Friday, May 14, 2010

இந்துத்வா பயங்கரவாதிகளுக்கு எதிராக -உறுதியான நடவடிக்கைகளை எடுத்திடுக



2007இல் நடைபெற்ற ஆஜ்மீர் ஷரீப் தர்கா வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூவரை விசாரணை செய்ததிலிருந்து இதில் இந்துத்வா தீவிரவாதக் குழுக்கள் இத்தகைய பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் காவல்துறையினர், ஆஜ்மீரிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் தேவேந்திர குப்தா என்பவரையும், மத்தியப் பிரதேசத்திலிருந்து இருவரையும் கைது செய்திருக்கின்றனர். இவர்கள் 2008இல் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான ‘அபினவ் பாரத்’ என்னும் இந்து தீவிரவாத அமைப்புடனும் தொடர்புகள் வைத்திருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மிக முக்கியமான தகவல் என்னவெனில், 2007 மே மாதத்தில் ஹைதரபாத்தில் மெக்கா மசூதியில் ஒன்பது பேர் கொல்லப்படவும் 58 பேர் காயங்கள் அடையவும் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு என்றும் புலனாய்வு மூலம் தெரிய வந்திருப்பதாகும். ஆஜ்மீரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட ‘சிம்’ கார்டு, ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்ட கூட்டத்தினரைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இம்மூன்று சம்பவங்களிலும் இந்து தீவிரவாதக் குழுக்கள், முஸ்லீம்களைக் குறி வைத்திருக்கின்றன. ஆஜ்மீரிலும், ஹைதராபாத்திலும் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்கள் முஸ்லீம் மக்கள் தொழுகை நடத்திடும் இடங்களாகும், மாலேகானில் முஸ்லீம்கள் பிரார்த்தனைக்காகக் கூடுமிடத்தில் குண்டு வெடித்தது.

இம்மூன்று சம்பவங்களுடன் அதற்கு முன் நடைபெற்ற மேலும் சில சம்பவங்களையும் இணைத்துப் பார்த்திட வேண்டும். 2006இல் நாண்டட் என்னும் பகுதியில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது இரு பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் குண்டுகள் வெடித்துக் கொல்லப்பட்டார்கள். இந்த இரு நபர்களும் பார்பானி மாவட்டத்தில் ஒரு மசூதியை குண்டு வைத்துத் தகர்த்ததற்குப் பொறுப்பானவர்களாவார்கள். முன்னதாக, 2003இல் நாண்டட் குழுவைச் சேர்ந்தவர்கள் ஜைனா மற்றும் பூர்னா என்னுமிடங்களில் தாக்குதல்கள் மேற்கொண்டார்கள். 2002இலும் போபாலில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

இவ்வனைத்து வழக்குகளிலும் காவல்துறையினரும், புலனாய்வு அமைப்புகளும் இவ்வழக்குகள் தொடர்பாக மேலும் விசாரணையை முடுக்கிட ஆழமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவுமில்லை, இதில் ஈடுபட்டிருந்த கயவர்களையும் அவர்களுக்கு இந்துத்வா அமைப்புகளுடன் இருந்த தொடர்புகளையும் வெளிக்கொணர முனையவுமில்லை. இப்போது, ‘அபினவ் பாரத்’துடன் தொடர்புடைய சதிகாரக் கும்பல்தான் மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்வை நடத்தி இருக்கிறது என்பதும், மற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் உதவி இருக்கிறது என்பதும், கோவாவில் ‘சனாதன் சன்ஸ்தா’ குண்டு தயாரிப்பு சம்பவத்திற்கும் பொறுப்பு என்பதும் தெரிய வந்திருப்பதிலிருந்து, இந்துத்வா பயங்கரவாதம் என்பதும் யதார்த்த உண்மை என்பதை இனி எவரும் மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. ‘அபினவ் பாரத்’ மற்றும் ‘சனாதன் சன்ஸ்தா’ ஆகிய இரு அமைப்புகளுமே முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பு நஞ்சை உமிழும் பயங்கரவாத இந்துத்வா அமைப்புகள் என்பதும் இப்போது வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கின்றன.

இவ்வுண்மையை நாட்டில் உள்ள உளவு மற்றம் பாதுகாப்பு அமைப்புகள் அங்கீகரிக்கத் தயங்குகின்றன. பயங்கரவாதம் என்றால் அது முஸ்லீம் தீவிரவாதம்தான், அவர்கள்தான் வெளிநாடுகளின் தொடர்புடன் இதனைச் செய்வார்கள் என்று நாட்டின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. அதனால்தான் அவர்களால் சம்ஜ்வாதா விரைவு வண்டியில் நடைபெற்ற மிகவும் கோரமான குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த புலன்விசாரணையில் சரியான முறையில் துப்புதுலக்க முடியவில்லை. பயங்கரவாதிகளின் குறிக்கோள் என்னவெனில், பாகிஸ்தானுக்குச் செல்லும் அவ்விரைவு வண்டியில் முழுமையாக முஸ்லீம்கள்தான் பயணம் செய்வார்கள் என்பதேயாகும். ஆயினும், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள்தான் காரணம் என்று கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மற்றோர் முக்கிய அம்சம், மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நடைபெறும் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களுக்காக ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் வக்காலத்து வாங்குவதாகும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிரக்யா தாகூர் மற்றும் அவளுடைய சக எதிரிக்காக ஆர்எஸ்எஸ்-உம் விசுவ இந்து பரிசத்தும் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றன. ‘‘இந்து சந்நியாசினை’’களை எப்படித் தண்டிக்கலாம் என்று குய்யோமுறையோ என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கூக்கூரல் எழுப்புபவர்களில் அன்றைய பாஜக தலைவரான ராஜ்நாத் சிங்கும் சேர்ந்து கொண்டார். விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்த சாதுக்களின் கூட்டம் ஒன்றில்தான் அவர் இவ்வாறு கூக்குரல் எழுப்பினார். எல்.கே. அத்வானியும், பிரக்யா தாகூரை காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாகக் கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதினார்.

அபினவ் பாரத் வழக்கில் சந்தேகத்தின்பேரில் கைதாகியுள்ள ஸ்வாமி அசிமானந்த் என்ற நபர் குஜராத்தில் டாங்ஸ் மாவட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். இவரது கிறித்துவ எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக சங் பரிவாரம் இவரைத் தூக்கிவைத்துக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தது. இவரை மகாராஷ்ட்ரா காவல்துறையோ அல்லது ராஜஸ்தான் காவல்துறையோ இதுவரை கைது செய்ய இயலவில்லையாம்!

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. இந்துத்வா அமைப்புகளில் பிற மதத்தினருக்கு எதிராக விஷத்தை உமிழும் சக்திகள் பயங்கரவாத வன்முறைப் பாதையில் சென்று கொண்டிருக் கின்றன.

‘‘பயங்கரவாதம்’’ என்றால் அது ‘‘முஸ்லீம் பயங்கரவாதம்’’தான் என்று பாதுகாப்பு அமைப்புகள் தாங்களாகவே ஒரு முடிவினை செய்து வைத்திருப்பதால், அவற்றால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. இதற்கு மெக்கா மசூதி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அது மேற்கொண்ட புலனாய்வு நல்லதோர் சான்றாகும். இச்சம்பவம் தொடர்பாக, எண்ணற்ற முஸ்லீம் இளைஞர்கள் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டனர். மேலும் இரு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றபின், ஆட்சிக்கு எதிராக யுத்தம் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, 26 முஸ்லீம் இளைஞர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏழு மாதங்களுக்குப்பின் அவர்கள் மீது எள்ளளவும் சான்றில்லை என்று கூறி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக் கின்றனர். ஆஜ்மீர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் கூட, காவல்துறையினர் ஒரு முஸ்லீம் நபரை சந்தேகத்தின்பேரில் கைது செய்திருப்பதாக அறிவித்தனர். இப்போது வெளிவந்துள்ள உண்மைகளிலிருந்தாவது காவல்துறையினரும் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அணுகுமுறையைச் சரிப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

மாலேகான், ஹைதராபாத் மற்றும் ஆஜ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்துத்வா தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் என்று பார்க்கப்பட வேண்டும். முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்தான் இவர்களும். நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து தாக்குதல்களுக்கு எதிராகவும் ஓர் ஒருங்கிணைந்த புலலனாய்வு அவசியமாகும். புதிதாகத் துவங்கப்பட்டுள்ள தேசியப் புலனாய்வு ஏஜன்சியிடம் (National Investigation Agency) இந்துத்வா பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ள தாக்குதல்கள் ஒப்படைக்கப்படாதது ஏன் என்பதற்கான காரணம் என்னவென்றே தெரியவில்லை. கோவா குண்டுவெடிப்பு வழக்கு தவிர, தேசியப் புலனாய்வு ஏஜன்சி வேறெந்த வழக்கையும் கையாளவில்லை. மதானி கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் அலுவா என்னுமிடத்தில் 1995இல் ஒரு பேருந்தை எரித்த வழக்கினை தங்களுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகமும் தேசியப் புலனாய்வு ஏஜன்சியும் மிகவும் ஆர்வம் காட்டின. கேரள காவல்துறை இவ்வழக்கை விசாரணை செய்து இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆயினும், தேசியப் புலனாய்வு ஏஜன்சி (என்ஐஏ) இதனைத் தன்வசம் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ராஜஸ்தானிலும் ஆந்திராவிலும் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக என்ஐஏ, கண்டுகொள்ளவே இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்துத்வா பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான பார்வையோ உறுதியான நடவடிக்கையோ இதுவரை எடுக்க மறுத்து வந்திருக்கிறது. இப்போது ஆஜ்மீர் மற்றும் ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள உண்மைகளின் வெளிச்சத்திலிருந்தாவது இத்தகைய பயந்த மனவலிமையற்ற அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஐமுகூ அரசு முன்வர வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: