Friday, January 4, 2019

பிரதமர் மோடி, வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம் -சீத்தாராம் யெச்சூரி பிர



தமம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் ஒரு ஜோடிக்கப்பட்ட நேர்காணலை வெளியிட்டிருப்பதன் மூலமாக தன் பசப்பு வார்த்தைகளை அரங்கேற்றத் தொடங்கிவிட்டார். 2018ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஓர் ஒளிமிகுந்த ஆண்டாக இருந்ததாக அவர் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதே போன்று இந்தியா ஒளிர்கி
றது என்று வாஜ்பாயி தம்பட்டம் அடித்தபின் 2004இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன என்பதை அனைவரும் அறிவோம். பிரதமர் மோடியும் இவ்வாறு ‘சுவரில் எழுதியிருந்ததைப்’ படித்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அந்த நேர்காணலில், பிரதமர் தானோ அல்லது தங்களுடைய பாஜக கட்சியோ 2014இல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்தோ மற்றும் அதில் ஒன்றைக்கூட இதுவரையிலும் ஏன் நிறைவேற்ற வில்லை என்பது குறித்தோ எதுவும் குறிப்பிடவே இல்லை. இதுதான் பின்-உண்மை (post-truth) என்கிற பிரச்சார உத்தியாகும். இதுபோன்ற பிரச்சார உத்தியின்போது, மக்கள் மத்தியில் பொய்த்தகவல்களை அவர்கள் நம்பக்கூடிய விதத்தில், மிகப்பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்படும்.
விவசாயக் கடன் தள்ளுபடி
விவசாயிகளுக்கு ஒரு தடவை விவசாயக் கடன் தள்ளுபடி என்று கோருவதை, லொல்லிபாப்” (“lollipop”) என்று மிகவும் தடித்தனமாகவும், மனிதாபிமானமற்ற முறையிலும் பிரதமர் குறிப்பிட்டார். கடன் தள்ளுபடிக்கான இந்தக் கோரிக்கை கடன் சுமைகளால் நசுங்கிக் கொண்டிருக்கின்ற விவசாயிகள், நாடு முழுதும் மிகவும் விரிவான  அளவில் போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே உருவாகியிருந்தது. விவசாய நெருக்கடி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்திருக்கிறது. இத்தகைய துரதிர்ஷ்டவசமான மரணங்களைத் தடுப்பதற்கு, ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்வதன் மூலம், நமக்கு அன்னமிடும் உழவர்களைப் பாதுகாத்திட ஓரளவிற்கு உதவிடும். நாடு முழுதும் மிகவும் விரிவான அளவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை எழுப்பப்பட்டது. அது என்னவெனில், 2014இல் பிரதமர் அளித்திட்ட வாக்குறுதியின்படி, விவசாய விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை, உற்பத்திச்செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும்  என்பதாகும். கடந்த ஐந்தாண்டுகளில் இதனை இவர்கள் செய்திடவில்லை. விவசாய நெருக்கடி இந்த அளவிற்கு ஆழமாகியிருப்பதற்கு, ஆட்சியாளர்கள் கிராமப்புற மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பதே நேரடியான காரணமாகும். இது, விவசாயம் அல்லாத பிரிவுகளில் உள்ள கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனை அவர்களுக்குக் கிடைத்துவந்த வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதிலிருந்து நன்கு அறிய முடியும்.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு என்னும் சுனாமி இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக நாசப்படுத்திய ஒட்டுமொத்த அனுபவத்திற்கு எதிராக, பிரதமர் அதனை மாபெரும் வெற்றி என்று பீற்றிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் அதிசயமானவிதத்தில், இவ்வாறு பணமதிப்பிழப்பு காரணமாகத்தான் கறுப்புப்பணம் முழுவதும் வங்கி அமைப்புமுறைக்கு வந்துவிட்டது என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார். இதைவிட மாபெரும் பொய்ப்பித்தலாட்டம் வேறெதுவும் இருக்க முடியாது. பிரதமரின் பணமதிப்பிழப்பு உத்தரவின்மூலமாக, கறுப்புப் பணத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுவந்த முதலைகள் எல்லாம், அவர்களின் ‘கறுப்புப்பணம்’ முழுவதையும் ‘வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு வகை செய்து தந்திருக்கிறார். இவ்வாறு, சட்டத்தை மீறி கறுப்புப்பணத்தை வைத்திருந்தவர்களை, சட்டரீதியாக வைத்துக்கொள்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறார்.
இவ்வாறு பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, நம் நாட்டில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாமானிய மக்களாகும். நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் வேலையினை அளித்துவந்த முறைசாராத் தொழில்கள் அடியோடு அழிக்கப்பட்டன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கணிசமான அளவில் பங்களிப்பினைச் செய்து வந்தது முறைசாராத் தொழில்கள்தான். பணமதிப்பிழப்பு இதில் ஈடுபட்டிருந்த கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துவிட்டது. ஏனெனில் இவர்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனைகளுடன்தான் தங்கள் இயல்புவாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி  அடைந்ததற்கும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே பிரதான காரணமாகும்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தின் நள்ளிரவு சிறப்புக் கூட்டத்தொடரை பிரதமர் நடத்தினார்.  இதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் புரட்சிகரமானதாக மாறும் என்றும், வரி வசூலிப்பதன் மூலமாக வருவாய் பெருகும் என்றும் கூறினார். வரி விதிப்பு வலை விரிவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனாலும் நிலைமை என்ன? மக்கள் தாக்கல் செய்திடும் அறிக்கைகள் (returns) அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் வரி வசூல் மிகவும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. 2019 ஏப்ரலுக்கும் டிசம்பருக்கும் இடையில், ஜிஎஸ்டி வசூல் என்பது சராசரியாக மாதத்திற்கு 96,800 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்திருக்கிறது. இது பட்ஜெட் குறியீடான மாதத்திற்கு 1,06,300 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பதைவிடக் குறைவேயாகும். அடுத்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் சராசரியாக 1,34,900 கோடி ரூபாயாக இருந்திட வேண்டும். அப்போதுதான் பட்ஜெட் குறியீட்டை எட்டிட முடியும்.
பிரதமர் தன்னுடைய நேர்காணலில் ஜிஎஸ்டியையும் புகழ்ந்துதள்ளியிருக்கிறார். இது வரி வசூல் முறையை எளிதாக்கிவிட்டது என்றும், மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நிவாரணம் அளித்திருக்கிறது என்றும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமானதாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தத் தொடங்கியபின்னர், நாட்டின் நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில்பிரிவுகள் முடங்கிவிட்டன. நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பினை அளித்து வந்தவை இந்த நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகளாகும்.  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர். மேலும் பிரதமர் நாட்டில் ஐநூறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர்கூறியிருக்கும் 500 பொருள்களில் 490 பொருள்களுக்கும் அதிகமானவற்றிற்கு எப்போதுமே வரி கிடையாது. எனவே இவ்வாறு இவர் பீற்றிக்கொண்டிருப்பதும் அபத்தமான ஒன்றேயாகும்.
வேலையில்லாத் திண்டாட்டம்
நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் கூறவில்லை. ஒவ்வோராண்டும் இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்தப் பிரதமர்தான் இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகளுக்கு இவ்வாறு பத்து கோடி  பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்புகள் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாதது மட்டுமல்ல, பெரிய அளவில் ஆலைகள் மூடல், முறைசாராத் தொழில்கள் அழிக்கப்பட்டமை, நடுத்தர, சிறிய மற்றும் நுண்தொழில் பிரிவுகள் நாசம் செய்யப்பட்டமை – இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மையை உருவாக்கி இருக்கின்றன. கடந்த இருபதாண்டுகளில் இப்போதிருக்கக்கூடிய அளவிற்கு வேலையின்மைக் கொடுமை முன்னெப்போதும் இருந்ததில்லை என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இவற்றின்காரணமாக வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமான தொழிலாளர்நல பீரோவின் ஆண்டறிக்கைகளும் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டன. ஏனெனில் அவை நாட்டிலுள்ள மிகவும் மோசமான எதார்த்த நிலைமைகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் என்பதால் இவ்வாறு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இவர்களின் எதிர்காலம், பாதுகாப்பின்மை மற்றும் நிச்சயமற்ற தன்மைக்குள் மூழ்கிக் கிடக்கிறது. இந்த இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்கால சிற்பிகள். இவர்களின் வீர்யத்தை இவ்வாறு அழித்திருப்பது என்பது நம் நாட்டின் எதிர்காலத்தையே ஆட்சியாளர்கள் நாசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே பொருளாகும்.
கூட்டுக் களவாணி முதலாளித்துவம்
பிரதமரின் நேர்காணலில், பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்டிருப்பது குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை.  2014க்கும் 2019க்கும் இடையே கார்ப்பரேட்டுகள் வங்கிகளிடம் வாங்கிய கடன் நான்கு மடங்காக அதிகரித்தது. கடன்களை வாங்கியபின் நாட்டைவிட்டே பறந்தோடிவிட்டார்கள். அவர்கள் தாங்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுக்கின்றனர். அவற்றை அவர்களிடம் இருந்து திரும்பப் பெறுவோம் என்று பிரதமர் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். ஆனால், இன்றுவரையில், எவரும் நம் நாட்டிற்குத் திரும்பிடவில்லை. அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும், அவர்கள் பெற்ற கடன்களை மீளவும் வங்கிகளில் திருப்பிச் செலுத்தவும் நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கமானது அவர்களின் கடன்களை அவ்வப்போது தள்ளுபடி செய்துகொண்டு வந்திருக்கிறது. மேலும் கூடுதலாக, அவ்வாறு தாங்கள் கடன்களைப் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாது தள்ளாடிக்கொண்டிருக்கும் வங்கிகளை, ஏலம் விடுவதன் மூலமாக, அதிக அளவில் ஏலத்தொகையைக் கூறுபவர்களிடம் கொடுத்திடும் வகையில், அவர்களிடமே ஒப்படைப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. இது ‘முடிவெட்டும் கொள்கை’ (‘hair cut’ policy) என்று அழைக்கப்படுகிறது. இதனைப் பின்பற்றிட வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு வங்கிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கிட இருக்கும் கார்ப்பரேட்டுகள் யார்?  இதில் பிரதானமாகப் பயனடையப்போவது பிரதமரும் அவருடைய கூட்டுக்களவாணி முதலாளிகளும்தான்.
இவ்வாறு கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த வங்கிகளின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இவற்றுக்கு மறுமூலதனம் அளித்திட, பொதுப் பணம் மீண்டும் இதற்குள் புகுத்தப்படுகிறது. இவ்வாறு உட்புகுத்தப்படும் பணம் மீளவும் சூறையாடப்படும். முதலாவதாக, வங்கிகளில் கோடிக்கணக்கான இந்தியர்களால் சேமிப்பாக போடப்பட்டிருந்த பணம், கார்ப்பரேட்டுகளால் சூறையாடப்பட்டன. பின்னர் இதனைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில் இவ்வங்கிகளில் மீளவும் மக்களின் பொதுப்பணம் செலுத்தப்படுகிறது.
ரபேல் ஊழல்
மிகவும் சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில், பிரதமர், இந்த ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றமே தெளிவாக்கிவிட்டது என்றும், எனவே இதில் ஊழல் என்ற பிரச்சனைக்கே இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.  இது மிகவும் சுத்தமான ஒப்பந்தம் என்றும் இதில் இடைத்தரகர்கள் எவரும் கமிஷன் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதில் யார் பணம் பெற்றது என்று இப்போது வெளியே தெரியாமல் இருக்கலாம். ஏனெனில் பிரதமரும், அவருடைய அரசாங்கமும் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து, தேர்தல் பத்திரங்களைஅறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பத்திரங்களை எவர் வேண்டுமானாலும் வங்கியிலிருந்து வாங்கிக்கொள்ள முடியும், பின்னர் அவர்கள் ஓர் அரசியல் கட்சிக்கு அதனை அளித்திட முடியும், அந்த அரசியல் கட்சி அதனைக் காசாக்கிக் கொள்ள முடியும். இவ்வாறு தங்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் கொடுத்தது என்று அந்த அரசியல் கட்சிகள் வெளியே சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு பிரதமரும், பாஜக அரசாங்கமும் அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கிவிட்டனர். இந்த ரபேல் ஊழலில் மிகவும் ஆதாயம் அடைந்திருப்பது பாஜக என்பது வெளிப்படையாகவே நன்கு தெரிகிறது. எப்படியெனில், தேர்தல் பத்திரங்கள் வங்கிகள் மூலமாக இதுவரை மொத்தம் 222 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 210 கோடி ரூபாய்க்கும் அதிகமான பத்திரங்களை, அதாவது மொத்த பத்திரங்களில் 94.5 சதவீதத்தை, பாஜக-தான் பெற்றிருக்கிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்பது உண்மையானால், பின் ஏன் பிரதமர் இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு, ஒரு கூட்டு நாடாளுமன்றக்குழு அமைத்திட மறுக்கிறார்? கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதமரும், பாஜகவும் வலுவாக எதிர்ப்பதிலிருந்தே, நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் கூறமுடியாதவிதத்தில் இதன் பின் ஏதோ ஒளிந்திருக்கிறது என்பது புலனாகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆறேழு மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்திட, தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தார் என்று பிரதமர் இப்போது கூறியிருக்கிறார்.   முன்னாள் ஆளுநர் வெளியேறிய பின்னர், இப்போது வந்திருக்கும் ஆளுநர் பிரதமரால் பொறுக்கி எடுக்கப்பட்ட நபர் என்பது உறுதியாகியிருக்கிறது.    ரகுராம் ராஜனும் பிரதமருக்கு வேண்டியவர்தான். எனினும், இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தையும்  நாட்டின் நிதி அமைப்புமுறையை முறைப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதையும் அழித்து ஒழித்திட அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அவரை அப்பதவியில் நீடித்திருப்பதற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
பிரதமரும், அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கின்ற மத்திய ரிசர்வ் நிதி மீது குறியாக இருக்கின்றன. அதிலிருந்து பெரும் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில் இது அவசியம் என்று அரசாங்கம் கருதுகிறது. ஜிஎஸ்டிக்குப் பின்னர், ஆண்டு பட்ஜெட் நிதி பற்றாக்குறை குறியீடு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ஏற்கனவே அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வங்கிகளை மீளவும் முழுமையாகச் செயல்பட வைத்திட அவற்றிற்கு மறுமூலதனம் அளித்திட வேண்டியதும் அவசியமாகும். இதற்கும் அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. இவ்விரண்டு காரணங்களுக்காகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் நிதியை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு செய்யப்பட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கியைக் கடுமையாகப் பாதித்திடும், நம் பொருளாதாரத்தின்  அடிப்படைகள் மீதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். நம் நாட்டின் நிதிச் சந்தைகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். எல்லாம் சேர்ந்து, நாட்டில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் புதிய  அலையை உருவாக்கிடும்.
மதவெறித் தீ கூர்மைப்படுத்தப்படுதல்
அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, பிரதமர் மிகவும் ஆபத்தான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தபின்னர்தான் கோவில் கட்டுவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதா அல்லது சட்டம் கொண்டுவருவதா என்று அரசாங்கம் பரிசீலனை செய்திடும் என்று பிரதமர் கூறுகிறார். இது, நீதிமன்றத்தை நிர்ப்பந்திக்கும் செயலாகும். ஒருவேளை நீதிமன்றம் பாதகமான தீர்ப்பினை அளித்திட்டால், அத்தீர்ப்பினை தந்திரமாக முறியடித்திடும் விதத்தில் அரசாங்கம் சட்ட பூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ளும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று பிரதமர் கூறிடவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பிரதமரின் கூற்றின்படி, நீதிமன்றத் தீர்ப்பு எப்படியிருந்தாலும் அங்கே கோவில் கட்டப்படும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இதன்பொருள், தேர்தலுக்கு முன் மதவெறித் தீயை விசிறிவிடும் விதத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதேயாகும். அப்போதுதான் அவர்களால் தங்களுடைய இந்துத்துவா மதவெறி வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்திட முடியும். இந்தவிதத்தில் அரசாங்கத்தின் முயற்சிகள் அமைந்திடும்.
குண்டர் கும்பல்கள் கொலைபாதக நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக பிரதமர் அளித்துள்ள கருத்துக்கள் இதனை மேலும் உறுதி செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை மேலோட்டமாக அவர் கண்டித்திடும் அதே சமயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டவர்களுக்கு எதிராக காவல்துறையினரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எதுவும் கூறாமல் மவுனம் சாதித்திருக்கிறார். இம்மாநிலங்களில் பசுப் பாதுகாப்புக் குழு என்ற பெயரிலும், அறநெறி போலீசார் என்ற பெயரிலும் குண்டர்களடங்கிய தனியார் ராணுவங்கள் பாஜக அரசாங்கத்தின் ஆதரவுடன் நன்கு கொழுத்து வளர்ந்திருக்கின்றன. இத்தகைய குண்டர் கும்பல்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமரால் கூறப்படவில்லை. அதேபோன்று சமூகத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பு மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரிக்கக்கூடிய விதத்தில் குண்டர் கும்பல்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும் ஒரு வார்த்தை கூட  அவர் உதிர்த்திடவில்லை.
அதேபோன்று பெண்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும், சிறுகுழந்தைகள் கூட கூட்டு வன்புணர்வுக் கொடுமைகளுக்கு ஆளாகி கொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும், ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. மேலும், பாஜக அரசாங்கங்களால் தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதைக்குறித்தும் ஒரு வார்த்தைகூட பிரதமர் கூறிடவில்லை. அதே சமயத்தில் இவற்றால் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தால் அடக்குமுறை அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்கள்.
முத்தலாக் மற்றும் சபரிமலை
நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டமுன்வடிவு, முஸ்லீம் பெண்களுக்கு அரசமைப்புச்சட்டத்தின் மூலம் சமத்துவ உரிமையை அளிப்பதற்காக இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும், இது பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலானது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், இதே பாலின சமத்துவப் பிரச்சனை சபரிமலை கோவிலுடன் தொடர்புபடுத்தி எழுப்பப்படுகையில், இவை கடவுள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறுகிறார். உண்மையில் பெண்களுக்கு சமத்துவ உரிமை அளிப்பது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமை என்ற முறையில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பையே நிராகரிக்கிறார். இவ்வாறு இவர் இரட்டை நாக்கில் பேசுவது என்பது இவர்களின் மதவெறித் தீயை விசிறிவிட வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரலை மீளவும் தெளிவானமுறையில் உறுதிப்படுத்துகிறது. பாஜக தற்போது கேரளாவில் ஸ்தல மட்டத்தில் மக்களிடையே அமைதியின்மையையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட வெறித்தனமான முறையில் இறங்கியிருக்கிறது.
2019 தேர்தல்கள்
வரவிருக்கும் தேர்தல்களில் நாட்டு மக்கள் நல்ல முடிவு  மேற்கொள்வார்கள் என்று ஒரு தெளிவான அறிக்கையை பிரதமர் அளித்திருக்கிறார். உண்மைதான், மக்கள் எப்போதுமே எல்லாத் தேர்தல்களிலும் தெளிவான முடிவுகளைத்தான் எடுக்கிறார்கள். நாட்டிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதும், இந்த அரசாங்கம் எந்தவிதத்திலாவது தூக்கியெறியப்பட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதும்,  அவ்வாறான அவர்களின் விருப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருப்பதும் இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறான நிர்ப்பந்தம் வந்துகொண்டிருப்பதன் காரணமாகத்தான், நாட்டிலுள்ள மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இந்த அரசாங்கத்தையும், பாஜகவையும் வரவிருக்கும் தேர்தல்களில் படுதோல்வியடையச் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கின்றன. இதற்குப் பிரதான காரணம், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்துள்ள அதிருப்தியேயாகும்.  அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் பெரும்திரளாகப் பங்கேற்றதில் இதனை நன்கு காண முடிந்தது.
வரவிருக்கும் ஜனவரி 8 – 9 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நாட்டில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை மீளவும் ஒருமுறை எடுத்துக்காட்டிடும். அதே நாட்களன்று விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கிராம அளவிலான பாரத் பந்த்நடத்திடவும் அறைகூவல் விடுத்திருப்பதும், மோடி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பிடவும், மக்கள் நலன் காத்திடும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களை ஆட்சியில் அமர்த்திடவும் மக்கள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன. நாட்டு மக்களுக்குத் தேவை ஒரு தலைவர் இல்லை, மாறாக அவர்கள் விரும்புவது தங்களைப் பாதுகாத்திடும் கொள்கைகளைத்தான்.
2019 தேர்தல்கள் பிரதமருக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் இடையேயான போட்டியாக அமைந்திடும்.
ஷேக்ஸ்பியர் ஒருதடவை சொல்லியதைப்போல, என்னதான் அராபிய வாசனைத் திரவியங்களைப் பூசினாலும், உங்களின் கைகளில் உள்ள ரத்தக்கறையைத் துடைத்தெறிந்திட முடியாது, பிரதமர் அவர்களே.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: