Thursday, May 20, 2010

ஐமுகூ-2 அரசாங்கத்தின் ஓராண்டு-பிரகாஷ் காரத்



ஐமுகூ-2 அரசாங்கம் வரும் மே 22உடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு இருந்ததுபோல், ஐமுகூ-2 அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச பொது செயல் திட்டம் என்று எதுவும் கிடையாது. மாறாக, காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசாங்கமானது தன்னுடைய நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை உறுதியுடன் பின்பற்றப் போவதாகக் கூறியது. தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில் உந்தித்தள்ளமுடியாத நடவடிக்கைகளை எல்லாம் இப்போது எடுத்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தது. மேலும் சாமானிய மக்களுக்காக சில சேமநல நடவடிக்கைகளைக் கொண்டுவர இருப்பதாகவும் உறுதி அளித்தது. அயல்துறைக் கொள்கையையைப் பொறுத்தவரை, ஐமுகூ-1 அரசாங்கம் மேற்கொண்ட, அமெரிக்காவுடன் போர்த்தந்திரக் கூட்டனணி ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அதே அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றப் போவதாகவும் தெரிவித்தது.
ஐமுகூ அரசாங்கத்தின் ஓராண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:
முதலாவதாக, இந்த அரசானது நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வரும், அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலை உயர்வை, அதிலும் குறிப்பாக உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட, பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டு விட்டது. கடந்த ஓராண்டில் மக்களின் அவலத்திற்கு மிகப் பெரிய காரணியாக இது அமைந்துவிட்டது. குறிப்பாக ஏழைகளைப் பொறுத்தவரை இதன் பொருள், குறைந்த உணவு - அதிகம் பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு என்பதேயாகும்.

சரியாகச் சொல்வதென்றால் இதனைத் ‘‘தோல்வி’’ என்று கூட சொல்லமுடியாது. நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிட அரசு உறுதியாக இருப்பதன் வெளிப்பாடுதான் இது. உணவுப் பொருள்களும் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களும் மிகப் பெரிய அளவில் ஊக வணிகச் சந்தையில் செலுத்தப் பட்டு வர்த்தகமயமாகிப் போனதுதான் இதற்குக் காரணமாகும். முன்பேர வர்த்தக முறை என்பது மிகப்பெரிய வர்த்தக சூதாடிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்திடும் மாபெரும் கூடாரமாகும். கொள்ளை லாபமடித்திடும் இவர்களின் நலன்களைப் பாதுகாத்திடுவதில்தான் அரசு அக்கறை காட்டுகிறதேயொழிய, சாமானிய மக்களின் வாழ்க்கை குறித்து அதற்குக் கிஞ்சிற்றும் கவலை கிடையாது.

இரண்டாவதாக, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமானது, உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக நம் நாட்டின் பெரும் வர்த்தக நிறுவனங்கள் தள்ளாடுவதைக் கண்டு மிகவும் கவலை யடைந்து, அவர்கள் மேல் விதித்திருந்த வரிகளை வெட்டியது. பெரிய அளவில் வரிச் சலுகைகளை அளித்தது. அந்நிய நிதி ஊகவணிகர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் அளித்தது. பணக்காரர்களைப் பொறுத்தவரை உலகில் மிகவும் குறைவான அளவில் பணக்காரர்களிடம் வரி வசூலிக்கும் நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான நேரடி வரிகள் சட்டம் (Direct Taxes Code) என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானித் திருக்கிறது. கடந்த நிதியாண்டில், மத்திய அரசு கார்பரேட்டுகளுக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை அளித்திருக்கிறது. இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு முன்வந்திருப்பதானது, இந்தியப் பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும், அமெரிக்க கார்பரேட்டுகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சங்கதிகளாகும்.

அரசு மேற்கொண்டுள்ள ஒவ்வொரு கொள்கையின் பின்னணியிலும், அது எரிவாயு (pricing of gas)விலை உயர்வாக இருந்தாலும் சரி, டெலிகாம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் தொடர்பானவைகளாக இருந்தாலும் சரி, நிதித்துறை, சில்லரை வர்த்தகம் அல்லது நாட்டிற்குள் அந்நிய கல்வி நிறுவனங்களை அனுமதித்தல் என எதுவாக இருந்தாலும் சரி - அரசாங்கம் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அந்நிய நிதிக் கூட்டாளிகளுக்கு இழிவான முறையில் துணை போகும் விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடியும்.

மூன்றாவதாக, நவீன தாராளமயக் கொள்கையானது மிகவும் இழிவான மூலதன வளர்ச்சியையும் (spawned crony capitalism) ஊக்குவிக்கிறது. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான பிணைப்பு காங்கிரஸ் ஆட்சியின் முத்திரைச்சின்னமாகவே மாறியிருக்கிறது. மிகவும் இரண்டகமான வகையில் கள்ளத்தனமாக மொரிசீயஸ் தீவு வழியாகவும் மற்றும் பல்வேறு வழிகளிலும் அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் நுழைதல், ஆட்சியிலுள்ளவர்களின் அரவணைப்புடன் மிகப்பெரிய அளவில் சட்ட விரோதமான சுரங்க வர்த்தகம் பெருகியிருத்தல், சட்ட விரோதமாக நடந்திடும் பெரும் பணக்காரர்களையும் வரி ஏய்ப்புச் செய்வோரையும் தண்டித்து ஒழுங்குபடுத்திட மறுத்தல் - இவை அனைத்தும் மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் வக்கிரமான முதலாளித்துவத்தை வளர்த்துள்ளது. இதுவே இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக் கதையாக இருக்கிறது.
இவை அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அளவில் லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறது. இது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் முதலாமாண்டில் சத்யம் ஊழல், ஐபிஎல் விவகாரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல், ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் என்று எண்ணற்ற ஊழல்களால் நிரம்பி வழிகின்றன. இவை அனைத்தும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஆளும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான இழிவான பிணைப்பிற்கு வழிவகுத்திருக்கின்றன.

நான்காவதாக, ஐமுகூ அரசாங்கம் சாமானிய மக்களின் மீது கவலைப்படுவதாகக் கூறிவந்ததெல்லாம் எவ்வளவு பசப்புத் தனமானது என்பதும் இந்தக்காலத்தில் மெய்ப் பிக்கப்பட்டுவிட்டது. நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரசும் ஐமுகூ அரசாங்கமும் ஏதாவது செய்திருக்க வேண்டும். ஆனால் எதுவுமே செய்திடவில்லை. ஐமுகூ-1 அரசாங்கத்தின் காலத்தில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், விவசாயிகள் கடன் ரத்து மற்றும் வன உரிமைகள் சட்டம் என்று சில நடவடிக்கைகள் எடுக்கப்படடன. இவை அனைத்தும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் பகுதிகளாகும். இடதுசாரிக் கட்சிகள் அளித்து வந்த நிர்ப்பந்தம் மற்றும் போராட்டங்களின் விளைவாகவே இவை பிரதானமாக நடைமுறைக்கு வந்தன என்று உறுதியாகக் கூற முடியும்.

ஆயினும், ஐமுகூ-2 அரசாங்கம் தன் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் உருப்படியாக ஒரு நடவடிக்கையைக்கூட இதுவரை எடுத்திட வில்லை. இப்போது முன்மொழியப்பட்டிருக்கிற உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு எவ்விதத்திலும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அளிக்கப் போவதில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிவிட்டது. இன்னமும் அரசாங்கம் இதனை எப்படிக் கொண்டுவருவது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது. பொது விநியோக முறை மேலும் வெட்டப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய பட்ஜெட்டில் மூவாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உர மான்யத்தை வெட்டியிருப்பதிலிருந்து, விவசாயிகளின் அவலம் குறித்து அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஐமுகூ-1 அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது, கல்விக்கான பொது செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு அளவிற்கு உயர்த்திடவும், அதேபோல் பொதுசுகாதாரத்திற்கான பொது செலவினத்தையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 விழுக்காடு அளவிற்கு உயர்த்திடவும் உறுதி அளித்திருந்தது. கல்வியைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகளின் பொது செலவினம் 4 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது. பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீடு, 2009-10 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.06 விழுக்காடு மட்டுமே. இது குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் அளித்திருந்த உறுதிமொழியான 2-3 விழுக்காடு குறியீட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழானதாகும்.

ஐந்தாவதாக, ஐமுகூ அரசாங்கம், நாடாளுமன்றத்தில் அதற்குள்ள சாதகமான அரசியல் சூழ்நிலையையும் மதச்சார்பற்ற சக்திகளின் பலத்தையும் பயன்படுத்திக் கொண்டு, வகுப்புவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லத் தவறிவிட்டது. இதனை, அது சிறுபான்மையினருக்கு அவர்களது சமூக-பொருளாதாரப் பின்தங்கியை நிலைமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த ரங்கனாத் மிஷ்ரா ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தத் தயங்குவதிலிருந்தே தெளிவாகக் காண முடியும். காஷ்மீரில் மக்கள் மத்தியில் குமுறிக் கொண்டிருக்கும் பிரச்சனையை சமாளித்திட, போதிய அளவு அரசியல் உறுதியின்மை இருப்பதை நன்கு காண முடியும்.

மாவோயிஸ்ட் வன்முறையைச் சமாளிப்பதைப் பொறுத்தவரை, அது முழுக்க முழுக்க சட்டம் - ஒழுங்கு பிரச்சனை என்றே ஐமுகூ அரசாங்கம் கருதுகிறது. வனப்பகுதிகளில் வகைதொகையற்ற விதத்தில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள உரிமம் அளித்திருப்பது போன்ற ஐமுகூ அரசாங்கத்தின் சில கொள்கைகளும் அதற்குக் காரணம் என்று அது உணர மறுக்கிறது. இதன்மூலம் பழங்குடியின மக்களை தனிமைப்படுத்தி விட்டதை அது உணரவில்லை. மேலும் ஐமுகூ அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய திரிணாமுல் காங்கிரசே அதற்கு இடைஞ்சல் செய்துகொண்டிருக்கிறது. மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளே கிடையாது என்றும், எனவே அவர்களுக்கு எதிராக மத்திய - மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைகள் தேவையில்லை என்றும் பிரகடனம் செய்திருக்கிறார்.
ஆறாவதாக, மன்மோகன் அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது அமெரிக்காவின் அடிவருடியாக இருப்பதில் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈடாக, இந்தியா அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களும் உபகரணங்களும் வாங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் நிலப்பகுதிகளில் அமெரிக்கா ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதிப்பதற்கான ஒப்பந்தம் (The End Use Monitoring Agreement)கையெழுத்தாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ராணுவம்சாரா சிவில் அணுசக்தி பொறுப்பு சட்டமுன்வடிவு (Civil Nuclear Liabilit Bill) இந்திய மக்களுக்கு எதிராக, அமெரிக்காவின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்கான ஒன்றாகும். அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் பல்வேறு ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டிருப்பதானது, இந்தியாவின் சுயேட்சையான கொள்கையைக் கடுமையாகப் பாதிக்கும்.

அணுசக்தி பிரச்சனைகளில் ஈரானைக் குறி வைத்து அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா துணைபோனது. மேலும் ஒருதடவை, மற்ற அணிசேரா நாடுகளைப்போலல்லாமல், சர்வதேச அணுசக்தி முகமையில்(IAEA-International Atomic Energy Agency), ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இந்தியா, அணிசேரா நாடுகளின் தலைவனாக இருந்து தன்னுடைய பங்கினை ஆற்றவில்லை. மாறாக, பிரேசில் நாட்டின் அதிபர் லூலா டி சில்வா அமெரிக்காவிற்கு எதிராக நின்று, ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டுவருவதை ஒப்புக்கொள்ள மறுத்திருக்கிறார். அதிபர் லூலா தற்போதுள்ள முட்டுக்கட்டையை நீக்குவதற்காக, துருக்கியின் உதவியுடன் ஏதேனும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு, ஈரானிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரான் சென்றிருக்கிறார்.

அயல்துறைக் கொள்கையில் இந்த அரசு மேற்கொண்ட ஒருசில சாதகமான அம்சங்கள் ஒன்று, பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோதல் போக்கை மேற்கொள்ள மறுத்ததாகும். அவரது அரசாங்கத்திலும் கட்சியிலும் ஒரு சில பிரிவுகள் அதற்கு எதிராக இருந்தபோதிலும், பிரதமர் அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்க்காது இதனைச் செய்திருக்கிறார்.
இந்தியாவின் முன்முயற்சியின் விளைவாக பிரிக் (BRIC-Brazil, Russia, India, China), இப்சா(IBSA- India, Brazil, South Africa) போன்று அமைப்புகள் உருவாகி, அமெரிக்காவின் ஒருதுருவ கோட்பாட்டிற்குப் பதிலாக, பல்துருவக் கோட்பாட்டை வலுப்படுத்தக்கூடிய வகையில் ஒரு வலுவான சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை உருவாக்குவதற்கு வாய்ப்பிருந்தும், ரஷ்யா, சீனா மற்றும் இந்திய அயல்துறை அமைச்சர்களின் கூட்டங்களை அதற்குப் பயன்படுத்தத் தயங்கி மிகவும் அடக்கி வாசிக்கிறது.
ஐமுகூ அரசாங்கத்தின் ஓராண்டு முடிவில் உள்ள நிலைமை என்பது, அரசியல்ரீதியாக அது மிகவும் பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது. 2009 மே மாதத்தில் ஐமுகூ தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும், அதற்குப் பெரும்பான்மை கிட்டவில்லை. இந்த எதார்த்த உண்மையை காங்கிரஸ் கட்சித் தலைமை உதாசீனப்படுத்திவிட்டு, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தாமாகவே ஆதரிக்க முன்வந்ததை அடுத்து, மிகவும் திருப்திமனப்பான்மையுடன் செயல்படத்துவங்கியது. ஆனால் ஓராண்டு முடிவில் அத்தகைய திருப்திமனப்பான்மை நொறுங்கி சுக்குநூறாகிவிட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு பேரங்களில் ஈடுபட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி மூன்று மாதங்கள், அரசாங்கம் தன் பெரும்பான்மையை மெய்ப்பிப்பதற்காகவும், வெட்டுத் தீர்மானங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், நிலுவையிலிருந்த சில சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுவதற்காகவும் பலவிதமான தில்லுமுல்லுகளில் இறங்கியதைக் கண்டோம். சிபிஐ என்னும் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தை ஆள்வோர் தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தியதானது அதன் மீதான நம்பகத்தன்மையையே கேலிக்குரிய தாக்கிவிட்டது. மகளிர் ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவினை மக்களவையில் கொண்டுவராமல் ஒத்திவைத்துள்ளது, ராணுவம் சாரா சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி இருப்பது - ஆகிய அனைத்தும் அதன் எதிர்காலம் மிகுந்த சிக்கலுடன் இருக்கும் என்பதன் முன்னறிகுறிகளாகும்.

இவ்வாறு அரசாங்கம் எவ்வித திசைவழியிலும் செல்லாது குழம்பிப் போயிருக்கிறதென்றால் அதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணங்களாகும். ஐமுகூ அரசாங்கம் தன்னுடைய சொந்தக் கொள்கைகளின் அடிப்படையில் முன்னேற முடியும் என்று நினைத்துக் கொண்டுதான் செயல்படத் துவங்கியது. எனினும் அதன் கூட்டாளிகள் இப்போது வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாடாளுமன்றத்திற் குள்ளேயே அதற்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை, நாளும் ஏறும் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதியுறும் தங்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத தடித்தனமானதோர் அரசாங்கமே இது என்பதையும் அதே சமயத்தில் உலகப் பொருளாதார மந்தத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் மேல் மிகப்பெரிய அளவில் கரிசனம் கொண்டிருப்பதையும் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கத்தின் முதல் ஆறு மாதங்களுக்குப்பின், நாடு முழுதும் மக்கள் போராட்டங்களும் இயக்கங்களும் அலை அலையாய் எழுந்து வந்தன. இதன் உச்சகட்டமாக ஏப்ரல் 27 அன்று 13 எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்திருந்த அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. நாட்டில் பல்வேறுபட்ட மக்கள் திரளினரும் இப்போராட்டத்தில் பெருவாரியாகக் கலந்து கொண்டார்கள். அரசாங்கத்தின் கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவுமே இப்போராட்டம் நடைபெற்றது. நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், ஓராண்டு காலம் ஆட்சியிலிருந்த ஐமுகூ அரசாங்கம் இவற்றிலிருந்து ஏதேனும் பாடங்கள் கற்றுக் கொண்டதா என்பதேயாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: