Sunday, August 19, 2018

கலைஞர் ஒரு மனந்திறந்த தலைவர் - என். சங்கரய்யா




ஒரு மனந்திறந்த தலைவர்
- என். சங்கரய்யா
கலைஞர் கருணாநிதி தொடர்பான ஃப்ரண்ட்லைன் சிறப்பிதழ், மாபெரும் தலைவர் ஒருவருக்கு மிகவும் பொருத்தமான சமர்ப்பணமாகும். அவருடன் எனக்கான தொடர்பு என்பது  அறுபதாண்டு கால நட்புடன் கூடியதாகும்.  அவருடன் நான் சுமார் அறுபதாண்டு கால நட்பினைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய பூதவுடலை அடக்கம் செய்திட இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை, ஜனநாயகத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இந்தத் தீர்ப்பானது, கருணாநிதி வாழ்ந்த சிறப்புமிக்க வாழ்க்கையைச் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அவரை எனக்கு 1952இலிருந்து தெரியும். திமுக, “திராவிட நாடு” கோரிக்கையை உயர்த்திப்பிடித்திருந்த சமயத்தில்,  திமுகவிற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இத்தகு கருத்தாக்கம், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எதிரானதாக அமைந்திடும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினார்கள். இதன் காரணமாகத்தான், 1957இலும் 1962இலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது திமுகவுடன் ஒரு தேர்தல் புரிந்துணர்விற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் வர முடியவில்லை.
1962 தேர்தல்களைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட பின்னர்தான்,  இரு கட்சிகளுக்கும் இடையேயான புரிதல் ஒரு சரியான ஆர்வத்துடன் துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 1967 பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இது, தமிழ்நாட்டில் அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட இட்டுச் சென்றது.
திமுக தலைமையில் ஆட்சி அமைந்தபின்னர், சமூக நீதி தொடர்பாக எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவற்றுள், சுயமரியாதைத் திருமணம் குறித்த ஒன்று மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  அத்தகைய திருமணத்திற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று, மாநிலத்தில் எண்ணற்ற தம்பதிகள் இம்முறையில் திருமணம் செய்து கொள்கின்றனர். இத்தகைய திருமணங்களை நடத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு ஓர் ஒளிவிளக்காக இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களுக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தி இருக்கின்றன. இதன் விளைவாக, மாநில மொழிகளுக்கு விரிவான அளவில் அங்கீகாரங்களும், குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் கூட, இம்மொழிகள் இன்றையதினம் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
உண்மையில், அவர் என்னை,  தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளத் தூண்டினார்.  நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தீண்டாமைப் பிரச்சனை தொடர்பாக மதுரையில் ஒரு மாநாட்டினை நடத்தினார். அதில் நான் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் தீண்டாமைக் கொடுமைகளின் பலவிதமான வடிவங்கள் குறித்தும் விவரித்தேன். அவர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டதுடன், பின்னர் அவர் பதில் அளிக்கையில் தன்னுடைய அரசாங்கம் எந்தெந்த விதங்களில் எல்லாம் இதுவரை நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்றும், எதிர்காலத்தில் எடுக்க இருக்கிறது என்றும் புள்ளிவிவரங்களுடன் பதில் அளித்தார்.   இதே போன்றதொரு மாநாட்டை நெய்வேலியிலும் நடத்தினோம். அதிலும் அவர் பங்கேற்றார்.
அதேபோன்று, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அது, அவருடைய ஜனநாயக அணுகுமுறையைக் காட்டுகிறது. திருக்குறளுக்குச் செல்வாக்கை ஏற்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்பினை ஆற்றினார். மாக்சிம் கார்க்கியின் சிறந்ததொரு படைப்பான “தாய்” நாவலை அவர் தமிழில் கவிதை வடிவத்தில் இயற்றினார்.  அந்நூலுக்கு ஒரு முன்னுரையை எழுதித்தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைத்திட்டார்.
அவர் ஓர் எளிமை மற்றும் மனந்திறந்த தலைவராவார். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர். மாற்றுக் கருத்துக்களை அவர் எப்போதுமே மதித்திடுவார். அவற்றில் எப்போதும் உண்மைகள் இருக்கிறதா என்று ஆய்ந்திடுவார்.
அவர், நீண்ட காலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இதிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டிய நிலையில் இன்றைய தினம் நாட்டிலுள்ள  சூழ்நிலைமை உள்ளது. வடக்கிலிருந்து வரும் குரல்கள் மிகவும் வலுவானவைகளாகவும், உரத்ததாகவும் மாறியிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற கட்சிகளைத் தன் அணியில் வைத்துக் கொள்வதைத் தொடர வேண்டும். எங்கள் நட்பு அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகும். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன்)
(தமிழில்: ச. வீரமணி)
         




தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி


தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜூன் 25 அன்று சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்:
பெருமதிப்பிற்குரிய கல்விமான்களே, என் அருமை நண்பர்களே,
உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தமைக்காக, மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருந்தபோதிலும், இந்த ஒன்பதாவது மாநாடுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஏனெனில், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபின் நடைபெறும் முதல் மாநாடு இதுதான். அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் சில கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவில் ஐமுகூ-1 அரசாங்கம் ஆட்சி செய்த காலத்தில்தான் இவ்வாறு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது என்கிறபோது நாங்கள் கூடுதலாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.
 

இங்கே உங்கள் முன் நிற்கையில் தனிப்பட்ட முறையிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு தெலுங்கு குடும்பத்தில் நான் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும் ஒரு பங்கினை நான் கோருவதற்கு எனக்கு உரிமை உண்டு. நான் பிறந்தது அன்றைய மதராஸ் எனப்படும் இன்றைய சென்னை மாநகரில்தான் அல்லது அந்தக் காலத்தில் பலராலும் அழைக்கப்பட்ட சென்னைப் பட்டணத்தில்தான். மேலும் மொழி மற்றும் பண்பாட்டு அம்சங்களில் நமக்குள் பல பொதுவான பண்புகள் உண்டு.
 

‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’
 
அதாவது, உலகில் அனைத்து இடங்களும் என் சொந்த நகரம்தான், உலகில் உள்ள ஒவ்வொருவரும் என் உறவினர்கள்தான்.

பிபிசி தொடர்களில் ஓர் இனிய நிகழ்ச்சித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதன் பெயர் ‘இந்தியாவின் கதை’. அது ஆதிக் காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் குறித்துக் கூறியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் மனிதகுல உயிரணுத் திட்டத்திற்கும் (Human Genome Project) நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆதி காலத்தில் ஆப்ரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் மிச்சசொச்சத்தில் காணப்பட்ட உயிரணு (gene M.130)க்கள், தமிழ்நாட்டின் மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் மக்களிடம் காணப்பட்டதாக அந்நிகழ்ச்சித் தொகுப்பில் கூறப்பட்டது. மதுரைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. பிச்சப்பன் அவர்கள், இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒரு வேளை இவர்கள்தான் நம் எல்லோருக்கும் மூதாதையர்களாக இருப்பதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்று கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆதாம் - ஏவாள்தான் நம் மூத்த குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றால், ஆதாம் ஆப்ரிக்காவிலிருந்து வந்தார் என்றால், ஏவாள் இந்தியாவிலிருந்து வந்தாள் என்று கொள்ளலாம். எனவே உண்மையில் இது ‘தாய் நாடு’ (Mother India) தான். நாம் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பதற்கு உண்மையில் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
 
இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றைத்தான் இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மொழியின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் என்பது அதன் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்ததாகும்.
 


காரல் மார்க்ஸ், மொழி குறித்துக் கூறுகையில், அது ‘‘சிந்தனையின் உடனடி எதார்த்தநிலை’’ என்று அழைத்திட்டார். ஜெர்மன் சித்தாந்தம் (German Ideology) என்னும் நூலில் மொழியின் தோற்றுவாயை ஆராய்கையில் அவர் கூறியதாவது: ‘‘மொழி என்பது மனிதனின் உணர்வு தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டது, மொழி என்பது உணர்வின் நடைமுறை. இது அனைத்து மனிதர்களிடமும் தோன்றியது. அதன் காரணமாகவே என்னிடமும் அது உளதாயிருக்கிறது. உணர்வைப் போன்றே மொழியும் தேவையின் அடிப்படையிலிருந்து, அத்தியாவசியத்திலிருந்து, மற்ற மனிதர்களோடு உறவாடுதலிலிருந்து விளைந்தது.’’

மொழியின் பரிணாம வளர்ச்சி குறித்து ஸ்டாலின், தன்னுடைய ‘‘மார்க்சிசமும் மொழியியல் பிரச்சனைகளும்’ என்னும் நூலில் விளக்குகையில், கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘‘மொழி என்பது சமூகத்தின் அற்புதப்பொருள்களில் ஒன்று. அதன் மூலம் சமூகத்தின் உண்மை நிகழ்வுகளிலிருந்தே மொழியும் இயங்குகிறது. சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, மொழியும் வளர்ந்தோங்குகிறது. சமூகம் மறையும்போது, மொழியும் மறைந்துவிடும். சமூகத்திற்கு அப்பால் மொழி கிடையாது. எனவேதான், மொழி என்பது அதன் சமூகத்தின் வரலாற்றுடன் பிரிக்கமுடியாதவகையில் பின்னிப்பிணைந்திருப்பதை, மொழி பேசும் மக்களின் வரலாற்றுடன், அதனை உருவாக்குபவர்கள் மற்றும் வளர்த்தெடுப்பவர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் மட்டுமே, மொழி குறித்தும் அதன் வளர்ச்சி விதிகள் குறித்தும் புரிந்துகொள்ள முடியும்.
 

‘‘மொழி என்பது ஒரு சாதனம், ஒரு கருவி. அதன் உதவியுடன் மக்கள் ஒருவர்க்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். சிந்தனையுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பதன் மூலம், மொழி வார்த்தைகளை உருவாக்கிப் பதிவு செய்கிறது, வார்த்தைகளிலிருந்து வாக்கியங்களைக் கோக்கிறது. இவ்வாறு மனிதனின் அறிவாற்றலுடன் கூடிய சிந்தனையும் சாதனைகளும் மனித சமூகத்தில் சிந்தனைகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதை சாத்தியமாக்குகின்றன.
 

‘‘மொழி ஒட்டுமொத்தத்தில் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக, மக்களிடையே கலந்துறவாடுவதற்காக, சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒத்திருப்பதற்காக, சமூகத்தின் தனிப்பட்ட மொழியினை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் மக்களின் வர்க்க நிலைப்பாட்டைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அவர்கள்அத்துணைபேர்களுக்கும் சமமாகச் சேவை செய்வதற்காக, மிகவும் நுட்பமான வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒட்டமொத்த மக்களுக்கும் பொதுவானதொரு மொழியாக இருப்பதிலிருந்து அது பிறழ்ந்து செல்லுமானால், மற்ற சமூகக் குழுக்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகக்குழுக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமானால், அது தன்னுடைய ஒழுக்கப்பண்பை இழந்துவிடுமானால், சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் உறவாடும் சாதனமாக இருப்பதிலிருந்து அது தன்னை அறுத்துக்கொண்டுவிடுகிறது, விரைவில் அது சில சமூகக் குழுக்களின் பிதற்றல்களாக மாறிப்போய்விடுகிறது, தரம்தாழ்ந்து கெட்டுவிடுகிறது, விரைவில் மறைந்து ஒழிந்துவிடுகிறது.’’

ஆனால், லத்தீன் போன்று உலகின் மற்ற செம்மொழிகளைப் போல அல்லாமல், தமிழ் மொழி தழைத்தோங்கி வளர்வது தொடர்கிறது என்றால், அது மக்கள் மத்தியில் - சாமானிய மக்கள் மத்தியில் - உயிரோட்டமுள்ள தொடர்பினை கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணமாகும்.

மாநாட்டின் இலச்சினையில் (‘logo’வில்), ஆழிப்பேரலைகளின் சீற்றத்தை எதிர்கொண்டு முறியடித்த கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையும், அதனைச் சுற்றிலும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பறைசாற்றும் ஏழு அடையாளச் சித்திரங்களும் (icon) சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டின் சின்னத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவச் சித்திரங்களைச் சித்தரித்திருப்பதால் அது தொடர்பாக ஒன்றைத் தெரிவிப்பது நலம்பயக்கும். பல்வேறு கலாச்சாரங்கள் ஒரு பொதுவான நூலால் இணைக்கப்பட்டிருப்பதை, தொடர்ச்சியை அது தெளிவுபடுத்துகிறது. பெருமதிப்பிற்குரிய தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர், டாக்டர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், முந்தைய மாநாடுகளின் போது சமர்ப்பித்த ஓர் ஆய்வுக் கட்டுரையில், சிந்து சமவெளி நாகரிகக் கால கல்வெட்டுக்கள், திராவிடக் கலாச்சாரத்திற்குச் சொந்தமானவைகளாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் இடையேயிருந்த இணைப்பை நிறுவிட அவர் முயற்சித்தார். ‘சிந்து சமவெளி எழுத்துக்களின் பொருளைக் கண்டுபிடித்தல்’ என்னும் பணிக்காக, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை’ப் பெறுவதில் வெற்றி பெற்ற, டாக்டர் அஸ்கா பர்போலா அவர்களும் கூட, இந்து சமவெளி எழுத்துக்கள், பழைய தமிழுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள, திராவிட எழுத்துக்கள் என்று பரிந்துரைத்திருப்பதும் முக்கியத்துவம் உள்ளதாகும்.
அதுமட்டுமல்ல, மாநாட்டின் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற முகப்பு வாசகத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது ஒன்றே மனிதகுலம் என்பதை உரத்துச் சொல்கிறது. கலைஞர் அவர்கள் விளக்கியதுபோல் அது இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ‘‘மனிதகுலம் அனைத்தும் குறுகிய சாதி, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், அதுவே மனிதகுலத்தின் மகத்துவம்’’ என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவிக்கிறது. நம் நாட்டின் வரலாறு , குறிப்பாக இப் பிராந்தியம், நமக்குப் போதிக்கும் முக்கியப் படிப்பினை இது.
 

பல்வேறு மொழிகளுக்கும் இடையே காணப்படும் பொதுமைப் பண்புகளும் மற்றும் அவை இன்றைய நாளில் பெற்றுள்ள வளர்ச்சிகளும், அவற்றின் செறிவான பண்பாட்டுப் பாரம்பர்யத்துடன், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி மேலும் வளர்த்தெடுத்திடவும் கவனம் செலுத்திடவேண்டும். தென்னிந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையுமே எடுத்துக்காட்டிற்காக எடுத்துக்கொள்வோம். 2005இல் மிகவும் பொருத்தமாகவே தமிழுக்கு செம்மொழிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்ட அதே சமயத்தில், தெலுங்கு மற்றும் கன்னடத்திற்கும் 2008இல்அதேபோன்று செம்மொழி அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன. தலைமுறை தலைலமுறையாக காப்பியின் மணத்தை நுகர்ந்துகொண்டும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பாடலை வானொலியில் கேட்டுக்கொண்டும் எழும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு நாம் வளர்ந்திருக்கிறோம். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராசர், ஷியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகிய இம்மூவருமே - அவர்கள் தாய்மொழி வெவ்வேறாக இருந்தபோதிலும் - தங்கள் இசையை தெலுங்கில்தான் வடித்தார்கள். ஆயினும், இந்த இசை ‘கர்நாடக இசை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இவ்வாறு நம் வேற்றுமைக்குள் இணக்கமான ஒற்றுமை காணும் பண்பு மிகவும் உன்னதமானது. தெலுங்கில் வடிக்கப்பட்ட இசையை எவ்விதச் சிரமமுமின்றி தமிழிலோ அல்லது கன்னடத்திலோ மீள அளித்திட முடியும். இதுதான் நம்மிடையேயுள்ள மா மன்னுய்திக் கோட்பாட்டின் (universalism) மகத்துவமாகும்.
நம்முடைய பாரம்பர்யம் இதனை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இந்த எளிய உண்மையை அங்கீகரிக்க மறுத்து, ஒருசமயம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவையாறில் நடைபெற்ற தியாகராசர் இசை விழாவின்போது ஒருவர் தமிழில் பாடியதற்காக அவர்மீது இசை வெறியர்கள் மிகவும் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினாராம். மக்களைப் பிணைத்திடும் முகவராக வரலாற்றுரீதியாகச் செயல்பட்டு வரும் மொழி என்பது அதன் அடிப்படைச் சிறப்பியல்புக்கு எதிராக, தங்களுடைய வெறித்தனத்தையும் பிரிவினைகளையும் காட்டிட ஏவப்பட்டிருக்கிறது. வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ள உன்னதப் பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள், போராட்டத்தின்போது மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக, சமூகத்தின் வளர்ச்சிக் கருவியாக மொழியைப் பார்க்கிறோம். தேசிய இனத்தை வரையறுத்திடும் நான்கு அவசியமான நிபந்தனைகளில் ஒன்றாக, அதனை நாங்கள் பார்க்கிறோம். நாட்டில் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வந்த காலத்திலிருந்தே, இத்தகையப் புரிந்துணர்வின் அடிப்படையில்தான் நாங்கள் தெலுங்கு பேசும் மக்களுக்காக விசாலாந்திரா, மலையாளம் பேசும் மக்களுக்காக ஐக்கிய கேரளம், மராத்தி பேசுபவர்களுக்காக சம்யுக்த மகாராஷ்ட்ரா ஆகிய மாகாணங்களுக்காகப் போராடினோம். அதேபோன்று தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் தமிழுக்காக, முனைப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள். இங்கே, தியாகி சங்கரலிங்கம் பெயரைக் குறிப்பிடுவது சாலப்பொருத்தமுடையதாக இருக்கும். மதராஸ் ராஜதானி என்றிருந்ததை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 64 நாட்கள் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, இறந்து போனார். அவர் இறந்தபின் தன் உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இம்மாநிலத்திலிருந்து வந்த முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், தொழிற்சங்கத் தலைவருமான பி. இராமமூர்த்தி, ப. ஜீவானந்தம் மற்றும் என். சங்கரய்யா ஆகியோர் மாநில சட்டமன்றத்தில் தமிழில் பேசுவோம் என்று பிரகடனம் செய்து, தமிழிலும் பேசினார்கள். அ. நல்லசிவம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில், தமிழில் தந்தி கொடுக்கும் முறைக்காகப் போராடினார். உண்மையில் இவர்கள் அனைவரும் தமிழுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கான போராட்டத்தில் நம் முன்னோடிகளாக விளங்கினார்கள். மக்களின் மொழியில் ஆட்சி அதிகாரம் நடைபெறாவிட்டால், ஜனநாயகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். ஐயன் திருவள்ளுவர் தன்னுடைய திருக்குறளில் சொல்லியதுபோல,
 

காட்சிக் கெளியன் கடுஞ் சொல்லன் அல்லனேல்
 
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதாவது, காட்சிக்கு எளிமையும், கடுங்சொல் கூறாத இனிய பண்போடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.) (அதிகாரம் 39, குறள்: 386)

ஜனநாயகம் வெற்றிகரமாக அமைந்திட, நிர்வாகத்துடன் எளிதில் அணுகத்தக்க தன்மை முக்கியமான அம்சங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இதற்கான பல அம்சங்களில் மொழி என்பது ஆட்சியாளர்களையும் ஆட்சிக்குட்பட்டவர்களையும் இணைத்திடுவதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள்/ஆளும் வர்க்கத்தினர் மக்களோடு கொண்டுள்ள உறவின் அளவையும் வரையறுக்கிறது. மொழி சமூகத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ‘‘அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், சமூக வாழ்க்கையிலும், மக்களின் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளிலும்’’ அவர்களுக் கிடையேயான சிந்தனைகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் கருவியாக மொழி விளங்குகிறது.
இந்தப் பின்னணியில்தான், இன்றைய அரசாங்கங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. ‘மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்’ என்ற ‘நேரு மாதிரி’ என்கிற வலைப்பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல், அந்தந்த மண்ணின் மொழி செயல்படுத்தப்படுவது உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். நிச்சயம் இதனை குறுகிய மொழிவெறி என்று எவரும் கருதிடக் கூடாது. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும், அனைத்து மொழிகளையும் தழைத்தோங்கச் செய்திட அனுமதித்திட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த ஒரு மனிதனும் தனியொரு அடையாளத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள்அடுத்தடுத்துப் பேசப்படக்கூடிய ஒரு நாட்டில் பல்வேறு அடையாளங்கள் விரிவடைந்திருக்கின்றன.
 

எழுதப்பட்ட வரலாறு நெடுகிலும், இன்றைய எதார்த்த நிலையிலும், இந்தியாவில் உள்ள நாம், தாய்மொழி, வேலை செய்யும் இடத்தில் புழங்கும் மொழி, படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான மொழி என்று ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் மூன்று மொழிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முன்பு குறிப்பிட்ட கர்நாடக இசை எடுத்துக்காட்டை இது விளக்குகிறது. இவ்வாறு நாட்டின் பல்வேறு அடையாளங்களை, எந்த ஒரு ‘குறிப்பிட்ட’ அடையாளத்திற்கும் தனி முக்கியத்துவம் தந்துவிடாமல், பேணி வளர்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.
 

நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், என் தாய்மொழி தெலுங்கு, இந்தி பேசும் தில்லியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் மேற்கு வங்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இங்கே உங்கள் முன் இம்மாமன்றத்தில் உலகம் முழுதுமிருந்து வந்துள்ள தமிழர்கள் முன்பாக நின்று பேசிக்கொண்டிருக்கிறேன். இதுதான் இந்தியா.

நான் உரையை நிறைவுசெய்வதற்கு முன், பரிசீலனைக்காக மாநாட்டை நடத்துவோருக்கு முன் சில ஆலோசனைகளை வைக்க விரும்புகிறேன். தமிழ் மிகவும் வளமான பாரம்பர்யத்தைக் கொண்ட ஒரு மொழி, இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் இலக்கியங்களைப் படைத்த, படைக்கும் ஒரு மொழி. அதுமட்டுமல்லாமல், ஏட்டில் எழுதப்பெறாத, வாய்வழி வரலாற்றுச் செல்வங்களையும் (huge treasures of oral history) அபரிமிதமாகக் கொண்டுள்ள ஒரு மொழி. இவற்றை உடனடியாக ஆவணப்படுத்தி, என்றென்றைக்கும் நிலைபேறுடையதாக மாற்றக்கூடிய விதத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாட்டுப்புற இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கிஷங்களாக நாட்டுப்புற மக்கள் மத்தியில் விளங்கிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக இம்மாநாடு சில நடவடிக்கைகளைத் தொடங்கிடும் என்று நான் நம்புகிறேன்.

தமிழ்ச் சமூகமானது தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் இயக்கம் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் என்று பல்வேறு இயக்கங்களால் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கிய வளங்களின் மூலம் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்தும் இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியத் தேவையாகும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இம்மாநாட்டின் ஓர் அங்கமாக மட்டுமல்ல, இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளும்போது இணைத்துக்கொள்ளப்படவும் வேண்டும்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல்

என்கிறது திருக்குறள். அதாவது அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமை உடையவர்கள் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
தமிழ் மொழியை மேலும் தழைத்தோங்கச் செய்வதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் அதன் வளமான பாரம்பர்யங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து கற்றுக்கொள்வோம்.


(தமிழில்: ச.வீரமணி)

Saturday, August 18, 2018

எங்களிடையேயான உறவு விசேஷமான ஒன்று: சீத்தாராம் யெச்சூரி



சீத்தாராம், இந்த கலாட்டாவிற்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று நினைக்கிறேன், என்னிடம் பேசும்போது தமிழில் பேசுறீங்க, சந்திரபாபு நாயுடுவிடம் பேசும்போது தெலுங்கில் பேசுறீங்க, ஜோதிபாசுவிடம் பேசும்போது வங்கமொழியில் பேசுறீங்க, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ்வுடன் பேசும்போது இந்தியில் பேசுறீங்க. ஒருத்தரிடம் நீங்க என்ன பேசுகிறீர்கள் என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசுவதுதான் இங்கே குழப்பத்திற்கே காரணம். இதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்,என்று கலைஞர் கூறுவார்.
கடந்த பல ஆண்டு காலத்தில் நான் பலமுறை கலைஞர் கருணாநிதியுடன் பல விஷயங்களைப் பேசி இருக்கிறேன். எங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் இருப்பதுபோல பாசத்துடனும் நேசத்துடனும் நகைச்சுவையுணர்வுடனும் அமைந்திருக்கும்.
1997 ஏப்ரலில் ஒருநாள். அப்போது மத்தியில் ஐமுகூ அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபின்னர், எச்.டி. தேவகவுடாவை உடனடியாகப்  பிரதமராகத் தேர்வு செய்த சமயம். பிரதமரைத் தேர்வு செய்துவிட்டோம். ஆனாலும், கேபினட் அமைச்சர்களை இறுதிப்படுத்துவதில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
தேவ கவுடாவை, பிரதமர் பொறுப்பில் அமர்த்தும் சமயத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற முந்தைய விவாதங்களில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் கலந்துகொண்டார், ஆயினும் அவர் அதில் ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன்னமேயே சுர்ஜித், ருஷ்யாவிற்குச் செல்ல வேண்டியிருந்ததால், தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களின்போது எங்கள் கட்சியின் சார்பாக நான் கலந்துகொள்ளப் பணிக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துத்தான் கலைஞர் மேலே கூறியவாறு வேடிக்கையுடன் குறிப்பிட்டார்.
கலைஞரை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆரம்பத்தில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். ஓர் அரசியல்வாதியாக அவருடைய ஆளுமை, ஓர் எழுத்தாளராக, கவிஞராக மற்றும் திராவிடச் சிந்தனைகளை முன்னெடுத்துச்செல்பவராக அவருக்கிருந்த திறமைகள் எனக்கு மிகவும் நன்றாகவேத் தெரியும். அவருடைய திரை வசனங்கள் பலவற்றில்  வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்துக் கொடுப்பதுபோல, நகைச்சுவைக்குள் கருத்துக்களை நுட்பமாகக் கலந்திருப்பார்.
   அதேபோன்றதோர் இன்முக நகைச்சுவையை நானும் முதன்முறையாக மேலே கூறிய விவாதங்களின்போது எதிர்கொண்டேன், அனுபவித்தேன். அந்த அனுபவத்திற்குப் பின்னர், கலைஞர் மிகவும் இக்கட்டான பேச்சுவார்த்தைகளுக்கிடையே பதற்றமான நிலைமைகள் இருக்கும் சமயங்களில், கலைஞர் இதுபோன்று நயமான நகைச்சுவை அஸ்திவாரங்களை ஏவுவதை நானும் உய்த்துணர்ந்துகொண்டேன்.
எங்களிடையே இத்தகைய நகைச்சுவையுடன் இருந்த கருத்துப்பரிமாற்றங்கள்தான், எங்களுக்கிடையே ஒரு விசேஷமான உறவுமுறையை பிற்காலங்களில் ஏற்படுத்தியதற்குக் காரணம் என்று நம்புகிறேன்.  ஓர் இளநிலை அரசியல்வாதியாக இருந்த என்னை மிகவும் நேசித்தார். தென்னிந்திய அரசியலில் ஒரு முதுபெரும் ஜாம்பவனாகத் திகழ்ந்த அவரை, நுணுக்கமாக ஆய்வு செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.  1996க்கும் 1998க்கும் இடையே ஐக்கிய முன்னணிக் காலத்தின்போது, கலைஞர் கருணாநிதியும், திமுகவும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் தலைமை தாங்கப்படும் சங் பரிவாரத்தின் நாட்டைப் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்ப்பதில் உறுதியுடன் இருந்தார்கள். ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றும் உறுதியான உறுதிப்பாட்டுடன் எங்கள் கூட்டணி உருவானது.
ஆயினும் 1998க்குப்பின்னர் எங்கள் அரசியல் வெவ்வேறு திசைகளில் மாறிய சூழ்நிலையில் நாங்கள் ஒருவரையொருவர் எதிரெதிரே இருந்துதான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஓராண்டு கழித்து, கவிழ்ந்தபின்னர், திமுக, அடல் பிகாரி வாஜ்பாயி தேசிய தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி பக்கம் நகர்ந்தது. அப்போதும்கூட எங்களிடையேயான தனிப்பட்ட தொடர்பு நீடித்தது. நான் சென்னைக்கு வரும் ஒவ்வொருதடவையும் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் சூரியனுக்குக் கீழேயுள்ள அநேகமாக அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
இதுபோன்று கருத்துப்பரிமாற்றங்களின்போது, அவருடைய இந்துத்துவா எதிர்ப்பு, வகுப்புவாத அரசியல் எதிர்ப்பு நீர்த்துப்போயிருப்பதைக்குறித்தும்கூட விவாதித்திருக்கிறோம். இதுதொடர்பாக நான் கேள்வி கேட்டபோது, அவர் ஒரு நிகரற்ற காரணத்தை (a unique reasoning) அதற்காக என்னிடம் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஒரு நீண்டகாலத்திற்கு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருந்ததுடன் ஒப்பிட்டு, மக்களின் தீர்ப்பின்மீது மகத்தான பிடிப்பினை இடதுசாரிகள் வைத்திருக்கக்கூடிய அளவிற்கு, சித்தாந்த உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய நிலையில் திமுக இல்லை என்கிற கருத்து கருணாநிதி கொண்டிருந்தார். எங்களுடைய நிலை ஒருவிதமான தட்பவெப்ப நிலையுடன் கூடிய அரசியலாகும். (Ours is a kind of seasonal politics.) நாங்கள் எங்களுடைய அரசியலையும் அமைப்பின் நலன்களையும் பாதுகாத்திடக் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்,(We have to struggle hard to protect our political and organisational interests,)என்று அவர் கூறினார்.
ஆயினும், 2004 வாக்கில், அவர் தன்னுடைய ஒரிஜினல் சித்தாந்த நிலைக்குத் திரும்பவேண்டிய தேவையை உணர்ந்தார். தோழர் சுர்ஜித்துடன் தொடர்ந்து மேற்கொண்ட கருத்துப்பரிமாற்றங்களால் தூண்டப்பட்டு, அவர் மீண்டும் பிளவுவாத மற்றும் பாசிஸ்ட் இந்துத்துவா அரசியலுக்கு எதிராகப் போராடும் ஓர் உக்கிரமான போராளியாக மாறினார்.
தோழர் சுர்ஜித், காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் கலைஞரை கூட்டணிக்கு மீளவும் அழைக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ள வைத்தார். 2004இல் பாஜகவிற்கு எதிராக ஒரு பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்காக இம்மூன்று தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது நானும் உடன் இருந்தேன். இதுதான் பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாக மாறியது. இக்கூட்டணி 2004இலிருந்து 2014வரை ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அளித்தது. இந்த ஆண்டுகளில் அவருடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன. அந்த சமயங்களில் எல்லாம் எங்கள் கருத்துப்பரிமாற்றங்கள் அரசியல் மற்றும் அரசின் கொள்கைத்திட்டங்களோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியம், மொழி மற்றும் சமூகவியல் போன்று பல்வேறு பொருள்கள் குறித்தும் அமைந்திருக்கும்.
இவ்வாறு விரிவான எங்கள் விவாதங்களுக்கு மத்தியில், அவர் என்னை கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் உரையாற்றிட என்னை அழைத்தபோது, சிறப்பாகச் சொல்லவேண்டியதொரு விஷயமும் நடந்தது. அவர் இம்மாநாட்டில் பேச வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டபோது, தமிழ் இலக்கியத்துடன் எனக்கு அந்த  அளவிற்கப் பரிச்சயம் கிடையாது என்றும் எனவே இத்தகையதொரு சிறப்பான அறிஞர்கள் கூடும் ஓர் இடத்தில் நான் தனிமைப்பட்டுவிடலாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு கலைஞர் மறுமொழி என்ன தெரியுமா? இந்த செம்மொழி மாநாடு நடைபெறுவது என்பது தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமல்ல, இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து உருவான பல்வேறு இனங்களின் விரிவான கலாச்சாரத்தின் பிரச்சாரம் பற்றியதுமாகும், என்று தெரிவித்தார். அதற்கு என்னால் எவ்விதமான மறுப்பும் சொல்ல முடியவில்லை.
அப்போது கோயம்பத்தூருக்கு வந்த பயணம் கூட நினைவுகூரத்தக்க ஒன்று. நான் தில்லியிலிருந்து சென்னை வந்த விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னால் கோவைக்குச் செல்லும் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே, கலைஞரிடம் என் பயணத்தை ரத்து செய்திடுமாறு பரிந்துரைத்தேன். ஆனால் கலைஞர் அதனைச் செய்யவில்லை. மாறாக, முதலமைச்சருக்கான ஹெலிகாப்டரில் சென்னையிலிருந்து, கோவைக்கு வானூர்திவழியாக என்னை வரவழைத்தார். நானும் சமூகத்தின் அடித்தளத்திற்கும் மேல்கட்டமைப்புக்கும் இடையேயான ஒரு கண்ணியாக மொழி பார்க்கப்பட வேண்டும் என்கிற மார்க்சியக் கண்ணோட்டத்தை அப்போது சமர்ப்பித்து உரை நிகழ்த்தினேன். (I made the presentation on the Marxian perspective of seeing language as the link between the base and the superstructure.) பின்னர் அந்த உரை முரசொலியிலும் வந்தது, கலைஞரால் ஒரு சிறுபிரசுரமாகவும் வெளியிடப்பட்டது.
எங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்கள் அவருடைய இறுதிநாட்கள் வரையிலும் தொடர்ந்தன. நான்கு  ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்கூட கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோமோ அப்படிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது கலைஞரே கவித்துவத்துடன் கூறியதுபோல, அவர் விடும் மூச்சு அதனை நிறுத்திவிடலாம், ஆனாலும் அவருடைய வாழ்க்கையும் அரசியலும் விட்டுச்சென்றுள்ள செய்தி, எப்போதும் நீண்டு நிலைத்து நிற்கும். (The breath may have stopped but the message of his life and politics shall remain for long.)
(சீத்தாராம் யெச்சூரி, வெங்கிடேஷ் ராமகிருஷ்ணனிடம் கூறியதிலிருந்து)
(தமிழில்: ச. வீரமணி)
            


Thursday, August 16, 2018

ரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…!





ரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…!

===பி. அர்ஜூன்===

வெகு காலத்திற்கு முன் அல்லாமல், சமீபத்தில்தான், அதாவது 2012இல்தான், இந்திய விமானப் படை தன்னிடமிருந்த விமானங்களின் எண்ணிக்கை மிகவும் மோசமான முறையில் குறைந்துவிட்டதைச் சரிக்கட்டி அதிகப்படுத்துவதற்காக, ரபேல் ஜெட் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதெனத் தேர்வு செய்தது. இவ்வாறு போர் விமானங்களைக் வாங்குவதற்காக இந்திய விமானப் படை உருவாக்கியிருந்த தர நிர்ணயம் என்பது உலக அளவில் மிகவும் தரமான ஒன்றாக மதிப்பிடப் பட்டிருந்தது.
இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரியான ஏர் கமோடர் ஜஸ்ஜித் சிங் இதற்காக இந்திய விமானப்படையைமுறையான மற்றும் அறிவியல் செயல்முறையைப் பின்பற்றுவதாக, மிகவும் புகழ்ந்திட்டார். பிரேசில் ராணுவ அமைச்சர் செல்சேநலா அமோரின் அப்போது இந்திய ராணுவ அமைச்சராக இருந்த .கே. அந்தோணியிடம் இந்தியாவின்எம்எம்ஆர்சிஏஎனப்படும்வெளிப்படையான டெண்டர் மதிப்பீட்டு செயல்முறையை- நடுத்தர பலவகை போர் விமானப் போட்டி”(MMRCA—Medium Multi-role Combat Aircraft competition) மூலம் மிகவும் குறைந்த விலைகேட்டவராக பிரெஞ்சு தயாரிப்பான டசால்ட் ரபேல் தேர்ந்தெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த இந்தியாவின் செயல்முறையைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் இருந்துவந்த குறைபாடுகள் பெரிய அளவில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், இனிமேல்போபோர்ஸ்வகை ஊழல்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்றும் கருதப்பட்டது. ஆனால், அப்போது, ஒரு புதிய அரசாங்கம் வரும் என்றோ, அது ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தகைய செயல்முறைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டு, முந்தைய காலங்களில் இருந்ததைப் போன்று மர்மமான முறையிலானதாக மாற்றிவிடும் என்றோ யார்தான் அறிவார்!

தன்னிச்சையாக ஒரு ஒப்பந்தம்

ரபேல் விமானங்களை வாங்குவது என்று தீர்மானித்தபிறகு, 126 விமானங்களை வாங்குவதற்கான விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்தன. ஆனாலும், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, ஐமுகூ அரசாங்கம் 2014இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே, மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று விநோதமான முறையில் அறிவித்ததைப்போலவே, ரபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாகவும் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக முந்தைய ஐமுகூ அரசாங்கம் 2007ஆம் ஆண்டிலிருந்து எடுத்துவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாகத் துண்டித்துத் தூக்கி எறிந்துவிட்டு, தன்னிச்சையாக பிரெஞ்சு நிறுவனத்துடன் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு, இது தொடர்பாக, அரசு வட்டாரத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ, எவ்விதமான விவாதமோ அல்லது ஆழமான முறையில் ஆய்வுகளோ நடந்திடவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்திய விமானப் படை பல ஆண்டு காலம் கடினமான உழைத்து உருவாக்கியிருந்த முன்மாதிரியான நடைமுறைத் திட்டத்தை சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டது. பிரெஞ்சு நிறுவனத்திற்கு உறுதிமொழிகளை இந்திய அரசு சார்பில் அளிப்பதற்கு முன்பு, நம் நாடு இதுவரை கடைப்பிடித்து வந்த தேசியப் பாதுகாப்பு அம்சங்கள், ஜனநாயக நெறிமுறைகள், மதிப்பு மரியாதைகளையெல்லாம், குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டது. புதிய ஒப்பந்தமானது, இதுபோன்ற விமானங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு மாற்றுவதற்காக இந்திய விமானப் படை செய்துவைத்திருந்த ஒப்பந்தங்களையும்கூட, மேலும் தொடராத விதத்தில், விட்டுக்கொடுத்துவிட்டது.

42 கப்பற்படைப் பிரிவுகள்
நம் நாட்டின் இந்திய விமானப் படையின் தேவைகளோடு ஒப்பிடும்போது, வெறுமனே 36 விமானங்களுக்கான ஒப்பந்தம் என்பதுகூடகேலிக்கூத்தான ஒன்றேயாகும். மிகவும் பழையதாகிப் போய்விட்ட ரஷ்ய விமானங்களுக்குப் பதிலாகத்தான் புதிதாக விமானங்களை வாங்கிட இந்திய விமானப் படை பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இந்திய விமானப் படையின் கூற்றின்படி, நம் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் அனுமானத்தின்படி, நமக்கு 42 போர்க்கப்பற்படைப் பிரிவுகள் தேவைப்படும். (ஒவ்வொரு கப்பற்படைப் பிரிவிலும் 16 – 18 விமானங்கள், போர் விமானங்கள் உள்ளடக்கிய விதத்தில் அமைந்திருக்கும்.) 2019-2020 வாக்கில், எம்ஐஜி 21 மற்றும் எம்ஐஜி 27 அடங்கிய 14 போர்க்கப்பற்படைப்பிரிவுகள் காலாவதியாகிவிட்டால், பின்னர் இந்திய விமானப் படையானது 30க்கும் குறைவான போர்க்கப்பற்படைப் பிரிவுகளுடன்தான் இயங்க வேண்டியநிலை ஏற்படும்.
இப்போது மிகவும் தெளிவாகத் தெரியவேண்டிய விஷயம் என்னவெனில், இரண்டே இரண்டு போர்க்கப்பற்படைப் பிரிவுகளுக்கான ரபேல் போர்விமானங்கள் வாங்குவதால், இந்திய விமானப் படையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிட முடியுமா என்பதேயாகும். இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்களை பிரதமர் மோடி மாற்றியமைத்ததன் மூலம் ஏற்பட்டுள்ள ஆபத்தாகும் இது. எம்எம்ஆர்சிஏ மூலமாக கொள்முதல் செய்யும்போது அப்போதைய ஐமுகூ அரசாங்கத்தின் ராணுவ அமைச்சராக இருந்த .கே.அந்தோணி மூன்று வழிகாட்டும் கொள்கைகளை ஏற்படுத்தியிருந்தார். முதலாவது, இந்திய விமானப் படைக்குத் தேவையான விமானங்கள் முழுமையாக வாங்கப்பட்டுவிட வேண்டும். இரண்டாவது, விமானங்களை வாங்குவதற்கான செயல்பாடுகள் போட்டிமிக்கதாகவும், நேர்மையானதாகவும், வெளிப் படைத்தன்மை படைத்ததாகவும் இருந்திட வேண்டும். அப்போதுதான், பணத்திற்கான சிறந்த மதிப்பு உணரப்படும். இறுதியாக, இந்திய ராணுவத் தொழில்கள் உலக அளவில் வளர்வதற்கானதொரு வாய்ப்பினைப் பெற முடியும். இம்மூன்று கொள்கைகளையுமே இப்போது ஜெட் விமானங்களை வாங்கும் விஷயத்தில் மோடி அரசாங்கம் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டுவிட்டது.
ஓர்இழிவான விற்பனையாளர்
நாட்டின் ராணுவத்திற்குச் சிறந்த பயன்தரக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட அடிப்படை வழிகாட்டும் நெறிமுறைகளை மோடி உதாசீனம் செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அவசரகதியில் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள மோடிக்கு சர்வதேச நிர்ப்பந்தம் ஏதேனும் ஏற்பட்டதா?
முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறந்ததொருஇழிவான விற்பனையாளர்என்று கருதப்பட்டவர். வரலாறு அவரது பெயரை என்றென்றும் நினைவுகூர்ந்திடும். ஏனெனில் அவரது காலத்தில்தான் ஒரே ஆண்டில் அதிகபட்ச அளவில் ரபேல் போர் ஜெட் விமானங்கள் விற்கப்பட்டு, அதன்மூலம் டசால்ட் வானூர்தி நிறுவனம் கடனில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டது. இந்தியாவுக்கு 36 விமானங்களையும், கத்தார் மற்றும் எகிப்துக்கு தலா 24 விமானங்களையும் விற்பனை செய்தார். இது ஒரு சாதனையாகும். ஏனெனில் 2015க்கு முன்பு, 24 ஆண்டுகளில் ஒரு ரபேல் விமானம் கூட எந்த நாட்டுக்கும் விற்கப்படவில்லை.
ஹாலண்டேயின் இத்தகைய திகிலூட்டுகிற விற்பனைத் திறன் சமாச்சாரம், விற்பனையில் திடீர் தாவலுக்கான கேள்விக்கு மட்டும் பதில் அளித்துவிடவில்லை. கண்ணுக்குப்புலப்படாத, புதிரான, அமெரிக்க நலன்களால் வழிகாட்டப்பட்ட சில உயர்மட்ட அளவிலான சர்வதேச வர்த்தக மற்றும் அரசியல் வலைப்பின்னலும் அவரது குறிக்கோளை அடைய அவருக்கு உதவி இருக்கிறது.
ஹாலண்டேஓர் உன்னதமானவிற்பனையாளராக இருக்கலாம். ஏனெனில் அவர் இவ்வாறு விமானங்களை விற்றதன் மூலமாக பிரான்சின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தார் என்பதுமட்டுமல்ல, இதன்மூலம் அமெரிக்க ராணுவத்துறைக்கும் உதவினார். 2013இல் ஹாலண்டே ஜனாதிபதியான பின்பு, பிரெஞ்சு விமானப் படையிடம் போர் விமானங்களின் உற்பத்தியின் உச்சவரம்பை 286இலிருந்து 225 ஜெட் விமானங்களாகக் குறைத்துக்கொள்ளுமாறும், டசால்ட் நிறுவனத்திடம் ஆண்டுக்கு 11 விமானங்கள் விற்கக்கூடிய விதத்தில் தயார் செய்வதற்குப் பதிலாக ஐந்து விமானங்கள் மட்டும் விற்கக்கூடிய விதத்தில் தயாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். ராணுவ செலவினங்களைக் குறைத்ததன் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தை அவர் மக்கள் நலத் திட்டங்கள் எதற்கும் பயன்படுத்திடவில்லை.
மாறாக, அவ்வாறு 61 விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான செலவினத்திலிருந்து சேமிக்கப்பட்ட பணத்தின் மூலமாக அமெரிக்காவிடமிருந்து நான்கு லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே விமானங்களும், நான்கு எம்கியூ-9 ரீப்பர் ஆளில்லா வளிமண்டல ஊர்திகளும் வாங்கினார். இவ்வாறு, ஹாலண்டே, அமெரிக்காவிற்கு உதவினார். இதற்குப் கைமாறாக, அமெரிக்கா, பிரான்சின் ரபேல் விமானங்களை தன்னுடைய கட்டளைகளுக்குக் கைகட்டி, வாய்பொத்தி செவிமடுக்கும் இந்தியா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளை வாங்கச்செய்வதற்கு அநேகமாக கட்டளையிட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த ரபேல் விமானங்கள் மூலமாகத்தான் சிரியா மற்றும் லிபியாவில் மக்கள் மீது அட்டூழியங்கள் புரிந்திட அமெரிக்காவுக்கும் பிரான்ஸ் உதவியது.
மோடி அரசு மறைக்கும் மர்மங்கள்
2015 பிப்ரவரியில் எகிப்து பிரான்சுடன் 24 விமானங்களை வாங்குவதற்கு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. முதல் மூன்று விமானங்களை 2015 ஜூலையில் பெற்றுக் கொண்டது. இரண்டாவது அனுப்பப்பட்ட ஜெட் விமானங்கள் கெய்ரோவை 2016 ஜனவரியில் சென்றடைந்தன. மூன்றாவது தவணை இந்த ஆண்டு ஏப்ரலில் போய்ச் சேர்ந்தது.
2015 ஏப்ரலில் ஹாலண்டே மற்றொரு ஒப்பந்தத்தை மோடியுடன் செய்து கொண்டார். அதன்படி, இந்தியாவிற்கு 36 போர் விமானங்களை 9.2 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டார். ஹாலண்டே அந்த ஆண்டில் மூன்றாவது ஒப்பந்தத்தை 24 ரபேல் ஜெட் விமானங்களை விற்பதற்காக கத்தாருடன் செய்துகொண்டார். பிரான்ஸ், எகிப்துக்கு 5.2 பில்லியன் ஈரோக்களில் விற்ற விமானத்தை கத்தார் விமானப் படைக்கு 6.3 பில்லியன் ஈரோக்களுக்கு விற்றதாகக் கூறப்பட்டது.
கத்தார் நாட்டுன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விமானத்தின் விலை அதிகமாகும். ஏனெனில், இதனுடன் நீண்ட தூரம் பாயக்கூடிய குரூஸ் ஏவுகணைகள் மற்றும் விண்கற்கள் ஏவுகணைகளும் (meteor missiles) சேர்க்கப்பட்டிருந்தன. மேலும், எகிப்து வாங்கிய விமானங்களில் மூன்றில் இரண்டு பங்கு, பயிற்சியாளர்கள் இருவர் அமரக்கூடியவைகளாகும். அவை ஒருவரே அமரக்கூடிய போர் விமானங்களைவிட விலை குறைவானவைகளாகும்.
இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, டசால்ட் விமான நிறுவனம் மார்ச் 8 அன்று வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் கண்டுள்ள விவரங்கள், எதிர்க்கட்சிகள்விமானங்களை அதீத விலை கொடுத்து வாங்கியிருப்பதாக, அதாவது ஒவ்வொரு ரபேல் ஜெட் விமானத்திற்கும், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய ரபேல் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்ததைவிட 351 கோடி ரூபாய் அதிகமாகக் கொடுத்து வாங்கியிருப்பதாக, அரசாங்கத்தைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன என்று, வெளிப்படுத்தி இருக்கிறது.
எனவே, இப்போது நம்முன் எழும் கேள்வி: ரபேல் விமானத்திற்கு கத்தார் கொடுத்த விலையைவிட இந்தியா அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலம் இந்தியா வாங்கியுள்ள விமானத்தில் கூடுதல் அம்சங்கள் என்ன இருந்தன? இரண்டாவது கேள்வி: விமானத்தின் விலையில் திடீரென்று மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விமானத்தில் சிறப்பாகவும் கூடுதலாகவும் பொருத்தப்பட்ட அம்சம் என்ன?
ரபேலுடன் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தியபிறகு, ஈரோ போர் விமானம், மலிவானதாக மாறியுள்ளது என்று அரசாங்கம் எவ்விதமான குறிக்கோளுமின்றி சொல்வதிலிருந்து, பிரெஞ்சு ஜெட் விமானம் ஒவ்வொன்றின் விலையும், அதனுடன் உள்ள அனைத்து துணை பாகங்களுடனும், அது முன்பு குறிப்பிட்டிருந்ததைவிட அதிகமாக இருக்கிறது என்று வெளிப்படுத்தி இருக்கிறது. எனவே, ரபேல் விமான நிறுவனம் குறைந்த விலைக்குத் தருவதாகக் கூறிய நிறுவனம் என்று இனி சொல்ல முடியாது. இறுதிப் பேச்சு வார்த்தைகளின்போதுதான் உண்மையான விலை வெளி வரும் எனில், பின் வேறு ஈரோ போர் விமானங்களை உற்பத்தி செய்பவர்களுடன் இதே போன்று பேச்சு வார்த்தைகள் நடத்தாமலேயே, டசால்ட் விமான நிறுவனம் குறைந்த விலைக்கு விமானங்களைக் கொடுக்கும் நிறுவனம் அல்ல என்று எப்படி இந்த அரசாங்கம் கூற முடியும்?
டசால்ட் நிறுவனம்செயல்திறன் மற்றும் வாரண்ட்டி பத்திரங்களை அளித்திடத் தயங்கியமையும்,” மற்றும்ஒப்பந்தத்திற்காக முழுமையாகப் பொறுப்பேற்கவும் மறுத்ததுதான், டசால்ட் நிறுவனத்துடனான ஆரம்ப ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ள வேண்டியதற்கான காரணங்களில் ஒன்று என்று காட்டப்பட்டிருக்கிறது. இது, ரபேல் ஜெட் விமானங்களுக்கான நிபந்தனைகளும், விலையும் அதிகம் எனில், பின் ஏன் அந்த ஒட்டுமொத்த பேரத்தையும் ரத்து செய்ய அரசாங்கம் முன்வரவில்லை என்ற கேள்வியை எழுப்பிட இட்டுச்செல்கிறது. டசால்ட் நிறுவனம் தான் முன்பு சொன்ன விலையிலிருந்தும், உறுதிமொழியிலிருந்தும் பின்வாங்கியிருக்குமாயின், பின் ஏன் இந்த அரசாங்கம் அதே நிறுவனத்திடமிருந்து 36 விமானங்களை வாங்க முன்வந்தது?
உண்மை விலை என்ன?
விமானத்தின் உண்மையான விலையை மறைத்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திடாமல் தடுத்து, தேசியப் பாதுகாப்பு என்கிற முகமூடிக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது. மற்றுமொரு போலியான வாதம், இந்த பேரம் இரண்டு அரசாங்கங்களுக்கு இடையே நடந்திருப்பதால் இதில் லஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறுவதாகும். பிரதமர் அவ்வாறுதான் கூறிக்கொண்டிருக்கிறார். எனினும், அவர் கூறுவதில் என்ன காணப்படவில்லை என்றால் உலகம் முழுதும் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, ஊழலின் உறைவிடங்களாக இருப்பவை என்பதை மறைத்திருப்பதாகும்.
ரபேல் பேரத்தில் அதிகமான அளவிற்கு ஆதாயம் அடைந்துள்ளது. நவீனமயமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் எவ்வித அனுபவமும் இல்லாத அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் என்கிற உண்மையை எப்படி ஒருவர் மறுக்கவோ மறைக்கவோ முடியும்? தேசியப் பாதுகாப்பைக் காவு கொடுத்து, கடனில் மூழ்கியுள்ள ஒரு முதலாளிக்கு கூச்சநாச்சமின்றி ஆதரவு அளித்திருப்பதன்மூலம், மோடி தான்தோன்றித்தனமாக நேர்மை தவறியிருக்கிறார்.
(தமிழில்: .வீரமணி)