Saturday, May 1, 2010

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக்கொள்கைகளை முறியடித்திட-மே தினத்தில் சபதமேற்போம்: புதுதில்லியில் பிரகாஷ்காரத் பேச்சு

புதுதில்லி, மே 1-

ஐமுகூ அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைளை முறியடித்திட மே நாளில் சபதமேற்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மே தினமான சனிக்கிழமையன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், மத்தியக் குழு அலுவலகத்தின் முன் கட்சி ஊழியர்கள், தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் முழக்கங்களுக்கிடையே செங்கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

‘‘மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய உரிமைகளுக்காகவும், தன் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் நடத்திய இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்திடவும், எதிர்கால இயக்கங்களுக்காக உறுதி ஏற்கவும் பயன்படுத்திக் கொள்ளும் நாளாகும்.

இன்றையதினம் இந்தியாவில் தொழிலாளர்களின், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகப் போராட, அனைத்துப் பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்திருப்பது நல்லதோர் அம்சமாகும். சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகில் பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துள்ளது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக இந்திய ஆட்சியாளர்கள் துரதிர்ஷ்டவசமாகத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகவுள்ள, மக்களின் வாழ்வாதாரங்களுக்குக் கேடுபயக்கக்கூடிய, தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய அதே நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூடிய விதத்திலும், முதலாளிகள் தொழிலாளர்களை தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், hசைந யனே கசைந யீடிடiஉல-ஐப் பயன்படுத்தக் கூடிய வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், தாங்கள்இதுகாறும் கடினமாகப் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட அணி திரண்டு வருகிறது. மே தினமான இன்று, ஐமுகூ அரசாங்கத்தின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடி அவற்றை முறியடித்திட தொழிலாளர் வர்க்கம் இன்று உறுதி எடுத்துக் கொள்கிறது.

இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

எம்.கே. பாந்தே

இந்தியத் தொழிற் சங்க மையத்தின் துணைத் தலைவர் எம்.கே. பாந்தே பேசியதாவது:
முதலாளித்துவத்தின் கடும் தாக்குதல்களுக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் மேலும் மேலும் ஒன்றுபட்டு வருகிறது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொழிலாளர் வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனைத்துவித சூழ்ச்சிகளையும் முறியடித்து முன்னேறி வருகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தொழிலாளர் வர்க்கமும், தங்கள் போராட்டங்களை அதிகரித்துள்ளன. நடைபெறும் போராட்டங்களில் மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்பு என்பதும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆட்சி செய்யும் ஐமுகூ அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட துடித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளதார மந்தத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.
ஆட்சியாளர்களின் தொழிலாளர் வர்க்கக் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டு வருவது அதிகரித்துள்ளது. நாட்டின் உள்ள ஐந்து பெரிய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன. வரவிருக்கும் காலங்களில் இவ்வொற்றுமையை மேலும் வலுப்படுத்தி, தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஆட்சியாளர்களின் உலகமய, தாராளமயத் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடித்திட இம்மேநாளில் சபதமேற்போம்.
இவ்வாறு எம்.கே. பாந்தே கூறினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. வரதராசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் செல்வா முதலானோர் உடன் இருந்தார்கள்.

(ச.வீரமணி)

No comments: