Saturday, January 28, 2017

அரசியல் வெறும் கூட்டல்-கழித்தல் கணக்கு அல்ல:சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஆறு இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்)(லிபரேசன்), எஸ்.யு.சி..(கம்யூனிஸ்ட்), அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய ஆறு இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஒரு முன்னணியை ஏற்படுத்தியுள்ளன. இம்முன்னணி சார்பாக ஏற்கனவே 105 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 140 இடங்களில் போட்டியிட இந்த இடதுசாரி அணி தீர்மானித்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களில் போட்டியிடுகிறது. இதுதொடர்பாக தி இந்து செய்தியாளர் உமர் ரஷீத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அளித்த நேர்காணல்:
* உத்தரப்பிரதேசத்தில்இடதுசாரி அணி அடைய முயற்சிக்கும் இலக்கு என்ன?
சீத்தாராம் யெச்சூரி: மூன்று குறிக்கோள்கள். முதலாவது, இடதுசாரி சக்திகளை ஒன்றிணைப்பது. இது நீண்டகால அளவில் தாக்கத்தை ஏற்படுத்திடும். இது தேர்தல்களுக்கு அப்பாலும் தொடரும். இரண்டாவது, இடதுசாரிகளின் வலுவை உத்தரவாதப்படுத்துவது மற்றும் சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது. மக்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பிடவும் அவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரவும் இது அவசியம். தற்சமயம் உத்தரப்பிரதேசத்தில் இது இல்லாமல் இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பிட நாங்கள் விரும்புகிறோம்.நாங்கள் எங்கே செல்வாக்காக இருக்கிறோமோ, எங்கே போராட்டங்கள் நடத்தி இருக்கிறோமோ அங்கேதான் போட்டியிடுகிறோம். அவற்றை ஒருமுகப்படுத்திட நாங்கள் முயற்சிக்கிறோம். மூன்றாவது குறிக்கோள், மதவெறி சக்திகளைத் தோற்கடிப்பதாகும். மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மட்டுமல்ல, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றிடும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை தடுத்து நிறுத்திடவும் இது அவசியமாகும். இவர்கள் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தான் மக்கள்திரளில் பெரும்பான்மையானவர்களின் துன்ப துயரங்களுக்குக் காரணங்களாகும்.மோடியின் ஈராண்டு கால ஆட்சியில் நாட்டிலுள்ளவர்களில் 1 சதவீதத்தினரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2016இல் 49 சதவீதத்திலிருந்து 58.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 60 சதவீத சொத்துக்கள் இந்த 1 சதவீதத்தினரிடம் இருக்கிறது. இப்போது ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததானது நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வை மோசமான முறையில் நாசப்படுத்தி இருக்கிறது. இக்கொள்கைகள் அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியவைகளாகும். எனவே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டாக வேண்டும்.
* உங்கள் குறிக்கோள் பாஜகவை தோற்கடிப்பதுதான் என்றால், பின் ஏன் நீங்கள் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் அணி சேர்ந்திடக்கூடாது? ஒருசில இடங்களுக்கு அவர்களுடன் பேரம் பேச முடியுமே மற்றும் அதன்மூலம் பாஜக எதிர்ப்புக் குரலின் ஒரு பகுதியாகவும் இருக்க முடியுமே?
சீத்தாராம் யெச்சூரி: தற்போதைய சமாஜ்வாதி கட்சியின் கடந்த ஐந்தாண்டு காலக் கொள்கைகளுடனும் எங்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கு எதிராக இடதுசாரிகள் சிறப்பான ஒரு மாற்றுக் கொள்கையை கொண்டிருக்கிறோம். நாட்டில் வளத்திற்குப் பஞ்சமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். மக்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான கொள்கைகளுக்குத்தான் பற்றாக்குறை இருக்கிறது. இத்தகைய மாற்றுக் கொள்கை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவை அனைத்தும் சாத்தியம்தான் என்பதை மக்களையும் உணர வைத்திட வேண்டும்.சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் ஆட்சியில் இவையெல்லாம் இதுவரை நடைபெறவில்லை. சமாஜ்வாதி கட்சியின் தவறான கொள்கைகள் பாஜகவிற்கு உதவி இருக்கின்றன. எனவே இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் இவற்றையெல்லாம் எங்களால் எழுப்பமுடியாமல் போய்விடும். அடுத்து, அரசியல் என்பது வெறும் கூட்டல்கழித்தல் கணக்கு அல்ல. பாஜகவிற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றாக வந்து பாஜகவைத் தோற்கடிக்க முடியுமா? அது தானாக நடந்துவிடாது. உதாரணமாக, தற்போது அகிலேஷ் அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்கள் மனோ நிலை இருக்கிறது. இடதுசாரிகள் களத்தில் இல்லையென்றால் மக்களின் இந்த எதிர்ப்பு மனோநிலை பாஜகவின் பக்கம் போய்விடும். நாங்கள் இல்லையேல் பாஜகதான் ஆதாயம் அடையும். எனவே எந்திரகதியிலான முடிவுக்கு நாங்கள் வர முடியாது.
* நீங்கள் எழுப்ப இருக்கும் பிரதான பிரச்சனை என்ன? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பையா?
சீத்தாராம் யெச்சூரி : இதுவும் ஒன்று. இதன் பாதிப்பு சமூகத்தில் பல முனைகளில் ஏற்பட்டிருக்கிறது. சிறிய வணிகர்களிலிருந்து, நாட்கூலி பெறுகிறவர்கள் வரையிலும், கட்டுமானத் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இப்போது எல்லாருக்குமே வேலை இல்லை. இது ஒரு பெரிய சதி. இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட வேண்டியது அவசியம். தடை விதித்துவிட்டு அரசாங்கம் என்ன செய்கிறது? வங்கிகள் பெரும் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்த கடன்களை வாங்க முடியாமல் நஷ்டமடைந்த நிலையில், அவற்றுக்கு உயிர்கொடுத்திட இதன்மூலம் அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பெரும் கார்ப்பரேட்டுகள் வங்கிகளிடம் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொகை 11 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.இரண்டாவது, இவர்களின் ஒட்டுமொத்த மதவெறி நிகழ்ச்சி நிரல். புனித ஜிகாத், தாய்மதம் திரும்புவோம், துல்லியமான தாக்குதல்கள், பசுப் பாதுகாப்பு என்று இவர்கள் கூறிய அனைத்துமே மக்கள் மத்தியில் மதவெறித் தீயை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளேயாகும். இவர்கள் கூறிய துல்லியத் தாக்குதலின் விளைவு, பயங்கரவாதத் தாக்குதல்கள் இரட்டிப்பாகி இருக்கிறது.இது மிகவும் ஆபத்தான விளையாட்டாகும். இதுதான் ஆர்எஸ்எஸ்-அமைப்பின் குறிக்கோளாகும். இவ்வாறுதான் ஆர்எஸ்எஸ் இப்போதுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியக்குடியரசை தாங்கள் விரும்பும் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய மதவெறி அரசியல் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
நன்றி: தி இந்து, 28/1/17)
தமிழில்: .வீரமணி

No comments: