Wednesday, August 8, 2018

தலைவர் கலைஞர் மறைவிற்கு மாநிலங்களவையில் இரங்கல்



புதுதில்லி, ஆக.8-
தலைவர் கலைஞர் மறைவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தியபின், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மாநிலங்களவையில், இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து, மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு கூறியதாவது:
மாண்புமிகு உறுப்பினர்களே, 2018 ஆகஸ்ட் 7 அன்று தன்னுடைய 94ஆவது வயதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான டாக்டர் மு. கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் ‘கலைஞர்’ என்று அனைவராலும் அறியப்பட்டிருந்தார். 1924 ஜூன் மாதத்தில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் ஊரில் பிறந்த டாக்டர் கருணாநிதி பன்முகத் திறமைகள் படைத்தவராக இருந்தார். அவர் தன் சிறுபிராயத்திலிருந்தே, நாடகம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் அளவிடற்கரிய ஆர்வத்தைக் காட்டினார். மேலும் சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
பொதுவாழ்வில் அவர் எதற்கும் அஞ்சாத போராளியாக இருந்து, தன்னுடைய நீண்ட நெடிய பொதுவாழ்வில் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு முறியடித்து முன்னேறினார்.
அவர் தன்னுடைய வாழ்க்கையை தமிழ்த்திரைப்படத்துறையில் ஒரு திரைக்கதையாசிரியராகத் தொடங்கினார். அவருடைய திரைக்கதைகள், விதவை மறுமணம், தீண்டாமை ஒழிப்பு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு போன்ற எண்ணற்ற சமூகப் பிரச்சனை களைத் தொட்டு அவற்றின் மூலமாக பேரும் புகழும் அடைந்தார்.
அவர், தன்னுடைய திராவிட சித்தாந்தத்தையும் அரசியல் சிந்தனைகளையும் பரப்புவதற்குத் தமிழ்ச் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டார். டாக்டர் கருணாநிதியின் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வம் அவருடைய கவிதைகள், கடிதங்கள், நாவல்கள், தன்வரலாறுகள், தியேட்டர் நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் உள்பட அவருடைய எண்ணற்ற படைப்புகளில் நன்கு பிரதிபலித்தன.
கலை மற்றும் கட்டடக்கலை மூலமாகவும் தமிழ்க் கலாச்சாரத்திற்கு அவர் பங்களிப்பினைச் செய்துள்ளார். வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டதற்கு அவர் கருவியாக இருந்தார். அவர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தைக் கட்டியிருப்பதன் மூலமும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி சிலை நிறுவியிருப்பதன் மூலமும் திருவள்ளுவருக்கு கட்டடக்கலை மூலமாகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
அவர், 1942இல் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். அதிலிருந்து அவ்விதழின்  ஆசிரியராகவும்,  வெளியிடுபவராகவும் இருந்து வந்தார். டாக்டர் கருணாநிதி அரசியலில் தன் ஆரம்பவயதிலேயே நுழைந்ததுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
அவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1957இல் தன் சட்டமன்றப் பணியைத் தொடங்கினார். அதிலிருந்து  13 முறை, ஏழு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகள் மூலமாக வெற்றிபெற்று, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரலாறு படைத்தார்.
அவருடைய பேச்சுத்திறமை, நிர்வாகத் திறமை மற்றும் மக்கள்நலம் சார்ந்த நடவடிக்கைகள் அவரை ஒரு வெகுஜனத் தலைவராக உருவாக்கி இருந்தன. அவர், 1969இல் தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக மாறுவதற்கு முன்பு, 1967இல் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.  பின்னர் அவர் 1969இலிருந்து 1971, 1971இலிருந்து 1976. 1989இலிருந்து 1991, 1996இலிருந்து 2001 மற்றும் 2006இலிருந்து 2011 என ஐந்து முறை முதலமைச்சராகப் பணியாற்றினார்.
அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பாத்திரத்தினை வகித்தார். இது பின்னர் இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்கியது.
டாக்டர் மு. கருணாநிதியின் மறைவால் நாடு ஒரு மிகச்சிறந்த இலக்கியவாதியை, ஒரு திறமைமிக நிர்வாகியை, ஓர் அர்ப்பணிப்புமிக்க சமூக ஊழியரை மற்றும் ஓர் உன்னதமான அரசியல் மேதகைப்பண்பாளரை இழந்திருக்கிறது. டாக்டர் மு. கருணாநிதி மறைவிற்காக நாம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம்மைவிட்டுப் பிரிந்துசென்றுள்ளவரின் நினைவைப் போற்றும் விதத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்துநின்று மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(பின்னர் உறுப்பினர்கள் எழுந்துநின்று, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.)
பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.  
இதேபோன்று மக்களவையிலும் மக்களவை சபாநாயகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்து, உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தியபின், மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
(ந.நி.)   



No comments: