Sunday, February 24, 2013

வலுத்து வரும் மக்கள் போராட்டங்கள்


பல வழிகளில் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலை நிறுத்தமாகும். சுதந்திர இந்தி யாவில் முதன்முறையாக இரு நாட்களுக்கு, அதாவது 48 மணி நேரத்திற்கு, அறைகூவல் விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தம் இது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து (மொத்தம்11) மத்தியத் தொழிற்சங்கங்களும் இணைந்து முதன்முறையாக, தங்கள் தலைமையின் அரசியல் வித்தியாசங்களை மறந்து கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்தமும் இதுவாகும். இந்த அறை கூவலை நாட்டில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் அநேகமாக அனைத்துத் தேசிய சம்மேளனங்களும் ஆதரித்திருக் கின்றன. மேலும் இந்த அறைகூவலுக்கு மாநில அளவில் இயங்கிடும் பல்வேறு தொழிலாளர் மற்றும் ஊழியர் அமைப்புகளும், பல்வேறு தொழிற்சாலைகளில் சுயேச்சையாக இயங்கிடும் தொழிற்சங்கங்களும் கூட ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் இந்த அறைகூவலுக்கு வெளிப்படுத்தி இருந்தன. கூடுதலாக, விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள் மற்றும் மாதர் சங்கங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க, முன்னெப்போதும் இல்லாத முறையில் நடைபெறும் தொழி லாளி வர்க்கத்தின் நடவடிக்கைக்குத் தங் கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தன. இந்திய ஆளும் வர்க்கங்கள் கடந்த இரு பதாண்டுகளாகப் பின்பற்றிவரும் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங் களின் விளைவாக உழைக்கும் வர்க்கம் மற் றும் பல்வேறு விதங்களிலும் கடும் உழைப் பில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மீது அடுத் தடுத்துத் தாக்குதல்களைத் தொடுத்துவரும் பின்னணியில்தான் இப்பொதுவேலைநிறுத் தம் நடைபெற்றது. உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும், பல்வேறு அமைப்பு களும் எழுப்பிய நியாயமான கோரிக்கைகள் குறித்தும், அவற்றிற்காக அவை கடந்த காலங்களில் நடத்திய வீரஞ்செறிந்த நட வடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் இது வரை ஆட்சியாளர்கள் காதில் விழவில்லை.

இம்முறை கூட, பல மாதங்களுக்கு முன்பே, தொழிற்சங்கங்களால் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தும், இந்தியாவில் உள்ள சட்டங்களின் கீழ் வேலைநிறுத்த அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தும், ஆட்சியாளர்கள் மத் தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களை மிகவும் காலம் தாழ்த்தி, அதாவது பொது வேலைநிறுத்தம் நடைபெறுவதற்கு முதல் நாளான பிப்ரவரி 19 அன்று மாலைதான், பேச்சுவார்த்தைக்காக அழைத்தது. போராட் டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தலை வர்களிடம் அறைகூவலை விலக்கிக் கொள் ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம்என்று பதிவு செய்வதற்காக மட்டுமே அர சாங்கம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவு. இது மிகவும் நகைக்கத்தக்க ஒரு செயலாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் மீது முறையாக விவாதிக்க வேண்டும் என்கிற உணர்வுகூட மத்திய அமைச்சர்களிடம் காணப்பட வில்லை. மாறாக, வேலைநிறுத்தத்திற்கான அறைகூவல் விலக்கிக் கொள்ளப்பட்டால் மட்டுமே கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.நாளும் உயரும் விலைவாசியைக் கட்டுப் படுத்த உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்திடு, நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை கிலோ ரூ.2 வீதம் கொடுப்பதன்மூலம் உணவுப் பாது காப்பை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்து, கரத்தால் உழைக் கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதத் திற்கு பத்தாயிரம் ரூபாயைக் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயித்திடு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு, தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையையும், முறைசாராத் தொழிலாளர்களின் சமூக, பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடு, ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சனைகளைக் களைந்திடு உட்பட பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இப் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாளும் ஏற்றப்பட்டுவரும் பொருளாதாரச் சுமை களின் காரணமாக கடும் வேதனைக்கும் துயரத்திற்கும் ஆளாகியிருக்கும் பெரும் பான்மை மக்களுக்கு ஓரளவிற்காவது நிவா ரணம் கிடைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டே இக்கோரிக்கைகள் அனைத் துமே உருவாக்கப்பட்டன. பொது வேலை நிறுத்தத்தின் இரண்டா வது நாள் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இக்கூட்டத்தொடரின்போது நாடாளு மன்றம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் லோக்பால் மற்றும் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவுகள், நீதிபதி வர்மா குழு அறிக்கையை சட்டமாக மாற்றுதல் போன்ற பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆயினும், பட்ஜெட் சம்பந்தமாக முன்மொழிவு களை நிறைவேற்றுவது என்பதுதான் பிர தான நிகழ்ச்சி நிரலாகும். பொருளாதார மந்தம் மிகவும் மோசமாக உள்ள சூழ்நிலையின் பின்னணியில் இந்த ஆண்டு பட்ஜெட் முன்மொழிவுகள் வருகின் றன. சென்ற நிதியாண்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 5 விழுக்காடு என்கிற மத்திய புள்ளியியல் அமைப்பின் மதிப்பீட்டை நிதியமைச்சகம் மறுத்த போதிலும், மேற்படி புள்ளியியல் அமைப்பின் மதிப்பீடே உண்மைக்கு மிக நெருக்கமான ஒன்று என்பது எதார்த்தமாகும். தொழில் உற்பத்தி சென்ற டிசம்பரில் 0.6 விழுக்காடு அளவிற்குச் சுருங்கிவிட்டது. இதேபோன்றுதான் சென்ற நவம்பரிலும் இருந்தது. 2012 ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் தொழில் உற்பத்தி வெறும் 0.7 விழுக்காடு அளவிற்கே அதிகரித்திருக்கிறது. ஆனால் சென்ற ஆண்டு இது 3.7 விழுக்காடாக இருந் ததுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் வீழ்ச்சியின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், நம்முடைய அட்டவணையில் 75 விழுக்காடு அளவிற்கு இருக்கின்ற உற்பத்தித் துறை யானது, டிசம்பரில் 0.7 விழுக்காடு வீழ்ச் சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் விளை வாக வேலையில்லாத் திண்டாட்டமும் அதி கரித்துள்ளது. 2013 ஜனவரியில் உணவுப் பணவீக்கத்தின் அளவு 10.8 விழுக்காடு அள விற்கு இருந்ததுடன், நாளும் உயரும் விலை வாசியும் இத்துடன் இணைந்து கொள்கிறது. காய்கறிகளின் விலைகள் 26 விழுக்காடு விகிதத்தில் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இதேபோன்று சமையல் எண்ணெய் 15 விழுக்காடு, கறி/மீன்/முட்டைகள் 14 விழுக்காடு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் 15 விழுக்காடு, சர்க்கரை 13 விழுக் காடு உயர்ந்திருக்கிறது. வரவிருக்கும் பட் ஜெட் இவ்வாறு நாளும் அதிகரித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து ஓரளவிற்காவது நிவாரணம் அளித்திடக்கூடிய வகையில் அமையக்கூடும் என்று மக்கள் எதிர்பார்ப்பது இயற்கையே. நடைபெற்ற தொழிலாளர் வர்க் கத்தின் இரு நாட்கள் வேலைநிறுத்தம் அர சாங்கத்திடம் துல்லியமாகக் கோருவதும் இதுவேயாகும்.
ஆயினும், அரசாங்கத்தின் நடவடிக்கை களை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, மக் களின் துன்ப துயரங்கள் மேலும் அதிகரிக்கக் கூடிய விதத்தில்தான் அதன் நடவடிக்கை கள் இருக்கும்போன்றே தோன்றுகிறது. மக் களுக்கு ஏதேனும் நிவாரணம் அளிக்கக் கூடிய விதத்தில் அது இருக்கும் போல் தெரியவில்லை. நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டப்போகிறோம் என்ற பெயரில், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மாதந் தோறும் உயர்த்திடவும், ஏழைகளுக்கு அளிக் கப்பட்டு வந்த மானியஙகளைப் பெரிய அள வில் குறைத்திடவும் நடவடிக்கை எடுக்க இருப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே குறிப்பாகக் கூறிவிட்டது. தன்னுடைய பணக் காரர் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக, பணக்காரர்களுக்கும் இந்திய கார்ப்ப ரேட்டுகளுக்கும் மிகப்பெரிய அளவில் அளித்து வரும் வரிச்சலுகைகள் தொடரும் என்பதைக் குறிப்பாகத் தெரிவித்துவிட்டது. கடந்த நிதியாண்டில் மட்டும் அரசாங்கத் திற்குத் தற்போது இருந்து வரும் நிதிப்பற் றாக்குறைத் தொகையை விட அதிகமான அளவிற்கு, அதாவது 6000 கோடி ரூபாய் அள விற்கு, வரிச் சலுகைகளை அளித்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர் திருத்தக் கொள்கைகள் இயல்பாகவே இந் திய மக்களின் வயிற்றில் அடித்து, சர்வதேச நிதி மூலதனத்திற்கு ஆதரவாகச் செயல் படுகின்றன. இதன் விளைவாகத்தான், அதிகாரவர்க்கச் சிந்தனை என்பது சர்வதேச நிதிமூலதனத்தைக் கவர்வதன் மூலம் வளர்ச் சியைப் பெருக்கிடலாம் என்று கருதி, அதற் கேற்ற வகையில் ஆலோசனைகளை வழங் குவதுபோல் தோன்றுகிறது. மேலும், பட்ஜெட்டானது,தொடர்ந்து இருந்துவரும் உலக நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்பதையும் பிரதி பலித்தாக வேண்டும். 2013ஆம் ஆண்டிற் கான உலக அளவிலான வேலைவாய்ப்புகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தனி அறிக்கை ஒன்று ‘‘உலக நிதி நெருக்கடி ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகி யுள்ள நிலையில், உலக வளர்ச்சி விகிதம் என்பது தொடர்ந்து மந்த நிலையில் இருப்ப தாகவும், வேலைவாய்ப்பின்மை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருப்ப தாகவும்’’ குறிப்பிட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டுவாக்கில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாது இருப்பார்கள் என்றும், கூடுதலாக 10 கோடி பேர் இருக்கும் வேலை களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மதிப்பிட்டிருக்கிறது. தற்சமயம் 35 விழுக் காட்டிற்கும் மேலான இளைஞர்கள் எவ்வித வேலையும் கிடைக்காது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது என்பது வருமான வளர்ச்சிவிகிதத்தின் மீது நிர்ப்பந் தத்தை ஏற்படுத்தி இருப்பதும் (இந்தியா வைப் பொறுத்தவரை பணவீக்கமும் சேர்ந்து) உண்மை ஊதியத்தைக் கடுமையாகக் கீழிறக்கிட நிர்ப்பந்தித்து வருவதாகவும்’’ அந்த அறிக்கையின் முடிவில் கூறப்பட் டிருக்கிறது. இவற்றின் காரணமாக, மக் களின் வாங்கும் சக்தி குறைந்து, பொருளா தார நடவடிக்கைகளின் வேகமும் கணிச மான அளவிற்குக் குறைந்துகொண்டே செல் கிறது என்றும் அது கூறுகிறது.மக்களின் தேவைகளுக்கு முட்டுக் கொடுத்து அவர்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, உலக முத லாளித்துவமானது தன்னுடைய நெருக்கடி யிலிருந்து மீள்வதற்கு மேற்கொண்டிடும் நட வடிக்கைகள் புதியதொரு நெருக்கடியை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாங் கும் சக்தி கூர்மையாக வீழ்ச்சியடைந்திருப் பதிலிருந்து மீள்வதற்காக அது அவர்களுக்கு மிகவும் எளிய தவணைகளில் கடன்கள் கொடுப்பதன் மூலம் சரி செய்துகொள்ளலாம் என்று கருதியது. இந்தக் கடன்களை இவர் களால் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், உலகப் பொருளாதார மந் தத்துடன் நெருக்கடியின் இரண்டாவது கட் டம் தொடங்குகிறது. இந்நெருக்கடியி லிருந்தும் மீள்வதற்காக, நெருக்கடியை இவ் வாறு உருவாக்கிய உலக நிதி ஜாம்ப வான்களுக்கு, அவர்கள் இருக்கின்ற நாடு களில் உள்ள அரசுகள் அவர்களின் திவால் தன்மையைத் தங்கள் திவால் தன்மையாக மாற்றிக்கொண்டு அவர்களுக்கு நிதி உதவி அளித்துக் காப்பாற்றியுள்ளன. இது நெருக் கடியின் மூன்றாவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. கார்ப்பரேட் திவால்தன்மைகள் அந்தந்த (வளர்ச்சியடைந்த முதலாளித்துவ) நாடுகளில் உள்ள அரசுகளின் திவால் தன் மைகளாக மாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அரசாங்கங்கள் தங்கள் செல வினங்களைக் குறைப்பதற்காக, இந்நாடு களில் பல ‘‘சிக்கன நடவடிக்கைகள்என்ற பெயரில் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கிவந்த நிதிஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்தன. இது மக்களின் வாங்கும் சக் தியை மேலும் சுருக்கி, அதனை அடுத்து, வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் மந்த நிலைமையை உருவாக்கி நெருக்கடியின் நான்காவது கட்டத்திற்கு இட்டுச் சென்றது. லண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டி யன்நாளேடு, பிரிட்டனில் கடந்த 70 ஆண்டு காலமாக இருந்து வந்த மக்கள் நலஅரசு இறந்துவிட்டது என்று கூறி ‘‘மரண அறிவிப்புஒன்றை சமீபத்தில் வெளியிட் டிருந்தது. அன்றைய இதழில், ‘‘இரங்கல் குறிப்புகளுக்குப் பதிலாக, தி கார்டியன் கடிதப்பக்கத்தில் சிறப்பு வெளியீடு’’ வெளி யிட்டிருந்தது.நெருக்கடியின் ஐந்தாவது கட்டம் தற் போது நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா தற்சமயம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அதன் தற் போதைய கடன் என்பது அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். இவ் வாறு உலகப் பொருளாதாரம் தன்னுடைய நெருக்கடிக் கட்டங்களுக்குள் ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டது.இந்தப் பின்னணியில், இந்தியப் பொரு ளாதாரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் நம் நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பெரிய அளவில் விரிவாக்கு வதில் கவனம் செலுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கு பொது முதலீடுகளைக் குறிப்பிட்ட அளவிற்கு உயர்த்திட வேண்டும். அதன் மூலமாக பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
அதன் விளைவாக உள்நாட்டுத் தேவைகளும் பெரிய அள விற்குப் பெருகிடும். இன்றைய உலகப் பொரு ளாதார நெருக்கடி சூழ்நிலையில் இதிலி ருந்து உய்வதற்கு இது ஒன்றே வழியாகும்.இவ்வாறு பொது முதலீடுகளை அதிகப் படுத்துவதற்கான வளங்களுக்கு நமக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உயர் மட்ட ஊழல் களை ஒழித்துக்கட்டினோமானால், பணக் காரர்களுக்கு அளித்துவரும் வரிச்சலுகை களை நிறுத்தினோமானால் இது ஒன்றும் கடினமான வேலையே அல்ல. இவ்வாறு பாதுகாக்கப்பட்ட நம் நாட்டின் வளங்களை பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தி, நம் பொருளாதாரத்தை ஒரு வலுவான நிலைக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும், நம் மக் களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம் படுத்திட முடியும்.பெரும்பான்மையான நாட்டு மக்களின் நலன்களைக் காத்திட வேண்டுமானால் பட் ஜெட் இத்தகைய திசை வழியில் அமைந்திட வேண்டும். அவ்வாறில்லையெனில், எதிர் வருங்காலங்களில் மக்களின் மகத்தான போராட்டங்களை எதிர்கொள்ள ஆளும் வர்க் கங்கள் தயாராகட்டும் என்று எச்சரிக்கிறோம். 
(தமிழில்: ச.வீரமணி)

மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப்பயணம்:பிரகாஷ்காரத் பேட்டி





மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப்பயணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது
தில்லியில் பிரகாஷ்காரத் பேட்டி
புதுதில்லி, பிப். 22-
நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தக்கோரியும், வீடற்றோருக்கு வீட்டுமனைகள் வழங்கக்கோரியும் மற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம் சனிக்கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்குகிறது என்றும் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் நாடு முழுதும் பயணம் செய்தபின், நிறைவாக தில்லி ராம்லீலா மைதானத்தில் மார்ச் 19 அன்று பிரம்மாண்டமான பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
பிப்ரவரி 23 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அதனையொட்டி தலைநகர் தில்லியில் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, எஸ். ராமச்சந்திரன்பிள்ளை மற்றும் பிருந்தாகாரத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் வாழ்வைச் சூறையாடும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மாற்றுப் பாதைக்கான கோரிக்கைகளை முன்வைத்தும் போர் முழக்கப் பயணம் 23ஆம் தேதியன்று தமிழ்நாடு, கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறது. இதேபோல் கொல்கத்தாவிலிருந்தும், மும்பையிலிருந்தும் அமிர்தசரசிலிருந்தும் பிரச்சாரப் பயணங்கள் தொடங்குகின்றன. பயணக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளிலிரும் பயணம் செய்தபின்னர் நிறைவாக மார்ச் 19 அன்று தில்லியில் ராம்லீலா மைதானத்தில் மகத்தான பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பயணத்தின் நோக்கம், மக்கள் மத்தியில் மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளை எடுத்துக் கோருவதும், இடதுசாரிக் கட்சிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, போராட அழைப்பதுமாகும். பயணத்தின்போது நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐமுகூ அரசாங்கத்திற்கும் பல மாநிலங்களில் பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதும் மக்கள் மத்தியில் விளக்கப்படும்.
பிரச்சாரப் பயணம் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தி, உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்கிடு. வீடற்ற அனைத்துக் குடும்பத்தினருக்கும் வீட்டுமனைகள் வழங்கிடு. விலைவாசியைக் கட்டுப்படுத்து. அனைத்துக் குடும்பத்தினருக்கும் பொது விநியோக முறையை அமல்படுத்தி மாதத்திற்கு 35 கிலோகிராம் உணவு தான்யங்களை கிலோ 2 ரூபாய் வீதம் வழங்கிடு. உணவு தான்யங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் முன்பேர வர்த்தகத்தைத் தடை செய். கல்வி நிறுவனங்களையும் பொது சுகாதார சேவைகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்து. கல்விக்கும் பொது சுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்கு. சமூக நீதி வழங்கிடு. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் கடிவாளமிடு. நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கிடு. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்பிரச்சாரப் பயணம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 24 அன்று முதல் பயணம் தமிழகம், கன்னியாகுமரியிலிருந்து புறப்படுகிறது. இப்பயணக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் தலைமைவகிக்கிறார். மேலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், எம்.ஏ.பேபி மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் வி. சீனிவாசராவ்மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் இப்பயணக்குழுவில் இடம் பெறுகிறார்கள். இப்பயணக்குழுவை நான் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறேன்.
இரண்டாவது பயணக்குழு மார்ச் 1 அன்று கொல்கத்தாவிலிருந்து புறப்படுகிறது. இப்பயணக்குழுவிற்கு நான் (பிரகாஷ்காரத்) தலைமை வகிக்கிறேன். இக்குழுவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரகள் பிமன்பாசு, யோகேந்திர சர்மா, சுபாஷினி அலி மற்று.ம ஜே.எஸ். மஜூம்தாரி இடம் பெறுகிறார்கள்.
மூன்றாவது பயணக்குழு மார்ச் 4 அன்று அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக்கிலிருந்து புறப்படுகிறது. இக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமை வகிக்கிறார். மத்தியக்குழு உறுப்பினர்கள் ஹன்னன் முல்லா, இந்தர்ஜித் சிங் மற்றும் ராஜேந்திர சர்மா இக்குழுவில் இடம்பெறுகிறார்கள்.
  நான்காவது பயணக்குழு மும்பையிலிருந்து புறப்படுகிறது. இக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தலைமை வகிக்கிறார். மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, மத்தியக்குழு உறுப்பினர்கள் முகமது சலீம், மரியம் தாவலே இக்குழுவில் இடம் பெறுகிறார்கள்.
 இவை தவிர அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து ஒரு பிரச்சாரப் பயணக்குழு புறப்பட்டு கொல்கத்தா பயணக்குழுவுடன் இணைந்து கொள்கிறது. இப்பயணக்குழுவை திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
ஒடிசா மாநிலம் பரலகெமுண்டியிலிருந்து ஒரு பயணக்குழு புறப்பட்டு கொல்கத்தா பயணக்குழுவுடன் இணைந்து கொள்கிறது. இக்குழுவினரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த் மிஷ்ரா துவக்கி வைக்கிறார்.
இதேபோன்று இமாசலப்பிரதேசம் சிம்லாவிலிருந்து புறப்படும் ஒரு பயணக்குழு அமிர்தசரஸ் பயணக்குழுவுடன் இணைந்து கொள்கிறது. குஜராத் பவநகர் ஆகிய இடங்களிலிருந்து பயணக்குழு மும்பை பயணக்குழுவுடன் இணைந்து கொள்கிறது.
இவையில்லாமல் தமிழகம், ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமா துணைப் பயணக்குழுக்களும் பயணங்கள் மேற்கொண்டு பிரதான பயணக்குழுவுடன் இணைந்து கொள்கின்றன. ஒட்டுமொத்தத்தில் நாடு முழுதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் இப்பயணக்குழுவினர் பயணம் மேற்கொள்கிறார்கள்.
போர்முழக்கப்பயணத்தின் நோக்கத்தை விளக்கி பத்து லட்சம் பிரதிகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாநில மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவை பயணத்தின்போது மக்களிடம் விநியோகிக்கப்படும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
‘‘எப்படி இவ்வளவு தூரத்தையும் பயணம் செய்யப்போகிறீர்கள்?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, நிச்சயமாக ரதம் கிடையாது என்றும், பத்து, பதினைந்து பேர் அமரக்கூடிய விதத்திலான வேன்கள் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும், ஆங்காங்கே தெருமுனைக் கூட்டங்கள் நடத்திக்கொண்டே பயணக்குழுவினர் செல்வார்கள் என்றும் பிரகாஷ்காரத் கூறினார்.  
‘‘ஏன் திடீரென்று இவ்வாறு பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள்? திடீர் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாடு இவ்வாறு ஒரு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும் என்று எங்களைப் பணித்தது என்றும் அதன் அடிப்படையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.  தேர்தல் வருமாவராதா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும், முன்கூட்டியே இப்பயணம் திட்டமிடப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிர்ச்சியளிக்கும் கொலை



எல்டிடிஇ-இனருக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களைப் புரிந்திருப்பதற்கான சாட்சியங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. எல்டிடிஇ தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சானல் ஒன்றின் மூலமாக இந்த வாரத்தின் முற்பகுதியில் ஒளிபரப்பப்பட்டதானது மேற்படி 12 வயது சிறுவன் இலங்கை ராணுவத்தினரால் மிக அருகில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதைக் காட்டியது.
அந்தச் சிறுவன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் சில மணி நேரங்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தது போன்று  அதனைப் பார்க்கும்போது தோன்றியது. இதே சேனல் அலைவரிசை சென்ற ஆண்டு வெளியிட்ட வீடியோ அடிக்குறிப்புகளில் மேற்படி சிறுவன் பாலச்சந்திரன் அவனுடைய மெய்க்காவலருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் சிறுவனான பாலச்சந்திரன், யுத்தத்தின் காரணமாக எதேச்தையாகக் கொல்லப்பட வில்லை, மாறாக இதர தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தினரால் குறி வைத்துக் கொல்லப் பட்டதைப் போன்றே பாலச்சந்திரனும் கொல்லப் பட்டிருக்கிறான் என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.    எல்லா யுத்தங்களுமே கொடூரமானவைகள்தான். அதிலும் குறிப்பாக இலங்கை அரசாங்கம்  தன் சொந்த மக்கள்மீதே தொடுத்திருந்த யுத்தம் மிகவும் பயங்கரமானது.  யுத்தம் தொடங்கிய திலிருந்தே கடந்த முப்பதாண்டுகளில்  அது ஆகாய வழியாக ஆயிரக்கணக்கான குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது வீசியது. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் மிகவும் இழிவான முறையில் கேவலமான செயல்களில் ஈடுபட்டதைப் பார்த்தோம். சரணடைந்த  போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் கூட நிர்வாணப்படுத்தி, துன்புறுத்திசுட்டுக் கொன்றார்கள். குழந்தைகளைக் கூட அவர்கள் சுட்டுக் கொன்றார்கள். இவை அனைத்தும், யுத்தம் தொடர்பாக நடைமுறையில் இருந்துவரும் சர்வதேச நெறிமுறைகளை முற்றிலும் மீறிய செயல்களாகும். கொழும்பில் உள்ள உயர்மட்டத் தலைவர்களிடம் அனுமதி பெற்றபின்பே பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றே தெரிகிறது. யுத்தத்தின் விதிகளை படுமோசமாக மீறியுள்ளமைக்காக இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் உலகம் முழுதும் மக்களின் மத்தியில் ஆவேச உணர்ச்சியை எழுப்பியுள்ளதைப்  புரிந்துகொள்ள முடிகிறது.  இலங்கை அரசாங்கம் மேற்படி புகைப்படங்கள் ‘‘போலியானவை’’ என்று தள்ளுபடி செய்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எல்டிடிஇ உயர்மட்ட தலைவர்கள், அவர்களுடைய உறவினர்கள் உட்பட, கொல்லப்பட வேண்டும் என்கிற உத்தரவு உயர்மட்டத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்பதால் இக்கொடூரமான குற்றங்களைப் புரிந்திட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப் படுவது என்பது சந்தேகமே.   
இலங்கை அரசாங்கம் யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் புரிந்ததற்கான சாட்சியங்களைப் பல புலனாய்வுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்சே அரசாங்கம்  இதற்குப் பதில் சொல்லாமல் பசப்பு வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வருவதைக் கண்டு சர்வதேச சமூகம் இதுவரை பொறுமை காத்து வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதி கோரி செயல்பட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது.  இலங்கை மீது நடவடிக்கை எடுத்திட சர்வதேச அளவில் நடைபெறும் முயற்சிகளுக்கு இந்தியாவும் ஓர் அங்கமாக இருந்திட வேண்டும். வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் முனைப்புடன் இறங்கிட வேண்டும். 
தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொன்றுகுவித்திட உத்தரவு பிறப்பித்தவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற மேலும் காலதாமதம் செய்வதென்பது  யுத்தக் குற்றங்களுக்கு மனச்சாட்சி இன்றி துணைபோனதாகவே கொள்ளப்படும்.
(நன்றி: டெக்கான் ஹெரால்டு தலையங்கம், பிப்ரவரி 22,2013. தமிழில்: ச.வீரமணி)

Saturday, February 23, 2013

மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பில் பிப்ரவரி 24 முதல் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் நாட்டின் பல முனைகளிலிருந்தும் தொடங்கவிருக்கிறது. அன்றையதினம் கன்னியாகுமரியிலிருந்து தில்லி நோக்கி முதல் பயணக்குழு புறப்படுகிறது. மற்ற மூன்று பயணக் குழுக்கள் கொல்கத்தா, அமிர்தசரஸ் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து வரும் நாட்களில் புறப்பட இருக்கின்றன. குவாஹாத்தி, பரலேகமுண்டி, சிம்லா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களிலிருந்தும் பயணக் குழுக்கள் புறப்பட்டு, இப்பயணக் குழுக் களுடன் இணைந்து கொள்கின்றன. இவையன்றி பல மாநிலங்களில் துணைப் பயணக்குழுக்களும் தொடங்கப்பட்டு, பிரதானப் பயணக்குழுக்கள் தங்கள் மாநிலங்களுக்கு வரும்போது, அவற்றுடன் இணைந்து கொள்கின்றன. நான்கு பிரதானக் குழுக்களும் சங்கமிக்கும் நாளான மார்ச் 19 அன்று தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெற விருக்கிறது.
ஏன் இந்தப் பயணக் குழுக்கள்?
எதற்காக இந்தப் பயணக்குழுக்கள்?  நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஆழமாகியுள்ளது; விரிவடைந்துள்ளது. உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் உள்ளவர்கள் இந்தியாவிலும் சிலர் உள்ளனர். சிலரைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், மிகப் பெரிய அளவில் ஏழைகளும் இந்தியாவில் உள்ளனர். உலகில் ஊட்டச் சத்தின்றி வாடும் குழந்தைகளை மிகப்பெரும் எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடாக மிகவும் வெட்கக் கேடான முறையில் இந்தியா மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கிய பின்னர், கடந்த இருபதாண்டுகளில், மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். வேலை யில்லாதோர் எண்ணிக்கை அதிவேகமாக வளர்ந்திருக்கிறது. சமீப காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி (jobless growth) மட்டுமே காணப்படுகிறது. இவை அனைத்துமே திவாலாகிப் போன முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கொள்கையின், அதிலும் குறிப்பாக கடந்த இருபதாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமயக் கொள்கையின், விளைவேயாகும். நாட்டில் பெரும் வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், பன் னாட்டு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஊகவர்த்தகர்கள் மற்றும் மஃபியா கும்பல்கள் அபரிமிதமானமுறையில் தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாட்டில் மிகவும் வலுவாக இருக்கக்கூடிய இத்தகு சக்திகள், நாட்டின் செல்வாதாரங்களை முழுமையாகச் சூறையாடுவதற்கு உதவக்கூடிய விதத்திலேயே ஆட்சியாளர்களின் கொள்கைகள் வடிவமைக் கப்பட்டுள்ளன.
இவர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தின் மீதான வரிகள் குறைக் கப்பட்டிருக்கின்றன. இதுநாள் வரை இருந்த வரிவிதிப்புகளும்கூட இவர்கள் கட்டுவதைத் தவிர்க்கக் கூடிய விதத்திலேயே புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் இவர் களுக்கு உதவிவருகின்றன. அதேசமயத்தில் அரசாங்கம் விலைவாசியை உயர்த்தக்கூடிய விதத்திலும், பண வீக்கத்தை அதிகரிக்கக்கூடிய விதத் திலும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. பெட்ரோல், டீசல், இரசாயன உரங்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கு அளித்து வந்த மானியங்களை வெட்டிச் சுருக்கியதன் மூலம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசிகளின் காரணமாக மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் - பாஜக ஆகிய இரு கட்சிகளுமே நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கி, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தூக்கிப் பிடிப்பவைகளேயாகும். அது, மத்தியில் ஆட்சி செய்யும் ஐ.மு.கூட்டணி அரசாங்கமானாலும் சரி அல்லது பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களானாலும் சரி. தனியார்மயம், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு நாட்டின் செல்வாதாரங்களை ஒப்படைத்தல், அந்நிய நிதி மூலதனத்தின் நலன்களுக்கு விசுவாசமாக இருத்தல் என எந்த விஷயத்திலும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே வித்தியாசம் எதுவும் கிடையாது. அரசின் மிக உயர்ந்த இடங்களிலும், பொது நிறுவனங்களிலும் காணப்படும் லஞ்ச ஊழல்கள், நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரிக்க முடியாத அங்கங்களேயாகும். இவைகள் பெரும் வர்த்தக நிறுவனங்கள் - அரசியல்வாதிகள் - அதிகாரவர்க்கத்தின் இடையேயுள்ள நெருக்கமான கள்ளப்பிணைப்பின் வெளிப்பாடேயாகும். இத்தகைய லஞ்ச ஊழல் மூலதனக் குவியலின் ஒரு கருவியாகும். நவீன தாராளமயக் கொள்கைகளை மாற்றாமல் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது முடியாது. காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளால் ஊழலைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாது.
ஏனெனில் அவையும் ஊழல் என்கிற நெருக்கமான பிணைப்புடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்தவைகளேயாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளால் மட்டுமே இத்தகைய ஊழல் என்னும் தொற்றுநோயினால் பாதிக்கப்படாமல் அவற்றை எதிர்த்துத் துணிந்து நிற்க முடியும். இவ்வாறு மக்களைச் சூறையாடக் கூடிய முதலாளித்துவப் பாதையானது சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சமூகப் பதற்ற நிலைமைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. அதன் மூலமாக நாட்டில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கும், அவற்றின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கும் நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்திருக் கிறது. பிராந்திய வெறி மற்றும் இன அடையாள அரசியல் ஆகியவற்றின் அடிப்படையிலான பிரிவினைவாத சக்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. வலதுசாரி சக்திகள் தங்களு டைய பிற்போக்குத்தன மான அரசியலுக்காக இத்தகைய சக்திகள் அனைத்தையும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இப்பிரச்சாரப் பயணமானது மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுத்துச் செல்லும். நாட்டிலுள்ள கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் - விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறை சாராத் தொழிலாளர்களின், பெண்களின், தலித்துகளின், பழங் குடியினர்களின், சிறுபான்மையினர்களின்- பிரச்சனைகளையும் கவலைகளையும் எடுத்துச் சொல்லும். பிரச்சாரப் பயணமானது, வகுப்புவாத அரசியலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும்.
பயணக்குழுவின் குறிக்கோள்கள்
பயணக்குழுவானது ஆறு முக்கிய அம்சங்களின் மீது மக்கள் கவனத்தை ஈர்க்கும்: (1) நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கான உரிமை: உபரியாக உள்ள நிலங்களை நில மற்றவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நிலச்சீர்திருத்தக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். நிலமற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் வீட்டுமனைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
(2)விலைவாசியைக் கட்டுப்படுத்துக;  உணவு உரிமையை வழங்கிடுக: அதிகபட்சமாக ஒரு கிலோ 2 ரூபாய் விலையில் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கக்கூடிய விதத்தில் பொது விநியோக உரிமையை அமல்படுத்துக; மோசடியான வறுமைக் கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டுக்கு மேல்/வறு மைக்கோட்டுக்குக் கீழ் என்பதை ரத்துசெய்; உணவு தானியங்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை நிறுத்திடுக.
(3) கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை: கல்விநிலையங்களையும் சுகாதார சேவைகள் அளிக்கும் நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதை நிறுத்திடுக; கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீடுகளை அதிகப் படுத்திடுக; கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை உத்தரவாதப்படுத்திடுக; சுகாதாரத்துறையில் பொதுச் சேவைகளை வலுப்படுத்திடுக; தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் முறையாகச் செயல்படுவதை உத்தரவாதப்படுத்திடுக.
(4) வேலை உரிமை: வேலைவாய்ப்பு களை அதிகரிப்பதை உத்தரவாதப் படுத்தும் வகையில் பொது முத லீட்டை அதிகரித்திடுக; அரசு நிறுவ னங்களில் வேலைக்கு ஆள் எடுப்ப தற்காகத் தற்போதுள்ள தடையை விலக்கிக்கொள்க; ஒரு காலவரையை நிர்ணயித்து அதற்குள் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்பிடுக; குறிப் பாக தலித்/பழங்குடியினர்/இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் காலி யிடங் களை நிரப்பிடுக; மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் நாட் களின் எண்ணிக் கையை அதிகரித் திடுக; அவர்களுக்கு விலைவாசிக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப் பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடுக; நகர்ப்புறங்களில் உள் ளோருக்கும் வேலை நாட்களை உத்தர வாதப்படுத்தக் கூடிய விதத்தில் அதனை விரிவுபடுத்திடுக.
5) சமூக நீதியை உத்தரவாதப்படுத்துக: பெண்களுக்கு எதிரான வன் முறைக்குக் கடிவாளமிடுக; நாடாளு மன்றம்/சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திடுக; தீண்டாமைக் கொடுமை மற்றும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக; பழங்குடியினரின் நிலம் மற்றும் வன உரிமைகளைப் பாதுகாத்திடுக; முஸ்லிம் சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைகளில் சமவாய்ப்புகளை வழங்கிடுக.
(6) லஞ்ச ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக: புலனாய்வு மேற்கொள்வதற்கு சுயேச்சையான அதிகாரங்க ளுடன் கூடிய லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுக; வெளிநாட்டு வங்கி களில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுக; இழப்புக்குப் பொறுப்பான கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இழப்புகளை மீட்டிடுக; லஞ்ச ஊழல் பேர்வழிகளை சிறைக்கு அனுப்புக;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு கட்சி என்ற முறையில், நாடு தழு விய அளவில் இத்தகைய பயணத்தை நடத்துவது இதுவே முதல்முறை. 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்தபடி கட்சியின் சுயேச்சையான பங்கினையும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்திட வேண்டும் என்பதன் ஒரு பகுதியாக, இத்தகைய பிரம்மாண்டமான முயற்சியில் கட்சி இறங்கி இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் உழைக்கும் வர்க்கத்தின் மாபெரும் நடவடிக்கையாக மத்தியத் தொழிற் சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க பிப்ரவரி 20 - 21 தேதிகளில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இருநாட்கள் வேலைநிறுத்தத்தினை அடுத்து அகில இந்தியப் பிரச்சாரப் பயணம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இடது சாரிக்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் மிகவும் விரிவானமுறையில் நடத்தப்பட்ட மக்கள் கையெழுத்து இயக்கத்தை அடுத்து இந்த பேரியக்கம் வருகிறது. இப் பிரச்சாரத்தின் போது ஐந்து கோடிக்கும் மேலான மக்களிடம் வாங்கிய கையெழுத் துக்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.
உண்மையான மாற்று
மாற்றுக் கொள்கைக்கான பயணம் என்பது வரவிருக்கும் காலங்களில் நாம் நடத்த விருக்கும் பிரம்மாண்டமான இயக்கங்களுக்கும், அனைத்து இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் முன்னோடியாகும். தற்போதைய முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு ஓர் உண்மையான மாற்றை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளால்தான் தந்திட முடியும் என்கிற செய்தியை இப்பயணம் மக்களுக்குத் தெரிவித்திடும். அகில இந்திய பிரச்சாரப் பயணம், விவசாயிகளும் பழங்குடியினரும் தங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்திய நிலங்களை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் பகுதிகள் வழியாகச் செல்லும், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டி போராடிக் கொண்டிருக்கும் பகுதிகளைக் கடந்து செல்லும்,  நியாயமான ஊதியத்திற்காக அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களும், ஒப்பந்த முறைக்கு எதிராக முறைசாராத் தொழிலாளர்களும் போராடிக் கொண்டிருக்கிற பகுதிகள் வழியாக இந்தப்பயணம் செல்லும். கல்வி வணிகமயமாவதற்கு எதிராகவும் சிறந்த கல்வி வசதிகளுக்காகவும் மாணவர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பகுதிகளையும் தொட்டுச்செல்லும். பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் சம உரிமைகள் கோரியும் பெண்கள் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வழியாக,  சமூக நீதி கோரி தலித்துகளின் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிற வழியாக, வேலையின்மைக்கு எதிராக வாலிபர்களின் இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழியாக இந்தப் பயணம் கம்பீரமாக செல்லும். போராட்டக்களத்தில் உள்ள அனைவருக்கும், மாற்றுக் கொள்கைக்கான இந்தப் பய ணம் ஓர் உந்துசக்தியாகத் திகழும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் பக்கம் நிற்கிறது என்கிற செய்தியை இப்பயணம் அவர்களுக்கு அளிக்கும்;  அத்துடன் மாற்றுக் கொள்கைக்காகப் போராட முன்வருக என்றும் அவர்களை அறைகூவி அழைத்திடும்.
தமிழில்: ச.வீரமணி


Thursday, February 21, 2013

சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்




சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்




சாகித்திய அகாதெமி விருது பெற்ற டி.செல்வராஜுக்கு
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் அறிஞர்கள் புகழாரம்
புதுதில்லி, பிப்ரவரி 20-
2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான தோல் நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்ற டி.செல்வராஜ் அவர்களுக்குத் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அறிஞர் பெருமக்கள் புகழாரம் சூட்டினார்கள்.
இந்திய மொழிகளில் 2012ஆம் ஆண்டு வெளியான நூல்களுக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் திங்கள் அன்று வழங்கப்பட்டன. தமிழில் தோல் நாவலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான டி. செல்வராஜ் அவர்களுக்கு அவ்விருது கிடைத்தது. அவரைப் பாராட்டி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செவ்வாய் அன்று மாலை பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்ச்சங்கத்தில் உள்ள பாரதி மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற  பேராசிரியர் கி. நாச்சிமுத்து தலைமை வகித்தார். அப்போது தோல் நாவலின் சிறப்புகள் குறித்து மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முகுந்தன் அனைவரையும் வரவேற்றார்முதுபெரும் எழுத்தாளர் சா. கந்தசாமி மற்றும் பரமசிவம் ஆகியோர் பாராட்டுரை வழங்கியபின், டி.செல்வராஜ் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘தில்லித் தமிழ்ச்சங்கம் மிகவும் பழைமையான சங்கம் மட்டுமல்ல, மிகவும் பிரபலமான ஒரு சங்கமும் ஆகும். இந்தச் சங்கத்திலே பேசுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எனக்குத் தோன்றுகிற சில விஷயங்களைத் தமிழ் மக்களுக்கு உங்கள் மூலம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
நண்பர் கந்தசாமி அவர்கள் தன்னடக்கம் காரணமாக, சாகித்திய அகாதெமி தேர்வுக்குழுவிற்குள் நடந்த பல விஷயங்களை சொல்லவில்லை. உண்மையில் கந்தசாமி அதில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. என்னுடைய நாவல் அங்கு பரிசீலனைக்காகப் போய் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.
இலக்கிய உலகில் நானும் அவரும் வெவ்வேறு முகாம்களில் பணியாற்றிய போதிலும் இருவரும் கடந்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ‘‘நான் நாவலைப் படித்தேன்’’ என்று கூட அவர் என்னிடம் சொல்லவில்லை. விருது வழங்கப்பட்ட பின்னர் ஒரு வார்த்தை அவர் என்னிடம் சொன்னார். ‘‘எங்கள் ஜாதியை இவ்வளவு அசிங்கமாக எந்த எழுத்தாளனும் சித்தரித்தது இல்லை’’ என்றார்அதற்கு நான் அவரிடம், ‘‘அசே அசிங்கமான மனிதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறானே, பார்த்தீர்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘‘இரண்டையும்தான் பார்த்தேன்.’’ என்று கூறினார். நாவலை ஒரு தடவை அல்ல, பல தடவை படித்திருக்கிறார். தேர்வுக் குழுவுக்குப் போகும்போதே முடிவு பண்ணிவிட்டுத்தான் போனேன் என்று பின்னர் அவர் என்னிடம் கூறினார்.
பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாவலில் உள்ள பல விஷயங்களை நன்கு கூர்ந்து ஆய்வு செய்து இங்கே பேசினார்இதுபோன்று சோசலிச யதார்த்த நாவல்கள் தமிழில் வெகு காலம் கழித்துத்தான் வெளிவந்தன என்று மிகவும் ஆதங்கப்பட்டார். பொதுவாகத் தமிழ் நாவல்களில் சரித்திரப் பதிவுகள் இல்லை என்று கூறினார்அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்களும் ஆளாகிறோமோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
1935இல்தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1927இலிருந்து 1930 வரையில் உலக அளவில் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான பண்பாடு பாதுகாப்பு எழுத்தாளர்கள் மாநாடு, பாரீசில் நடைபெற்றது. அந்தக் காலத்தில்தான் பாசிசமும், நாசிசமும் உலக அரங்கில் மனித நாகரிகத்திற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. அதை முதலில் எதிர்த்தவர்கள் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும்தான். பாசிசத்தையும், நாசிசத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடியது மட்டுமல்லாமல், ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் பல எழுத்தாளர்கள் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஸ்பெயினில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் உறுப்பினரான பண்டிட் ஜவஹர்லால் நேரு போராட்டக் களத்திற்குச் சென்று கலந்து கொண்டார்
1935இல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்த முல்க்ராஜ் போன்றவர்கள் முற்போக்காளர்கள் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட்டுகளும் ஆவார்கள். இந்தியாவில் தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டபோது, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, அப்துல் கலாம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போன்று, எழுத்தாளர்களை, அரசியல்வாதிகளை, சிந்தனையாளர்களை எல்லாம் அரவணைத்துக் கொண்டு அது செயல்பட்டது. நிறைய பேர் செயல்பட்டிருக்கிறார்கள். தகழி சிவசங்கரம்பிள்ளை போன்று நிறைய கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அந்த இயக்கம் உருவாக்கியது.
அவ்வாறு இந்திய அளவில் மிகச் சிறப்பாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அத்தகையதோர் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் மணிச்கொடி பத்திரிக்கை உருவாகியது. அது ஆரம்பிக்கப்பட்டபோது வ.ரா,. சொக்கலிங்கம் போன்றவர்கள் பாரதியினுடைய கவிதைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், தேச விடுதலைப் போராட்ட இயக்கத்தினையும் பிரதிபலித்தார்கள். அத்தகைய லட்சியத்தோடு மணிக்கொடி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிக்கை ஆரம்பித்து ஒரு 3 அல்லது 4 இதழ்கள் வந்தபிறகு, பி.ஸ். இராமையா அவர்கள் அதன் பொறுப்புக்கு வந்தபிறகு, அது வெறும் இலக்கியப் பத்திரிக்கையாக மாறிவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பத்திரிக்கையாக அது மாறிவிட்டது.
அதன்பின்னர், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் பி.ராமமூர்த்தி, .ஜீவானந்தம், பி.சீனிவாசராவ் போன்றவர்களாலே ஜனசக்தி ஆரம்பிக்கப்பட்டது. அதில் மூன்றாவது இதழில் பாரதிதாசனுடைய புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்கிற பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொண்ட கவிதை வருகிறது. இவ்வாறு வந்ததுமட்டுமல்லாமல், இப்படி எழுத்தாளர்கள், இடதுசாரி எண்ணம்கொண்ட படைப்பாளிகளை உருவாக்குகின்றபோது இவர்களையெல்லாம் ஓர் அமைப்புரீதியாக அணைத்துக்கொள்ளமுடியாத ஒரு நிலைமை அப்போது இருந்திருக்கிறது. அவர்களையெல்லாம் அணைத்துக்கொள்ள எங்களுடைய முன்னோடிகள் தவறிவிட்டார்கள். இந்தத் தவறின் காரணமாகவே இன்றையவரைக்கும் கந்தசாமியும் நானும் ஒன்றாக சேரமுடியவில்லை.
ஒரு செக்டேரியன் அப்ரோச் (sectarian approach) இன்னமும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் இருக்கிறது. அதிலிருந்து நாம் மாற வேண்டும்.
ஏனென்றால், ஆரம்பகாலத்திலே ஜனநாயகவாதிகள், தேசிய விடுதலைக்காக நின்றவர்கள், பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நம்முடன் வந்து சேர்ந்து நின்றார்கள். சரோஜினி நாயுடு நம்முடன் இருந்திருக்கிறார்.   முல்க்ராஜ் ஆனந்த் நம்முடன் இருந்திருக்கிறார்.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 1938க்கும் 1954க்கும் இடைப்பட்ட  காலத்தில் நடைபெற்ற இயக்கங்களைப் பிரதிபலிக்கக்கூடிய எழுத்துக்கள் வரவில்லை. சரித்திரப் பதிவுகள் வரவில்லை. காரணம், இவர்களையெல்லாம் ஒன்றிணைக்கக்கூடிய வகையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவில்லை.
1955-56க்குப் பிறகுதான் உ ருவானது. அதற்குப்பின்னர் கூட சா.கந்தசாமி போன்றவர்கள் ஜனநாயக எழுத்தாளர்கள் வேறு முகாம்களில் இருந்தபோதும், அவர்களுடைய அப்பழுக்கற்ற இலக்கியப் பதிவுகளையும் எவரும் குறைசொல்ல முடியாது.
இன்றைக்கு எங்களுடைய பத்திரிக்கைகளில் எல்லாம் கந்தசாமி எழுதிக் கொண்டிருக்கிறார்இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், கந்தசாமி போன்ற மூத்த எழுத்தாளர்களை, ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகளை, நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் வருங்காலம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. உலக முதலாளித்துவம் ‘‘மல்ட்டி கல்ச்சர்’’ என்னும் பன்முகக் கலாச்சாரத்தை, ‘‘யூனி கல்ச்சர்’’ என்னும் ஒரே கலாச்சாரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய பன்முகப் பண்பாட்டை முழுமையாக அழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறது.
பரமசிவம் மிகத் தெளிவாகச் சொன்னார். நம் நாட்லுள்ள பன்முகக் கலாச்சாரத்தை, பன்முகப் பண்பாட்டை பாதுகாத்து நிற்பவர்கள் நம் பெண்கள். மதுரையில் மீனாட்சி அம்மன்தான், காஞ்சியில் காமாட்சிதான். இவ்வாறு நம் நாட்டில் இன்னமும் தாய்வழிச் சமுதாயத் தெய்வங்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்களால் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாதுஇதை அவர்கள் அழித்தால்தான் நம் பண்பாட்டை அவர்களால் ஒழிக்க முடியும்.
இதுஒருபுறம் இருக்க, படைப்பாளிகள், ஜனநாயக எண்ணம்கொண்ட படைப்பாளிகள், உலக முதலாளித்துவத்தினுடைய தாக்குதலிலிருந்து நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும். இதற்கு ஜனநாயக எண்ணம்கொண்ட எழுத்தாளர்களை முற்போக்கு எழுத்தாளர்கள் அணைத்துக்கொள்ள வேண்டும். கந்தசாமி போன்றவர்கள் எங்களுடன் சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் இருவேறு முகாம்களில் இருந்தபோதும், சண்டை போட்டுக் கொண்டாலும் விரோதிகள் கிடையாது. எனவே, என் போன்ற எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எனக்குப் பின்னால் இருக்கின்ற எழுத்தாளர்களை, படைப்பாளிகளை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் கந்தசாமி போன்றவர்களுக்கும் உண்டு. அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாவல் பற்றி
தோல்  நாவலில் சொல்லப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் எல்hலாம் உண்மையான கதாபாத்திரங்கள்நான் ஒரு வக்கீல். ஒரு வழக்கறிஞன் என்ற முறையில் தினம் தினம் புதுப் புதுப் பிரச்சனைகளை மட்டும் நான் சந்திக்கவில்லை, புதுப் புதுக் கதாபாத்திரங்களையும் சந்தித்தேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது
மேலும் ஆரம்பகாலத்திலிருந்தே என் நாவல்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். என் நாவல்களில் பெண்களை கோழைகளாக நான் படைக்கவில்லை. இந்த நாவலில் வரும் அருக்காணி, தாயம்மா போன்றவர்கள் எவ்வளவு மகத்தான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், அதே நேரத்தில் எவ்வளவு தைர்யமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள், இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
நேற்றையதினம் கூட எழுத்தாளர் பாமா அவர்களையும் அவருடன் மற்றொரு பேராசிரியையும் சந்தித்தபோது நான் சொன்னேன். ‘‘இந்நாவலைப் படியுங்கள். பெண்களைப் பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று உங்கள் அபிப்பிராயத்தை எனக்குச் சொல்லுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டேன். பெண்கள் சமூகத்தின் செம்பாதி. அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
அதே போன்றுதான் தலித் எழுத்தாளர்கள்.   துரதிர்ஷ்டம் என்னவென்றால், தலித் எழுத்தாளர்கள், தலித்துகளின் அவமானங்களை, அவலங்களை எழுதுகிறார்களேயொழிய, அவற்றிற்கு எதிராக அவர்கள் நடத்திடும் போராட்டங்களைச் சொல்வதற்குத் தயங்குகிறார்கள்இந்திய சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு தலித்துகளும் பழங்குடியினருமாவார்கள். இவர்கள் பங்களிப்பு இல்லாமல் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. அதே மாதிரி, சமுதாயத்தில் மூன்றில் இரு பங்காக இருக்கும் மற்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், இவர்கள் விடுதலையும் சாத்தியம் இல்லை. இந்த விஷயங்களை நான் என் நாவலில் கொண்டுவந்திருக்கிறேன்.
இது என் கொள்கை. என் கொள்கையை எனக்குக் கிடைத்த அனுபவங்களுடன் இணைத்து எழுதியதால்தான் இந்த நாவல் வெற்றி பெற முடிந்தது.  
அடுத்து, கதையில் வரும் வடிவாம்பாள் பாத்திரம். அவர் ஒரு தேவதாசி. அவர்தான் பிராமண வகுப்பைச் சேர்ந்த கதாபாத்திரமான சங்கரனைத் திருமணம் செய்து கொள்கிறார். அவ்வாறு திருமணம் செய்துகொண்டபோதிலும், திருமணத்தன்றே சங்கரன் சிறைக்குப் போய்விடுகிறார். வடிவாம்பாள் காதல் நிறைவேறவில்லை. இவ்வாறு நான் நாவலை ஒரு குறியீடாக (symbolic-ஆக) முடித்திருக்கிறேன். ஏனென்று சொன்னால் தொழிலாளி வர்க்கம் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னமும் முழுமையாக விடுதலையாகவில்லை. விடுதலையாக வேண்டும் என்பதைத்தான் அவ்வாறு குறியீடாகச் சொல்லி இருக்கிறேன்.
நாவலைப் படித்துப் பாருங்கள். நான் மலரும் சருகும் எழுதிய காலத்தில் அதன் கதாமாந்தர்களான விவசாயிகளால் அதனைப் படிக்க முடியவில்லை. ஆனால் இன்றைய தினம் தோல் நாவலை தொழிலாளர் வர்க்கம் படிக்க முடிகிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்த நாவல் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு நாவல். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சி இல்லாத சமயத்தில் இது வந்திருக்கிறது. இந்த நேரத்தில் இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொரு தொழிலாளியும், ‘‘நான் ஒரு பாரம்பர்யமிக்க அமைப்பின் ஒரு பாகம்’’ என்று உணர வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த நாவலை வெளியிட்டேன்.   இங்கே அமர்ந்திருக்கிற ஒவ்வொருவரும் இந்நாவலைப் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு டி.செல்வராஜ் பேசினார்.
(தொகுப்பு: .வீரமணி)