Tuesday, March 1, 2011
உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தில்லியில் தர்ணா
புதுதில்லி, மார்ச் 1-
ஊதியத் திருத்தம் கோரி, உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தலைநகர் தில்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
ஊட்டியில் இருக்கின்ற இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை எக்ஸ்ரே பிலிம்கள் உட்பட பல மிகவும் கேந்திரமான போட்டோ பிலிம்களை உற்பத்தி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். 1991களில் இதன் ஊழியர் எண்ணிக்கை 4500 ஆகும். இப்போது 800ஆக சுருங்கி விட்டது. இவர்களில் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். மேலும் இந்நிறுவனம் பல்வேறு வழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்நிறுவனம் நலிவடையும் நிலைக்கத் தள்ளப்பட்டுவிட்டது. இதனை இயற்கையாக சவக்குழிக்கு அனுப்பிட அரசு உத்திகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைக் கண்டித்தும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத் திருத்தம் அளிக்கக் கோரியும், இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எச்பிஎப் நிறுவனத்தைப் பாதுகாக்கும் குழு சார்பாக தில்லி நாடாளுமன்ற வீதியில் செவ்வாயன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஆர். மோசஸ் மனோகரன் தலைமை வகித்தார். ஜெயச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பீமன், சபி அகமது முன்னிலை வகித்தனர். இமகதகைஙள சங்கம், ஐஎன்டியுசி, ஏடிபி, சிஐடியு, எல்பிஎப் உட்பட அனைத்து சங்கங்களிலுமிருந்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மனாபன், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா, சிபிஎம் கோவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அதிமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் செம்மலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏ.கே.பத்மனாபன் வாழ்த்துரை வழங்குகையில், பட்ஜெட் மீது நிதியமைச்சர் உரையாற்றுகையில் எச்பிஎப் நிறுவனத்தை தமிழக அரசுடன் கலந்து பேசி புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளபோதிலும், அதற்காக சென்ற ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ள போதிலும், வரவிருக்கும் ஆண்டில் அதற்காக நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாதிருப்பதைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு இரட்டை வேடம் போடுவதை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து எச்பிஎப் நிறுவனத்தை புனரமைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
(தொகுப்பு: ச.வீரமணி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment