Wednesday, August 8, 2018

நவீன தாராளமயக் கொள்கையே, வெளியேறு! மதவெறியே, வெளியேறு!


நவீன தாராளமயக் கொள்கையே,
வெளியேறு!
மதவெறியே,  வெளியேறு!

(மாநிலங்களவையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் 2017 ஆகஸ்ட் 9 அன்று ஆற்றிய உரை)
"வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75ஆவது ஆண்டுவிழா நாம் அனைவரும் நினைவுகூரவேண்டிய வீறார்ந்த நாளாகும்.  வரலாற்றுரீதியாக மட்டுமல்ல, அதனை ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாற்றியது என்ன என்பது குறித்தும் அறிந்துகொள்ள  வேண்டியது அவசியமாகும். 
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமானால், மகாராஷ்ட்ரத்தில் சதாரா என்னும் சுதந்திர மாநிலம் இருந்தது தெரிய வருகிறது. சதாரா சுதந்திர  இயக்கத்தின்  தலைவர், நானா பட்டீல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். இந்த அவைக்கும் வந்திருக்கிறார், மக்களவைக்கம் வந்திருக்கிறார்.
சுபாஷ் சந்திர போஸின் இந்திய சுதந்திரப் படையின் கீழ் ராணி ஜான்சி ரெஜிமெண்ட் என்ற ஒரு  மகளிர் பிரிவு செயல்பட்டிருக்கிறது. அதற்குத் தலைமை தாங்கியவர், லெட்சுமி சேகல் என்பவர். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அந்தமான் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில்  பெயர்கள் அங்கே சலவைக்கற்களால் பதியப்பட்டிருக்கிறது. அவர்களில் 80 சதவீதத்தினர் கம்யூனிஸ்ட்டுகளாவார்கள்.  ஒன்றுபட்ட வங்கத்திலிருந்தும், பஞ்சாப்பிலிருந்தும் வந்தவர்களாவார்கள். சிட்டகாங் ஆயுதங்கிடங்கை கைப்பற்றியவர்களில் தோழர் கல்பனாதத்தும் ஒருவர்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு இவ்வாறானதாகும்.
நமது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஜி இருந்த சமயத்தில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50ஆம் ஆண்டு விழா நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது நள்ளிரவு அமர்வு நடந்தது. அந்தக்காலத்தில் நாம் இவ்வாறு வரலாற்றைக் கொண்டாடுவதற்காகவும், அவற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்காகவும், இவ்வாறு நள்ளிரவு அமர்வுகளை நடத்தினோம். இப்போது ஜிஎஸ்டி-க்கு நடந்ததைப் போல அல்ல.  அப்போது குடியரசுத் தலைவர் என்ன சொன்னார். படிக்கிறேன், "நாட்டில் கான்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் அகமதாபாத் ஆலைகளில் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியில் ஆட்சி செய்தவர்களிடமிருந்து லண்டனிலிருந்த அரசு செயலாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி ஓர் அறிக்கை அனுப்பப்பட்டது. ‘அதன்  உறுப்பினர்கள் பலரது நடத்தை, பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்களாக அவர்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று அந்த அறிக்கை இருந்தது.  இதைவிட வேறென்ன கூற வேண்டும்! இவ்வாறு இந்த இயக்கமானது ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டது. அதன் தலைமை, இந்திய தேசிய காங்கிரசிடமிருந்தது உண்மைதான். நாங்களும் அங்கேதான் இருந்தோம். ‘நாங்கள்’ என்கிறபோது, ‘கம்யூனிஸ்ட்டுகள்’ என்பது பொருள். நான் அப்போது பிறக்கவில்லை. ஆனாலும், அகில இந்திய தேசிய காங்கிரசில் கம்யூனிஸ்ட்டுகள் இருந்தார்கள். 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முதன்முதலாக முழுமையான சுதந்திரம் நாட்டிற்குத் தேவை என்கிற முழக்கம் எப்போது கொண்டுவரப்பட்டது தெரியுமா? 1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற அமர்வின்போதுதான். அது யாரால் முன்மொழியப்பட்டது, தெரியுமா? அது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முன்மொழியப்பட்டது. இன்றைக்கு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதனை முன்மொழிந்த இருவரில், ஒருவர், மௌலானா ஹஸ்ரத் மொஹானி, மற்றொருவர் ஸ்வாமி குமார நந்தா. ஒரு மௌலானாவும், ஒரு ஸ்வாமியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, நாட்டிற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்கிற  அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். அப்போது அதனை மகாத்மா காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின்னர் 1929இல் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அமர்வில்தான் பூரண ஸ்வராஜ் முழக்கம் கொடுக்கப்பட்டது. இது வரலாறு.
பிரிட்டிஷ் வரலாற்றுப் பதிவாளர், எட்வர்ட் லௌட் (Edward Lowd) என்பவர், 1857இலிருந்து இந்தியாவில் நடைபெற்றுவந்த வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்தளித்திருக்கிறார்.  அவர் எழுதியிருப்பதாவது: "குழந்தைக் கொலை செய்கிற ராஜபுத்திரர்களும் (இவை என்னுடைய வார்த்தைகள் அல்ல, பிரிட்டிஷாரின் வார்த்தைகள்), மற்ற சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் பிராமணர்களும், அதாவது பன்றிக்கறியைச் சாப்பிடுகிறவர்களும், பன்றிக்கறியை வெறுக்கிறவர்களும், பசுமாட்டுக் கறியைச் சாப்பிடுகிறவர்களும், பசுமாட்டைத் தெய்வமாக கும்பிடுகிறவர்களும், அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்தால், இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிர்காலம் கிடையாது."
இந்த ஒற்றுமையின் காரணமாகத்தான் நாம் சுதந்திரம் பெற்றோம். இன்றைய தினம், இத்தகைய வரலாற்றை உருவாக்கியவர்களுக்கும், சுதந்திர  இந்தியாவை ஏற்படுத்தியவர்களுக்கும் மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம்.  1947 ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாட்டில் வேலூரில் இருந்த மத்திய சிறையில் எங்கள் தோழர் ஏ.கே. கோபாலன், தேசியக்கொடியை ஏற்றினார்.  இவ்வாறு வரலாறு பின்னிப்பிணைந்ததாகும். நம் வரலாற்றின் நிகரற்ற தன்மையே இந்த ஒற்றுமைதான். இன்றைய தினம் இதன் 75ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் எதிர்காலத்தையும் நாம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறோம்.
நமது பிரதமர் மோடி அவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது, எப்படி 1942இலிருந்து 1947 வரை மிக முக்கியமான ஐந்து ஆண்டுகளோ அதேபோன்று 2017இலிருந்து 2022வரையிலான இந்த ஆண்டுகளில் நம் குறிக்கோளை எய்திடுவோம் என்று கூறியிருக்கிறார். அந்தக் குறிக்கோள் என்ன?
1947இல் நாம் சுதந்திரம் பெற்றோம். அதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம். நாம் அனைவரும் சுதந்திர இந்தியாவின் புதல்வர்களாவோம். அத்தகைய இந்திய தேசியத்தன்மையை, இந்தியத் தேசியத்தை நாம் நம் மரபுரிமையாக, வாரிசுரிமையாகப் பெற்றிருக்கிறோம். அந்த ஐந்தாண்டுகளில்தான் நாடும் பிளவுண்டதை நாம் பார்த்தோம். அந்த ஆண்டுகளில்தான் நாட்டு மக்கள் மத்தியில் மதவெறித்தீ விசிறிவிடப்பட்டு, அதனைத் தொடர்ந்து துரதிஷ்டவசமான முறையில் அது நாடு பிளவு படுவதற்கு இட்டுச் சென்றது. இதற்கு அன்றையதினம் பிரிட்டிஷாரும் உதவி செய்தார்கள். எனவே, அந்த ஐந்தாண்டுகளை ஆராய்ந்தோமானால் அது மிகவும் இருண்ட கால கட்டமாகும்.
ரவிசங்கர் பிரசாத் (சட்ட அமைச்சர்): இன்றையதினம் புனிதமான தினம். இன்று அவர் பிரதமருக்கு எதிராகப் பேசக்கூடாது.
சீத்தாராம் யெச்சூரி: என் அருமை நண்பர் ஏன் கிளர்ச்சியடைகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவிலிருந்து வகுப்புவாதம் வெளியேற வேண்டும் என்று பிரதமர் மோடிதான் கூறினார். அவர் கூறிய வகுப்புவாதத்தைத்தான் நானும் பேசுகிறேன்.  இப்போது நான் கேட்கும் கேள்வி: இவ்வாறு வகுப்புவாதத்தை, மதவெறியை, நாட்டிலிருந்து வெளியேற்ற நாம் ஏதாவது செய்துகொண்டிருக்கிறோமா, என்பதுதான்.
திக் விஜய் சிங் (காங்கிரஸ்): இல்லை, மாறாக …(குறுக்கீடு)
சீத்தாராம் யெச்சூரி:  அந்த ஐந்தாண்டுகள் குறித்து நான் நினைவுகூர்வதற்குக் காரணம், துரதிர்ஷ்டவசமாக நாடு பிளவுபட்டதுதான்.
இன்றையதினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதன் பொருள் என்ன?  இப்போது, இந்தியாவிலிருந்து என்னவெல்லாம் வெளியேற வேண்டியிருக்கிறது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய, வறுமையை ஏற்படுத்தக்கூடிய, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே இடைவெளியை அதிகப்படுத்தக்கூடிய, இருவிதமான இந்தியர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிற,  பொருளாதாரக் கொள்கைகள் வெளியேற வேண்டியிருக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த சமயத்தில் ஏழை – பணக்காரர்களுக்கிடையிலான செல்வாதாரத்தின்  இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 சதவீதமாக இருந்தது.  இப்போது அது கிட்டத்தட்ட 60 சதவீதமாக (58.4 சதவீதம்) அதிகரித்திருக்கிறது. இது சென்ற ஆண்டு அளவீடு. இப்போது இன்னமும் அதிகமாக இருந்திடும். அதாவது நம் மொத்த உள்நாட்ட உற்பத்தியில் 60 சதவீதம் நாட்டில் 1 சதவீதமாக இருக்கக்கூடிய பணக்காரர்களின் கைகளில். 1947இல் இதற்காகத்தான் நாம் சுதந்திரம் வாங்கினோமா?
(மணியடிக்கப்பட்டது)
சீத்தாராம் யெச்சூரி: காந்திஜியைத் தடுத்துநிறுத்திட பிரிட்டிஷாரும் இவ்வாறுதான் மணியடித்துக் கொண்டே இருந்தார்கள்.  ஆனால் அவர் நிறுத்தவே இல்லை. அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறும் வரை அவர் நிறுத்தவே இல்லை. இப்போது நாம், "இந்தியாவை விட்டு வெளியேறு" என்னும் முழக்கத்தைக் கொடுத்திருக்கிறோம்.
ரவிசங்கர் பிரசாத் (மத்திய சட்ட அமைச்சர்): யெச்சூரியின் கட்சி, அவரைத் தொடர்ந்து இந்த அவையில் நீட்டிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விவாதங்கள் இந்த அவையில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இந்தியாவிலிருந்து ஏதேனும் வெளியேற வேண்டுமானால், நாட்டு மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் வெளியேற வேண்டும். நம் நாட்டில் பிளவினை ஏற்படுத்தியது மதவெறிதான். சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான போராட்டத்தைல் மக்களை ஒன்றுபடுத்தாமல் அதுதான் பிரித்துக்கொண்டிருக்கிறது. அத்தகைய மதவெறி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.  நாம் என்ன தீர்மானித்திட  வேண்டும் என்பதையும் நாம் தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலத்தை நினைவுகூர்வது மட்டும் போதுமானதல்ல. அது நல்லதுதான். ஆனால் அதிலிருந்து படிப்பினைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். என் கேள்வி இதுதான்: நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? அல்லது பிற்காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?
துணைத் தலைவர்: ஆம். மிகவும் சரியான பாயின்ட். தயவுசெய்து முடித்துக் கொள்ளுங்கள்.
சீத்தாராம் யெச்சூரி: முடித்துக்கொள்கிறேன். ஐஎன்ஏ விசாரணை குறித்துக் கூறினீர்கள். ராயல் கப்பல்படை எழுச்சி குறித்து கூறினீர்கள். அந்தக்காலத்தில் ஒரு பாடல் பாடப்பட்டது. அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்ற பொருளில் அந்தப் பாடல் அமைந்திருக்கும். எனவேதான், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் நம் இயக்கம் அமைந்திட வேண்டும். இந்தியாவில் ஓர் இந்த-பாகிஸ்தான் உருவாகக் கூடிய விதத்தில் அது இருந்திடக்கூடாது. எனவே இன்றைய தினம், "நவீன தாராளமயக் கொள்கைகளே, இந்தியாவை விட்டு வெளியேறு" என்கிற விதத்திலும், "மதவெறியே, இந்தியாவை விட்டு வெளியேறு" என்கிற விதத்திலும் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தை நாம் அனுசரித்திடுவோம்.


1 comment:

சிகரம் பாரதி said...

எழுச்சி மிக்க உரை. இதன் பொருளை உணர்ந்து செயல்பட வேண்டும். அன்று இருந்த ஒற்றுமை இன்று நம்மிடம் இல்லை. ஏதோவோர் காரணங்களுக்காக விலை போய்க் கொண்டிருக்கிறோம். விழித்தெழு மானிடா!

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/