இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே தன்னுடைய சுதந்திரநாள் உரையில், ‘‘இந்நாட்டின் இன அடிப்படையில்
வெவ்வேறு விதமான நிர்வாகங்களை நடத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமல்ல’’ என்று கூறியதன் மூலம் நாட்டில் உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு
ஊறு விளைவித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறியிருப்பதானது,
2009ஆம் ஆண்டில் எல்டிடிஇ-இனருக்கு
எதிராக நடைபெற்ற யுத்தத்தின்போது, ஆட்சேபணைக்குரிய வழிமுறைகளைப்
பின்பற்றி ராணுவரீதியாக அவர்களை வென்றபின்னர், தமிழர்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகளிலிருந்து
அவர் பின்வாங்குகிறார் என்றே பொருள். இலங்கை
அரசியலமைப்புச் சட்டத்தில் 13ஆவது அத்தியாயத்தில்
திருத்தங்களைக் கொண்டு வருவதன் அடிப்படையில் அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று அவர்
உறுதிமொழி அளித்திருந்தார். இவ்வாறு அவர் கூறியதன் மூலம், அவருக்கு தமிழ்ச் சிறுபான்மை இனத்தினர் மீது எவ்விதமான சண்டையும்
கிடையாது என்றும், பிரபாகரன் தலைமையிலான இயக்கம் அழிக்கப்பட்டபின்
தமிழ் இனத்தினர் சிங்கள இனத்தினருடன் சரிசமமாகவே நடத்தப்படுவர் என்றும் உலகம் முழுதும்
செய்தி கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுமே
இவ்வாறு அவர் அளித்த உறுதிமொழியின் பின்னேயுள்ள உட்பொருளாகும்.
அப்போது இலங்கைத் தமிழர்களுக்காக ராஜபக்சே
வெளிப்படுத்திய பரிவு என்பது இலங்கைப் படையினர் தமிழ் மக்கள் மீது மிகப் பெரிய அளவில்
நடத்திய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்தினரிடம் மூடி மறைக்கும் ஒன்றாகவே தற்போது
தெரிகிறது. இலங்கை ராணுவத்திற்கும்,
எல்டிடிஇ-இனருக்கும்
இடையே சண்டை நடைபெற்ற சமயத்தில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மதிப்பீடு ஒன்று கூறுகிறது. ஜெனிவாவில் உள்ள ஐ,நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில்
மனித உரிமைகள் மீறல்களுக்காக ராஜபக்சே அரசாங்கம் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகலாம்
என்றே தெரிகிறது.
எல்டிடிஇ இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஒழித்துவிட்டதன் மூலம் இலங்கை
இனப்பிரச்சனை வரலாறு படைத்திருக்கிறது என்று ஒருவேளை ராஜபக்சே நம்பலாம். ஆனால் அவர்
தவறு செய்கிறார். இந்தவகைகளில் பிரச்சனை களுக்குத் தீர்வுகாண முடியாது. இத்தகைய பிரச்சனைகளுக்கு
இத்தகைய வழிகளில் முற்றுப்புள்ளி வைத்திட முடியாது. 2009இல் அவர் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு
அளித்திட்ட அநேகமாக அனைத்து உறுதிமொழி களிலிருந்தும் அவர் பின்வாங்கும் பட்சத்தில்,
இலங்கை வாழ் தமிழர்கள்
தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருத முடியாது.
தமிழ்ச் சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதற்காகக் களத்தில் உள்ள தமிழ் தேசியக்
கூட்டணி, தமிழர்கள்
அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தப்படுவதாக, இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இலங்கையின் வடபகுதிகளை ராணுவ மயமாக்கும் வேலைகளிலும் இலங்கை அரசாங்கம்
இறங்கியிருப்பதாக ராஜபக்சே அரசாங்கத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அனைத்துத் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கணக்கில்
எடுத்துக்கொண்டு இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13ஆவது அத்தியாயத்தில் உரிய திருத்தங்களைச் செய்து,
சுயாட்சி மாகாணக் கவுன்சில்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கை இனப்பிரச்சனைக்கு ஓர் உண்மையான தீர்வினை
அளித்திட முடியும். மாறாக, ‘‘நாட்டில் அனைத்து இனத்தினரும் சம உரிமைகளுடன் சேர்ந்து வாழ்வதே
தீர்வாகும்’’ என்றெல்லாம் அதிபர் ராஜபக்சே கூறும் நீதிபோதனைகள் எல்லாம் உதவிடாது.
( தி டிரிப்யூன் தலையங்கம், 8.2.13) தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment