Sunday, January 1, 2017

புத்தாண்டில் எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்கள்


(People's Democracy Editorial)
நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியற்றிருக்கும் நிலையிலேயே
புத்தாண்டு தொடங்குகிறது. அவர்கள் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்து
சம்பாதித்த ஊதியங்கள் பறிக்கப்பட்ட நிலையில், தங்கள் வாழ்வாதாரங்களை
இழந்து நிற்கிறார்கள். பலர் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்துள்ள அற்ப
அளவிலான சேமிப்புத்தொகையைக் கூட எடுக்க முடியாத நிலையில் இருந்து
வருகிறார்கள்.
இவ்வாறு மக்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் நரேந்திர மோடியின் கற்பனை
உலகியல் வாய்ந்த 500 ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
நவம்பர் 8 அன்று அறிவிப்பு காரணமாக ஏற்பட்டவை களாகும். இவ்வாறு அறிவித்து
டிசம்பர் 30உடன்ஐம்பது நாட்கள் நிறைவடைகிறது. ஆயினும், இதன் விளைவாக
மக்களுக்கு ஏற்பட்ட துன்பதுயரங்கள் முடிவதற்கான அடையாளம் எதுவும்
கண்ணுக்குத்தெரியவில்லை. எனவே, புத்தாண்டு என்பது மக்கள் மீதான ரொக்க
யுத்தம் தொடர்வதுடனேயே தொடங்குகிறது.

தொடரும் ரொக்க யுத்தம்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று திடீரென்று அறிவித்து,
புழக்கத்தி லிருந்த கரன்சி நோட்டுகளில் 86 சதவீதம் திரும்பப் பெற்றுக்
கொள்ளப்பட்டதன் மூலமும்அதற்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை
வெளியிடாததன் மூலமும் ரொக்க நெருக்கடி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரமே
கடுமை யாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ரூபாய்நோட்டுகளை இவ்வாறு
செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பேயே, நாட்டின் உள்நாட்டுஉற்பத்தி
வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதாக மிகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்ட
நிலை யிலும்கூட, நாட்டின் பொருளாதார நிலைமைமிகவும் மங்கலாகத்தான்
இருந்தது. 2016 ஏப்ரல்முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் தொழில் உற்பத்தி
0.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை
விரிவாகிக்கொண்டே சென்றது, தொடர்ந்தது. ஏற்றுமதிகள் மீண்டும்
அதிகரிப்பதற்கான அடையாளங்களே தெரியவில்லை.
நாட்டில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பின்னர்,
இந்த ஆண்டு நடைபெற்ற விவசாய உற்பத்தியும், ரொக்கப் பரிமாற்றத்திற்கு
வகையில்லாத காரணத்தால் கிராமப்புற பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது.
கடுமையான சிரமங்களினூடே விளைந்த விவசாயப்பொருள்களை வாங்குவதற்கு
நுகர்வோர் தங்களிடம் ரொக்க இருப்பு இல்லாததால் வாங்க முன்வராததால்,
விளைந்த பொருள்களின் விற்பனையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இவை
அனைத்தும் சேர்ந்து, வர விருக்கும் புதிய ஆண்டில் சாமானிய
மக்களுக்குஅதிகரித்துவரும் வேலையிழப்பு மற்றும்வருமானங்கள் இழப்பு என்கிற
வடிவங்களில் மேலும் மோசமான அளவில் துன்பதுயரங் களை ஏற்படுத்திடும்.
போலித்தனமான வெற்றி
2016ஆம் ஆண்டில், காஷ்மீரில் ஹிஸ்புல் கமாண்டர் புர்கான் வானி
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மக்களின் கிளர்ச்சியால் நெருக்கடிக்கு
உள்ளாகி இருந்தது. இங்கேபோராடிவந்த மக்கள்மீது பாதுகாப்புப்படை யினர்
கட்டவிழ்த்துவிட்ட கொடூரமான ஒடுக்கு முறைக்கு 85 பேர் பலியானார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும், பதின்பருவத்தைச்
சேர்ந்தவர்களுமாவார்கள்.

பாதுகாப்புப்படையினர் போராடியவர்கள் மீது வீசிய பெல்லட்குண்டுகளின்
காரணமாக இளைஞர்கள் பலர் கண்பார்வை இழந்ததை யும் உலகம் பார்த்தது.
ஜம்மு-காஷ்மீரில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஓர் அரசியல்
பேச்சுவார்த்தையைத் தொடங்கிட மோடி அரசாங்கம் பிடிவாதமாக மறுத்துவிட்டது.
மோடி அரசாங்கமானது, ஊட்டி வளர்த்து வரும் தேசிய இன வெறிக்கு காஷ்மீர்
மக்கள்பலியானார்கள். பயங்கரவாதத்தை எதிர்க்கி றோம் என்ற பெயரில் காஷ்மீர்
மக்களது போராட்டத்தை நசுக்கிட மோடி அரசாங்கம் முயன்றது.

மோடி அரசாங்கத்தின் தேசியஇன வெறிக் கொள்கையின் காரணமாக பாகிஸ்தானு டனான
உறவுகளும் சிதிலமடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுவந்த
பேச்சுவார்த்தைகளும்கூட முறிந்தன. மோடி அரசாங்கத்தின் அடாவடித்தனமான
அணுகுமுறையின் முத்திரைசின்னமாக, செப்டம்பர் இறுதியில் நடைபெற்ற
‘துல்லியமான தாக்குதல்கள்’ அமைந்திருந்தன. மோடியைஇரும்பு மனிதர் என்றும்
ஆற்றல்மிகுந்த உறுதி யான தலைவர் என்றும் சித்தரிப்பதற்காக இதனை இவர்கள்
பயன்படுத்திக்கொண்டனர்.

இவர்களது துல்லியமான தாக்குதலின் வெற்றி என்பது எவ்வளவு போலித்தனமானது
என்பது அடுத்து சில நாட்களில், பாரமுல்லா மற்றும் நக்ரோடா
ராணுவத்தளங்களில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்கள்
வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்
கட்டுப்படுத்தப் படுவதற்குப் பதிலாக, அவர்கள் ராணுவத் தளங்களைத்
தாக்குவதன் எண்ணிக்கைகள் அதிகரித்ததையும், எல்லை தாண்டிவந்து
துப்பாக்கியால் சுடுவது அதிகரித்ததையும் பார்த்தோம். 2016இல்
ஜம்மு-காஷ்மீரில் இந்தியராணுவத்தினர் 63 பேர் கொல்லப்பட்டிருக்
கிறார்கள். இது முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்காகும்.

தேசிய இனவெறித் தாக்குதல்

இந்துத்துவா பாணி தேசியஇனவெறி நாட்டுமக்களின் உரிமைகள் மற்றும் பேச்சு
சுதந்திரத்தின்மீது நாசகரமான முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தி
இருக்கின்றன. 2016ஆம் ஆண்டானது, ஜவஹர்லால் நேருபல்கலைக்கழகத்தின் மாணவர்
தலைவர் களுக்கு எதிராக தேசத்துரோக வழக்குகள் பதிவுசெய்வதுடன் தொடங்கியது.
தங்களின் அரசியலை எதிர்ப்பவர்களையும், இந்துத்துவா விற்கு எதிராக
இருப்பவர்களையும் ‘தேசத் துரோகிகள்’ என்று முத்திரைகுத்துவது இந்தஆண்டு
முழுவதுமே தொடர்ந்தது.
மூடநம்பிக்கைகள் மற்றும் பகுத்தறிவற்ற கருத்துக் களை
முன்னெடுத்துச்செல்லும் எழுத்தாளர் களும், கலைஞர்களும் நாளொரு
மேனியும்பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தார்கள்.பசுவதை தொடர்பான
விஷமத்தனமான பிரச்சாரத்தால் 2015இல் முகமது அக்லாக்கொடூரமானமுறையில்
கொல்லப்பட்டா ரென்றால், 2016இல் குஜராத்தில் உனா என்னுமிடத்தில் பசுப்
பாதுகாப்போர் என்பவர்கள்நடத்திய அருவருப்பான நடவடிக்கைகளை யும்
பார்த்தோம். ரோஹித் வெமுலா மரண மும், உனா அட்டூழியமும், தலித் விரோத
இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகளால்
நாடு தழுவிய அளவி லான இயக்கத்திற்கு இட்டுச்சென்றன.
அமெரிக்காவின் இளைய பங்காளி
மோடி அரசாங்கம், அமெரிக்காவுடனான உறவுகளை ஆழப்படுத்திக்கொள்ளக்கூடிய
விதத்தில் மேலும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 2016ஆம் ஆண்டானது,
இந்திய – அமெரிக்க ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Indo-US Defence
Framework Agreement)மேலும் பத்தாண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட தைப்
பார்த்தது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான கடல்வழி மற்றும்
வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தம் (Logistics Supply Agreement) வந்தது.
இதனைத் தொடர்ந்துஇந்தியா, அமெரிக்காவின் பெரிய ராணுவக் கூட்டாளியாக
இருக்கும் என்கிற அறிவிப்பு வந்தது. தற்போது அமெரிக்காவில் டிரம்ப்
ஜனாதிபதியாக வந்துள்ள நிலையில், மோடிஅரசாங்கமானது அமெரிக்காவின் அடி
வருடியாக இருப்பதை தன்னுடைய அனைத்துவலதுசாரி நடவடிக்கைகளையும்
வலுப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளும் என்று ஒருவர்
எதிர்பார்க்க முடியும்.

கிளர்ந்தெழுந்த போராட்டங்கள்

15 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் – ஊழியர்கள் பங்கேற்ற செப்டம்பர் 2
பொதுவேலைநிறுத்தம், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் பல
இடங்களில் நிலங்களைத் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிப்பதற்கு
எதிராக விவசாயிகளும் பழங்குடியினரும் நடத்திய போராட்டங்கள், ஹைதராபாத்
மத்தியப் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு
கல்வி நிறுவனங் களிலும் நடைபெற்ற மாணவர் இயக்கங்கள், மகாத்மாகாந்தி தேசிய
வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம், வன உரிமைகள் சட்டம் மற்றும்பொது விநியோக
முறை அமலாக்கம் ஆகியவற்றுக்காக நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள், பெண்கள்
மீதான அட்டூழியங்களுக்கு எதிராகவும், பெண்களுக்கான சமத்துவத் திற்காகவும்
நடைபெற்ற போராட்டங்கள், பேச்சுரிமை மீதும் தலித் உரிமைகள் மீதும்
இந்துத்துவாவாதிகள் ஏற்படுத்திய தாக்குதல்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் –
இவை அனைத்தும் 2016இல் நடைபெற்றன.
ஆனாலும், நடை பெற்ற இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள், அவற்றின் மூலமாக
ஓர் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கும், வலதுசாரி தாக்குதலை
எதிர்த்து முறியடிக்கக் கூடிய அளவிற்கும், வீரியம் மிக்கதாக இருந்ததாகக்
கூறுவதற்கில்லை. இத்தகைய போராட்டங்கள் வரவிருக்கும் புதிய ஆண்டில்மேலும்
உக்கிரமாக்கப்பட வேண்டியவை களாகவும், மக்களின் புதிய பிரிவினர்
மத்தியில்எடுத்துச் செல்லப்பட வேண்டியவைகளாகவும் இருக்கின்றன.
முக்கியமாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத்தொ டர்ந்து
மக்களின் துன்பதுயரங்கள் பல்கிப்பெருகியுள்ள நிலையில் இவற்றை
மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.எதிர்காலத்தில் எப்போதும் நன்மை
உண்டாகட்டும் என்ற நல்லெண்ணத்துடன் புதிய ஆண்டை வரவேற்பது என்பதுதான்
வழக்கமான மரபாகும். ஆனால், இன்றைய காலம் அவ்வாறு கூறக்கூடிய ஒன்றாக
இல்லை.உலக அளவிலும், வலதுசாரி சக்திகள் கட்ட விழ்த்துவிடும்
அந்நியர்களுக்கு எதிரான வெறிமற்றும் இனவெறி ஆகியவை அதிகரித்
திருக்கின்றன. நம் நாட்டிற்குள்ளும் பல்வேறுவிதமான வெறியர்கள் நாட்டை
ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றையதினத்தில் அவர்கள் மக்கள் மீது எதேச்சதி காரமான முறையில்
தாக்குதலைத் தொடுத்தி ருக்கிறார்கள், வலதுசாரித் தாக்குதல்களை
அதிகப்படுத்தி இருக்கிறார்கள், மக்கள்மீதான பொருளாதார உரிமைகள்
மீதும்தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள், அதிகமான அளவில் மதவெறி
நடவடிக்கைகளையும் தொடுத்திருக் கிறார்கள்.

இத்தாக்குதல்கள் அனைத்தையும் தடுத்துநிறுத்திட வேண்டுமானால்,
இவற்றுக்குஎதிராக மாற்றுக்கான மக்களின் போராட்டங் களை ஒன்றுபடுத்திட
வேண்டும். இதனை மேற்கொண்டிட அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் முற்போக்கு
சக்திகளும் இப்புத்தாண்டில் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு, இடது
மற்றும் ஜனநாயக சக்திகள், வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலம்
ஒற்றுமையைக் கட்டுவது இன்றைய அவசியத் தேவையாகும்.


(டிசம்பர் 29, 2016)

தமிழில்: ச. வீரமணி

No comments: