Monday, January 23, 2017

மோடியை காந்தியாக்கும் இழிமுயற்சி...




People’s Democracy
தலையங்கம்
பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும் கொஞ்ச காலமாகவே காந்தியை தங்கள் தேவைக்கேற்ப பொருத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற் கொண்டிருக்கின்றன. காந்தியை கோட்சே சகோதரர்கள் மூலமாக மிகவும் கொடூரமானமுறையில் படுகொலை செய்தபின்னர், இப்போது பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் தேசத் தலைவர்களான காந்தியிலிருந்து பி-ஆர்.அம்பேத்கர் வரை பலரையும்தங்கள்கொள்கைகளுடன் பொருத்துவதற்கான முயற்சிகளில் திட்டமிட்டு இறங்கியிருக்கின்றன. இதன் அடுத்த கட்டத்திற்கு இப்போதுஅவை நகர்ந்திருக்கின்றன. பொருத்துவதிலிருந்து, இடப்பெயர்ச்சி செய்திடும் வேலையில் இறங்கியிருக்கின்றன. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC - Khadi & Village Industries Commission) தற்போது ஒரு காலண்டரை வெளியிட்டிருக்கிறது. சுதேசி துணிகளையே வாங்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுதும் அல்லும்பகலும் அயராது தீவிரமாகச் செயல்பட்டுவந்த மகாத்மா காந்தி, உட்கார்ந்து கொண்டு சர்க்காவைச் சுழற்றுவதுபோல் இருக்கும் படத்தில், மகாத்மா காந்தியை .அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் மோடி உட்கார்ந்திருப்பதுபோல சித்தரித்து இந்த காலண்டரை வெளியிட்டிருக்கிறது.இந்தக் காலண்டர் படம் ஒரு செய்தியை சொல்லாமல் சொல்கிறது. அதாவது காந்தி மறைந்து விட்டாராம். மோடிதான் புதிய இறைத்தூதுவராம். காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள இந்தக் காலண்டர் படம் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், கண்டனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்துத்துவாவாதிகளோ இவை எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜி, காதியைகாந்தி அமிழ்த்தி மூழ்கடித்துவிட்டார் என்றும்ஆனால் மோடி காந்தியைவிட மிகப் பெரிய அளவில் காதியை உயர்த்திப்பிடிக்கும் (நபர்) (brand) என்றும் பிரகடனம் செய்திருக்கிறார். மேலும் அவர் என்ன சொல்லியிருக்கிறார், தெரியுமா? ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் இருப்பதால்தான் அவற்றை செல்லாது என்று அறிவித்ததற்கு இட்டுச் சென்றதாம். எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று ஏன் அறிவிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான காரணம் இப்போது வெளிவந்துவிட்டது அல்லவா!காந்திக்குப்பின்னர் தோன்றிய மாபெரும் குஜராத்தி மகாவீரர் என்று மோடியைப் புகழ்ந்து தள்ளுவது ஏற்கனவே தொடங்கிவிட்டதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்போது காந்தியைப் புறந்தள்ளிவிட்டு அந்தஇடத்தில் மோடியை வைத்திட முயற்சிப்பதுபோல்தோன்றுகிறது. இவ்வாறு மகாத்மாவைப்போல் சித்தரிப்பதை தன்னைத்தானே பீற்றிக்கொள்கிற எதேச்சதிகாரியான மோடியும் ரகசியமாக ரசிப்பதுபோலவே, தெரிகிறது.
(ஜனவரி 18, 2017)
(தமிழில்; ச.வீரமணி)

No comments: