Monday, February 11, 2013

அதிகரித்துவரும் மதவெறித் தீ!

2004இல் பொதுத்தேர்தல் நடைபெற்றபோது, கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து விதமான கருத்துக்கணிப்புகளையும், ஊகங்களையும் புறந்தள்ளிவிட்டு, நாட்டு மக்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு மகத் தான வெற்றியை ஈட்டித்தந்து, அரசாங்கத்தை அமைத்திட வழி வகுத்துத்தந்தனர். ‘‘இந்தியா ஒளிர்கிறது’’ என்றும் ‘‘எல்லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்றும் மிகவும் மூர்க்கத்தனமாக பாஜகவின் தலைமையில் உள்ள மதவெறி சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட பிரச்சாரத்தை யெல்லாம் தவிடுபொடியாக்கினார்கள். எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் அப்போது ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பொதுத்தேர்தலையும் ஒரு சில மாதங்களுக்கு முன்பே கொண்டுவந்தது. ஆயினும் இடதுசாரிக் கட்சிகளின் தீர்மானகரமான ஆதரவுடன் மட்டுமே ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படும் என்ற முறையில் மக்கள் தீர்ப்பு அமைந்தது.

அதன் அடிப்படையில் ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்தன. மக்கள் இவ்வாறு தீர்ப்பு அளித்ததன் மூலம் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நாட்டின் அரசியல் வரலாற்றில் வரவேற்கத்தக்க மாற்றமாக இது அமைந்தது. அந்த சமயத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மிகவும் மோசமான முறையில் மதவெறித் தீ விசிறிவிடப்பட்டுக் கொண்டிருந்தது. குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படு கொலைகளால் ஏற்பட்டுள்ள கொடூரமான காயங்கள் இன்னமும் மக்கள் மனதிலிருந்து அகலவில்லை. அதேபோன்று பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலி மும்பையில் பாட வந்தபோது அவரைப் பாடவிடாமல் தடுத்து, அவருக்கு எதிராக வெறுக்கத்தக்க பிரச் சாரத்தை மேற்கொண்டது,  இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட விடாமல் சிவசேனையால் தடுக்கப்பட்டது, விதவை மறுமணம் போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிரான திரைப்படங்கள் தடை செய்யப்படுதல் போன்ற எண்ணற்ற நடவடிக் கைகள் நாட்டின் பல பகுதிகளிலும் வெளிவந்து கொண்டிருந்தன.

இத்தகு சூழ்நிலையில்தான் 2004 மக்கள் தீர்ப்பானது ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், வன நிலங்களில் பழங்குடியினர் உரிமைகளைக் காத்திடுவதற்கான சட்டம், தகவல் அறியும் உரிமைச்சட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்று மக்களுக்கு நேரடி யாகப் பயனளிக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மக்களுக்கு நன்மை பயக்கும் இத்திட்டங்கள் பலவும், இடதுசாரிக் கட்சிகளின் தூண்டுதலால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டன. மேலும், ஆட்சியாளர்கள் அமல்படுத்தி வந்த தாராளமய நிதி சீர்திருத்தக் கொள்கைகளை இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வந்ததன் காரணமாக சர்வதேச நிதி மூலதனத்தின் ஊக நடவடிக்கைகளுக்கு நாட்டின் பொதுத்துறை சொத்துக்கள் இரையாகாமல் தடுக்கப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, இப்போது வரலாறு ஒரு முழுச் சுற்று பயணம் செய்திருப்பது போல் தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை கலாச்சார மற்றும் மதவெறி, தன் கோர முகத்தை நாட்டின் பல பகுதிகளில் உயர்த்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் மதவெறி விஷத்தைக் கக்கி இருக்கிறார். இவ்வாறு இவர், ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவாசி, 2012 டிசம்பர் 22 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், அடிலாபாத் மாவட்டம், நிர்மல் நகரத்தில் வெறித்தனமாகப் பேசி விஷத்தைக் கக்கி சரியாக ஒரு மாதம் கழித்து, இவர் பேசியிருக்கிறார். அவர் அப்போதே கைது செய்யப்பட்டுவிட்டார். 2013 ஜனவரி 22 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான பிரவீண் தொகாடியா, மேற்படி நிர்மல் நகருக்கு, எண்பதே கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலம், நாண்டட் மாவட்டத்தில் போகார் என்னும் நகரத்தில், இவ்வாறு தன் வெறுப்புப் பேச்சை நிகழ்த்தி இருக்கிறார். வகுப்புவாதமும் மத அடிப்டைவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்திடும், வலுப்படுத்திடும் என்று கூறியதை - மிகச் சரி என்று மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறது. இம்முயற்சிகளின் மூலம் இவர்கள் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் அடித்தளங்களையே அழித்திட முனைகிறார்கள். கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் இத்தகைய வெறித்தன்மை வளர்ந்துகொண் டிருக்கிறது. விஸ்வரூபம்என்னும் கமல் ஹாசனின் திரைப்படம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டது. இப்படத்திற்கு ஆட்சேபணை தெரிவித்த சில பிரிவினருடன் திரைப்படத் தைத் தயாரித்தவர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் கண்டதை அடுத்து இப்படத்தைத் திரையிடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்களில் திரையிடுவதற்காக மத்தியத் தணிக்கை வாரியம் சான் றிதழ் வழங்கியபின் இவ்வாறு ஒரு திரைப் படத்தைத் தடை செய்தது என்பது ஓர் ஆழ மான பிரச்சனையை எழுப்பி இருக்கிறது. ஸ்ரீநகரில், அனைத்துப் பாடகர்களும் பெண்களேயான பிரகாஷ் என்னும் ராக் இசைக்குழுவினர், ‘‘தெய்வ நிந்தனை நடவடிக்கை’’யில் ஈடுபட்டிருப்பதாக மத குரு மஃப்டி பஷீர்-உட்-தின் பிறப்பித்த ஃபட்வா’ (fatwa) அச்சுறுத்தலை அடுத்து, அவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தாது கைவிட்டு விட்டார்கள்.மேற்கு வங்க முதல்வரின் கட்டளைக் கிணங்க மேற்கு வங்கத்தில் நடந்ததைப் போன்று, தற்போது ஆக்ராவிலும் காவல்துறை யினர் ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? பிரதமர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உட்பட அரசியல் தலைவர்களின் கார்ட்டூன்களை ஆபாசமாக’  வரைந் திருக்கிறாராம்.

புதுதில்லியில் நடைபெற்றுவந்த ஒரு மாடர்ன் ஆர்ட் கண்காட்சி தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மகளிர் பிரிவான துர்கா வாஹினி என்னும் அமைப்பு இக்கண்காட்சியில் பெண்களை நிர்வாணமாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்று கூறி எதிர்ப்புக் கிளர்ச் சிகளுக்கு ஏற்பாடு செய்தது. உண்மையில் இக்கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற அம் ரிதா சேர்-கில், ராஜா ரவி வர்மா, அஞ்சோலி இளமேனன், எம்.எப். உசேன், ஜோகேன் சவுத்ரி போன்றோரின் ஓவியங்கள் வைக்கப் பட்டிருந்தன. அதேபோன்று பெங்களூரில், தில்லியைச் சேர்ந்த ஒருவர் தான் நடத்தி வந்த ஓவியக் கண்காட்சியை மூடிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். கர்நாடக கலாச்சாரப் போலீஸ்அவர் வைத்திருந்த இந்து ஆண் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் அருவருப்பானவைகளாகக் கருதியதால், அவர் இம்முடிவுக்கு வந்தார். இக்கண்காட்சியை ஒரு நாள் முன்னதாகத்தான் கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் திறந்து வைத்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஓர் இலக்கியத் திருவிழாவிற்குப் பங்கேற்க வருவதாக இருந்தது. ஆனால் அவர் வருகையை மேற்கு வங்க அரசு தடுத்துள்ளது. மாநில அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்ததற்கு என்ன காரணம் என்று இதுவரைத் தெரிவித்திடவில்லை. தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக அது, ‘இடது முன்னணி அரசு, வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இவ்வாறு நடத்தவில்லையா?’ என்று கேட்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் வழக் கம்போலவே இது தொடர்பான முழு உண்மை களையும் சவுகரியம் கருதி கூறவில்லை. தஸ்லிமா நஸ்ரீன் கொல்கத்தாவிற்கு வந்தார். இடது முன்னணி அரசாங்கத்தால் அவரது வருகை தடுக்கப்படவில்லை. அவரது நூல் ஒன்று கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. அதிலிருந்த சில பிரிவுகள், அதே நூல் வங்க தேசத்தில் வெளியிடப்பட்டபோது அதில் இல்லை. இதனை அடுத்து அங்கே எதிர்ப்புகள் வெளிப்பட்டன. பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானதை அடுத்து, அன்றைய மாநில அரசால் ராணுவம் வரவழைக்கப்பட்டு பெரிய அளவில் வன் முறை தவிர்க்கப்பட்டது. சூழ்நிலை அந்த அளவிற்கு மாறியதால்தான் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எதிர்ப்பாளர்களுடன் இடது முன்னணி அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்தே மாநிலத்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அவரை கொல்கத்தாவிலிருந்து அப்புறப்படுத்திட மத்திய அர சாங்கத்தை மாநில அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் சல்மான் ருஷ்டி விவகாரத்தில், அவரை கொல்கத்தாவிற்கு வராதீர் என்று மாநில அரசால் நேரடியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாநில அரசு நட வடிக்கை எடுத்தது என்பது குறித்து எதுவும் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமைக் கும் ஒருமைப்பாட்டுக்கும் மற்றும் சமூகத்தின் மதச்சார்பின்மை மாண்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தீய அறிகுறிகளாகும். விரக் தியின் விளிம்புக்குச் சென்றுள்ள ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக, ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்று இப்போது குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ள பாஜக, தில்லியில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, மதவெறித் தீயை உசுப்பிவிடும் இந்துத்வா நிகழ்ச்சிநிரலை மீண்டும் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மதவெறித் தீயை உசுப்பிவிடுவதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங் களை அடைந்திடலாம் என்று அது நம்புகிறது. இவ்வாறு, மதவெறியர்களின் நடவடிக்கை களின் காரணமாக,  நம் மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசின் அடித்தளங்கள் மீண்டும் ஒருமுறை கடும் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு எதிராகக் கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிற நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இவர்களின் மதவெறிப் பிரச்சாரம் உதவாது. தற்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டிருக்கிற போராட்டத்தைத் திசைதிருப்பவே அது உதவிடும். எனவே, நாட்டின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காகவும், இத்தகைய மதவெறிப் பிரச்சாரங்கள் தீர்மானகரமான முறையில் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி


No comments: