Sunday, February 24, 2013

அதிர்ச்சியளிக்கும் கொலை



எல்டிடிஇ-இனருக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களைப் புரிந்திருப்பதற்கான சாட்சியங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. எல்டிடிஇ தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சானல் ஒன்றின் மூலமாக இந்த வாரத்தின் முற்பகுதியில் ஒளிபரப்பப்பட்டதானது மேற்படி 12 வயது சிறுவன் இலங்கை ராணுவத்தினரால் மிக அருகில் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதைக் காட்டியது.
அந்தச் சிறுவன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன் சில மணி நேரங்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்தது போன்று  அதனைப் பார்க்கும்போது தோன்றியது. இதே சேனல் அலைவரிசை சென்ற ஆண்டு வெளியிட்ட வீடியோ அடிக்குறிப்புகளில் மேற்படி சிறுவன் பாலச்சந்திரன் அவனுடைய மெய்க்காவலருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது வெளியிடப் பட்டுள்ள புகைப்படம் சிறுவனான பாலச்சந்திரன், யுத்தத்தின் காரணமாக எதேச்தையாகக் கொல்லப்பட வில்லை, மாறாக இதர தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தினரால் குறி வைத்துக் கொல்லப் பட்டதைப் போன்றே பாலச்சந்திரனும் கொல்லப் பட்டிருக்கிறான் என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.    எல்லா யுத்தங்களுமே கொடூரமானவைகள்தான். அதிலும் குறிப்பாக இலங்கை அரசாங்கம்  தன் சொந்த மக்கள்மீதே தொடுத்திருந்த யுத்தம் மிகவும் பயங்கரமானது.  யுத்தம் தொடங்கிய திலிருந்தே கடந்த முப்பதாண்டுகளில்  அது ஆகாய வழியாக ஆயிரக்கணக்கான குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது வீசியது. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் மிகவும் இழிவான முறையில் கேவலமான செயல்களில் ஈடுபட்டதைப் பார்த்தோம். சரணடைந்த  போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் கூட நிர்வாணப்படுத்தி, துன்புறுத்திசுட்டுக் கொன்றார்கள். குழந்தைகளைக் கூட அவர்கள் சுட்டுக் கொன்றார்கள். இவை அனைத்தும், யுத்தம் தொடர்பாக நடைமுறையில் இருந்துவரும் சர்வதேச நெறிமுறைகளை முற்றிலும் மீறிய செயல்களாகும். கொழும்பில் உள்ள உயர்மட்டத் தலைவர்களிடம் அனுமதி பெற்றபின்பே பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றே தெரிகிறது. யுத்தத்தின் விதிகளை படுமோசமாக மீறியுள்ளமைக்காக இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் உலகம் முழுதும் மக்களின் மத்தியில் ஆவேச உணர்ச்சியை எழுப்பியுள்ளதைப்  புரிந்துகொள்ள முடிகிறது.  இலங்கை அரசாங்கம் மேற்படி புகைப்படங்கள் ‘‘போலியானவை’’ என்று தள்ளுபடி செய்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எல்டிடிஇ உயர்மட்ட தலைவர்கள், அவர்களுடைய உறவினர்கள் உட்பட, கொல்லப்பட வேண்டும் என்கிற உத்தரவு உயர்மட்டத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்பதால் இக்கொடூரமான குற்றங்களைப் புரிந்திட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப் படுவது என்பது சந்தேகமே.   
இலங்கை அரசாங்கம் யுத்தத்தின்போது யுத்த குற்றங்கள் புரிந்ததற்கான சாட்சியங்களைப் பல புலனாய்வுகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்சே அரசாங்கம்  இதற்குப் பதில் சொல்லாமல் பசப்பு வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வருவதைக் கண்டு சர்வதேச சமூகம் இதுவரை பொறுமை காத்து வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதி கோரி செயல்பட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது.  இலங்கை மீது நடவடிக்கை எடுத்திட சர்வதேச அளவில் நடைபெறும் முயற்சிகளுக்கு இந்தியாவும் ஓர் அங்கமாக இருந்திட வேண்டும். வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் முனைப்புடன் இறங்கிட வேண்டும். 
தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொன்றுகுவித்திட உத்தரவு பிறப்பித்தவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற மேலும் காலதாமதம் செய்வதென்பது  யுத்தக் குற்றங்களுக்கு மனச்சாட்சி இன்றி துணைபோனதாகவே கொள்ளப்படும்.
(நன்றி: டெக்கான் ஹெரால்டு தலையங்கம், பிப்ரவரி 22,2013. தமிழில்: ச.வீரமணி)

No comments: