Sunday, October 16, 2016

இந்திய ராணுவத்திற்கு இந்துத்துவ சாயம் பூசுவதா?



விஜயதசமி தினத்தன்று இந்துத்துவாவாதிகள் இரு நடவடிக்கைகளை வழக்கமாக மேற்கொள்வார்கள். ஒன்று, நாக்பூரில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் உரையாற்றும் நிகழ்ச்சி. மற்றொன்று, மும்பையில் சிவ சேனைத் தலைவர் உரையாற்றும் நிகழ்ச்சி. இந்த ஆண்டு மூன்றாவதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அது, லக்னோவில் ராம்லீலா நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையாகும். இவ்வாறு இந்த ஆண்டு தசரா பண்டிகையின்போது மக்கள் மத்தியில் வெகு தந்திரமான முறையில் தங்கள் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.பாகிஸ்தானில் எல்லைக் கோட்டுக்கு அப்பால் ராணுவத்தினரால் "அதிரடித் தாக்குதல்" நடைபெற்றதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும், சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயும் மோடியை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்கள்.
இந்துத்துவா முகாமில் மோடியின் செல்வாக்கைத் தூக்கிப் பிடிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்திருக்கின்றன.ஆர்எஸ்எஸ் தலைவர் எதிர்பார்த்தபடிதான் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட "பசுப் பாதுகாப்பு இயக்கத்தை" அவர் தூக்கிப்பிடித்திருக்கிறார். பசுவைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்படி பசுவைப் பாதுகாத்திடும் நல்ல வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று புகழ்ந்திருக்கிறார். இதனை மனதில் கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்தினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவரது கூற்றின்படி, நாட்டின் சட்டத்தை மீறியவர்கள் "பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர்" அல்ல. இவ்வாறு இவர் கூறியதன் மூலம், பசுப் பாதுகாப்பு இயக்கத்தின் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட வெறித்தன நடவடிக்கைகளை அவர் மறைக்க முயல்கிறார்.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் பல பகுதிகளில் பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய மூர்க்கத்தனமான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக அவர்கள் மாட்டைக் கொல்கிறார்கள், மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள் என்று கூறி, இதுபோன்ற வெறித்தனமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு அவர்களுக்கு மிகவும் தெளிவானமுறையில் சமிக்ஞை அளித்தது போன்றதாகும். லக்னோவில், நரேந்திர மோடியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறியாகக் கொண்டு, தங்கள் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இந்த மதப் பண்டிகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அவர் தன் உரையை, "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷத்துடன் துவங்கி, ராமாயணத்திலிருந்து உதாரணங்களைக் கூறி பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவது குறித்துப் பேசியிருக்கிறார். இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவானது. தங்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியலுடன் மதத்தைக் கலந்து எப்படியாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதேயாகும்.
ராணுவத்தினரின் "அதிரடித்தாக்குதல்கள்" கூட உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒன்றாக ஏற்கனவே மாறிவிட்டது.உண்மையில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில், பாஜக, தன்னுடைய குறுகிய மதவெறி நடவடிக்கைகளுக்கு ராணுவத்தையும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகும். ராஜஸ்தானில், ராஜஸ்தான் சமஸ்கிருத அகாதெமி, "எதிரியிடமிருந்து துருப்புகளைப் பாதுகாக்க" ஸ்ரீ மாதேஷ்வரி தனோட் ராய் கோவிலில் "ராஷ்ட்ரா ரக்ஷா யாகம்" என்னும் மதச் சடங்கில் முதல்வர் வசுந்தரா ராஜே கலந்து கொண்டார். இந்த யாகம் 21 "நாட்டுப்பற்றுகொண்ட பிராமணர்களால்" அக்டோபர் 6-ஆம் தேதி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சமஸ்கிருத அகாதெமி தலைவர், ஜெயா தவே, "முன்பும்கூட, சத்திரிய மன்னர்கள் யுத்தங்களில் ஈடுபட்ட காலத்தில், அவர்களைப் பாதுகாப்பதற்காக பிராமணர்கள் இதுபோன்ற யாகங்களை நடத்தினார்கள்" என்று பேசினார். முன்னதாக, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், "இந்தியத் துருப்புக்கள் அனுமான் போன்றவர்கள். அதிரடித் தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அவர்களுக்குத் தங்கள் பலம் முழுமையாகத் தெரியவில்லை" என்றார். இவ்வாறு, அரசாங்கமே ராணுவத்தினரை இந்துத்துவாவின் வார்த்தைகளில் சித்தரிக்கத் தொடங்கி இருக்கிறது. அவர்களின் பங்களிப்பை முழுக்க முழுக்க சாதிய மற்றும் மத அடிப்படையில் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சித்தரிப்புகள், ராணுவத்தினரின் நேர்மையான ஒருங்கமைவையும், மதச்சார்பற்ற அடிப்படையையும் அரித்து விடும் மிகவும் ஆபத்தான விஷயங்களாகும்.இவர்கள் மணியடிக்கும் விதங்கள் மிகவும் தெளிவானவை. ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களின் கீழ் ராணுவம் உட்பட அரசின் எந்த நிறுவனமும் அவர்களின் இந்துத்துவா பாணி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கவில்லை. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் மிகவும் ஆழமான முறையில் கவலைப்பட வேண்டிய அம்சங்களாகும். நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைவரும் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்களுக்கு "இந்துத்துவாவின் வெறித்தன நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினரைத் துஷ்பிரயோகம் செய்யாதே" என்று உரத்த குரலில் கூறிட வேண்டும்.
(அக்டோபர் 12, 2016)
தமிழில்: ச.வீரமணி


No comments: