Tuesday, July 4, 2017

நவம்பர் புரட்சியின் சாதனை என்ன?(1)



சீத்தாராம் யெச்சூரி

(கேரள மாநிலம் திருச்சூரில் 2017 ஜூன் 13 அன்று இஎம்எஸ் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று துவக்கவுரை ஆற்றினார். அந்த உரையின் சாராம்சம் இப்பகுதியில் இன்று முதல் இடம்பெறுகிறது.)

இந்த ஆண்டும் இஎம்எஸ் நினைவு கருத்தரங்கைத் துவக்கி வைத்திட எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 19 ஆண்டுகளாக, எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து ஒவ்வோராண்டும் இக்கருத்தரங்கை நடத்தி வருவதற்காக இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு முதற்கண் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2017ஆம் ஆண்டு, மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெற்ற நூற்றாண்டாக அனுசரித்து வருகிறோம். இப்புரட்சியானது 20ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றில் ஆழமான செல்வாக்கினை ஏற்படுத்திய ஒன்றாகும், மனிதகுல விடுதலை மற்றும் முன்னேற்றத்தில் பாய்ச்சல் வேக மாற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாகும்.
மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழித்துக்கட்டி ஒரு சமூக அமைப்பை நிறுவுவதை நோக்கி மனிதகுல நாகரிகத்தை முன்னோக்கி உந்தித்தள்ளிய ஒன்றாகும். மார்க்சியம் ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்பதை சந்தேகமின்றி மெய்ப்பித்த ஒரு சகாப்த நிகழ்வாகும். நவம்பர் புரட்சி என்றென்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது.காரல் மார்க்ஸ் மறைவிற்குப்பின் 1883இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்கு பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் அவர் குறிப்பிட்டதாவது: ‘‘அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன.
ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போனகாலம் தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்தது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளிவர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப்போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாய் விடுவிக்க வேண்டும்.
அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.’’ (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.)
மிகவும் சுருக்கமாகச் சொல்வதென்றால், நவம்பர் புரட்சியின் சாதனை என்பது இதுதான்: ‘...சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்து விடுவிக்க வேண்டும், ...’ மார்க்சியத்தின் இத்தகைய தீர்க்கமான முடிவுகளை எதார்த்தமற்றது என்று கண்டித்து, சர்வதேச பிற்போக்குவாதிகள் தாக்குதல் தொடுப்பது இயற்கையேயாகும். மார்க்சிசம் என்பது அறிவியல் உண்மையின் அடிப்படையிலான ஓர் ஆக்கப்பூர்வ அறிவியல் என்பதை ரஷ்யப்புரட்சியும், அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் அமைந்ததும் மிகவும் அழுத்தமாக உறுதிசெய்தது. நவம்பர் புரட்சியின் முக்கியத்துவம் எண்ணற்றவைகளாகும்.
சுரண்டலற்ற ஒரு சமூகஅமைப்பை எதார்த்தமாக்கிய அதே சமயத்தில், உழைக்கும் மக்களின் படைப்பாற்றலையும் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. சோசலிசத்தின் மூலமாக எண்ணற்ற சாதனைகளை மிக வேகமாக அடைய முடிந்தது. அதற்கு முன் மிகவும் பிற்போக்குப் பொருளாதார நாடாக இருந்ததை, ஒரு பலமிக்க பொருளாதார மற்றும் ராணுவ வல்லமை கொண்ட நாடாக, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்க்கும் திறன் கொண்ட நாடாக மாற்றி, சோசலிச அமைப்புமுறையின் மேன்மையை உறுதி செய்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் கட்டி எழுப்பப்பட்டதானது மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வீரகாவியமாகும்.
20ஆம் நூற்றாண்டின் வரலாறு, நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து சோசலிசம் நிறுவப்பட்டதால் பிரதானமான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பாசிசத்தை முறியடிப்பதில் சோசலிச சோவியத் யூனியன் குடியரசு மேற்கொண்ட தீர்மானகரமான பங்கும், அதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோசலிச நாடுகளாக உருவானதும் உலக வளர்ச்சிப்போக்கில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் மீதான வெற்றிக்கு சோவியத் செஞ்சேனை ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பே பிரதான காரணமாகும். இது, காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளில் அதற்கு எதிராகப் போராடி வந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்து, பின்னர் அந்நாடுகள் காலனியாதிக்க சுரண்டலிலிருந்து விடுதலை அடைந்ததைப் பார்த்தோம்.
சீனப் புரட்சியின் வரலாறு படைத்திட்ட வெற்றி, வீரம் செறிந்த வியட்நாம் மக்கள் போராட்டம், கொரிய மக்கள் போராட்டம், கியூபா புரட்சி வெற்றிவாகை சூடியது ஆகியவை உலக வளர்ச்சிப்போக்கின் மீது மகத்தான செல்வாக்கைச் செலுத்தின.சோசலிச நாடுகளின் சாதனைகள் அளவிடற்கரியனவாக இருந்தன. வறுமை மற்றும் எழுத்தறிவின்மை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்பட்டது, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியது ஆகியவை உலகம் முழுதும் போராடி வந்த உழைக்கும் மக்களுக்கு வலுவான முறையில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

No comments: