பிரதமர் நரேந்திரமோடி,
சென்றவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், வீதியில் பகோடா பொட்டலம்
போட்டு விற்கிறவர்களையும் வேலையிலிருப்பவர்களாகத்தான் கருதிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், அவ்வாறு பொட்டலம் கட்டிவிற்பவன் நாளொன்றுக்கு 200 ருபாய் சம்பாதிக்கிறான் என்றால்
அது எந்தக் கணக்குப் புத்தகத்திலும் வருவதில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர் மேலும், “உண்மை என்னவென்றால் நாட்டில் ஏராளமானவர்கள்
வேலையில் இருந்துகொண்டிருக்கிறார்கள்,” என்றும் திருவாய்மலர்ந்திருக்கிறார்.
ஆகையால், வீதிகளில் பொருள்களை விற்பவர்களை அதிகப்படுத்தியிருப்பதன்
மூலம் வேலைவாய்ப்பைப் பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறோம் என்று பிரதமர் மோடியே கூறியிருப்பதை
நாம் இப்போது பெற்றிருக்கிறோம். மக்களின் பரிதாபகரமான
நிலையையே மோடி எப்படி போற்றுகிறார்? கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோடியின் ஆட்சி, வேலைவாய்ப்பை
உருவாக்குவதிலும், அர்த்தமுள்ள வகையில் புதிய வேலைகளை உருவாக்குவதிலும் பரிதாபகரமான
முறையில் தோல்வி அடைந்திருப்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி ஆண்டுக்கு இரண்டு
கோடி வேலைகளை உருவாக்குவோம் என்று உறுதிமொழி அளித்ததை நினைவுகூர்க.
மோடி குறிப்பிடும்
வேலைவாய்ப்பின் தன்மை என்ன? ‘2015-16ஆம் ஆண்டு
வேலைவாய்ப்பு – வேலைவாய்ப்பின்மை ஆய்வறிக்கை‘யின்படி, நாட்டிலுள்ள உழைப்பவர்களில்
கிட்டத்தட்ட சரிபாதிப்பேர் (46.6 சதவீதம்),
சுய வேலைவாய்ப்பினை மேற்கொண்டிருப்பவர்கள். இவர்களில் 41 சதவீதம் ஓராண்டுக்கு 60 ஆயிரம்
ரூபாய் அளவிற்கு ஈட்டுபவர்களாவார்கள். அதாவது மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
எனவே, அற்ப வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய இதைத்தான் இவர்கள் வேலை வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.
முறையான வேலைவாய்ப்பு
இல்லாததாலேயே, அல்லது, முறையான துறைகளில் வேலை கிடைக்காததாலேயே மக்கள் “சுய வேலைவாய்ப்புக்கு”
மாறுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நவீன தாராளமயக் கொள்கைகள், வேலைகளை உருவாக்காத ஒருவிதமான
பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்படியே வேலை கிடைத்தாலும் அது முறைசாராத் தொழில்களில் அற்ப ஊதியத்துடன் அல்லது
முறையான தொழில்களில் பிரதானமாக ஒப்பந்த அடிப்படையில் அமைந்திருக்கும்.
பொருளாதார
மந்தமும், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும் அனைத்துப் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளைக்
கொன்றுவிட்டன. கிராமப்புற வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருப்பதும் நிலைமையை மோசமாக்கி
இருக்கிறது.
இத்தகைய பின்னணியில்தான்,
மோடி வீதியில் பகோடா விற்பதுகூட வேலைவாய்ப்புதான்
என்று படாடோபமாக அறிவித்திருக்கிறார். தொழிற்சாலைகளில்
பணியாற்றிவந்த தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டபின்னர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக
வீதிகளில் வண்டியில் வைத்து காய்கறி விற்பவர்களையும், வேலைதேடி கிராமப்புறங்களிலிருந்து
நகரை நோக்கி வந்துள்ள ஏராளமானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக இவ்வாறு “சுயவேலை”களைத்
தேடிக்கொண்டிருப்பவர்களையும் இவ்வாறு கூறியிருப்பதானது கொடூரமான நகைச்சுவையாகும். இவர்கள் அனைவரும் தங்கள் தகுதிக்குக் குறைந்த வேலைபார்ப்பவர்கள்
(underemployed). எப்படியாவது வாழ வேண்டும் என்பதற்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள்.
அரசாங்கம்,
சுயவேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்காக கடன்கள்
அளிப்பதற்கு முத்ரா திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் பயனடைந்தவர்களில்
90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்குக் கீழேதான் கடன்கள் பெற்றிருக்கிறார்கள்.
இத்தொகையை முதலீடாக வைத்துக்கொண்டு எவ்விதத்திலும்
வேலைவாய்ப்பை அளித்திட முடியாது.
“இந்தியாவில்
உற்பத்தி செய்க” என்கிற மோடியின் முழக்கம், உற்பத்தித் துறையை (manufacturing
sector) உயர்த்துவதையும், தரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் அர்த்தப்படுத்தியவைகளாகும்.
எனினும் இந்தத் திட்டம் உருக்கொள்வதிலேயே படுதோல்வி
அடைந்து விட்டது. உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த
பல நிறுவனங்கள் சென்ற ஆண்டில் வேலைகள் கிடைக்காததால் தங்களின் தொழிலாளர்களை வீட்டிற்கு
அனுப்பிவிட்டன.
எனவே, இப்போது
நாம் பிரதமரால் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, பிரதமர் நாட்டில்
வேலைவாய்ப்பு சந்தையை நோக்கி நுழைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு
அதிக “பகோடா வேலைகள்” காத்திருக்கின்றன என்ற உறுதிமொழியை அளித்திருப்பதன் மூலம் நாட்டில்
இளைஞர்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
(ஜனவரி 31, 2018)
(தமிழில்: ச.வீரமணி)