புரட்சி குறித்து கார்க்கிக்கு திருப்தி ஏற்படாமல் இருந்ததாம், எனவே அவர் ஸ்டாலினால் கொல்லப்பட்டு விட்டாராம். இணைய தளங்கள் ஏராளமாக நமக்குத் தரும் தகவல்கள் இவை. ஆனால், இவை அனைத்தும் கடைந்தெடுத்த பொய் மூட்டைகள் என்பதை கட்டுரையாளர் பல நூல்களை ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.கார்க்கி 1934இல் சோசலிச யதார்த்தவாதத்திற்கான பள்ளியைத் தொடங்கினார் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். சோசலிச நாடுகளின் நலன் குறித்து அவர் ஆர்வம் காட்டாதிருந்தாரானால், 1917 புரட்சி குறித்து அவர் அதிருப்தியடைந்திருந்தாரானால், அவர் இந்தப் பள்ளியைத் தொடங்கியிருக்கவே மாட்டார். புரட்சி நடைபெற்ற காலத்தில், கார்க்கி தன் படைப்புகளின் மூலமாக ஏராளமாக சம்பாதித்தார். தன் சம்பாத்தியம் அனைத்தையும் அவர் புரட்சியில் ஈடுபட்டிருந்த போல்ஷ்விக்குகளுக்குக் கொடுத்து வந்தார். புரட்சி வெற்றி பெற்ற பிறகு, போல்ஷ்விக் தலைவர்கள் கார்க்கி மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார்கள். உடல் நலிவுற்றிருந்த கார்க்கியைத் தங்கள் கண்ணின் மணிபோல் காத்தார்கள். தோழர்கள் லெனினும் ஸ்டாலினும் கார்க்கியிடம் அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். அவர்கள் கார்க்கியை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இவற்றை மெய்ப்பிக்கக் கூடிய வகையில் ஏராளமான புகைப்படங்களும் எழுத்துச்சான்றுகளும் உள்ளன. ஆனாலும் ஏகாதிபத்திய உலகம், கார்க்கியை ஸ்டாலின் கொன்றுவிட்டார் என்று இணையம் மூலம் இன்றைக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றது.

அதேபோல் இன்னொரு சங்கடமான விஷயம், இன்றைய எழுத்தாளர்களில் பலர் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து கற்றுக்கொண்டவர்கள். ஆனால் இவர்கள் இதனை இப்போது ஒப்புக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல், தானே சொந்தமாக உருவானதுபோல் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘ஞாயிற்றை கை மறைப்பாரில்’ என்று ஒரு சங்ககாலச் செய்யுள் கூறுகிறது. கதிரவனை ஒரு கையால் மறைத்திட முடியுமா என்பது அதன் பொருள். அதேபோல் இத்தகைய இழிவான பிரச்சாரங்கள் மூலமோ, கார்க்கியை இருட்டடிப்பு செய்வதன் மூலமோ உலக இலக்கியத்தில் அவருக்குள்ள பங்களிப்பினை எவராலும் மறைத்திட முடியாது. ஒரு நல்ல எழுத்தாளரும் அவரது எழுத்துக்களும் அவர்கள் காலத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, உன்னதமான இலக்கியங்கள் என்றால் அது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும். படிக்கப் படிக்கத் தெவிட்டாது இன்பம் கொடுக்கும். ‘தாய் நாவலில் சோசலிச யதார்த்தவாதம்’ என்னும் என் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக தாய் நாவலைப் பலமுறை படித்தேன். ஒவ்வொருமுறை படிக்கும்போதும் அதன் இன்பம் கூடியதேயொழிய, குறையவில்லை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது. கலை என்பது மக்களை ஒன்றுபடுத்தும் சாதனம் என்பதை ஒருவர் ஒப்புக்கொண்டுவிட்டாரானால், பின் அவர் கார்க்கியின் படைப்புக்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது...
---

No comments: