Showing posts with label A. Navaneethakrishnan. Show all posts
Showing posts with label A. Navaneethakrishnan. Show all posts

Wednesday, January 9, 2019



முற்போக்கு சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு,
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானது
மாநிலங்களவையில் ஏ.நவநீதிகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு
புதுதில்லி, ஜன. 20-
முற்போக்கு சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணானது என்றும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரானது என்றும் அஇஅதிமுக உறுப்பினர் ஏ. நவநீதிகிருஷ்ணன் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்று பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தின்மீது அஇஅதிமுக உறுப்பினர் ஏ. நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தச் சட்டமுன்வடிவின்மீது என்னுடைய கருத்துக்களைத் தொடங்குவதற்கு முன், சமூகநீதி காத்த வீராங்கனை என்று அழைக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன் அவரை வழிபட்டு, என் உரையைத் தொடங்குகிறேன்.
இப்போது, தமிழ்நாடு முழுவதற்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, தலித்துகளுக்காக, பழங்குடியினருக்காக அவர் அறிமுகப்படுத்தினார். மேலும் அது கடந்த முப்பதாண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
இப்போது, மாண்புமிகு அம்மா அவர்களால் ஒரு சட்ட வடிவில் கொண்டுவரப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக தமிழ்நாடு அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
சமூகரீதியாக முன்னேறிய சமுகத்தில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்திடும் இந்தச் சட்டமுன்வடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதற்கான காரணங்களையும் நான் அளிக்கிறேன்.
முதலாவதாக, 10 சதவீத இடஒதுக்கீடு என்பது புதிய சிந்தனை ஒன்றும் அல்ல.  பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதும் இதுபோன்று கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை மாண்பமை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
உச்சநீதிமன்றம் அதன்மீது எடுத்த முடிவினை நான் இப்போது மேற்கோள் காட்டுகிறேன். பொருளாதார வரன்முறைகளை மட்டும் மற்றும் பிரத்யேகமாகக் கொண்டும் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைத் தீர்மானித்திட முடியாது. சமூக பிற்படுத்தப்பட்ட நிலையுடன் அதனையும் பரிசீலனைக்காக அல்லது அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுமட்டும் எவ்விதத்திலும் தனித்து வரன்முறையாக அமைந்திடாது.
ஆகவே, இன்றைய தேதியில், நம் அரசமைப்புச் சட்டத்தின் 141ஆவது பிரிவின்கீழ் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். எனவே இது நிலைக்கத்தக்கதல்ல.
இட ஒதுக்கீடு என்றால் என்ன? இட ஒதுக்கீடு என்பது, வரலாறு முழுவதும் பாகுபாடு காட்டப்பட்டு வந்தவர்களுக்காகவும் அவற்றின் தீய விளைவுகள் இப்போதும் தொடர்வதாலும் அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்கான ஒன்றாகும். இவ்வாறு இடஒதுக்கீடு என்பதன் பொருள் வரலாற்றில் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கானது அல்லது சமூகத்தினருக்கானது என்பதேயாகும்.
இப்போது, மத்திய அரசு, பொருளாதார வரன்முறையின் அடிப்படையில் ஏழைகளுக்காக 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆட்சியாளர்கள்தான் பொருளாதார வரன்முறையை நிச்சயித்திருக்கிறார்களே தவிர இது நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்படவில்லை. எனவே, இப்போது இட ஒதுக்கீடு என்பது ஒரு வகுப்பின் அடிப்படையிலோ அல்லது சமூகத்தின் அடிப்படையிலோ அல்ல, மாறாக அது தனிநபர்களுக்கானதாகும்.  ஒருவர் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் இல்லை என்றால் அவர் இட ஒதுக்கீட்டின்கீழ் வருகிறார். ஆனால், இட ஒதுக்கீட்டின் கருத்தாக்கம் என்பதே சமூகரீதியானவர்களுக்கு மட்டுமேயாகும். அது தனிநபர்களுக்கானது அல்ல.
இந்தச் சட்டமுன்வடிவில் முன்மொழியப்பட்டிருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் வருகிற சமூகத்தினர் அல்லது வகுப்பினர் வரலாற்றுரீதியாக பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் அல்லர். அவர்கள் எவ்விதமான தீய விளைவுகளையும் எதிர்கொண்டவர்களும் அல்லர். இப்போது அவர்களுக்கும் பொருளாதார வரன்முறை என்ற பெயரில் ஏழைகள் என்ற அடையாளத்தின்கீழ் இடஒதுக்கீடு அளிக்க முன்மொழியப்பட்டிருக்கிறது.
இந்தியா ஒரு ஏழை நாடுதான். நாம் உலகத்தின் ஆறாவது பெரிய பொருளாதார நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலு, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், நம் நாடு ஏழைகளின் நாடுதான். நம் மக்கள் தொகையில் 98 சதவீதத்தினர் ஏழைகள்தான். எனவே, பொருளாதார வரன்முறையை இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்த முடியாது.
மூன்றாவதாக, மாண்புமிகு அம்மா கொண்டுவந்த 69 சதவீத இடஒதுக்கீடு இப்போதும் அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசாங்கத்திற்கு என்னுடைய பணிவான வேண்டுகோள், இந்தச் சட்டமுன்வடிவு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று ஒரு திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். ஒரு வரி திருத்தம் போதுமானது. அதன்மூலம் தமிழக மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
இப்போது கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவைப் படித்ததிலிருந்து, இப்போது புதிதாகக் கொண்டுவரப்படும் 10 சதவீதம் என்பது, ஏற்கனவே இருக்கிற 50 சதவீதம் அல்லாது மேலும் கூடுதலான ஒன்று என்பதாகும். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை எப்படி அமலாகிக்கொண்டிருக்கிறது என்று இப்போது விளக்குகிறேன். 69 சதவீத இட ஒதுக்கீடு அங்கே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அளிக்கப்படும். மீதம் உள்ள 31 சதவீதத்தில்தான் அனைத்து சமூகத்தினரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, எங்கள் மாநிலத்தில், தமிழ்நாடு பொதுத் தேர்வுகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவன் என்ற முறையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துத் துறைகளின் தேர்வுகளிலும் முதலிடத்தை வகிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் கடின உழைப்புதான்.
இப்போது அனைத்து சமூகத்தினருக்குமான இந்த 31 சதவீதம் என்பது மேலும் குறைந்திடும். எனவே, இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திடும். தயவுசெய்து, இதனைப் புரிந்துகொள்ளுங்கள்.
இப்போது, தமிழ்நாடு அனைத்து அம்சங்களிலும் அனைத்து வரன்முறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது. அது சட்டம்-ஒழுங்கு சார்ந்த நிலையாக இருந்தாலும் சரி அல்லது வேறெந்த விதமாக இருந்தாலும் சரி. இந்தியா டுடே நிறுவனம் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு நான்கு விருதுகள் வழங்கியிருக்கின்றன. இதற்கான பெருமை மாண்புமி அம்மாவையே போய்ச் சேரும்.
தற்போது 31 சதவீத இட ஒதுக்கீடு என்பது அனைவருக்குமான ஒன்றாக இருக்கிறது. இதனைப் பொது ஒதுக்கீடு என்று அழைக்கிறோம். இது அனைத்து சமூகத்தினருக்கும் அவர்களின் சமூக அந்தஸ்து எந்தவிதத்திலிருந்தாலும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது நீங்கள் கொண்டுவருகிற இந்தச் சட்டமுன்வடிவானது இப்போது தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளைப் பறித்துக் கொள்கிறது. எனவே, அம்மாவின் அரசாங்கம் இதனைக் கடுமையாக எதிர்க்கிறது. இன்றைய எதாரத்த நிலையின் அடிப்படையில் நின்று இதனை நான் கூறிக்கொண்டிருக்கிறேன்.
69 சதவீத இது ஒதுக்கீடு என்பதை எவ்விதமான அடிப்படையும் இல்லாமலோ அல்லது எவ்விதமான தரவுகளும் இல்லாமலோ ஏற்படுத்திடவில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க, தேவையான அனைத்துத் தரவுகளையும் அம்மா அவர்கள் சேகரித்து, தொகுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் முன் தாக்கல் செய்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதனை அம்மா அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக ஆய்வு செய்து, 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும்படி ஓர் அரசாணையை வெளியிட்டார். அது தொடர்பான அரசமைப்புச்சட்ட நேர்மைத்தகவு குறித்து உச்சநீதிமன்றம் முன் இப்போதும் நிலுவையில் இருந்துவருகிறது.
எனவே, இப்போது என்னுடைய கோரிக்கை என்னவெனில், தமிழ்நாட்டில் அனைத்துத் தரவுகளையும் நன்கு ஆராய்ந்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசாங்கம், அம்மாவின் அரசாங்கம், வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.          
 இப்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவானது எந்தத் தரவின் அடிப்படையின்கீழ் கொண்டுவரப்படுகிறது? எந்தவிதமான தரவும் இல்லாமல், இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திட முடியாது. சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையே சாட்சியம்தான். எவ்விதமான ஆதாரமும் இல்லாமல், எவ்விதமான தரவும் இல்லாமல், எவ்விதமான ஆய்வும் இல்லாமல், திடீரென்று, இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு, கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதன் மூலமாக தமிழ்நாடு மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே இதனை மீண்டும் மீண்டும் கடுமையாக நான் எதிர்க்கிறேன்.
இதுதொடர்பாக இன்னொரு முக்கியமான அம்சம். நம் நாடாளுமன்றத்திற்கு இவ்வாறு ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான சட்ட உரிமையை, தகுதியைப் பெற்றிருக்கிறதா என்று கேட்க விரும்புகிறேன். இது மிகமிக முக்கியமாகும். நம்முடைய அரசமைப்புச் சட்டம், சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம், சமூக ரீதியாக முற்பட்ட சமூகத்தினருக்கு, அவர்கள் ஏழையாக இருந்தாலும்கூட, எவ்வித சலுகையையும் அளித்திடவில்லை.  எனவே இவ்வாறான ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்கு, நாடாளுமன்றத்திற்கு எவ்விதமான தகுதியோ சட்டஉரிமையோ கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மேற்கோள்காட்டிட விரும்புகிறேன். ஐ.ஆர். கோல்ஹோ (எதிர்) தமிழ்நாடு அரசு (I.R. Coelho vs. State of Tamil Nadu),கேசவானந்தா பாரதி (2007-2) SCC 1 – பக்கம் 137இல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வாயம் அளித்திட்ட தீர்ப்பில் அரசமைப்புச்சட்டத்தின் 368ஆவது பிரிவின்கீழ், நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச்சட்ட அதிகாரத்தைத் திருத்தும் அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய சபை(Constituent Assembly)-யாக மாறிட முடியாது.  நம்முடைய நாடாளுமன்றம், அரசமைப்புச்சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஒன்று. இதன் அடிப்படையில்தான் மினர்வா மில்கள் வழக்கில் அரசமைப்புச் சட்டத்தின் 368ஆவதுபிரிவின்கீழான உட்பிரிவுகள் 4 மற்றும் 5 ஆகியவற்றை உச்சநீதிமன்றம் அடித்து ஒதுக்கித்தள்ளியது.
இவ்வாறு நம் நாடாளுமன்றத்திறகு அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது. இதனை நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் இதனை பிரகடனம் செய்திருக்கிறது.
அடுத்து, இட ஒதுக்கீடு என்பது அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது பிரிவின்கீழ் வருகிறது. 16ஆவது பிரிவு, பொது வேலைவாய்ப்பில் வாய்ப்புகள் குறித்து குறிப்பிடுகிறது. 15ஆவது பிரிவு பாகுபாடு குறித்து குறிப்பிடுகிறது. இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும், நீதிபதிகள் அளித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த நாடாளுமன்றத்திற்கு இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவரக்கூடிய அரசமைப்பு அதிகாரம் வழங்கப்படவில்லை.  அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்கும் விதத்தில் நாடாளுமன்றம் எவ்விதமான சட்டத்தையும் இயற்றிட முடியாது.
இடஒதுக்கீடு என்பதும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அது தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சாதியினருக்கு மட்டும்தான் அளித்திட முடியும். சமூகரீதியாக முன்னேறிய சமூகத்தினருக்கு அல்லது சாதியினருக்கு அளித்திட முடியாது. இது அடிப்படையான அம்சமாகும். இவ்வாறு இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டால் நிச்சயமாக இது உச்சநீதிமன்றத்தில் ஆட்சேபிக்கப்படும். நமக்கு இதனைக் கொண்டுவருவதற்கான அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது.
நான் ஏற்கனவே கூறியதுபோலு, 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது புதிய சிந்தனை அல்ல. இதனை நீதித்துறை ஏற்கனவே ஆய்வுசெய்து முடிவெடுத்திருக்கிறது. இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.  
நாடாளுமன்றம் உயர்ந்ததா? அரசமைப்புச்சட்டம் உயர்ந்ததா? நிச்சயமாக அரசமைப்புச்சட்டம்தான் நாடாளுமன்றத்தைவிட உயர்ந்தது. அரசமைப்புச்சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் நின்றுதான் நாடாளுமன்றம் செயல்படமுடியும். நாடாளுமன்றத்திற்கு, அரசமைப்புச்சட்ட அதிகாரம் கிடையாது. எனவே இந்தச்சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.  
இப்போது என்ன செய்ய வேண்டும்? மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அங்கே அமலில் இருக்கின்ற 69 சதவீத இடஒதுக்கீட்டை குலைத்திடக் கூடாது. அதற்கான சட்டரீதியாக உரிமையே, தார்மீக அடிப்படையலான உரிமையோ, அல்லது வேறெவ்விதமான அரசியல் உரிமையோ அதற்குக் கிடையாது. இது அமல்படுத்தப்பட்டால் தற்போது அங்கே 31 சதவீதி சமூகத்தினருக்கு இருந்துவரும் வாய்ப்புகள் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.
இச்சட்டமுன்வடிவானது, தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற ஒன்றாகும். இப்போது நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவை திருத்தியிருக்கிறீர்கள். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுகிறீர்கள். இதனை நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இது சொல்லப்பட்டிருக்கிறது. 
மத்திய சமூகநீதிக்கான அமைச்சர் தாவார்சந்த் ஜெஹ்லாத்: 69 சதவீத இடஒதுக்கீடு எவ்விதம் வழங்கப்படுகிறது?
ஏ. நவநீதிகிருஷ்ணன்: 69 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிலையங்களில் சேர்வதற்காக வழங்கப்படுகிறது.
இந்தச்சட்டமுன்வடிவு நிறைவேறினால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு என்பது 69 சதவீதத்துடன் மேலும் 10 சேர்க்கப்பட்டு 79 சதவீதம் என்றாகும். இது சாத்தியமல்ல. இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவானது தமிழக மக்களின் நலன்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே இதனை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு ஏ. நவநீதிகிருஷ்ணன் உரையாற்றிவிட்டு, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைத் தொடர்ந்து திருமதி விஜிலா சத்யானந்த்தும் வெளிநடப்பு செய்தார்.
(ந.நி.)