Monday, August 4, 2008
ஒரு சகாப்தத்தின் தூதுவர்!
சுடச்சுடரும் ஒன்போல் ஒளிவிடும் துன்பம்சுடச்சுட நோக்கிற் பவர்க்கு’’ என்பது வள்ளுவர் வாக்கு. அந்தக் காலத்திய தவ முனிவர்களை பெருமைப்படுத்தி கூறப்பட்ட குறள் இது. சுடப்பட்ட பொன் ஒளிர்வது போல, தவ யோகி கள் துன்பம் எனும் தீயால் சுடப்பட அனுபவ அறிவு பெற்று ஒளிர்வர் என்பது இதன் பொருள். இந்தக் குறளுக்கு பொருளாக விளங்கியவர் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். மாவீரன் பகத் சிங்கின் தியாகத்தால் ஈர்க்கப்பட்டு மாணவப் பரு வத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சுர்ஜித், அடிமை இந்தியாவில் 8 ஆண்டுகளும், சுதந்திர இந்தியாவில் 2 ஆண்டு களும் சிறையில் கழித்துள்ளார். தனது வாழ்வில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து இயக்கப் பணி ஆற்றியுள்ளார்.விடுதலைப் போராட்டக் காலத்தில் தனது 16-வது வயதிலேயே குண்டுமழைகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கொடியை ஏற்றிய அவர், மத்தியிலும் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை அதி காரத்திலிருந்து இறக்கி கூட்டணி சகாப்தத்திற்கு வழிவகுத்த மகத்தான தலைவர் என்றால் அது மிகையல்ல. சோவியத் யூனியனின் அரும்பெரும் சாதனை களால் ஈர்க்கப்பட்டு பொதுவுடைமையாளராக மாறிய சுர்ஜித்தின் காலத்திலேயே ஏகாதிபத்தியத் தின் சூழ்ச்சியாலும், காட்டிக் கொடுக்கும் கயவர் களாலும் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப் பிய நாடுகளிலும் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டும் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இந்தியாவில் பொதுவுடைமை இயக் கம் தளர்வின்றி நடைபோடும் என்று பிரகடனம் செய்த பெருமைக்குரியவர். அதுமட்டுமின்றி, உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் ஊடாடி சோசலிசமே மனித குலத்தின் மீட்சிக்கு ஒரே வழி என்று நம்பிக்கை ஒளி பாய்ச்சும் நாயகனாக திகழ்ந்தார். அவசர நிலைக் காலத்தை தொடர்ந்து மத்தியில் முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து அமைந்த தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி அரசுகளை உருவாக்குவதற்கான மைய அச்சாக அவர் திகழ்ந்தார். அவரது உதட்டு அசைவிற்கேற்பவே இந்தியாவின் மைய அரசியலின் அடுத்த அடி இருக்கும் என்கிற அளவுக்கு வியூகங்களை வகுக்கிற வித்தகராக விளங்கியவர் தோழர் சுர்ஜித். நாடு விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, அவரது சொந்த மண்ணான பஞ்சாப் இரு கூறாக பிளக்கப்பட்டது. மதவெறியின் கோரத்தாண்ட வத்தை நேரடியாக உணர்ந்த காரணத்தினால் இந் தியாவில் மதவெறி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக அயர்வின்றி போராடிய தலைவர் அவர். பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் பிரிவினை வாதம் தலை தூக்கிய போது, அவரது நுண்மாண் நுழைபுலத்தால் அந்தப் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வழிகாட்டினார். இந்திய விவசாயிகளின் துன்ப, துயரங்களைக் களைய போராடிய அவரது ஆன்மா எப்போதும் விவசாயிகள் இயக்கத்துடனேயே இணைந் திருந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரிக் கட்சி களின் இணைப்புப் பாலமாக விளங்கிய அந்த மகத்தான தலைவரின் வழிகாட்டுதலும் அனுபவ மும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்தா கும். இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தலை நிமிர்ந்து நடைபோட வழிகாட்டிய தலைவர்களில் ஒருவரான தோழர் சுர்ஜித்திற்கு தீக்கதிர் தனது இதயப்பூர்வ அஞ்சலியை தலைதாழ்த்தி தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment