Sunday, January 22, 2017

பரவலாக்கப்பட்ட அவசரநிலை ஆட்சி… மாபெரும் கொள்ளைக்கும்பலின் ஆட்சி...





பரவலாக்கப்பட்ட அவசரநிலை ஆட்சி
மாபெரும் கொள்ளைக்கும்பலின் ஆட்சி...

மோடி அரசு குறித்து அருண் ஷோரி தாக்கு
{சுவாதி சதுர்வேதி என்பவர் தன்னுடையநான் ஒரு தெருப்பாடகன்என்ற பெயரில் எழுதி வரும் ஆய்வு புத்தகம் ஒன்றின் ஒரு பகுதியாக தற்போது முன்னாள் பாஜக தலைவர் அருண் ஷோரியை நேர்காணல் கண்டிருக்கிறார். ஷோரி, அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையிலான தேஜகூ அரசாங்கத்தில் 1999இலிருந்து 2004வரை அமைச்சராக இருந்தவர். இவர், கரன் தாப்பரிடம் அளித்த பேட்டியின்போது நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, மோடிபக்தர்களால்சமூக வலைத்தளங்களில் வசைபாடப்பட்டு வருகிறார். இச்சூழ்நிலையில், சுவாதி சதுர்வேதியின் கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு}
உலகத் தலைவர்களிலேயே தனக்கு எதிராக இருப்பவர் களுக்கு எதிராக வசைபாடக்கூடிய கைத்தடிகளை அதிகம் வைத்திருப்பவர் நரேந்திர மோடி மட்டும்தான். நீங்கள் கரன் தாப்பருக்கு அளித்த பேட்டியின்போது, நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக, அவரது கைத்தடிகளால் நீங்களும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் மகனும் கடுமையாகத் தாக்கப்பட்டீர்கள். நீங்கள் மோடியை விமர்சித்ததின் பலனைத்தான் உங்கள் மகனின் நோய்க்குக் காரணம் என்றுகூட உங்களைக்குறித்துக் கூறினார்கள். இல்லையா?
அருண் ஷோரி:ஆம். இவ்வாறு வசைபாடுபவர்களுக் கெல்லாம் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இவர்களில் ஒரு நபர் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் (BJP’s IT Cell)) தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். இவ்வாறு இவருக்கு எதிராக விமர்சிப்பவர்களை வாய்மூட வைப்பதற்கு அரசு எந்திரமே இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் அதிகம்விற்பனையாகும் ராஜஸ்தான் பத்திரிகா என்பது மத்திய அரசாங்கம் குறித்து ஏதோ எழுதியது என்பதற்காக இப்போது ராஜஸ்தான் மாநில அரசாங்கம் அதற்கு விளம்பரங்கள் அளிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
நீங்கள் அவசரநிலையை எதிர்த்துப் போராடியவர். அந்தக்காலத்தில் நான் பிறக்கவே இல்லை. இப்போதுள்ள ஆட்சி அதுபோன்றதென்று கருதுகிறீர்களா?
உண்மையான பாசிசம்
அருண் ஷோரி: இது பரவலாக்கப்பட்ட அவசரநிலை. இது பிரமிட் போன்ற பரவலாக்கப்பட்ட கொள்ளைக் கும்பலின் ஆட்சியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு எதிராக இருப்பதாக நினைத்தால் உள்ளூர் குண்டர்கள் மூலமாக அவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். அவர்களின் ரவுடியிசத்திற்கு மத்தியில் உள்ளோர் ஏதேனும் காரணத்தைக் கற்பிக்கிறார்கள். ‘பசுவைப் பாதுகாக்கிறவர்கள்என்றும்புனித ஜிகாத்என்றும் கூறி எவரை வேண்டுமானாலும் இவர்கள் தாக்கலாம். இது ஏதோ பசுவின் மீதான பாசத்தால் அல்ல.
தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான ஒரு கருவி, அவ்வளவுதான். இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இந்திராகாந்தி எது செய்தாலும் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் செய்தார். இப்போது இவர்கள் சட்டத்தைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. உண்மையான பாசிசம் என்பது இதுதான். ஏனெனில் சட்டம் என்றால் என்ன என்று இவரிடம் கேட்டால், நான்தான் சட்டம் என்கிறார். இவற்றில் மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், இவை அனைத்தையும் அரசாங்கத்திற்குள்ளே இருந்துகொண்டே செய்கிறார்கள்.
அரசாங்கத்திற்குள்ளே இருந்துகொண்டே அரசாங்கத்தின் சட்டங்களைத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.உதாரணமாக தகவல் உரிமைச் சட்டத்தை இவர்கள் மதிப்பதே இல்லை. நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொது நல மனுக்கள் தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால் அவமானப்படுத்துகிறார்கள். நீதித்துறையையே அவமதிப்புக் குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவேதான் காலி யிடங்களை பூர்த்தி செய்யாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நீதித்துறை பரிந்துரைத்திடும் பெயர்களை ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்கிறார்கள். விளைவு, போதிய நீதிபதிகள் இல்லாமல் மக்கள்தான் சித்ரவதைக்குள்ளாகி வருகிறார்கள்.
அஷிஸ் நந்தி ஒருதடவை மோடியைப் பேட்டி கண்டுவிட்டு வந்தபின்னர், ஒரு பாடப்புத்தக பாசிஸ்ட்டை (textbook fascist) சந்தித்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது என்று கூறியிருந்தார். நீங்கள் மோடி பிரதமராக வேண்டுமென்பதற்காக அவருட னேயே சேர்ந்துபிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். அவர் கூறியதுடன் நீங்கள் ஒத்துக்போகிறீர்களா?
கருப்பு முக்குணங்கள்
இன்னும் அதிகமாகவே கூறலாம். மோடி உளவியலில் கருப்பு முக்குணங்கள் என்று அழைக்கப்படும் மூன்று விதமான குணங்களைப் பெற்றிருக்கிறார்.கொடுங்கோலர்களும் எந்த அளவிற்குக் கொடுங்கோன்மை செயல்களைப்புரிந்தாலும் அவர்களும்கூட பயப்படும் நிலைமைகளும் ஏற்படும். தில்லி சட்டமன்றத்திற்கும், பீகார்சட்டமன்றத்திற்கும் தேர்தல்கள் நடந்து முடிவுகள் வெளிவந்த பின் மோடியின் நிலைமை என்ன என்று நாம் பார்த்தோம்? அதுநாள்வரை அவர்வளர்ச்சி, வளர்ச்சிஎன்று கூறிவந்ததை யெல்லாம் கைவிட்டுவிட்டார். ஒரு தேர்தல் தோல்விக்குப்பின் அவர் எந்த அளவிற்கு அச்சமடைந்தார் என்பதைக் காண முடிந்தது.
இரண்டாவதாக, அவருடைய குணம் என்பது தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதேயாகும். அதற்காக எது செய்தாலும் அவருக்கு .கே.தான். இதற்காக எவரை வேண்டுமானாலும் மிரட்டலாம், எவருக்கு எதிராக வேண்டுமானாலும் அவதூறு பொழியலாம். மோடியை எவர் எதிர்த்தாலும் அவர்மீது வழக்குகள் பாயும். குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பிரதீப் சர்மா மற்றும் டீஸ்டா செதல்வாத் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மூன்றாவதாக, இதே கதி தங்களை ஆதரிக்காத அரசு சாரா நிறுவனங்களுக்கும் ஏற்படும். அவைகள் குற்றவாளிக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, மிரட்டப்படும். இத்தகு முக்குணங்களையும் அவர் பெற்றிருக்கிறார். இப்படித்தான் தான் செய்திடும் அனைத்தையும் அவர் நியாயப்படுத்தியும் பேசிவருகிறார். ‘இவர்கள் ஒவ்வொருவரும் நான் ஆட்சியில் இல்லாதபோது எனக்கு என்ன செய்தார்களோ, அதைத்தான் இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்என்கிறார். இதுதான் அவருடைய நியாயம்.
உங்களுக்கு மோடியை நன்கு தெரியும், அவருடைய பிரச்சாரத்தின்போது வெகுவாக உதவியிருக்கிறீர்கள். இல்லையா?
மிகப்பெரும் 2ஆவது தவறு
ஆம். எனக்கு அவரை நன்றாகவே தெரியும். நாங்கள் எல்லாம் இணைந்தே வேலை செய்துகொண்டிருந்தோம். ஏனெனில் டாக்டர் மன்மோகன் சிங் தன்னுடைய இரண்டா வது முறையான ஆட்சிக் காலத்தில் எங்கள் அனைவருக்கும் மிகவும் அலுத்துப்போய்விட்டது. ஆனால் மோடியை ஆதரித்தது நான் என் வாழ்க்கையில் செய்திட்ட மிகப்பெரும் இரண்டாவது தவறாகும்.
நான் மோடியை ஆதரித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் என்னைப் போற்றினார்கள். ஆனால் நான் அவர்நடவடிக்கைகள் குறித்து பேசியபோது, திடீரென்று என்னைவெறுக்கத் தொடங்கினார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கை களை விமர்சிப்பவர்கள் எல்லாம் மிரட்டப்பட்டார்கள். அரசாங்க நிறுவனங்கள் அனைத்தும் தரம் தாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அதன் உயரிய மாண்புகள் சீர்குலைந்து கொண்டிருக்கின்றன. எதிர்ப்பவர்களை மிரட்டுவது என்பது ஒரு நெறியாக மாறிக்கொண்டிருக்கிறது.இவை அனைத்தும் மோடிக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா?
மோடிக்குத் தெரியாது என்று உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை, இல்லவே இல்லை. அவருக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதை எப்படி ஒருவர் நம்ப முடியும்? ஆரம்பத்தில் அவரைப்பற்றி என்ன சொன்னார்கள்? ‘…மோடிக்குத் தெரியாதது எதுவும் இருக்க முடியாது, மோடிக்கு எல்லாம் தெரியும். அவரிடம் மிகவும் சூப்பரான உளவு ஸ்தாபனம் இருக்கிறது. பத்திரிகைகளில் வருவது அவருக்குத் தெரியாதா? அமைச்சர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? ஒரு சமயம் அவருக்கு எல்லாம் தெரியும் என்கிறார்கள். மறுசமயம் அவருக்கு எதுவுமே தெரியாது என்கிறார்கள்.
சூழ்ச்சி நடவடிக்கைகள் அரங்கேற்றம்...
அவர்கள் மிகவும் தெளிவான விதத்தில் தன் சூழ்ச்சி நடவடிக்கைகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் அறிக்கை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து ஏதேனும் ஒரு நிகழ்வு உருவாக்கப்படும். அதுதொடர்பாக பிரச்சாரமும் முடுக்கிவிடப்படும். அவர் அமைதியாக இருப்பார். எல்லோரும் அவரைக் கேட்பார்கள், ‘பாபா, ஏதாவது பேசுங்கள்என்று அவரைக் கெஞ்சுவார்கள். அந்த நிகழ்ச்சியினால் அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தபிறகு, மூன்று மாதங்கள் கழித்து, அவர் இதுதொடர்பாக ஒரு குழப்பமான அறிக்கைஒன்றை வெளியிடுவார். அதாவது, ‘தாய்மை என்பது நல்லது, நாம் அனைவரும் நம் தாய்மார்களை மதித்திட வேண்டும்என்பதுபோல அவை இருக்கும்.
தாய்மையும் ஆப்பிள் பணியாரமும் (Motherhood and apple pie!) என்பதைப்போலவா?
(சிரித்துக்கொண்டே) ஆம்அவரது ஆட்கள் அவர்கோ மாதாகுறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.இதுபோன்று நீங்களும் தெரிந்துவைத்திருப்பீர்கள். இவர்கள் நாடு முழுவதும் நடத்துகின்ற கலவரங்களுக்கெல்லாம் தொடர்பில்லை என்று எந்த மடையனும் நினைக்க மாட்டான் என்று உங்களுக்குத் தெரியும். திரும்பத் திரும்ப இதுபோன்ற நாடகங்களை நடத்திக்கொண்டிருப்பார்கள். முன்பு .பி. தேர்தல் நடந்தபோது புனித ஜிகாத் (Love Jihad) என்று பிரச்சனையைக் கிளப்பினார்கள். முஸ்லிம் பையன்கள் இந்து பெண்களை கைவிட்டுவிடுவார்களாம்? அவருடைய ஒரே குறிக்கோள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பதே. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்.
அதிகாரத்தில் இருப்பது ஆர்எஸ்எஸ்தான்
உங்களை மிகவும் அச்சுறுத்தியது, எது?
முசாபர்நகர் படுகொலைகள். இப்போது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். பலர் அங்கே குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். 61 பேர் இறந்திருக்கிறார்கள். காஷ்மீரில் நடந்ததுபோல கேரளா, பீகார் அல்லது .பியில் நடக்கலாம். 1940களில் இங்கே முஸ்லிம்களுக்கு இருந்ததைப்போன்ற ஒரு நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் மோடியுடனும் அமித் ஷாவுடனும் சமரசம் செய்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை. ஆர்எஸ்எஸ்-உம், மோடி மற்றும் அமித்ஷாஆகியோரும் தனித்தனியே இருப்பதாக நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? மோடியும், அமித்ஷாவும் நாளொரு மேனியும்பொழுதொரு வண்ணமும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளைத் தானே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ் எஸ்தான் .உண்மையில் அதிகாரத்தில் இருக்கிறது. அது இவர்களுடன் இணையாமல் தனியே அடித்தளமாக மட்டும் இருக்கிறது என்று நினைப்பது முட்டாள்தனமாகும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் நியமிக்கப்பட்டிருப்பவர்கள் யார் என்று பாருங்கள். இவை நீண்டகாலத்திற்கு விளைவு களை ஏற்படுத்தக்கூடியவைகளாகும். இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR-Indian Council for Historial Research) ஐப் பாருங்கள்.
இந்த அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் எப்படிப்பார்க்கிறீர்கள்? உதாரணமாக ராஜ்நாத் சிங் `சார்க்` நாடுகளின்உச்சிமாநாட்டிற்காக பாகிஸ்தான் சென்றார். வங்கதேசம் கூட அந்த மாநாட்டுக்கு செல்லவில்லை. அவர் அவமரி யாதைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கருதி திரும்பினார். அப்போது அவர், ‘நான் அங்கே ஒன்றும் சாப்பிடுவதற்காக செல்லவில்லைஎன்றார். என்ன உண்மையில் நடந்து கொண்டிருக்கிறது?
வைத்த தீயை அணைக்க மறுப்பு...
(சிரித்துக்கொண்டே) ஒன்றும் நடக்கவில்லை. இதுதான் அவர்களின் அயல்துறைக் கொள்கை. ஒருநாளிரவு நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது பாகிஸ்தான் குறித்து ஏதேனும் செய்திகள் வரும். மறுநாள்காலை பாகிஸ்தான் குறித்து கடும் வார்த்தைகளை உதிர்ப்பீர்கள்.
மற்றொருநாள் அது தலைகீழாக மாறும். ஒருநாள்நாம் தக்க பதிலடி கொடுப்போம்என்பார்கள். ‘நான் சாப்பிடுவதற்காக ஒன்றும் செல்லவில்லைஎன்று ராஜ்நாத் சிங் கூறியது, மோடி கிறிஸ்துமஸ் சமயத்தில் ஷெரீப்புடன் மதிய உணவு அருந்தியதைத்தான் உண்மையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இவர்களுடைய உத்திகளில் மிகவும் முக்கியமான ஒன்று, ஊடகங்கள் மூலம் பிரச்சனைகளைத் திசைதிருப்புவதாகும். காஷ்மீரில் மோசமான விஷயங்கள் நடைபெற்றாலோ அல்லதுகுஜராத்தில் மோசமான விஷயங்கள் எதுவும் நடந்தாலோ, (உதாரணமாக தலித்துகள் போராட்டம்) அரசாங்கம் என்ன செய்கிறது?
வேறேதேனும் கதையை அல்லது கதைகளை உருவாக்கி அளித்திடும். தங்களுடைய பேச்சைக்கேட்கும் ஊட கங்கள் மூலமாக அதனைத் தூக்கி நிறுத்த முயற்சிப்பார்கள். பின்னர் நீங்கள் காஷ்மீரில் நடப்பதையோ அல்லது குஜ ராத்தில் நடப்பதையோ மறந்துவிடுவீர்கள். ஊடகங்களின் கவனத்தைத் திசைதிருப்பியதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள். இது பிரச்சனைகளை மேலும் சிக்க லாக்குகின்றன. இதன்பொருள் நீங்கள் வைத்த தீயை நீங்கள் அணைக்க மறுக்கிறீர்கள் என்பதாகும். அங்கே பேரிடர் ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி உங்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது, மாறாக நீங்கள் வெற்றிவிழா நடத்திக் கொண்டிருக் கிறீர்கள்.
உங்கள் நோக்கம் ஊடகங்களில் செய்தி எதுவும்வந்துவிடக்கூடாது என்பது மட்டுமேயாகும். ‘நீங்கள் குறைந்தபட்ச பெரும்பான்மையுடன்தான் மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்தி அபரிமிதமான பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தார். ஆனால் அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகள் அவரைக் கீழே தள்ளி விட்டனஎன்று மோடியிடம் தனிப்பட்டமுறையில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டி ருப்பதாக, ஊடகங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாக, எனவே எல்லாமே நம் பிடியில்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவை உங்கள் கையைவிட்டு செல்லும் நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது.
வாஜ்பாய்க்கு அச்சுறுத்தல்
நீங்கள் அடல்ஜியின் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகஇருந்தவர். இப்போது மோடி குறித்தும், சமூக வலைத்தளங் களில் அவரைத் முகஸ்துதி செய்தும் கருத்துக்கள் பரப்பப்படுவதை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் மோடி குறித்து அடல்ஜி என்ன நினைத்தார்?
குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களைக் கேட்டு அடல்ஜி அழுததை நான் நேரடியாகவே பார்த்தவன். குஜராத்தில் கலவரங்கள் நடைபெற்றபின் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அவர்களைப் பார்த்துவிட்டு திரும்பி வந்தவுடன் உடனடியாகஅவர் சிங்கப்பூருக்கும் கம்போடியாவுக்கும் செல்லவேண்டி யிருந்தது. அப்போது, பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்த பிரஜேஷ் மிஷ்ரா என்னிடம், ‘அடல்ஜி மிகவும் நிலைகுலைந்து போயிருக்கிறார். அவரிடம் சென்று ஆறுதல் கூறுங்கள்,’ என்று கூறினார்.
நான் அடல்ஜியிடம் சென்றேன். அவர் கைகளைத் தலையில் வைத்துக்கொண்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தார். நான் இங்கே அமரலாமா என்று அவரிடம் கேட்டதும் அவர் என்னைப் பார்த்து இசைவுதெரிவித்து தலையாட்டியபின்னர் வேதனையுடன் என்னிடம், ‘என்னை ஏன் அங்கே அழைத்துச் சென்றார்கள்? எந்த முகத்துடன் நான் விமானத்தில் நடக்க முடியும்?’ என்று கூறி அழத்தொடங்கிவிட்டார். நான் அவரிடம், ‘நாம் மீண்டும் நாடுதிரும்பியபின்னர் அத்வானிஜியிடம் சொல்லி மோடியைராஜினாமா செய்யச் சொல்வோம்என்றேன். அவர் அமைதியாக இருந்தார். தோளைமட்டும் அசைத்துக்கொண்டார்.
அவர் போன் செய்யவில்லை. பிரஜேஷ் மிஷ்ரா தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, ‘கோவாவில் பாஜக கூட்டம் நடக்கிறது. நீங்களும் பிரதமருடன் அவரு டைய விமானத்திலேயே செல்லுங்கள்என்றார். மேலும், ‘அங்கே அத்வானிஜியும் இருப்பார். ஜஸ்வந்த் சிங்கும் அங்கே இருப்பார்.’ என்றார். நான் உடனே, ‘அத்வானி அங்கேஇருந்தால், வேறு யாரும் அங்கே இருக்கக்கூடாது, அவர்களுக்குள் பேசட்டும்என்றேன். உடனே, பிரஜேஷ் என்னிடம், ‘உங்களுக்குத் தெரியாதா, அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்என்றார். எனவே, நாங்கள் அங்கே போனோம். அடல்ஜி சன்னல் அருகில் உட்கார்ந்தார். அத்வானிஜி அவருக்கு எதிரே அமர்ந்தார். இருவருமே சன்னலுக்கு வெளியேயே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து, அடல்ஜி ஒரு செய்தித்தாளை எடுத்து அவருடைய முகத்தை மறைக்கும் விதத்தில் வைத்துக்கொண்டார்.
சிறிதுநேரம் கழித்து அத்வானிஜியும் அதேபோன்று செய்தித்தாளை எடுத்து அடல்ஜியை பார்க்காது தவிர்த்தார். நான் அடல்ஜியிடம் இருந்த செய்தித்தாளை வலுக்கட்டாயமாகப் வாங்கிக்கொண்டு, ‘அடல்ஜி, நீங்க பேப்பரை அப்புறம் படித்துக்கொள்ளலாம். .இப்போது மோடி குறித்து நீங்கள் இருவரும் பேச வேண்டியது அவசியம்என்றேன். பின்னர் இருவரிடையேயும் விவாதம் தொடங்கியது. பாஜக தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்திக்குப் பதிலாக வெங்கைய்யா நாயுடு பொறுப்பேற்பார் என்கிற முடிவினை எடுத்திட அதிகநேரம் ஆகவில்லை. இரண்டாவது முடிவு, மோடி ராஜினாமா செய்திருக்கிறார் என்று அத்வானிஜி பாஜக தேசிய செயற்குழுவில் தெரிவிக்க வேண்டும். செயற்குழுக்கூட்டம் தொடங்கியது. மேடையில் அடல், அத்வானி, ஜனா அமர்ந்திருந்தார்கள்.
நான் யஷ்வந்த் சின்காவுடன் பின்னால் வலதுபக்கத்தில் அமர்ந்திருந்தேன். இதற்கிடையில் மோடி எழுந்தார், தன் கைகளை அசைத்துக் கொண்டே. ‘என்னால் கட்சிக்கு களங்கம் வருவதை நான் விரும்பவில்லை. எனவே, நான் என்னுடைய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திடத் தீர்மானித்திருக்கிறேன்என்றார். இரண்டு, மூன்று விநாடிகள் அமைதி நிலவியது. பின்னர் 10, 15 பேர் எழுந்து, ‘இல்லை, கூடாது. என்னாயிற்று? நீங்கள் ஏன் ராஜினாமா செய்திட வேண்டும்? தவறாக ஏதும் நடந்திட வில்லையே?’ என்றார்கள். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, இதனை அத்வானி அறிவிக்க வேண்டும் என்பதேயாகும்.
மோடிஇதனை செய்திருக்கக்கூடாது. மோடி இவ்வாறு எழுந்து அறிவித்த பின்னர் அடல்ஜி முற்றிலுமாக திகைத்துவிட்டார் என்பது அவருடைய முகத்திலிருந்து நன்கு பார்க்க முடிந்தது.அவருக்கு எதிராக நடைபெற்ற சதி வேலை இதுவாகும். பின்னர் இப்பிரச்சனையைத் தணித்திட முயற்சிக்கும் வண்ணம், ‘இதுகுறித்து நாளை பேசுவோம், இப்போது பொதுக்கூட்டத்திற்குச் செல்வோம்என்றார். மீண்டும் கூட்டத்தில் அமளி. ‘ஏன் நாளை இதுகுறித்துப் பேச வேண்டும்? இதுகுறித்துஎப்போதுமே பேசக்கூடாதுஎன்றார்கள். ஆனால், அடல்ஜி பயமுறுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் நாடு இன்றைய தினம் எதிர்கொள்ளக்கூடிய நிலைமையை அவர் ஒருக்காலும் அனுமதித்திருக்கமாட்டார்.
(நன்றி: தி ஒயர் இணைய இதழ்)
தமிழில்: .வீரமணி

No comments: