Monday, July 31, 2017

சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இந்த அரசு எதுவுமே செய்ததில்லை

மாநிலங்களவையில் டி.கே.ரெங்கராஜன் தாக்கு
புதுதில்லி, ஆக.1-
இந்த அரசு சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதுவுமே செய்ததில்லை என்றும், பாதையை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.  
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மாநிலங்களவையில்  2017ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (ரத்து) சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:
“மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களே, இதன்மீது பேச வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவை உருவாக்கிய தெரிவுக்குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவ்விற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவின்மீது அபரிமிதமான அறிவுடன் திகழும் அமைச்சர் ஜெஹ்லாத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மீது பல விஷயங்களை ஒப்புக்கொள்ள மறுப்பதில் நாம் ஒத்துப்போனபோதிலும், தெரிவுக்குழுவில் இதன் நடவடிக்கைகளை மிகவும் அருமையாக அவர் நடத்தினார். அறிவிற்சிறந்த பெருமக்கள் தெரிவுக்குழு முன் ஆஜராகி தங்கள் கருத்தக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவை அனைத்தும் ஏற்கனவே அவையின்முன் வைக்கப்பட்டுவிட்டன. இதற்காக அவைக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாக மண்டல் கமிஷன்  அறிக்கையைத் தயார் செய்த, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன்,  இந்தக்குழுவின் முன் ஆஜரானார். திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இந்தக் குழுவின் முன் ஆஜரானார். அவர் இக்குழுவின் முன் சாட்சியம்  அளித்தார்.
தெற்கு, வடக்கிலிருந்து வேறுபட்டது என்பதை இங்கே உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு அமைச்சர் இதனைக் குறித்துக்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
1920களில் நடந்தவைகளை நாம் திரும்பிப் பார்த்தோமானால், மைசூர் மகாராஜா பிற்படுத்தப்பட்டவர்கள் மீது இரக்கம் காட்டத் தொடங்கினார், அவர்களுக்குக் கல்வி அளித்தார், அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்தார். பின்னர், நாம் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்த்தோமானால், மாண்புமிகு உறுப்பினர்கள் முத்துக்கருப்பன்  மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியதுபோல, அது ஓர் அற்புதமான மாநிலமாகும். கடந்த 80 முதல் 90 ஆண்டு காலமாக அது பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் போராடி வந்தது. இந்த அவை திராவிடக் கழகத் தலைவர் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திட வேண்டும். அவர், பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் அல்லும்பகலும் அயராது பாடுபட்டு வந்தார். அவர் அதில் சமரசமே செய்து கொள்ளவில்லை. அதுதான் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் மிகவும் சரியானமுறையில் போராட்டம் நடத்தி, வகுப்புவாத அரசாணையைப் பெற்றுத்தந்தார். வகுப்புவாத முதல் அரசாணை திராவிடக் கழகத்தாலும் தந்தை பெரியாராலும் பெறப்பட்டது.
கேரளாவிற்குச் சென்றோமானால், அங்கே நாராயணகுரு அவர்கள் அனைத்துப் பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காகவும்  வாழ்ந்து வந்தார். அவர்களின் மேம்பாட்டிற்காகப் போராடி, அவற்றைப் பெற்றார். கேரளாவில் கல்வியின் அளவு என்னவென்பதை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இன்றையதினம் இவ்வாறு கேரளாவும், தமிழகமும் எப்படி முதல் மாநிலங்களாகத் திகழ்கின்றன. நாராயண குருவும், தந்தை பெரியாரும், தொடர்ந்து வந்த தமிழக  அரசாங்கங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் அவற்றிற்குக் காரணங்களாகும்.  திமுக அரசாங்கம், அஇஅதிமுக அரசாங்கம் ஆகிய இரண்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கின்றன.
ஜெய்ராம் ரமேஷ்: காமராஜரும்தான்.
டி.கே.ரெங்கராஜன்:  காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்காரணமாக தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்தது,
ஜெய்ராம் ரமேஷ்: இதனை காமராஜர்,  திமுக, அஇஅதிமுக அரசாங்கங்கள் வருவதற்குமுன்பே செய்தார்.
டி.கே.ரெங்கராஜன்: நான் என்னுடைய நண்பர் ஜெய்ராம் ரமேஷின் கூற்றை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் வட இந்தியாவின் நிலை என்ன? இப்போதும்கூட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.  இது நமக்கு அவமானம் இல்லையா?  எனவேதான் இந்த அவையின்முன்பு மிகச் சரியானமுறையில் எங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துகொண்டிருக்கிறோம்.
சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை  அடையாளம் காண்பதற்கு மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும். தில்லியிலிருந்துகொண்டு எல்லாவற்றையும் நீங்கள் அடையாளம் கண்டுபிடித்திட முடியாது. அல்லது, இங்கேயுள்ள அதிகார வர்க்கம் எல்லாவற்றையும் அடையாளம் கண்டிட முடியாது. 
உச்சநீதிமன்றம், 1992 நவம்பர் 16 அன்று மண்டல் வழக்கில் அளித்துள்ள முத்திரை பதித்த தீர்ப்பில், 1990ஆம் ஆண்டின் ஆணையின் செல்லுபடித் தன்மையை உறுதிசெய்தது.   அதன்பின்னர் உச்சநீதிமன்றம் முன் நிபந்தனைகளாகப் பிறப்பித்த இரு கட்டளைகளும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.   இவை அனைத்தையும் இந்தச்சட்டமுன்வடிவிற்குள் நீங்கள் கொண்டுவந்து இணைக்காவிட்டால், அவ்வாறு இதனை நீங்கள் சட்டமாக்காவிட்டால், பின்னர் எவராவது உச்சநீதிமன்றத்திற்குச் செல்வார்கள், இதற்கு எதிராக வழக்குத் தொடுப்பார்கள். அது மற்றுமொரு குறுக்கீட்டிற்கு வழி வகுத்திடும்.
இந்தச்சட்டமுன்வடிவு, சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினர் வரவேற்கக்கூடிய நல்ல அம்சங்கள் பலவற்றைப் பெற்றிருக்கிறது. அதேபோன்று எதிர்காலத்தில் சில ஐயுறவுகளை உருவாக்கக்கூடிய அம்சங்களும், சில பகுதிகளில் பொருள் தெளிவின்மையும் காணப்படுகின்றன.  இந்தச் சட்டமுன்வடிவைக் கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பது, சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் பயன் தராது என்பதே என் கருத்தாகும்.  அதே சமயத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஐயுறவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைச் சரிப்படுத்திட வேண்டியதும், தெளிவற்றிருக்கக் கூடியவற்றை தெளிவுபடுத்திட வேண்டியதும் அவசியமாகும்.
நான் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான அம்சமாக விளங்கும் 338B (5), (a), (b), (c), (d) மற்றும் (e) ஆகிய பிரிவிற்கு நேரடியாகவே வருகிறேன்.  இது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் நீண்ட கால விருப்பமாகும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையம், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  அமைப்பு, தலித்துகள்/பழுங்குடியினர்களுக்கான நலன்கள் குறித்து துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை இந்தப் பிரிவை வலுப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றன.  நேரமின்மை காரணமாக, இதன்மீது ஒவ்வொரு பத்தியாக எடுத்துக்கொண்டு பேச நான் விரும்பவில்லை.
இதில் மூன்று அல்லது நான்கு ஆக்கபூர்வமான அம்சங்கள் இருக்கின்றன. நேரமின்மை காரணத்தால் நான் அதற்குள் பத்தி, பத்தியாக செல்ல விரும்பவில்லை.  ஆணையம்/நடுவர் மன்றங்களின் அறிவுரை சாதாரணமாக மத்திய அரசைக் கட்டுப்படுத்தும் என்கிற உச்சநீதிமன்றத்தின் கட்டளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தேசிய ஆணையச் சட்டத்தில் மீளவும் எடுத்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அது, இப்போது கொண்டுவரப்படக்கூடிய சட்டமுன்வடிவிலும் இடம் பெற வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த கட்டளை தொடர வேண்டும். அது இந்த சட்டமுன்வடிவில் இல்லாதது மிகவும் ஆழமான  இடைவெளியாகும். இது சரி செய்யப்பட வேண்டும்.  
மற்றுமொரு மிக முக்கியமான ஒன்று இந்த ஆணையத்தின்  வல்லுநர் குழு சம்பந்தப்பட்டதாகும். இந்த வல்லுநர் குழு உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். மண்டல் கமிஷன் தீர்ப்பில் உச்சநீதிமன்றம், தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இல்லாதவற்றை நீக்கிடவும், புதிதாக சிலவற்றை சேர்த்திடவும் கட்டளையிட்டிருந்தது. அவற்றை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்திட வேண்டும் என்றும், உடனடியாக அல்ல என்றும் கூறியிருந்தது. மத்திய  அரசாங்கம், பத்தாண்டுகள் கழித்து, பட்டியல்களில் திருத்தங்களை செய்வது தொடர்பாக, நடவடிக்கைகள் எடுத்து அவ்வாறு திருத்திய பட்டியலை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருந்தது.  அரசமைப்புச் சட்டத்தின் 342A சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் கல்விரீதியாக உள்ள  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பட்டியல் சம்பந்தமான குடியரசுத் தலைவரின் அறிவிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தால் சேர்க்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்டவற்றை  தொடர்பாக மாநில  அரசுகளுக்கு உள்ள உரிமைகளை திரும்பப் பெறுகிறது.  அரசாங்கம் இதனை மறுத்திருக்கிறது. மாநில அரசுகளின் உரிமைகள் இந்தச் சட்டமுன்வடிவால் பாதிக்கப்பட வில்லை என்கிறது. அரசாங்கத்தின் இந்தக் கருத்துக்களை இந்தச் சட்டமுன்வடிவின் ஷரத்துக்களை ஆய்வுசெய்வதன் மூலம் நியாயப்படுத்தப்பட வேண்டியது தேவை. 342A பிரிவைப் படித்தோமானால்,  சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரையே சாரும். அதாவது, மத்திய அரசும் அதன் அமைச்சரவையையுமே சாரும்.  அமைச்சரவையின் அறிவுரையின்படிதான் குடியரசுத்தலைவர் செயல்பட முடியும்.  அதனைத் தொடர்ந்து பட்டியலில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர விரும்பினால்  அதனை நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவர முடியும். இது தற்போது மாநில அரசாங்கங்களுக்கு மாநில அரசாங்கங்களில்  வேலைகளுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு உள்ள உரிமைகளை  நீக்கிவிடுகிறது.  இது ஒருபக்கத்தில், சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்பினரின் பிரச்சனையாகும், மறுபக்கத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயுள்ள பிரச்சனையாகும்.  
அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் பட்டியலும், மாநில அரசின் பட்டியலும் ஒத்துப்போகும். பல மாநிலங்களில் வித்தியாசம் கிடையாது. ஒருசில மாநிலங்களில் ஆதிக்க சாதியினரின் நிர்ப்பந்தங்களின்காரணமாக ஆட்சியாளர்கள் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் புகழ்பெற்ற மேதைகளால் பரிந்துரைக்கப்பட்டவைகளைக் கூட நிராகரித்திருக்கின்றன. ஆதிக்க சாதியினரின் நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு மாற்றங்களைச் செய்த மாநில அரசாங்கங்களை நான் பட்டியலிட முடியும்.
இந்தக்குழுவில் ஒரு பெண் உறுப்பினர் இருக்க வேண்டும், ஒரு பிற்படுத்தப்பட்டவர் இருக்க வேண்டும்.  சிறுபான்மையினத்தவர் ஒருவர் இருக்க வேண்டும். இந்தக் குழு சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களின் பிரச்சனைகளைப் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே முற்படுத்தப்பட்ட இனத்தினரிடமிருந்து நிர்ப்பந்தம் இந்த அரசுக்கு இருக்கிறது. வாக்கு வங்கி அரசியல் இங்கே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக சில மாநில அரசுகள் மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு பெற்றிட முயற்சிக்கலாம். இதற்கு மத்திய அரசு இடம்கொடுக்கக்கூடாது. ஆணையம் இருக்க வேண்டும்.
நான் இந்த விவாதத்தை முடிக்கும் தருவாயில், அமைச்சர் பூபேந்திரஜிக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஆளும் கட்சியினரைப் பார்த்து ஒன்று  கேட்க விரும்புகிறேன். அரசாங்கத்தில் ஜனசங்கம் இருந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்? பீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா?  அவர் எதையும் பரிசீலிக்கவில்லை. (குறுக்கீடு). நீங்கள் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய பிரதமர் குறித்து நிறையவே பேசுகிறீர்கள். வாஜ்பாயிஜி இருந்தபோது என்ன செய்தீர்கள்? மண்டல் கமிஷன் அறிவிக்கப்பட்டபோது உங்கள் நடவடிக்கை எவ்வாறிருந்தது? நீங்கள் ரத யாத்திரையைத் தொடங்கினீர்கள். (குறுக்கீடு). நீங்கள் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதுவுமே செய்ததில்லை. (குறுக்கீடு). அந்தப் பாதையில் போகாதீர்கள். பாதையை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச்சட்டமுன்வடிவிற்கு, நான் ஒரு திருத்தம் கொடுத்திருக்கிறேன். இதனை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மிகவும் நன்றி.”
இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் பேசினார்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: