நாட்டின் தலைநகரான தில்லியில்
நடைபெற்றுக் கொண்டிருப்பவை உண்மையில் மிகவும் மானக்கேடானவைகளாகும். 2015பிப்ரவரியில்
நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று அரசாங்கம் அமைத்ததிலிருந்தே,
அதற்கு எதிராக அனைத்துவிதமான தாக்குதல்களையும் மத்திய அரசாங்கம் கூச்சநாச்சமின்றி தொடுத்துக்
கொண்டிருக்கிறது. தில்லி துணை ஆளுநர் மூலமாகவும், (மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள)
தில்லி காவல்துறைமூலமாகவும் மத்திய அரசாங்கம் கிட்டத்தட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாநில அரசையும், சட்டமன்றத்தையும் ஓரங்கட்டிவிட்டு தன்அதிகாரத்தை மிகவும் நாணமின்றி
பிரயோகித்துக் கொண்டிருக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, 69ஆவது திருத்தமானது தில்லி சட்டமன்றம்
மற்றும் அரசாங்கம் அமைப்பதற்கு வகை செய்த அதேசமயத்தில், பொது சட்டம்- ஒழுங்கு, காவல்துறை
மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறைகளை மத்திய அரசே வைத்துக்கொள்ளும் என்கிற விதத்தில்
கொண்டுவரப்பட்டது. ஆனால், கடந்த 20 மாதகால ஆம்ஆத்மி கட்சியின் அரசாங்கம் எதிர்கொண்டது
என்னவெனில், மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்துத் துறைகளிலுமே
மத்திய அரசாங்கம் அத்துமீறி மூக்கை நுழைத்ததாகும்.
தில்லி சட்டமன்றம் 14 சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியது. ஆனால் இந்த 14
சட்டமுன்வடிவுகளுமே மத்திய உள்துறை அமைச்சகத்தால் துணை ஆளுநரின் ‘முன் ஒப்புதல்’பெறவில்லை
என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.
துணை ஆளுநர் நஜீப் ஜங், மோடி அரசாங்கத்தின்
முகவராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2015 மே மாதத்தில் லஞ்ச ஊழல் எதிர்ப்புக்குழு
(Anti-Corruption Bureau) வின் தலைவரை நீக்குவதில் அவர் தலையிட்டவிதமும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட
நபரை அதில் அமர்த்தியதும், ஏஏபி அரசாங்கம் அமர்த்திய நிர்வாக ஏற்பாட்டை தூக்கி எறிந்திடவும்,
அந்த இடத்தில் தங்கள் ஆளை நியமித்திட மோடி அரசாங்கம் மேற்கொண்ட மோசமான நடவடிக்கையையும்
தெளிவாகக் காட்டுகிறது.
மேலும், மின் வெட்டுஏற்படுத்தியதற்காக
மின் விநியோக நிறுவனங்கள் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று ஏஏபி அரசாங்கம்
பிறப்பித்த ஆணையையும் துணை ஆளுநர் ரத்து செய்துள்ளார். சமீபத்தில், ஏஏபி அரசாங்கம்
தன் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்த அரசாணையையும்கூட அவர் புறந்தள்ளி
இருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக,
2016 ஆகஸ்ட்டில் மிகவும் பிற்போக்குத்தனமான முறையிலும், தவறான முறையிலும் தில்லி உயர்நீதிமன்றம்
அளித்த தீர்ப்பொன்று தில்லி அரசாங்கத்தை உண்மையில் பெயரளவிலான ஒன்றாக குறைத்தது. அந்தத்
தீர்ப்பானது, தில்லி தேசியத் தலைநகரம், ஒருமாநிலம் அல்ல என்றும், அது‘யூனியன் பிரதேசமாகவே
தொடர்கிறது’ என்றும் எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் இருப்பது போன்று துணை ஆளுநர்
மாநில அரசின் ‘உதவி மற்றும் அறிவுரை’யைக் கேட்க வேண்டியது இல்லை என்றும் கூறியது. மேலும்
அது சிவில் சர்வீசஸ் நியமனங்களிலும் மத்திய அரசின் அதிகார வரம்பெல்லையை விரிவுபடுத்தியது.
தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டை இப்போது உச்சநீதிமன்றம்
விசாரிக்கிறது. இருப்பினும், மாநில அரசுக்கு சேதாரம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்தத்
தீர்ப்பிற்குப்பின், துணை ஆளுநர் அனைத்து அதிகாரிகள் மீதும் ஆளுமை செலுத்துகிறார்.
அதிகாரிகள் எவரும் தன்னால் ஏற்பளிப்பு அளிக்கப்பட்டால் தவிர முதல்வரின் கட்டளைகளுக்குக்
கீழ்ப்படிய வேண்டியதில்லை என்று துணை ஆளுநர் கூறும் அளவிற்குச் சென்றிருக்கிறது,
தில்லி சட்டமன்றத்தில்
மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை ஏஏபி பெற்றிருக்கிறது. கடந்த இருபது மாதங்களில்
இக்கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் பல்வேறு குற்றங்களின்கீழ் கைது செய்யப்பட்டு,
சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கலகம் செய்ததாக, வழிப்பறியில் ஈடுபடுதல், மானபங்கப்படுத்துதல், குடும்ப
வன்முறை, நிலப் பறிப்பு மற்றும் மோசடி போன்ற பல்வேறு குற்றங்களில் தில்லி போலீசார்
இவர்களின்கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இதுவரை ஏஏபி எம்எல்ஏக்களில் 21 சதவீதத்தினருக்கு
எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் வேறெந்த மாநில சட்டமன்றத்திலும்
இந்த அளவிற்கு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட தில்லை. சமீபத்தில்
குஜராத்தில் குலாப் சிங்,எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் காவல்துறையினரை
கடிந்துகொண்டிருக்கிறது. காவல்துறையினர் கைது செய்வதில் அவசரம் காட்டி இருப்பதாகவும்,
முக்கியமான உண்மைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர் என்றும் சாடி
இருக்கிறது. மோடி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து,எதிர்க்கட்சிகள்
அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் மிகவும் மோசமான கட்சி எது எனில் அது, இதற்கு
முன் தில்லியை ஆட்சிசெய்த காங்கிரஸ் கட்சிதான். மத்திய அரசின் ஜனநாயக விரோத தலையீடுகளைக்
கண்டிப்பதற்குப் பதிலாக அது, எல்லாவற்றிற்கும் ஏஏபி கட்சியையே குறைகூறிக் கொண்டிருக்கிறது.
ஏஏபி தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் தலையீடுகளை
தனக்கு எதிராக நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கை என்றே பார்க்கிறார்.
அதைவிட இச்செயல்களை ஜனநாயக மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசுமேற்கொண்டுள்ள
ஆபத்தான தாக்குதல் என்றும், மத்திய ஆளும் கட்சியின் எதேச்சதிகார அணுகுமுறையையே இது
பிரதிபலிக்கிறது என்றும் பார்க்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏஏபி அரசாங்கத்தின்
செயல்பாடுகளில் குற்றங் குறைகள் இருக்கலாம். அவை விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட வேண்டியவையாகும்.
ஆனால் அதனை சாக்காக வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீதும், கூட்டாட்சித் தத்துவத்தின்
மீதுமே எதேச்சதிகாரமான முறையில் மத்திய அரசாங்கம் தாக்குதல் தொடுப்பது அனைவராலும் எதிர்க்கப்பட
வேண்டிய ஒன்றாகும்.
மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க அனுமதிப்பது என்பது, அது
மேலும் வெறித்தனமான முறையில் தாக்குதல்களை முன்னெடுத்துச்செல்லக் கூடிய விதத்தில்,
எதேச்சதிகாரம் என்னும் கத்தியை சாணை தீட்ட அனுமதிப்பது போன்றதேயாகும்.
(அக்டோபர் 19, 2016)
தமிழில்:
ச.வீரமணி
No comments:
Post a Comment