பிரதம
மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம்: விவசாய நெருக்கடி காலத்திலும்
விவசாயிகளைக்
கொள்ளையடிப்பதற்கான வழி
-சுபோத் வர்மா
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து அறிவிப்பதற்கு (அல்லது பெயரை மாற்றி அறிவிப்பதற்கு)
மத்தியில், மிகவும் நஞ்சு சார்ந்த திட்டங்களில் ஒன்றாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ்
திட்டம் அமைந்திருக்கிறது. இதன் நோக்கம், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் அளிப்பதாகும்
என்று சொல்லப்படுகிறது. அதாவது, பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பேரிடர் போன்று தடுக்கமுடியாத
காரணங்களால் பயிர் விளைச்சலில் தோல்வி ஏற்பட்டால், பின்னர் அப்பயிரை விளைவித்த விவசாயிகளுக்கு
ஏற்படக்கூடிய சேதத்திற்காக இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும். இது கொள்கையளவில் மிகவும்
சிறந்த ஒன்றுதான். இந்தியாவில் விவசாயம் என்பது பெரிதும் பருவ மழையை நம்பியே இருப்பதால்,
இந்தியாவில் இவ்வாறு பயிர்கள் சேதம் அடைவது என்பது அடிக்கடி நடைபெறக்கூடிய ஒன்றாகும்.
எனவே, பயிர் விளைச்சலின்போது இத்தகைய இழப்புகள் ஏற்படும்போது, அரசாங்கம் அத்தகைய இழப்புகள்
குறித்து கவனம் செலுத்திட வேண்டும்.
ஆனால், மோடி அரசாங்கம் செய்திருப்பது என்ன தெரியுமா?
இவ்வாறு பயிர் விளைச்சலில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது, அதிலிருந்தும் கார்ப்பரேட்டுகள்
கொள்ளையடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருப்பதாகும். இதனை மோடி அரசாங்கம் தனக்கு
மிகவும் பிடித்தமான மாடலாக விளங்கும் இன்சூரன்ஸ் என்கிற நன்கு நிறுவனமயமாகியுள்ள ஏற்பாட்டின்
மூலமாக செய்திருக்கிறது. இந்த மாடலிலும், எப்படி சுகாதாரப் பாதுகாப்பு முறையை ஆயுஷ்மன்
பாரத் என்கிற தனியார் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலமாக மேற்கொண்டதோ, அதேபோன்று இதனையும்
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு தன் சொந்தப் பொறுப்பிலிருந்து
நழுவிக்கொண்டுவிட்டது. இத்திட்டத்தை அரசாங்கம் தானே நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக
இவற்றை செயல்படுத்திட தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டது. தனியார்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இவற்றில் அபரிமிதமான இலாபத்தை ஈட்டியிருக்கின்றன.
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம், எப்படிச்
செயல்படுகிறது?—இதற்காக அரசாங்கங்கள் 34,859 கோடி ரூபாய்களை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு
வழங்கியிருக்கின்றன.
விவசாயிகள் இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு
தொகையை பிரிமியமாக கொடுத்திட வேண்டும். இது, எதிர்பார்க்கப்படும் மொத்த பிரிமியத்தில்
1.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்குள் வழக்கமாக இருக்கிறது. மீதித்தொகையை மத்திய
அரசும் பல்வேறு மாநில அரசுகளும் சமமாகக் கொடுக்கின்றன. இவ்வாறு வசூலிக்கப்படும் மொத்த
பிரிமியத் தொகையும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கஜானாவிற்குச் சென்றுவிடுகின்றன.
அறுவடைக்குப் பின்னர், ஒரு விவசாயி, தான் விளைவித்த பயிர், இயற்கைப் பேரிடர் காரணமாக
நாசம் அடைந்தால், அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தான் பெற்றிருக்கிற மொத்த பிரிமியத்திலிருந்து
இழப்பீட்டை வழங்கிடும். இந்தத் திட்டம் 2016இல் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் மூன்று
சம்பா பருவங்களும், இரண்டு குறுவை பருவங்களும் முடிந்து, இப்போது மூன்றாவது குறுவைப்
பருவம் நடந்துகொண்டிருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எவ்வளவு
பிரிமியம் பெற்றிருக்கின்றன என்பது குறித்தும், விவசாயிகளுக்கு அவை எவ்வளவு இழப்பீடுகள்
வழங்கியிருக்கின்றன என்பது குறித்தும் இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தகவல்கள்
2017 சம்பா பருவம் வரைக்கும் இதுவரை வந்திருக்கின்றன.
கீழே தரப்பட்டிருக்கிற அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல,
2016 சம்பா, 2017-18 குறுவை மற்றும் 2017 சம்பா பருவங்களில் 18 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
வசூலித்துள்ள தொகை 42,114 கோடி ரூபாய்களாகும். இதில் விவசாயிகள் பங்களிப்பு 7,255 கோடி
ரூபாய்கள் அல்லது 17 சதவீதமாகும். மீதமுள்ள 34,859 கோடி ரூபாய்கள் அல்லது சுமார்
83 சதவீதம், அரசாங்கத்தின் பங்காகும். அரசாங்கத்தின் பங்கு என்கிறபோது இதில் மத்திய
அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் இரு சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடாக இதுவரை 32,912
கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன. இதன்பொருள் இவற்றுக்கு உபரியாகக் கிடைத்திருக்கும்
தொகை என்பது 8,713 கோடி ரூபாய்களாகும்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளை எப்படிக் கசக்கிப்பிழிகின்றன?
பருவம்
|
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துள்ள பிரிமியம்
(ரூ.கோடியில்)
|
இழப்பீட்டுக்கான மொத்த தொகை
(ரூ.கோடியில்)
|
இழப்பீடு அளித்தது
(ரூ.கோடியில்)
|
விவசாயிகளி
டமிருந்து பெற்றதில்
உபரி
|
அரசாங்கத்திடமிருந்து பெற்றதில் உபரி
|
மொத்தம்
|
2016 சம்பா
|
2,919
|
13,399
|
16,318
|
10,494
|
10,483
|
5,824
|
2016-17 குறுவை
|
1,297
|
4,731
|
6,028
|
5,811
|
5,657
|
217
|
2017 சம்பா
|
3,039
|
16,729
|
19,768
|
17,096
|
16,772
|
2,672
|
மொத்தம்
|
7,255
|
34,859
|
42,114
|
33,401
|
32,912
|
8,713
|
(ஆதாரம்: மாநிலங்களவை நட்சத்திரக்குறியிட்ட கேள்வி எண் 121,
21.12.2018)
மேலேகண்ட அட்டவணையிலிருந்து, ஊழல் இமாலய அளவில் இருப்பதைக் காண முடியும்.
அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? விவசாயிகளுக்கு, பயிர் இழப்புகள் ஏற்படும்போது,
அரசாங்கமே நேரடியாக அவர்களுக்கு இழப்பீடுகளை அளித்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு
செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அவர்கள்
தங்களுக்குப் பெரிய அளவில் கமிஷன் எடுத்துக்கொண்டு அல்லது அதில் ஒரு பகுதியை வெட்டி
எடுத்துக்கொண்டு மீதியை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். அரசாங்கம் அளித்துள்ள விவரங்களின்படி,
இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார் 21 சதவீதத் தொகையை தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக்
கொண்டிருக்கின்றன. இந்தப் பணம் அவதிக்குள்ளாகியிருக்கிற விவசாயிகள் பிரிமியமாகக் கொடுத்த
பணம் அல்லது அரசாங்கத்தின் பணமாகும். அரசாங்கத்தின் பணம் என்பதும் மக்களிடமிருந்து
வசூலிக்கப்பட்ட பணம்தான்.
இந்தத் திட்டம் தொடங்கியபின்னர் மத்திய அரசாங்கம் மட்டும் இதற்காக
33,489 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. (அட்டவணை 2ஐப் பார்க்க) இந்தத் தொகை பிரிமியம்
மானியமாக மட்டும் போகவில்லை. மத்திய அரசின் பிரிமியம் மானியத்தின் பங்கு என்பது சுமார்
21 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. ஏனெனில் மத்திய அரசாங்கம் இத்திட்டத்தின்கீழ் அரசு செலுத்தவேண்டிய தொகையில்
50 சதவீதம் மட்டுமே பங்குத்தொகையாக அளித்திட வேண்டும். மீதிப் பாதித் தொகையை சம்பந்தப்பட்ட
மாநில அரசுகள் அளித்திட வேண்டும். அப்படியானால் கூடுதலாக அளித்திருக்கிற 12 ஆயிரம்
கோடி ரூபாய் ஏன்? இதில் ஒரு பகுதி 2016க் முன்பு இருந்துவரும் கடன் பொறுப்புகளைச் சரிசெய்வதற்காகவும்
(liabilities clearance) மற்றும் ஒரு பகுதி நிர்வாக செலவினங்களுக்காகவும் அளித்திருக்கிறது.
அட்டவணை 2:
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு
(ரூபாய்கள் கோடியில்)
ஆண்டு
|
நிதி ஒதுக்கீடு
|
2016-17
|
11,054.6
|
2017-18
|
9,419.8
|
2018-19
|
13,014.2
|
மொத்தம்
|
33,488.6
|
(ஆதாரம்: மாநிலங்களவை நட்சத்திரக்குறியிடப்படாத கேள்வி எண் 1935,
3.8.2018)
ஒவ்வொரு விவசாயிக்கும்
வந்திருக்கிற சராசரி இழப்பீடு – வெறும் 11,805 ரூபாய்தான்.
விவசாயிகளுக்கு இழப்பீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன? இது மிகவும்
சிக்கலான நடைமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது. மிகப்பெரிய அளவில் இதனை சம்பந்தப்பட்ட
மாநில அரசாங்கங்கள்தான் தீர்மானிக்கின்றனவேயொழிய, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்ல. ஆகையால்,
இதற்கான செலவினங்களை மாநில அரசாங்கங்களே செய்கின்றன. ஆனால் இதில் வரும் லாபம் அனைத்தும் முழுமையாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு
மட்டும்தான். இழப்பீடு எந்த அளவிற்கு வழங்குவது
என்பதற்கு, பயிர் சேதம் அடைந்த பரிசோதனைகள் (CCEs – Crop Cutting Experiments) குறித்து,
நாடு முழுதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திலும், இதேபோன்று 15
முதல் 20 லட்சம் பயிர் சேதம் அடைந்த பரிசோதனைகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு ஆய்வின் போதும், ஒரு மாதிரி இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கேயுள்ள உள்ளூர்
அதிகாரிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பயிர் வெட்டப்பட்டு,
அளவிடப்படுகிறது. இதனை அதற்கு முந்தைய ஏழு
ஆண்டுகளின் சராசரியோடு ஒப்பிட்டு, விளைந்துள்ள இழப்பு குறித்து தீர்மானிக்கிறார்கள். இத்தகைய ஆய்வில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிக்கு மிகக் குறைந்த அளவிலேயே இழப்பீடு
கிடைக்கிறது.
அகமதாபாத் ஐஐஎம் மேற்கொண்ட ஆய்வின்படி, பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ்
திட்டத்தின்கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும், சராசரியாக, வெறும் 11,805 ரூபாய் மட்டுமே
2016-17ஆம் ஆண்டில் இழப்பீடாகக் கிடைத்தது.
இழப்பீடு
வழங்குவதிலும் தாமதம்
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தத் துவங்கியதிலிருந்தே,
பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஆகிறது என்று ஏராளமான முறையீடுகள் வந்திருக்கின்றன. 3 முதல்
4 மாதங்கள் தாமதம் என்பது பொதுவாக இருக்கிறது. பயிர் இழப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு
இது மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ஏனெனில், விவசாயப் பாதிப்புக்கு
உள்ளான விவசாயி, உடனடியாக அடுத்த பருவத்திற்கான பயிர் விளைச்சலைச் செய்வதற்குத் தயாராகிவிடுவார்.
அதற்குப் பணம் தேவை. எனவே இவருக்கு பணத்தை அளிப்பதில் ஏற்படுத்தப்படும் தாமதம் என்பது,
இவர்களை வேறு வழியின்றி கந்துவட்டிக்காரர்களின் பக்கத்தில் தள்ளிவிடுகின்றன. இதன்காரணமாகத்தான்
இழப்பீடு வழங்குவதில் எவ்விதத் தாமதமும் கூடாது என்று சொல்கிறோம். ஆயினும் இத்திட்டம்
அமல்படுத்தப்பட்ட கடந்த இரண்டாண்டுகளில் கிடைத்துள்ள அனுபவம் என்பது, இந்தப் பிரச்சனை
இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதேயாகும்.
ஏன் இவ்வாறு தாமதங்கள் ஏற்படுகின்றன?
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுகளிலிருந்து தாமதம் ஏற்படுவதற்கு
பல்வேறு காரணிகள் தெரிய வந்தன. பயிர் சேதம் அடைந்த பரிசோதனை மையங்களுக்கு இன்சூரன்ஸ்
நிறுவனங்களின் பிரதிநிதிகள் முறையாக வருவதில்லை. பின்னர் விவசாயிகளின் உரிமை குறித்து
ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். (இதில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் அடங்கும்.) மாநில
அரசுகள் தங்கள் பங்காக செலுத்த வேண்டிய தொகையினை அனுப்புவதில் தாமதம் செய்கின்றன. வங்கிகள்
மட்டத்திலும் தாமதங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் இவற்றின்
நடைமுறைகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தலையிடுவதேயாகும். இதுவரை நாம் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் பொதுவாக
அரசாங்கத்தின் சிவப்பு நாடா முறைதான் தாமதங்களுக்குக் காரணமாகும் என்பதாகும். ஆனால்
இதில் இன்சூரன்ஸ் நிறுவனங்களே கூடுதல் காரணமாக அமைந்துள்ளன. இதில் ஆச்சர்யப்படுவதற்கு
ஒன்றுமில்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விவசாயிகளின் நலனில்
எவ்வித அக்கறையும் கிடையாது. அவர்களது ஒரே குறிக்கோள் அதிக அளவிற்கு இலாபம் ஈட்டுவது என்பது மட்டுமேயாகும்.
எனவே, எவ்வளவுக்கெவ்வளவு தாமதப் படுத்துகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களுக்கு இலாபம்தான்.
எனவே எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு அவைகள் முட்டுக்கட்டைகள் போடுகின்றன. இது
இங்குமட்டுமல்ல, உலகம் முழுதும் செயல்பட்டு வருகின்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களின் குணமும்
இதுதான்.
விவசாயிகள்
விரக்தி
இவ்வாறு, மிகக் குறைந்த அளவிலான
இழப்பீடு, அவ்வாறு வழங்கும் இழப்பீட்டிற்கும் அதீதமாக காலதாமதம் செய்தல், இழப்பீடுகளை
நிராகரித்தல் மற்றும் பிரிமியம் கட்டணங்களை உயர்த்திக்கொண்டே செல்லுதல் – ஆகியவற்றின்
காரணமாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்திக்கு
வந்து விட்டார்கள். இது தொடங்கப்பட்ட காலத்தில் (2016 சம்பா) முதல் பருவத்தில் நான்கு
கோடிக்கும் மேலான விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்திருந்தார்கள். 2017 சம்பா
பருவத்தில் இது 3 கோடியே 47 லட்சமாகக் குறைந்தது. இப்போது இந்த ஆண்டு சம்பா பருவத்தில்
3 கோடியே 33 லட்சமாகக் குறைந்திருக்கிறது. அதாவது 70 லட்சம் விவசாயிகள் அல்லது 17 சதவீதத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளில்
தங்களை இத்திட்டத்திலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள். (இது சம்பா பருவத்திற்கு
மட்டுமானதாகும்.) (அட்டவணை 3ஐப் பார்க்க). குறுவை பருவத்திலும் விவசாயிகள் எண்ணிக்கை
குறைந்திருக்கிறது. 2016-17இல் இருந்ததைவிட, 2017-18இல் 10 ஆயிரம் விவசாயிகள் குறைந்திருக்கிறார்கள்.
அட்டவணை 3
(பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் விவசாயிகள் பதிவு)
(இலட்சத்தில்)
2016 சம்பா
|
402.6
|
2016-17 குறுவை
|
170.6
|
2017 சம்பா
|
347.8
|
2017-18 குறுவை
|
170.5
|
2018 சம்பா (உத்தேசமாக)
|
332.7
|
|
|
(ஆதாரம்: மக்களவை நட்சத்திரக்குறியிட்ட கேள்வி எண் 17, 11.12.2018)
இந்தத் திட்டத்தில் விவசாயிகள் எப்படித் தங்களைப் பதிவுசெய்துகொள்கிறார்கள்
என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஓர் அம்சமாகும். வங்கிகளிடமிருந்து கடன் பெறும்
அனைத்து விவசாயிகளும், கட்டாயமாக இத்திட்டத்தின்கீழ் சேர்ந்தாக வேண்டும். இது தொடர்பாக
மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளிலிருந்து தெரிய வந்தது என்னவெனில், வங்கிகள் விவசாயிகளுக்குக்
கடன்கள் வழங்கிடும் சமயத்தில், இதில் சேர்வதற்கான சம்மதக் கடிதம் ஒன்றிலும் கையெழுத்து
வாங்கிவிடுகிறார்கள் என்பதாகும். இதன்காரணமாகத்தான் இந்த அளவிற்கு விவசாயிகள் இதில்
உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியில்லை,
கடன் பெறும் சமயத்தில் வங்கிகள் எங்கெங்கெல்லாம் கையெழுத்து போடச் சொல்கிறதோ அங்கெங்கெல்லாம்
கையெழுத்துப் போட்டுவிடுவார்கள். மேலும் இப்போது வங்கிகளும் நெருக்கடிக்குள் சிக்கித்
தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றால் முன்பு
கடன்கள் கொடுத்த அளவிற்கு இப்போது கடன்கள் கொடுக்க முடியவில்லை.
என்ன செய்ய வேண்டும்?
பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் என்பது
விவசாயிகள் பாடுபட்டு ஈட்டும் பணத்தை மட்டுமல்ல,
அரசாங்கத்தின் நிதியையும் (அதுவும் மக்களின் வரிப்பணம்தான்) மிக எளிதாக உறிஞ்சக்கூடிய
ஒரு சதி என்பது இப்போது நன்கு தெரியத் தொடங்கிவிட்டது. அந்தப் பணத்தையெல்லாம் எதற்காக
இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தாரை வார்த்திட வேண்டும்? இதன்காரணமாகத்தான் விவசாயிகளுக்குப்
போதுமான அளவிற்கு இழப்பீடு கிடைப்பதில்லை. பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பருவமழை பொய்த்துப்போவதன்
காரணமாக மற்றும் பயிர் விளைச்சலின்போது அவை பூச்சிக் கொல்லிகளால் நாசம் அடையும் சமயங்களில்
விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் இழப்புகளை முழுமையாகத் தன்னுடையதாக எடுத்துக் கொள்ள
வேண்டியது சமூகத்தின் கடமையாகும். ஆளும் அரசாங்கங்கள் இவற்றை நேரடியாகத் தங்கள் பொறுப்புகளாக
எடுத்துக்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திட முன்வர வேண்டும்.
மாறாக அவர்களுக்கு ஏற்படும் இழப்பிலும் கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதற்கு இன்சூரன்ஸ்
நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்திடக் கூடாது. விவசாயிகளின் துன்பத்திலும் இலாபம் ஈட்டக்கூடிய
யோசனை என்பது மோடியின் சிந்தனையாக இருக்கக்கூடும். ஆனால், இது சமூகத்தின் அறநெறிக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். பிரதம மந்திரி பயிர்
இன்சூரன்ஸ் திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு
பாதிப்பு ஏற்படும் சமயங்களில் அரசாங்கங்களே
முன்வந்து அவர்களைக் கைதூக்கிவிடக்கூடிய விதத்தில், ஓர் இழப்பீட்டு முறை கொண்டுவரப்பட
வேண்டும். இதுவே மக்கள் நலன் காத்திடும் அரசாங்கங்களுக்கு
அழகாகும்.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment