Sunday, August 5, 2018

பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது மாநிலங்களவையில் ஜர்னாதாஸ் பிரச்சனையை எழுப்பினார்



புதுதில்லி, ஆக.5-
நாடு முழுதும் பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள் படுகொலை செய்வது  அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவற்றைத் தடுத்திட அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஜர்னா தாஸ் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2 அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஜர்னா தாஸ் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக, பல பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். மனித உரிமை மீறல்கள், ஊழல் முதலானவற்றை வெளிக்கொண்டு வந்ததற்காகவும்  மற்றும் தங்கள் வேலைகளை உரியமுறையில் செய்துகொண்டிருந்ததற்காகவும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2018இல், மூன்று பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். இதில் சமீபத்தில் பலியானது புகழ்பெற்ற காஷ்மீர் பத்திரிகையாளரான சுஜாத் புகாரி அவர்களாவார். 2017இல் படுகொலை செய்யப்பட்ட
பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை நான்காகும். 2018இல் அதில் ஒன்று குறைவு, அவ்வளவுதான்.
புகாரி, தன்னுடைய அலுவலகத்திற்கு வெளியே, துப்பாக்கிகள் ஏந்திவந்த அடையாளம் தெரியாத மூவரால், ஜூன் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் பத்திரிகையாளராகப் பார்த்த பணிதான் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. 1992க்குப் பின்னர், இந்தியாவில் தங்களுடைய வேலைகளை உரிய முறையில் செய்தார்கள் என்பதற்காகக் கொல்லப்பட்ட 48ஆவது பத்திரிகையாளராக புகாரி மாறி இருக்கிறார். 1992ஆம் ஆண்டு என்பது, பத்திரிகையாளர்களைக் காப்பதற்கான குழு அமைக்கப்பட்ட ஆண்டாகும். அதிலிருந்துதான் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது பட்டியலிடப்படத் துவங்கியது.
சுஜாத் புகாரியின் கொலை என்பது கடந்த ஈராண்டுகளில் கொல்லப்பட்ட மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கின்ற பத்திரிகையாளர்களின் கொலையில் இரண்டாவதாகும். இதற்கு முன்பு, கர்நாடக மாநிலத்தில் கௌரி லங்கேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் கன்னடத்தில் வெளிவந்துகொண்டிருந்த கௌரி லஞ்கேஷ் பத்திரிகே என்னும் இதழின் ஆசிரியராக இருந்தார்.
சுஜாத் புகாரி, எதற்கும் எவரது நிர்ப்பந்தத்திற்கும் கீழ்ப்படியாது, துணிந்து செயல்பட்டுவந்த வீரராக இருந்தார். ஜம்மு-காஷ்மீரில் சுயேச்சையான பத்திரிகையாளர்கள் எந்த அளவிற்குச் சிரமமான சூழ்நிலைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுஜாத் புகாரியின் கொலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.
திரிபுராவில் சுதித் தத்தா என்பவரும் கொல்லப்பட்டார். 2018இல் திரிபுராவில் தேர்தல் நடந்தபின்னர், பல பதிப்பகங்கள் தங்கள் வேலைகளை நிறுத்திக் கொண்டுவிட்டன. குறிப்பாக ‘டெயிலி தேசர் கதா’ பத்திரிகைக்கு முன்பு வாசகர்கள் 52 ஆயிரமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் வாசகர்கள் 6 ஆயிரம் மட்டுமே. அவர்களுக்கும் பத்திரிகையை அச்சிடாது நிறுத்தச் சொல்லி அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது எங்களால் எந்த அரசு அலுவலகத்திலும் அல்லது விமான நிலையத்திலும்கூட அந்தப் பத்திரிகையைப் பார்க்க முடியவில்லை.
இவ்வாறு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்துநிறுத்துவதற்காக அரசின் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?”‘
இவ்வாறு ஜர்னா தாஸ் பேசினார்.
(ந.நி)


No comments: