‘தலாக்’ முறையை எதிர்க்கும் முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை ஆதரிக்கிறோம்
பொது சிவில் சட்டத்தை உந்தித் தள்ளும் முயற்சியை எதிர்க்கிறோம் : சிபிஎம்
புதுதில்லி, அக். 18-பொது சிவில் சட்டத்தை உந்தித் தள்ளும் முயற்சியை எதிர்க்கிறோம் : சிபிஎம்
மூன்று முறை ’தலாக்’ சொல்லி தன்னிச்சையான முறையில் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்முன் வைத்திருக்கும் கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக மாதர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே வேளையில், இப்பிரச்சனையைக்கூறி பொது சிவில் சட்டம் என்ற தனது நிகழ்ச்சி நிரலை முன்வைக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு
இது தொடர்பாக, கட்சியின் அரசியல்தலைமைக்குழு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மூன்று முறை தலாக் என்று சொல்லி தன்னிச்சையானமுறையில் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள்வைத்திருக்கும் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இந்தகுறிப்பிட்ட நடைமுறை, பெரும்பாலானஇஸ்லாமிய நாடுகளில் அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தைக் கொண்டுவரும்.பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கான சட்டங்கள் உட்பட பல்வேறு மதத்தினருக்கான தனிநபர் உரிமைச் சட்டங்களும் (personal laws ) சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்.இந்தப் பின்னணியில், இந்து மகளிருக்கான உரிமையியல் சட்டங்கள் ஏற்கனவே சீர்திருத்தப்பட்டிருக்கின்றன என்று அரசின் செய்தித்தொடர்பாளர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் பெண்களின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பொருள் அல்ல. மாறாக, அதனை ஒருகேடயமாகபயன்படுத்திக்கொண்டு தற்போதுசிறுபான்மை சமூகத்தினரை,குறிப்பாக முஸ்லிம் இனத்தினரை தாக்குவது என்பதேயாகும்.இப்போதும் கூட, இந்து மதத்தின்கீழ் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளுதல், சொத்து உரிமைகள் மற்றும் தங்கள்சொந்த வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை போன்றவை தொடர்பாக இந்துப் பெண்களுக்கு எதிராக இந்து சிவில் சட்டம் பாகுபாடு காட்டி வருகிறது.முஸ்லிம் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக வகுப்புவாத சக்திகள் தாக்குதலைத் தொடுத்திருக்கும் நிலையில், பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) என்கிற நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளுவதற்காக, அரசாங்கம் நேரடியாகவும் தன் நிறுவனங்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையும் பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை எதிர்விளைவுகளையே கொண்டுவரும். ஒரே சீரான தன்மை என்பதுசமத்துவத்திற்கான உத்தரவாதம் அல்ல.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
ஜனநாயக மாதர் சங்கம்
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பில்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மேற்கண்ட பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ( (All India Muslim Personal Law Board) ) எடுத்துள்ள படுபிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். அவர்களின் நிலைப்பாடு மத நம்பிக்கையுடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. பல முஸ்லிம் நாடுகள், உடனடியாகவும் தான்தோன்றித்தனமாகவும் விவாகரத்து செய்யும் இத்தகைய அருவருப்பான நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை.ஆயினும் இதனையொட்டி, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்காக மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர் அறிக்கைகள் மூலமாக மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைக் கண்டிக்கிறோம். பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள வினாப்பட்டியலுக்கு நிச்சயமாக அரசின் ஆதரவு இருந்திடும். இந்த சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கூறுகிறசீர்திருத்தவாதிகளுக்கு இது பெரிய அளவில் பாதகம் விளைவித்திடும்.மோடி அரசாங்கமும், இந்துத்துவாசக்திகளும் பெண்களின் உரிமைகள்குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதில்லை. எனவேதான் சிவில் சட்டங்களில் பெண்களுக்குள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில் நடவடிக்கை எடுத்துள்ளன; வரதட்சணை வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 498-ஏ பிரிவைக்கூடதிருத்துவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் மதவெறிச் சாயத்தைப் பூசுவதற்குப் பதிலாக, பெண்கள் ஆணவக்கொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒருசட்டத்தை அவசரமாகக் கொண்டுவரவேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதை சாதி அடிப்படையிலான கட்டப் பஞ்சாயத்துக்கள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரைத் தாக்குவதற்காகத்தான் பொது சிவில் சட்டத்தை இப்போது அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது என்பது தெளிவு.இந்து சட்டங்களில் இருக்கக்கூடிய நியாயமற்ற , சமமற்ற ஷரத்துக்களை நீக்குவதற்குக் கூட இந்த அரசாங்கம் தயாராக இல்லை. சொத்துக்கள், நிலம் அல்லது குழந்தைகளுக்கான பாதுகாவலர் ஆகியவற்றில் பெண்களுக்கு உரிமைகள் அளிப்பதில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெண்களுக்கு இன்றளவும் திருமணம்சார்ந்த சொத்தில் (marital property) உரிமை கிடையாது.இந்தப் பின்னணியில், தனி நபர் உரிமைச் சட்டங்களில் (personal laws) சீர்திருத்தங்கள் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவத்திற்கான குறிக்கோளை எய்திட முடியும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. போதுமான அளவில் இல்லாத தற்போதைய சிவில் சட்டங்களை ஒரேசீராக்குவதன் மூலம் சமத்துவத்தைக் கொண்டுவர முடியாது. அதே சமயத்தில், இப்போதுள்ள மதச்சார்பற்ற சட்டங்களும் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.
(ச.வீரமணி.)
No comments:
Post a Comment