Monday, January 23, 2017

மிகப் பெருமளவு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன



பேரா. அமர்த்தியாசென்

பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டில் மிகவும் மோசமான முறையில் வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அரசாங்கம் இதனை என்னதான் தன்னுடைய பொய்ப் பிரச்சாரத்தால் மூடிமறைத்திட முயற்சித்த போதிலும், உண்மைதான் கடைசியில் நிலைத்து நிற்கும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென் கூறினார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அரசின் முடிவு பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திடும் என்று அவர் ஏற்கனவே ஊகித்துக் கூறியிருந்தார். சாந்தி நிகேதன் வந்துள்ள அமர்த்தியா சென் அவர்களை தி இந்து நாளேட்டிற்காக சுவோஜித் பக்சி பேட்டிகண்டார். அப்போது, இதன் நோக்கம் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் பேராசிரியர் அமர்த்தியா சென் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:
கேள்வி: மோடி அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தவுடன் ஏற்பட்ட பிரதானமான பாதிப்பை நாம் கடந்தஇரண்டு மாதங்களாகப் பார்த்தோம். நாடுமுழுவதும் உள்ள வங்கிகளின் முன்பு நீண்டகியூ வரிசைகள், வங்கிகளில் போதுமான அளவிற்குப் பணமின்மை. இப்போது அதன் தொடர் பாதிப்பினைப் பார்த்து வருகிறோம். இதுமுறைசாராத் தொழில்களில் கடுமையாகத் தெரிகிறது. மேற்கு வங்கத்தில் உருளைக் கிழங்கு விதைப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் பல வணிக நடவடிக்கைகள் நிலைகுலைந்து கிடக்கின்றன. இவை அனைத்தின் தாக்கமும் என்னவாக இருந்திடும்?
எலக்ட்ரானிக் கொடுக்கல் வாங்கலில் ஏழைகள் ஏமாறுவர்
அமர்த்தியா சென்: ‘நீங்கள் தொடர்பாதிப்புஎன்று குறிப்பிட்டது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில், பணப் புழக்கம் என்பது வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் பெரும் பங்கினை வகிப்பதாகும். குறிப்பாக, விவசாயம் மற்றும் சிறிய வர்த்தக நடவடிக்கைகளில் பிரதானமான பங்கு வகிப்பது பணப் புழக்கம்தான். நீண்டகால நோக்கில் வேண்டுமானால் மக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும் அதற்கு நீண்டகாலம் பிடிக்கும். கறுப்புப் பணத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற சாமானிய மக்களை இவ்வாறு ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குத் தயார்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.நாம் ரொக்கம் (cash) என்று அழைப்பதில்பெரும் பகுதி பிராமிசரி நோட்டுகளைத்தான்((promissory notes).). இவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, தங்கம், வெள்ளி போன்ற விலைஉயர்ந்த உலோகங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றிலிருந்து பிராமிசரி நோட்டுகளுக்கு மாறிய செய்கை என்பது பொருளாதார நடவடிக்கையில் மிகப்பெரும் முன்னேற்றமாகும். பிராமிசரி நோட்டுகள் தொழில்மய ஐரோப்பாவின் நிதியாதாரத்தின் முதுகெலும்பாக கணிசமான பங்கு வகித்தது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டன் பிராமிசரி நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருக்குமேயானால் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் தொழில்முன்னேற்றமும் அழிந்து நாசமாகி இருக்கும். மிகவும் வளர்ச்சி குன்றியிருக்கக்கூடிய நம்மைப் போன்ற நாடுகளில், எலக்ட்ரானிக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் மூலமாகபொருளாதாரத்தின் மிகப்பெரிய பங்களிப்பினை மேற்கொள்வது என்பது மிகவும் வடுப்படுத்தக்கவிதத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.நாட்டிலுள்ள பலருக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு, எலக்ட்ரானிக் கொடுக்கல் வாங்கல்கள் என்பவை மிகவும் சிரமமான ஒன்று. அவற்றை அவர்கள் பழக்கப்படுத்திக்கொள்வது என்பது மிகவும் கடினம். இவ்வாறான எலக்ட்ரானிக் கொடுக்கல் வாங்கல்களில் ஏழைகள் ஏமாறுவது என்பதும் தவிர்க்க முடியாதது.நம்மை மிகவும் குழப்பக்கூடிய விஷயம் என்னவெனில் இவையெல்லாம் இதனை அறிவித்தவர்களுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று என்பதுதான். அதிலும் கடந்த இருமாதங்களில் இதன்காரணமாக பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற பின்னரும்கூட, இத்தகைய மோசமானநிலைமைகளால் மக்கள் படும் துன்பதுயரங்களை அவர்கள் கண்டுகொள்ளாது பார்வையற்றவர்களாக இருப்பதுதான்.
குழப்பமான சூழ்நிலையில் சொல்லொண்ணா துயரங்களும்
கேள்வி: பணப்புழக்கத்திலிருந்து 85 சதவீதத்திற்கும் அதிகமான ரொக்கத்தை திடீரென்று திரும்பப் பெற்றது, ஏன்?
அமர்த்தியா சென்:  இதற்கான காரணங்கள் குறித்துஅரசாங்கம் இன்னமும் தன்னைக் குழப்பிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது `கறுப்புப்பணத்தைக்` கைப்பற்றுவதற்கும், ஒழித்துக்கட்டுவதற்குமே என்றார்கள். பின்னர்,`ரொக்கமற்ற பொருளாதாரத்தை` (cashless economy) நோக்கிச் செல்வதற்கான வழி என்றார்கள். நாட்டின் கறுப்புப் பண அளவில் ஒரு சிறுபகுதிதான்அதாவது 6 சதவீதம் அளவிற்குத்தான், (எப்படிப் பார்த்தாலும் அது நிச்சயமாக 10 சதவீதத்திற்கு மேல் கிடையாது) ரொக்கமாக இருக்கிறது. கறுப்புப் பணத்தின் மிகப்பெரிய அளவு வைரம், தங்கம் போன்று விலை உயர்ந்த ஆபரணங்கள் வடிவங்களிலும், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும் இருக்கின்றன. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறி ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றுஅறிவித்தது, உண்மையில் கறுப்புப் பணத்துடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள், சிறிய மற்றும் நடுத்தரவணிகர்களையும், சிறுகச்சிறுக சிறுவாடு காசுசேர்த்துவைத்திருந்த (small savings) குடும்பப் பெண்களையுமே கடுமையாகப் பாதித்தது. இதோடு, வேலையிழப்புகளும் பெரிய அளவில்ஏற்பட்டன. அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (All India Manufacturers’ Organisation) மிக மோசமான அளவிற்கு வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. லண்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்சியல் டைம்ஸ் இதழும்நரேந்திர மோடி வங்கி நோட்டுகளில் 86 சதவீதத்தை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கடந்த 34 நாட்களில் வர்த்தக நடவடிக்கைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளனஎன்று குறிப்பிட்டிருக்கிறது.ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றுஅறிவித்ததன் மூலம் `கறுப்புப்பண பிரச்சனை` தீர்க்கப்பட முடியும் அல்லது நீக்கப்பட முடியும் என்பது எதார்த்தமற்ற ஒன்று என்கிற முடிவு என்பது விரைவிலேயே அரசாங்கத்திற்குத் தெளிவாகிவிட்டது. உடனே அது அடுத்த பிரச்சாரத்திற்கு, ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி விரைந்திடுவோம் என்ற பிரச்சாரத்திற்குத், தாவிவிட்டது. இவ்வாறு மாறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். இதற்கிடையில் கறுப்புப் பணத்தைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கறுப்புப் பணம் வைத்திருப்போருக்கு எதிராக கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெளியானது. இவை இரண்டும் சேர்ந்து, சமூகம் ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி இயல்பாக மாறிச் செல்வதற்குப் பதிலாக, சமூகத்தில் ஒருகுழப்பமான சூழ்நிலைமையையும், மக்களுக்கு சொல்லொண்ணா துன்ப துயரங்களையுமே கொண்டுவந்திருக்கிறது.
மக்களின் சந்தேகம் இயற்கையே
கேள்வி: ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததற்குப் பின்னே, அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சில சட்டமன்றங்களுக்கு விரைவில் தேர்தல் வர இருக்கின்றன. எனவே அவையும் ஒரு காரணமாக இருக்கலாமா?பதில்: இதுகுறித்து உண்மையாகவே எனக்குத் தெரியாது. ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததற்கு அவர்கள் கூறிய பொருளாதாரக் காரணங்கள் பொய்த்துப் போனதைத் தொடர்ந்து, இதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்குமோ என்று மக்கள் சந்தேகிப்பது இயற்கையேயாகும். இவ்வாறு அறிவித்ததன்மூலம் எந்த முனையிலும் எவ்விதமான வெற்றியையும் பெற முடியவில்லை என்ற போதிலும்கூட, ஊழலுக்கு எதிராக பிரதமர் போர் தொடுத்திருக்கிறார் என்கிறசித்திரத்தை இதன்மூலம் கொடுக்க முடியும்.கேள்வி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு கடந்த ஐம்பது நாட்கள்நாடு கடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டபின்னர், பொருளாதாரத்தின் கறுப்பு சொத்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லையா?பதில்: இது எப்படி முடியும்? கறுப்புப் பணத்தில் மிகச் சிறிய அளவுதான் (சுமார் 6 சதவீதம், நிச்சயமாக 10 சதவீதத்திற்கும் குறைவுதான்) ரொக்க வடிவத்தில் இருக்கிறது. இவ்வாறு10 சதவீதம் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள், (இதுவே ஓர் அதீத மதிப்பீடுதான்) மிகவும் புத்திசாலிகள். இவர்கள் நாட்டின் அதிகார வர்க்கத்தினரை மிகவும் எளிதாக ஏமாற்றி விடுவார்கள். அதிகார வர்க்கத்தினரிடம் சிக்குவது சாதாரண நேர்மையான மக்கள்தான். இவர்களைத்தான் அதிகாரிகள் துன்புறுத்துவார்கள்.
பொருத்தமற்ற நடவடிக்கையும் வலுவான விளம்பரமும்
கேள்வி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு ஒரு மோசமான கொள்கைஎனில் அதற்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகள் அதிகமான அளவிற்கு இல்லை என்று ஏன்நீங்கள் நினைக்கிறீர்கள்?
அமர்த்தியா சென்: இந்த பொருத்தமற்ற நடவடிக்கையைச் சுற்றி அரசாங்கத்தின் விளம்பரம் மிகவும்வலுவாக இருந்திருக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை நீங்கள் எதிர்த்தால், நீங்கள்கறுப்புப்பணத்திற்கு ஆதரவாக இருக்கிறீர்கள்என்று எடுத்துக் கொள்ளப்படும் என்றுமக்களைநோக்கி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது. இது ஒரு பைத்தியக்காரத்தனமான பகுப்பாய்வுதான். எனினும் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட அரசியல் முழக்கமாகும். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி மெல்ல மெல்ல மக்களுக்கு நன்கு புலப்படத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் பொய்ப்பிரச்சாரத்தின் விளைவாக இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொய்யும், புரட்டும் மக்களில் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர்கள் மத்தியில்நீடித்திருக்கக்கூடும்.எனினும்,இறுதியாக உண்மைதான் நிலைத்துநிற்கும். 1840களில் ஐரிஸ் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, லண்டனில் ஆட்சி செய்தவர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி உடனடியாக ஏற்பட்டுவிடவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. மிகவும் தாமதமாகத்தான் அத்தகுஎழுச்சி நடைபெற்றது. ஆனால் அவ்வாறு நடைபெற்றதற்குப்பின்னர், லண்டனில் ஆட்சிசெய்தவர்கள்செய்த அனைத்தையுமே ஐரிஷ் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.
(நன்றி, தி இந்து, 17.1.2017)
 (தமிழில்: .வீரமணி)

No comments: