புதுதில்லி,
ஆக. 5-
கோடானுகோடி தொழிலாளர்கள், விவசாயிகள்,
விவசாயத் தொழிலாளர்கள் ஆகியவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துக்கட்டிவிட்டு,
மோடி அரசாங்கம் நாட்டைவிட்டுப் பறந்தோடுபவர்களுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறதா
என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வினா
எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 3-4 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு
அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 4 அன்று மாலை நடைபெற்ற
பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூட்டத்தின் முடிவுகளை விளக்கி சீத்தாராம்
யெச்சூரி பேசுகையில் கூறியதாவது:
“தொழிலாளர்கள் – விவசாயிகள் வரும்
ஆகஸ்ட் 9 அன்று நடத்திடவுள்ள சிறைநிரப்பும் போராட்டத்திற்கும், அதனைத் தொடர்ந்து
வரும் செப்டம்பர் 5 அன்று தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி
நடத்திடவுள்ள மாபெரும் பேரணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் முழு
ஆதரவினை அளித்துள்ளது. இது தொடர்பாக தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்
விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது. அறிக்கையில் இல்லாத ஒருசில விவரங்களை உங்களுக்குக்
கூற விரும்புகிறேன்.
மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர்
கோடானுகோடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள்
ஆகியோரின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழித்துக்கட்டிவிட்டு, அம்மானி
வகையறாக்களுக்கும், நாட்டைவிட்டு நன்கு திட்டமிட்டுப் பறந்தோடியுள்ள சோக்சி
வகையறாக்களுக்கும் தொண்டூழியம் செய்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, ரபேல் விமான
ஒப்பந்தம். நாட்டின் பொதுத்துறை வங்கியான எச்ஏஎல் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
லிமிடெட்) நிறுவனத்திடமிருந்த ரபேல் ஒப்பந்தத்தைத் திரும்பப்பெற்று, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் முன் அனுபவம்
எதுவுமே இல்லாத அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்திடம் பல மடங்குக்
கூடுதல் தொகையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
அடுத்து, மெஹூல் சோக்சி என்பவன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனாகப்
பெற்றுக்கொண்டுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் அன்டிகுவா என்னும் நாட்டிற்குப்
பறந்து சென்றுள்ளான். அந்நாட்டின் குடிமகனாகவும் மாறிவிட்டான்.
இதே சோக்சி குறித்து குஜராத்
உயர்நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு ஒரு வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருக்கிறது. அந்த
வழக்கில் அவனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள உறுதிவாக்குமூலத்தில்
(அபிடேவிட்டில்) சோக்சி வெளிநாட்டிற்குப் பறந்து சென்றுவிடுவானோ என்கிற ஐயுறவு
இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு உறுதிவாக்குமூலம் பதிவு
செய்திருந்தபோதிலும்கூட அதன்பின்னர் அவன் நாட்டை விட்டுத் தப்பி ஓட
அனுமதிக்கப்பட்டிருக்கிறான். இது எப்படி நடக்க முடியும்? மோடி அரசாங்கத்திற்குத்
தெரியாமல் இப்படித் தப்பிச் செல்ல வாய்ப்பே கிடையாது.
இது தொடர்பாக அன்டிகுவா நாட்டின்
நீதிமன்றம் என்ன சொல்கிறது தெரியுமா?
மெஹூல் சோக்சி, இந்தியாவில் அவனுக்கு
எதிராக எவ்விதமான வழக்கும் கிடையாது என்று கூறி பாதுகாப்புத் தடை நீக்க சான்றிதழ்
கொடுத்திருப்பதாகவும், அதனைப் பெற்றபின்னர்தான் அவனுக்கு அன்டிகுவா நாட்டின்
குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நாட்டின் வங்கியை
சூறையாடிவிட்டு, வெளிநாட்டுக்கு சோக்சி தப்பித்துச் சென்றிருக்கிறான். அவனுக்கு
எதிராக எவ்விதக் குற்றப்பதிவினையும் மோடி அரசாங்கம் செய்திடவில்லை.
இவ்வாறு இந்த அரசாங்கம் ஒரு பக்கம்
நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு உதவி செய்யும் அதே சமயத்தில் நாட்டின் கோடானு
கோடி தொழிலாளர்கள் – விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் – மத்தியதர ஊழியர்கள்
வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிராகத்தான் மேலே குறிப்பிட்டவாறு
தொழிலாளர்கள் – விவசாயிகள் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி
கூறினார்.
(ந.நி.)
No comments:
Post a Comment