Sunday, January 20, 2008

பிரேம்சந்த் - அறிமுகம்

அந்தக்காலத்தில் இந்திச் சிறுகதை இலக்கியம், இந்திரஜாலம், மாயமந்திரம், உல்லாசக் கேளிக்கை, விசித்திர வினோதங்கள் ஆகியவைகளுக்கிடையே ஊடாடிக் கொண்டிருந்தது, நடப்பு நிலவரத்தை எதிர்கொள்ள அஞ்சியது. கற்பனையும், மனக் கிளர்வூட்டும் விசித்திரங்களும் நிறைந்த அதிசய மாடமாளிகைகள் அப்போது அதிகம், அங்கு காதல் கொஞ்சல்களை விரும்பும், வைரங்கள் முத்துக்களிடையே வளரும் அரசகுமாரிகள் இருந்தார்கள். காதலிப்பது, பிரிவுத்துயரில் தத்தளிப்பது. விம்மியழுவது இவைகளைத் தவிர உலகில் வேறு எந்த வேலையையும் செய்யத் தெரியாதவர்கள். வில் - அம்பு ஏந்தி பயங்கரமான கானகத்தில் வேட்டையாடித் திரியும் அரசகுமாரன், அரசகுமாரி ஒருத்தியின் மையலில் கிறங்கி, நம்பமுடியாத - நிகழ இயலாத வீரதீரப் பிரதாபங்களைச் செய்து காட்டுவான்! மேலும், தலைவனின் தோழர்கள், தலைவியின் தோழியர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவம் கொள்வார்கள்; தலைவனும் தலைவியும் கூடிமகிழ வழிவகை செய்து தருவார்கள். இதற்காகத் தொலை தூரப் பயணத்தையும் அநாயாசமாக மேற்கொள்வார்கள். கூடவே தோழர் - தோழியர்களும் இடையில் காதல் வயப்பட்டுக் கூடுவதும் உண்டு. தலைவனுக்கு ஓர் எதிரி இருப்பான்; இரகசியச் சதி - சாகசங்கள்புரிபவன், பருத்த உடல், பலசாலி, கோரமான உருவம். அவன் கதாநாயகியைக் கவர்ந்து செல்ல என்னவெல்லாமோ செய்வான்; நம்பமுடியாத சதிச் செயல்கள், மடத்தனமான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்வான். படுகோரமாக அட்டகாசச் சிரிப்பை அடிக்கடி வெளிப்படுத்துவான். ஆக, புராணத்திலிருந்தோ, கதாசரித் சாகரத்திலிருந்தோ, அலிஃப் லைலாவிலிருந்தோ வந்தேறிய - உருமாறிய பாத்திரம்போல் இருக்கும். எந்தக் குறிக்கோளுமின்றிக் கனவுலகில் திரியும் பாத்திரங்கள், இந்தி வாசகர் குழாம் இத்தகைய அதிசயமான - நிகழமுடியாத சூழ்நிலைக்கு இட்டுச் செல்லப்படும்; அங்குத் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது.

இந்தக் காலத்தில்தான் பிரேம்சந்த் சிறுகதை உலகில் பிரவேசித்தார். புதிய வைகறை தோன்றியது. இருள் மண்டிய யதார்த்த நிலையில் புத்தொளி உதித்தது. கற்பனைக் கண்களுக்கெதிரே கிராமங்களின் உண்மையான ஓவியங்கள் ஒளிர்ந்தன. கிணற்று ராட்டைகள் கிறீச்சிடுகின்றன, கரும்புக் கொல்லை பசுமை பூரித்து வளர்கிறது. ஒட்டுவைத்த புடவை உடுத்திய குடியானவப் பெண், தானியக் கூடையைச் சுமந்தவாறு கிராமப்பாதையில் செல்கிறாள். அவள் இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தை, செடிகளில் கொத்திட்டிருக்கும் பட்டாணியைப் பார்த்து கை நீட்டுகிறது. கிராமத்து வட்டிக்கடை முதலாளி சொந்த வில் வண்டியில் பயணம் செய்கிறான். வெளி வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் ஷேக் ஜும்மன், தண்டீராம் இருவரும் ஊர் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முடிவுறாத பேச்சு, பசு கறக்கும் ஒலி, அரிசி குத்தும் ஓசை வீடுகளிலிருந்து வருகின்றன. சாகுபடி, நிலவரி, நிலுவை, கடன், அடமானம், விவசாயி, வட்டிக்கடைக்காரர், பண்ணையார், இவர் பரிவாரங்கள், சங்கடங்களைச் சகித்துக் கொண்டு, அவைகளிலிருந்து விடுதலை பெறக் கனவு கண்டுகொண்டு, பலவீனங்களும், நிர்ப்பந்தங்களும் தொடர நடமாடும் கிராம மக்கள், திடமான உறுதிப்பாடும், குலைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டு வாழ்க்கையுடன் போராடி வந்தார்கள்; ஆனால், உள்ளூர இடிந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.பிரேம்சந்தின் க்தைகள் அலைவரிசைபோல் வெளிவந்தன. அவைகளில் ஒரே கருப்பொருள் ஒலித்துக்கொண்டிருந்தது; ‘கிராமிய வாழ்க்கை குலைந்து வருகிறது. சமூகம் தடுமாறுகிறது. ஏழ்மை பிரளயம்போல் வந்து நம்மை கவளீகரம் செய்கிறது. இவ்வளவுக்கும் நடுவே குடியானவர்கள் தம் வழி வந்த நம்பிக்கைகளின்படி, உயிர்ப்பணயம் வைத்துச் சௌக்கியமாக, சிறப்பாக வாழ விழைகிறார்கள்.’ எல்லாக் கிராமிய வாழ்க்கைப் பிரதிபலிப்புகளும், சூழ்நிலைகளும் பிரேம்சந்தின் கதைகளில் இடம் பெற்றுவிட்டன.

வாசகப் பெருமக்கள் வியப்புடன் ஒப்புக்கொண்டார்கள்: ‘யதார்த்தமான கதை யதார்த்த நிலையைச் சார்ந்திருக்கிறது.’பிரேம்சந்த் முதலில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். இதனால், இயல்பாகவே அவர் கொள்கைப் பிடிப்பு ஆதரிசப் பற்றிலும், ஒழுக்க நெறி போதனையிலும் ஈடுபட்டிருந்தது. அவர் மகாத்மா காந்தியிடமும் டால்ஸ்டாயிடமும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் இருவருடைய செல்வாக்கும் (கொள்கை - நம்பிக்கைகள்) பிரேம்சந்தின் கதைகளில் படர்ந்திருப்பதைக் காணலாம். பொதுவான இந்தியக் குடிமகனைப்போல, அவர் உள்ளத்திலும் இந்த நம்பிக்கை வேரூன்றியிருந்தது: ‘பாரதம் சுதந்திரம் பெற்றதுமே எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். கிராமப் பஞ்சாயத்தாரிடம் நியாயம் வழங்கும் உரிமை வந்ததுமே, கிராமத்தார் நீதியை நிலைநிறுத்திவிடுவார்கள். பஞ்சாயத்தில் தெய்வமே அவதரிக்கும்.’ ஆனால், காலப்போக்கு பிரேம்சந்தின் இந்த விசுவாசத்தை மாற்றியது. காந்தீயத்தில் அவர் கொண்டிருந்த பிடிமானம் தளர்ந்தது. நவீன முற்போக்குக் கொள்கையில் ஈடுபாடு கொண்டார். அவர் இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பாரானால், உலகம் புகழும் தலைசிறந்த முற்போக்கு எழுத்தாளராகத் திகழ்ந்திருப்பார். சோவியத் யூனியனில் இன்று கென்னாதி கலினோவ்ஸ்கி, நிகோலாய் வோரோனோவ், யூரி கஸகோவ் (1926-’27இல் பிறந்தவர்கள்) ஆகியோர் எழுதிவரும் கதைகளைப் போன்ற சிறந்த கதைகளைப் பிரேம்சந்த் அந்தக் காலத்திலேயே எழுதியிருக்கிறார். யூரி கஸகோவ் (1927இல் பிறந்தவர்) ஒரு வேட்டை நாய் பற்றி எழுதியிருக்கிறார். பிரேம் சந்த் எழுதியுள்ள ‘ஒரு நாயின் கதை’யுடன் அது ஒப்புமை கொண்டிருக்கிறது. பிரபல சோவியத் எழுத்தாளர்கள் வலேரி ஓஸிபோவ், அனதோலீ குஜனோத் ஸோவ் இருவரும் 1930இல் பிறந்தவர்கள். இவர்கள் இப்போது எழுதிவரும் கதைகளைப் போன்ற முற்போக்குக் கதைகளைப் பிரேம்சந்த் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்! இந்த அதிசய ஒற்றுமையைக் காணும்போது மிக வியப்பாகத்தான் இருக்கிறது. ஆங்கிலேயர்களிடம் அதிகார மமதை நிறைய இருந்தது. அவர்கள் இந்திய மொழி மூலமாகப் புகழ்பெறும் எழுத்தாளர்களை வரவேற்கவில்லை, அந்த அலட்சிய மனப்போக்கு இன்றும் இருக்கிறது. ஆனால், ருஷியா பிரேம்சந்தை வியத்தகு முறையில் ஏற்று ஆதரித்தது. ரவீந்திரர், பிரேம்சந்த், யஷ்பால், குவாஜா அஹமத் அப்பாஸ் - இவர்களின் கதைகள் மூலமாகத்தான் நாங்கள் எளிய இந்திய மக்களின் வாழ்க்கையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது என்று ருஷ்ய அறிஞர்கள் சொல்லுகிறார்கள். ஆனால், பிரேம்சந்த் இந்த நிலைக்கு வந்தபின், அதிகக் காலம் வாழவில்லை. ஐம்பத்தைந்து ஆண்டுகளும் சில மாதங்களும் வாழ்ந்து, 1936 அக்டோபர் 8 அன்று இயற்கை எய்தினார். இந்தி இலக்கிய உலகில், பிரேம்சந்திற்கு எவ்வளவு மதிப்பு அளிக்கப்பட வேண்டுமோ, அவ்வளவு அவர் வாழ்நாளில் அளிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒருபுறம், அவரை ‘நாவல் பேரரசர்’ என்று புகழ்கிறார்கள். ஆனால், மறுபுறம் அவருக்குச் சீட்டுக்கட்டு ‘ராஜா’விற்குள்ள மதிப்பைத்தான் அளிக்கிறார்கள். அவர் காலமான பிறகுதான், அவரது அருமை - பெருமைகளை அறிய மக்கள் ஆவல் கொண்டார்கள்; அவர் இல்லாத நிலையில், அவருக்கு மகோன்னதமான கௌரவ பீடத்தை அளித்தார்கள். அந்தக்காலத்தில் வங்காளியில் சரத்சந்திரரும், இந்தியில் பிரேம்சந்தும் மிகப் பிரபலமாக இருந்தார்கள். பிரேம்சந்த் தம் கதைகள் மூலமாக, தனி நபரையும் அக்காலத்து வரலாற்றையும் உயிர்ப்புடன் சித்தரித்து வந்தார். சரத்சந்திரர் அக்காலத்து வரலாற்றிலிருந்தும், சமுதாயத்திலிருந்தும் ஜீவனுள்ள பாத்திரங்களை (தனி நபர்களை) எடுத்துக்கொண்டார். தம் கதைகளில் அவர், தனி நபர்களின் இன்ப துன்பங்களிலும் சிந்தனைப் போராட்டங்களிலுமே லயித்திருந்தார். சரத் சந்திரர் வங்காள இலக்கியத்திற்கு, திடுதிப்பென்று வந்தார்; புகழ் ஓங்கிப் பரவினார். சரத் சந்திரர் வங்க இலக்கியத்தில் புகுந்தது ஒரு நிகழ்ச்சி. வங்காளிகள் திடீரென ஒரு சமயத்தில் சரத் சந்திரரை எதிர்கொண்டார்கள்; அவரை ஏற்றுப் போற்றினார்கள். இதற்கு மாறாக, இந்தி உலகில், பிரேம்சந்தின் பிரவேசம் புது நிகழ்ச்சியாகத் தோன்றியதில்லை. அவர் மிகவும் உழைத்து, சாதனை புரிந்து இலக்கிய உலகில் தம்மை நிலைநாட்டிக் கொண்டார்.

இப்படியொரு தகவல்: பிரேம்சந்த் தமது முதல் சிறுகதைத் தொகுதி ‘ஸப்த ஸரோஜ்’ நூலுக்குச் சரத் சந்திரர் முன்னுரை எழுத வேண்டுமென்று விரும்பினார். இதற்காக அவர் கல்கத்தா சென்றார். சரத் சந்திரரைச் சந்தித்தார். கதைகளைக் கேட்டு மகிழ்ந்த சரத் சந்திரர் பிரேம்சந்தைப் பாராட்டினார்: ‘வங்காளியில் ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு யாரும் இத்தகைய கதைகளை எழுத இயலாது. உங்கள் கதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதவல்ல தகுதி எனக்க இல்லை.’பிரேம்சந்த் 1880ஆம் ஆண்டு, ஜூலை 31இல் பிறந்தார். (2007-1880= 113) தந்தையின் பெயர் முன்ஷி அஜயெப்லால். அஞ்சலக அலுவலர். பெயருக்குப் ‘போஸ்ட் மாஸ்டர்’, குறைந்த சம்பளம். கொஞ்சம் நிலபுலன். எப்படியோ சிரமப்பட்டுக் குடும்பத்தை நடத்தி வந்தார். நிலத்தின் விளைச்சலைவிட, மாதாந்தர ஊதியம்தான் குடும்பத்தை வாழ வைக்க உறுதுணையாக இருந்தது. பிரேம்சந்தின் இயற்பெயர் தன்பத்ராய்; பரிவாக ‘நவாப்’ என்று கூப்பிடுவார்கள். எட்டு வயதில் அவர் தாயை இழந்தார். தாயன்புக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்கிற மனக்குறை அவருக்கு உண்டு. இதன் பிரதிபலிப்பை அவருடைய பல கதைகளில் காணலாம். இளம் பிராயத்தில் தாயை இழந்து அநாதரவாகத் தவிக்கும் பிள்ளைகளைப் பல கோணங்களில் சித்தரித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக ‘தூத் கா தாம்’ (பாலின் விலை) என்ற கதையைக் குறிப்பிடலாம்.இருந்தாலும், பிள்ளைப் பருவம் பிள்ளைப் பருவம்தான். அதன் தன்மையே அலாதி. இல்லாமை பாதிக்கும்; ஆனால், இயல்பு அதை வெல்லும். சிறுவயதில் பிரேம் சந்த் குறும்புக்காரப் பிள்ளையாகத்தான் இருந்தார். மாமரத்தில் வடு வைக்க வேண்டியதுதான், கல்லெறி வித்தையைக் காட்டக் கிளம்பி விடுவார். கரடி வித்தைக்காரன் தெருவில் வருவான், அவன் பின்னாலேயே திரிவார். கிட்டிப்புள் இவருக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு. அப்பாவி; விளையாட்டில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு பையனின் காதைக் கடித்துவிட்டார். கேட்டதற்கு, ‘காதுக்கு வைத்தியம் செய்கிறேன்’ என்றார். ஒரு சமயம் வீட்டிலிருந்து பணத்தைக் களவாடிக் கொண்டு, சந்தை விழாவுக்குச் சென்றுவிட்டார். வேடிக்கை பார்ப்பதில் மிக்க ஆர்வம். உருதுவும் பார்ஸியும் பயின்று வந்தார். கரும்பு, பட்டாணிக் கொல்லையில் புகுந்து வேட்டையாடுவதில் அலாதி ஆர்வம். வீட்டில் அன்புக்கு ஒரு பாட்டி இருந்தாள். சுவை மிக்க கதைகளைக் கூறி மகிழ்விப்பாள். தம் இளம் பிராயத்து நினைவுகளைப் பிரேம்சந்த் பல கதைகளில் சுவைபடச் சித்தரித்திருக்கிறார். எழுத்தாளன் தன்னையே பிரதிபலிக்கிறான்.

இவருடைய கதாபாத்திரங்கள் வான முகட்டிலிருந்து வந்த கற்பனைப் பாத்திரங்களில்லை. இவருடைய பாத்திரங்களைச் சிரமமில்லாமல் இனம் கண்டு கொள்ளலாம்; இவை நினைவில் நிலைத்திருக்கும். அவர் தம் உள்ளத்தில் சேமித்து வைத்தவைகளைத்தான் கதையுருவாக்கித் தந்தார். எந்த எந்த மக்களைப் பார்த்தாரோ, எந்தச் சூழ்நிலையை, நிகழ்ச்சிகளை, பின்புலனை, பகைப்புலனை உய்த்துணந்தாரோ அவைகளை நயம்பய யதார்த்தமாகப் பிரதிபலித்தார்.

பிரேம்சந்த் பதின்மூன்று வயதில் உருதுவில் இன்பச் சுவைக் கதைகளையும், தந்திர ஜாலக் கதைகளையும் நிறையப் படித்தார். அப்போதே அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டது. 1898இல் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார். சுதார் சிற்றூரிலிருந்த மிஷன் பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தார். பிறகு அரசாங்க அலுவலில் சேர்ந்தார். பஹராயிச் பள்ளியில் ஆசிரியரானார். அங்கிருந்து பிரதாப் கட்டிற்கு மாற்றலாகியது. அங்கு தம் முதல் நாவலை - 1901இல் - எழுதினார். அது உருதுமொழியில் எழுதப் பெற்றது. பெயர் ‘அஸ்ராரே மஆபித்’ (தேவஸ்தான இரகசியம்). இந்நாவல் பனாரசிலிருந்து வெளிவந்த ஒரு வாத இதழில் (1903இல்) தொடர்ச்சியாக வெளிவந்தது.ஆனால், பிரேம்சந்தின் இலக்கியத்தரம் உருவாகியது கான்பூர் நகரில்தான். சந்தர்ப்பம் அவரைக் கான்பூருக்கு அனுப்பிவைத்தது. அங்கு முன்ஷி தயாநாராயண் நிகம் உருது மொழியில் ‘ஜமானா’ (காலம்) எனும் மாத இதழை வெளியிட்டு வந்தார். இருவரும் நண்பர்களாயினர். இந்தச் சமயத்தில் பிரேம்சந்த் ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டார். அவை அவரை வெகுவாகக் கவர்ந்தன. இலக்கியக் கோட்பாட்டைச் செம்மைப்படுத்திக் கொள்ள அத்தூண்டுதல் உதவியது. அக்கதைகளை உருதுவில் மொழிபெயர்த்து ‘ஜமானா’ பத்திரிகையில் வெளியிட்டார்.1907இல் பிரேம்சந்தின் முதல் சொந்தச் சிறுகதை (‘ஸம்ஸார் கா ஸப்ஸே அன்மோல் ரத்ந’ - உலகத்தின் மிக மதிப்புள்ள இரத்தினம்) ‘ஜமானா’ பத்திரிகையில் வெளிவந்தது.

அக்காலத்தில் வங்கப் பிரிவினையை எதிர்த்து இயக்கம் தீவிரமாக இருந்தது. அப்போதுதான் பிரேம்சந்தின் முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. நாட்டுப் பற்றினை வலியுறுத்தும் ஐந்து கதைகள் கொண்ட தொகுப்பு. பெயர் ‘ஸோஜே வதன்’ (தாய் நாட்டின் துன்பம்). இது 1909இல் வெளிவந்தது. ஆறு மாதங்களுக்குப் பின் அரசாங்கத்தின் கோபத்திற்கு இலக்காகியது. வேலை போகவில்லை; ஆனால், புத்தகத்தின் எல்லாப் பிரதிகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. இதற்குப் பிறகு தம் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார் - ‘பிரேம்சந்த்’ என்று. இப்பெயரில் 1919இல் முதல் கதை ‘படே கர் கீ பேட்டி’ (பெரிய இடத்துப் பெண்) வெளிவந்தது. பிரேம்சந்த் அலுவலக மாற்றம் காரணமாக சுநார், மஹோபா, அலாஹாபாத், கான்பூர், பஸ்தீ, கோரக்பூர் முதலிய இடங்களில் தங்கியிருந்தார். ஊர்ப்பயணம் செய்வதில் இவருக்கு மிக ஆர்வம். எனக்கு எழுதிய கடிதமொன்றில் பிரேம்சந்த் குறிப்பிட்டிருக்கிறார்: ‘இரயில்வே கார்டாக வேலை பார்க்கத்தான் எனக்கு ஆசை அதிகம். அப்போது பல ஊர்களுக்குப் போகலாம்; பலதரப்பட்ட மக்களோடு கலந்து பழகலாம். புதிய புதிய பாத்திரங்களும், குணசித்திரங்களும் கிடைக்கும். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் இவர் கோரக்பூர் நார்மல் ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு ஒரு நாள் மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்டார். அவர் உள்ளம் தீவிர ஈடுபாடு கொண்டது. தமது இருபதாண்டு வேலையை உதறிவிட்டு, பனாரஸ் வந்து சேர்ந்தார். இலக்கியப் பணியையே ஜீவாதாரமாகக் கொண்டார். இலக்கியப் பணியை நம்பி உயிர்வாழ்வது அக்காலத்திலும் விரும்பத் தகாததாகத்தான் இருந்தது. இருந்தாலும் பிரேம்சந்த் அயராமல் எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவருடைய சிறுகதைகளும் புதினங்களும் வெளியாகிக் கொண்டிருந்தன. பல நாடகங்களும் படைத்தார். ஊதியம் கிடைக்கவில்லை; ஆனால், புகழ் பெருகியது. அரசாங்கம் அவருக்கு ‘ராய் பஹாதுர்’ சிறப்புப் பட்டம் தரம முன்வந்தது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். அடிமைப்படுத்திக் கோலோச்சும் அந்நியர் ஆட்சியினர் பட்டமளித்துக் கௌரவிப்பதை ஏற்க விரும்பவில்லை. பிரேம்சந்த் பனாரஸில் ஓர் அச்சகத்தை நிறுவினார். ‘ஹம்ஸ்’ (அன்னம்) எனும் இந்தி இலக்கியப் பத்திரிகையை 1930இல் தொடங்கினார். பிறகு 1932 முதல் ‘ஜாகரண்’ (விழிப்பு) எனும் வார இதழையும் தொடர்ந்தார். அச்சகம், பத்திரிகைகள் வாயிலாகப் பொருளிழப்புதான் ஏற்பட்டது. ஒருமுறை, ஓராண்டுக் காலத்திற்குத் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தார். ஓரிரு படங்கள் உருவாயின. எனினும், அத்துறை ஒத்து வரவில்லை; திரும்பவும் பனாரஸ் வந்து சேர்ந்தார். புதிய இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து உதவி வந்தார். அவருடைய இரு பத்திரிகைகளும் இந்தி இலக்கியத்திற்குப் பல புதிய எழுத்தாளர்களை அளித்துள்ளன.எழுத்தாளர்களில் இரு வகை; ஒரு வகையினர் தரமானவர்கள், ஆனால் புகழேணியில் ஏறாதவர்கள். புகழ் மிகுந்தவர்கள் தரமானவர்களாக மதிக்கப் பெறுவதில்லை. ஆனால், இதற்கு பிரேம்சந்த் விதிவிலக்கு. தரமான இலக்கியச் சிற்பியாகத் திகழ்ந்ததோடு, புகழ் மிக்கவராகவும் விளங்கினார்.இயல்பாகவே அவர் எளியவர்; கள்ளமற்றவர், பகட்டோ, வெளிவேடமோ கிடையாது. உரையாடலில் எளிய குடியானவனின் உள்ளார்ந்த ஒட்டுறவு இருக்கும். மிகச் சிறந்த இலக்கிய மேதையுடன் உரையாடுகிறோம் என்கிற உணர்வையே ஏற்படுத்த மாட்டார். விவசாயம், உழவர் வாழ்வு, பசு பராமரிப்பு, கிராமியச் செய்தி இவைகளைச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பார். பசு வளர்த்து வந்தார். ஆனால், விவசாயத்தில் முழுமையாக ஈடுபட இயலவில்லை.

தினமும் தவறாது எழுதி வந்தார். ‘ஐடியா’ வரவில்லையே, ‘மூட்’ வரவில்லையே என்று கவலை கிடையாது. நேரம் கிடைத்தபோது எழுத உட்காருவார். தங்கு தடையில்லாமல் எழுதுவார். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து முன்னேறுவார். நடுவில் எவராவது வந்துவிட்டால், முகம் சுளிக்காமல் பேனாவைக் கீழே வைத்துவிட்டுப் பேசத் தொடங்கிவிடுவார். வந்தவர் விடைபெற்றபின், பழைய மாதிரியே லயித்து எழுதத் தொடங்குவார். நகைச்சுவை மிக்கவர். வாய்விட்டுச் சிரிப்பார். மென்முறுவல் இயல்பாக மிளிரும். இன்று பிரேம்சந்த் நம்மிடையே இல்லை. அவரது ஆசனம் சூனியமாகத்தான் இருக்கிறது. மேலும் பல காலத்திற்கு அந்த இடம் நிரப்பப்பட முடியாமலேயே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ராஞ்சி ராதாகிருஷ்ண
தமிழாக்கம்: சௌரி
(பிரேம்சந்த் சிறுகதைகள் - நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி வெளியிட்ட புத்தகத்திற்கு தொகுப்பாசிரியர் ராதாகிருஷ்ண எழுதிய அறிமுகம். இது 1976இல் வெளிவந்திருக்கிறது. புதுடில்லி , சாகித்திய அகடமி நூலகத்தில் கண்டெடுத்து, வெளிக்கொண்டு வந்திருப்பவர்: ச. வீரமணி)

No comments: