Friday, July 14, 2017

சோவியத் புரட்சி இப்போதும் உத்வேகம் ஊட்டக்கூடியதேயாகும்



மேரி டேவிஸ்
[நவம்பர் புரட்சி, அதன் தாக்கம் மற்றும் அதன்பின் அது நிறைவேற்றிய சாதனைகள் உண்மையில் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடியவைகளாகும். நாம் அவற்றை நிச்சயமாகக் கொண்டாட வேண்டும், ஆய்வு செய்திட வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.]
ரஷ்யப்புரட்சியின் நூற்றாண்டை ஏன் நாம் கொண்டாட வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்?நம்மைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, நவம்பர் புரட்சி என்பது மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக பெரும்பான்மையாகவுள்ள தொழிலாளிகளும் விவசாயிகளும் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, ஆட்சி நடத்தியதாகவே புரிந்துகொண்டிருக்கிறோம்.
நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும். எனவேதான், நாம் இதனை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப்போலவோ அல்லது அதன் கலாச்சார நிறுவனங்களைப்போலவோ அல்லாது சித்தாந்தரீதியாக வேறுவகையில் இதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இங்கேயுள்ள மார்க்ஸ் நினைவு நூலகம் (MML- Marx Memorial Library), பாரம்பரிய லாட்டரி நிதியத்திலிருந்து (Heritage Lottery Fund), ரஷ்யப் புரட்சியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்துவதற்காக நிதியைப் பெற்றிருக்கிறது. அதன் மூலமாக நாம் மார்க்ஸ் நினைவு நூலகத்தில் ஓர் இணைய தளம், வெளியீடுகள் மற்றும் அறிஞர் பெருமக்களின் விரிவுரைகளை நடத்திட இருக்கிறோம். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளை உருவாக்கியிருக்கிறோம். முதலாவது பிரிவு, 1917-22ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் இருந்த நிலைமைகளை விவரிக்கிறது.
இதில் முதல் உலகப் போரில் ரஷ்யா பங்கேற்றது, 1917இல் இரு புரட்சிகள், மென்ஷ்விக்குகளின் கொள்கைக்கும், போல்ஷ்விக்குகளின் கொள்கைக்கும் இடையே இருந்த முக்கிய முரண்பாடுகள், குறிப்பாக முதல் உலகப் போர் தொடர்பாக அவற்றிற்கிடையே இருந்த முரண்பாடு, சமாதானம் மற்றும் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் ஒப்பந்தம், உள்நாட்டு யுத்தம், தலையீட்டு யுத்தங்கள் மற்றும் மூன்றாவது சர்வதேச அகிலம் அமைக்கப்பட்டதும் அதன் மூலம் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே இறுதிப் பிரிவினை ஏற்பட்டது ஆகியவை இடம் பெறுகின்றன.
அடுத்து, பிரிட்டனிலும், குறிப்பாக ஐரோப்பாவின் இதர பகுதிகளிலும், அதிலும் குறிப்பாக ஹங்கேரியிலும், ஜெர்மனியிலும் நவம்பர் புரட்சியின் தாக்கம் எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை ஆராய்கிறோம். பிரிட்டன் பிரிவில், அரசாங்கத்தாலும், பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தாலும், தொழிலாளர் இயக்கத்தின் வலதுசாரி தலைமை ஆகியவை போல்ஷ்விக்குகளுக்கு எதிராக சித்தரிக்கப்பட்டுள்ள பகைமை உணர்வை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறோம். போல்ஷ்விக்குகளுக்கு எதிராக செயல்பட்ட இவர்கள் அனைவரும் முதல் உலகப் போரை ஆதரித்தவர்கள் மற்றும் சோவியத்துகள் அதிலிருந்து விலகிக்கொண்டதும் ஆத்திரம் அடைந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவருமே ரஷ்யாவில் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதாலும், அங்கே தங்களுடைய அபரிமிதமான முதலீடுகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற காரணங்களாலும் போல்ஷ்விக்குகள் மீது மிகவும் கோபம் அடைந்திருந்தார்கள். இதற்கு நேரெதிராகச் செயல்பட்ட இடதுசாரிகள் குறித்தும் நாங்கள் ஆய்வு செய்திருக்கிறோம். புரட்சி குறித்தும் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகள் குறித்தும் பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் செய்தித்தாளான தி கால் (The Call). பீப்பிள்ஸ் ரஷ்யா தகவல் மையம், உள்நாட்டு யுத்தத்தின்போது வெண்படையினருக்கு ஆதரவாக பிரிட்டன் தலையீடு இருந்ததை எதிர்த்த ரஷ்யப் பிரச்சாரத்தின் செல்வாக்கு ஆகியவை குறித்து ஆய்வு செய்கிறோம்.நிறைவாக, நடவடிக்கைக் கவுன்சில்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதன் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்கிறோம்.
இந்த அமைப்பானது, பொது வேலைநிறுத்தம் மேற்கொண்டிடுவோம் என்று அரசாங்கத்தை அச்சுறுத்தியபின்னர்தான், அரசாங்கம் தன்னுடைய தலையீட்டுக்கொள்கையைக் கைவிட்டது.இவற்றிற்காக நாங்கள் மார்க்ஸ் நினைவு நூலகம், ஆர்ஐஏ நோவாஸ்தி, ரஷ்ய மற்றும் சோவியத் சார்பான ஆய்வுகள் குறித்த ஒத்துழைப்புக்கான சொசைட்டி மற்றும் வார்விக் பல்கலைக் கழகத்திலிருந்த நவீன பதிவுருக்கள் மையம் ஆகியவற்றிலிருந்த ஆவணங்கள் மற்றும் சித்திரங்களையும் சேகரித்திருக்கிறோம். இவற்றை எங்களுக்கு தந்து, ஒத்துழைத்து உதவியமைக்காக அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.போல்ஷ்விக் புரட்சி குறித்து எங்களை மிகவும் ஆச்சரியப்படவைத்த உண்மை என்னவெனில், புரட்சியை நடத்திய மக்களில் 80 சதவீதத்தினர் விவசாயிகள் என்பதும், அவர்களில் அதிகமானவர்கள் கல்வியறிவு அற்றவர்கள் என்பதும், அவர்கள்தான் இந்தப் புரட்சியை வெற்றிகரமாகச் செய்துமுடித்திருக்கிறார்கள் என்பதுமாகும்.
மேலும் ரஷ்யா அந்த சமயத்தில் அதிக அளவில் கிழக்கு முன்னணியில் நடைபெற்ற முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்ததாகும்.1917 பிப்ரவரி மற்றும் நவம்பர் ஆகிய இரு புரட்சிக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், ஆரம்பத்தில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மையானவர்களாக எங்கேயுமே கிடையாது. தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் சோவியத்துகளில்கூட அவர்களுக்கு பெரும்பான்மை கிடையாது. அந்த நிலைமையை மாற்றியமைத்திட அவர்களுக்கு எட்டு மாதங்கள் தேவைப்பட்டது. இந்த மாற்றம், அநேகமாக ஒட்டுமொத்தமாக அமைதியான சோசலிஸ்ட் நவம்பர் புரட்சியாக விளைந்தது. இதன்பின்னர் நாட்டிற்குள் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஐந்தாண்டுகள் புரட்சி நீடித்திருந்ததும் மற்றும் அந்நியத் தலையீடுகளின்போதும் அவற்றை வெற்றிகரமானமுறையில் சமாளித்ததும்தான் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயங்களாகும்.
நவம்பர் புரட்சி, அதன் தாக்கம் மற்றும் அதன்பின் அது நிறைவேற்றிய சாதனைகள் உண்மையில் நம் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டக்கூடியவைகளாகும். நாம் அவற்றை நிச்சயமாகக் கொண்டாட வேண்டும், ஆய்வு செய்திட வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத்திசைவழியில் இத்திட்டத்தை நாம் முன்னெடுத்துச்சென்றிடவும், இன்றையதினம் தொழிலாளர்கள் மத்தியில் நாம்தான் உண்மையான சக்தி என்கிற நம்பிக்கையை ஊட்டக்கூடிய விதத்தில் அவர்களுக்கு உதவிடவும் அனைத்துத்தரப்பினரும் முன்வருவீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி: மார்னிங் ஸ்டார்
கட்டுரையாளர்: ராயல் ஹாலோவேயில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர் வரலாற்றுத்துறை, வருகைப் பேராசிரியராவார்.
தமிழில் : ச.வீரமணி

No comments: