மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப்பயணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது
தில்லியில் பிரகாஷ்காரத் பேட்டி
புதுதில்லி, பிப். 22-
நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தக்கோரியும், வீடற்றோருக்கு வீட்டுமனைகள் வழங்கக்கோரியும்
மற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம் சனிக்கிழமையன்று கன்னியாகுமரியில்
தொடங்குகிறது என்றும் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் நாடு முழுதும் பயணம் செய்தபின்,
நிறைவாக தில்லி ராம்லீலா
மைதானத்தில் மார்ச் 19 அன்று பிரம்மாண்டமான பேரணி/பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
பிப்ரவரி 23 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப்
பயணம் கன்னியாகுமரியில் தொடங்குகிறது. அதனையொட்டி தலைநகர் தில்லியில் மத்தியக்குழு
அலுவலகமான ஏ.கே.கோபாலன்பவனில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி,
எஸ். ராமச்சந்திரன்பிள்ளை மற்றும்
பிருந்தாகாரத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பிரகாஷ்காரத் கூறியதாவது:
‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் வாழ்வைச் சூறையாடும் மத்திய
அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், மாற்றுப் பாதைக்கான கோரிக்கைகளை முன்வைத்தும்
போர் முழக்கப் பயணம் 23ஆம் தேதியன்று தமிழ்நாடு, கன்னியாகுமரியிலிருந்து தொடங்குகிறது. இதேபோல் கொல்கத்தாவிலிருந்தும்,
மும்பையிலிருந்தும்
அமிர்தசரசிலிருந்தும் பிரச்சாரப் பயணங்கள் தொடங்குகின்றன. பயணக்குழுவினர் நாட்டின்
பல பகுதிகளிலிரும் பயணம் செய்தபின்னர் நிறைவாக மார்ச் 19 அன்று தில்லியில் ராம்லீலா மைதானத்தில்
மகத்தான பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பயணத்தின் நோக்கம், மக்கள் மத்தியில் மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளின்
விளைவுகளை எடுத்துக் கோருவதும், இடதுசாரிக் கட்சிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து,
போராட அழைப்பதுமாகும்.
பயணத்தின்போது நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் மத்தியில்
காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐமுகூ அரசாங்கத்திற்கும் பல மாநிலங்களில் பாஜக
தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதும் மக்கள்
மத்தியில் விளக்கப்படும்.
பிரச்சாரப் பயணம் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. நிலச்சீர்திருத்தங்களை
அமல்படுத்தி, உபரி நிலங்களை நிலமற்றோருக்கு வழங்கிடு. வீடற்ற அனைத்துக் குடும்பத்தினருக்கும்
வீட்டுமனைகள் வழங்கிடு. விலைவாசியைக் கட்டுப்படுத்து. அனைத்துக் குடும்பத்தினருக்கும்
பொது விநியோக முறையை அமல்படுத்தி மாதத்திற்கு 35 கிலோகிராம் உணவு தான்யங்களை கிலோ
2 ரூபாய் வீதம்
வழங்கிடு. உணவு தான்யங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் முன்பேர வர்த்தகத்தைத்
தடை செய். கல்வி நிறுவனங்களையும் பொது சுகாதார சேவைகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதை
நிறுத்து. கல்விக்கும் பொது சுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை
உரிமையை அடிப்படை உரிமையாக்கு. சமூக நீதி வழங்கிடு. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக்
கடிவாளமிடு. நாடாளுமன்றம்/சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை
ஒதுக்கிடு. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு என்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்பிரச்சாரப்
பயணம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 24 அன்று முதல் பயணம் தமிழகம், கன்னியாகுமரியிலிருந்து புறப்படுகிறது. இப்பயணக்குழுவிற்கு அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் தலைமைவகிக்கிறார். மேலும் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர்கள் கே. வரதராசன், எம்.ஏ.பேபி மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் வி. சீனிவாசராவ், மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன் இப்பயணக்குழுவில்
இடம் பெறுகிறார்கள். இப்பயணக்குழுவை நான் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறேன்.
இரண்டாவது பயணக்குழு மார்ச் 1 அன்று கொல்கத்தாவிலிருந்து புறப்படுகிறது. இப்பயணக்குழுவிற்கு
நான் (பிரகாஷ்காரத்) தலைமை வகிக்கிறேன். இக்குழுவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரகள்
பிமன்பாசு, யோகேந்திர சர்மா, சுபாஷினி அலி மற்று.ம ஜே.எஸ். மஜூம்தாரி இடம் பெறுகிறார்கள்.
மூன்றாவது பயணக்குழு மார்ச் 4 அன்று அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக்கிலிருந்து புறப்படுகிறது.
இக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமை வகிக்கிறார். மத்தியக்குழு
உறுப்பினர்கள் ஹன்னன் முல்லா, இந்தர்ஜித் சிங் மற்றும் ராஜேந்திர சர்மா இக்குழுவில் இடம்பெறுகிறார்கள்.
நான்காவது பயணக்குழு மும்பையிலிருந்து
புறப்படுகிறது. இக்குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி
தலைமை வகிக்கிறார். மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, மத்தியக்குழு உறுப்பினர்கள்
முகமது சலீம், மரியம் தாவலே இக்குழுவில் இடம் பெறுகிறார்கள்.
இவை தவிர அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து
ஒரு பிரச்சாரப் பயணக்குழு புறப்பட்டு கொல்கத்தா பயணக்குழுவுடன் இணைந்து கொள்கிறது.
இப்பயணக்குழுவை திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
ஒடிசா மாநிலம் பரலகெமுண்டியிலிருந்து ஒரு பயணக்குழு புறப்பட்டு கொல்கத்தா பயணக்குழுவுடன்
இணைந்து கொள்கிறது. இக்குழுவினரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த் மிஷ்ரா
துவக்கி வைக்கிறார்.
இதேபோன்று இமாசலப்பிரதேசம் சிம்லாவிலிருந்து புறப்படும் ஒரு பயணக்குழு அமிர்தசரஸ் பயணக்குழுவுடன்
இணைந்து கொள்கிறது. குஜராத் பவநகர் ஆகிய இடங்களிலிருந்து பயணக்குழு மும்பை பயணக்குழுவுடன்
இணைந்து கொள்கிறது.
இவையில்லாமல் தமிழகம், ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமா துணைப் பயணக்குழுக்களும்
பயணங்கள் மேற்கொண்டு பிரதான பயணக்குழுவுடன் இணைந்து கொள்கின்றன. ஒட்டுமொத்தத்தில் நாடு
முழுதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரம் இப்பயணக்குழுவினர் பயணம் மேற்கொள்கிறார்கள்.
போர்முழக்கப்பயணத்தின் நோக்கத்தை விளக்கி பத்து லட்சம் பிரதிகள் ஆங்கிலத்திலும்,
இந்தியிலும் மாநில மொழிகளிலும்
பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவை பயணத்தின்போது மக்களிடம் விநியோகிக்கப்படும்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.
‘‘எப்படி இவ்வளவு தூரத்தையும் பயணம் செய்யப்போகிறீர்கள்?’’ என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது,
நிச்சயமாக ரதம் கிடையாது
என்றும், பத்து,
பதினைந்து பேர் அமரக்கூடிய
விதத்திலான வேன்கள் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும், ஆங்காங்கே தெருமுனைக் கூட்டங்கள்
நடத்திக்கொண்டே பயணக்குழுவினர் செல்வார்கள் என்றும் பிரகாஷ்காரத் கூறினார்.
‘‘ஏன் திடீரென்று இவ்வாறு பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள்? திடீர் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’’
என்று ஒரு செய்தியாளர்
கேட்டபோது, சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாடு இவ்வாறு ஒரு பிரச்சாரப் பயணத்தை
மேற்கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும் என்று எங்களைப் பணித்தது என்றும் அதன் அடிப்படையில்
இப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். தேர்தல் வருமா, வராதா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது என்றும், முன்கூட்டியே இப்பயணம் திட்டமிடப்பட்டது
என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment