Sunday, July 2, 2017

ஜிஎஸ்டி: மாநிலங்களின் உரிமைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன -பிரபாத் பட்நாயக்

 

இந்திய அரசமைப்புச் சட்டமானது நாட்டில் அரசியல் கூட்டாட்சிக் கட்டமைப்பை (political federal structure) முழுமையாக்கும் விதத்தில் ஒரு கூட்டாட்சி நிதிக் கட்டமைப்பையும் (a financial federal structure) நிறுவியிருக்கிறது.  மாநிலங்கள், தங்களுடைய தேவைகள் ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசை நாடக்கூடிய விதத்தில் பிச்சைக்காரர்கள் நிலைக்குத் தள்ளப்படுமானால், பின்னர் அதன் காரணமாகவே அது, தற்போதுள்ள கூட்டாட்சி அமைப்பையே தகர்த்திடும் நிலைக்கு எடுத்துச் சென்றிடும். எனவேதான் அரசமைப்புச் சட்டமானது சில குறிப்பிட்ட  வரிகளை மாநிலங்களே விதித்துக்கொள்ள அதிகாரம் அளித்திருந்தது. மேலும் நிதி ஆணையம் தொடர்பான நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடி, மத்திய அரசால் விதிக்கப்படாது விடுபட்டுள்ள வரிகளில் அத்தியாவசியமானவை எவை என்று ஆராய்வதற்கும், மாநிலங்களின் உண்மையான தேவைகளை உணர்வதற்கும் வாய்ப்பளித்தது.
எனினும், மத்திய அரசு, கொஞ்சம் கொஞ்சமாக மாநிலங்களைப் பட்டினிப் போடும் கொள்கைகளை  அமல்படுத்தத் தொடங்கியது.  அநேகமாக அனைத்து மாநில அரசுகளையும் தங்கள் தயவை எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களைப்போல மாற்றி அமைத்துவிட்டது. நிதி  ஆணையத்தின் அதிகார வரம்பு எல்லையையும் தன்னிஷ்டத்திற்கு மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டது. இவை அனைத்தும் நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உணர்வுகளை மீறும் செயல்களாகும். இவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.
மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன   
  2017 ஜூலை 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாநிலங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு, மாநில அரசுகளின் அரசமைப்புச்சட்ட உரிமைகளை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. வேண்டுமானால் நாட்டின்வளர்ச்சிக்காகஇது அவசியம் என்று சிலர்  வாதிடலாம். மாநில அரசுகள் மட்டத்தில் விற்பனை வரி இருந்து வந்தது. மாநில  அரசின் வரிவருவாயில் சுமார் 80 சதவீதம் விற்பனை வரியிலிருந்துதான் வந்துகொண்டிருந்ததுமாநிலங்களின் வருவாய்க்குப் பிரதான  அம்சமாக விற்பனை வரிதான் இருந்து வந்ததுஇனி விற்பனை வரியை எந்த மாநில அரசும் விதிக்க முடியாது. இனி  ஜிஎஸ்டி வரிதான். இந்த வரி நேரடியாக மத்திய அரசுக்கு சென்றுவிடும். இதன்பின்னர்  ஜிஎஸ்டி கவுன்சில் கூடி மாநிலத்திற்கு  நிதியை ஒதுக்கிடும். இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசுடன் சேர்ந்து,  மாநில அரசின் சார்பிலும்  ஓர் உறுப்பினர் இருப்பார். ஆனால் அவருக்கு அநேகமாக எந்த அதிகாரமும் கிடையாது. இவ்வாறு இந்த ஜிஎஸ்டி மூலமாக மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன என்பது தெள்ளத்தெளிவாகும்.
மாநில அரசுகளுக்கு இருந்த வரி விதிக்கும் அதிகாரங்களை மாநிலங்கள் இழந்தபின்னர், எத்தனை ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அதற்கான இழப்பீடுகளை அளித்து வரும்?  எவருக்கும் தெரியாது. இது, அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சம்பந்தப்பட்ட கேள்வியாகும். எப்படி, இப்போதைய நாட்டின் அரசியலமைப்பை மத்திய ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பினாலும், “இந்து ராஷ்ட்ரம்என்று பிரகடனம் செய்ய முடியாதோ, அதேபோன்று, மாநிலங்களின் அதிகாரங்களையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்பினாலும்கூட, மத்திய அரசால் தன்னிஷ்டத்திற்குப் பறித்துக் கொள்ளமுடியாது. அவ்வாறு செய்தால், அது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.
ஜிஎஸ்டி எனப்படும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரிஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு அதிக அளவில் பங்களிப்பினைச் செலுத்திடும் என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க போலித்தனமான  பொருளாதாரக்கூற்று ஆகும். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு எவ்விதமான அடிப்படையும் கிடையாதுவரி சீர்திருத்தங்கள் மூலமாகவெல்லாம் முதலாளிகளின் முதலீடுகளை அதிகரித்திட முடியாது. ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயங்களை முதலாளிகள் தங்கள் பைகளில் நிரப்பிக்கொள்வார்களேயொழிய, அவற்றை முதலீட்டிற்கோ, வளர்ச்சிக்கோ பயன்படுத்த மாட்டார்கள்.
அமெரிக்காவில் எந்தவிதத்தில் இருக்கிறது?
ஜிஎஸ்டி அமெரிக்காவில் எந்தவிதத்தில் இருக்கிறது? நாடு தழுவிய அளவில் சந்தையை  உருவாக்குவதற்கு, பல்வேறுவிதமாக விதிகங்கள் விதித்திட்ட போதிலும்  அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீரான ஜிஎஸ்டி தேவை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவையே மேற்கோள் காட்டப்படுகிறதுஉண்மையில் அமெரிக்காவில் இவ்வாறு ஒரே சீரான விகிதம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான விகிதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனஉலகின் மிக வலுவான முதலாளித்துவ நாடான  அமெரிக்காவில் ஒரே சீரான சந்தை இல்லை என்பது முரண்நகைதான்இப்போது இந்தியாவில் ஜிஎஸ்டி  அமல்படுத்தப்பட்டிருப்பதுபோல அமெரிக்காவில் சீரான விகிதம் இல்லாததற்கு காரணம் என்ன? ஏனெனில் அந்த நாடு கூட்டாட்சித் தத்துவத்தைப் பெரிய அளவில் மதிக்கிறது.  (கூட்டாட்சித் தத்துவத்தை அமெரிக்கா எந்த அளவிற்கு ஆழமாக (சீரியசாக) எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம், அங்கேயுள்ள ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்நாட்டின் மேல்சபையான செனட் சபைக்கு இரு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது மிகப்பெரிய மாநிலமான நியூ யார்க் அல்லது கலிபோர்னாவிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான். அதேபோன்று மிகச் சிறிய மாநிலமான டெலாவாரே அல்லது ரோடீ ஐலாண்ட்டிற்கும் இரண்டு பிரதிநிதிகள்தான்.)  உலகின் மிக வலுவான முதலாளித்துவ நாடு என்று சொல்லப்படக்கூடிய  அமெரிக்காகூட, கூட்டாட்சித் தத்துவம் போன்ற அரசமைப்புச்சட்ட மாண்புகளை உயர்த்திப்பிடிக்கிறது. முதலாளிகள் விருப்பத்திற்கு அது செவிசாய்க்கவில்லை. ஆனால் இந்தியா  ஏன் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானதும், நாட்டின் ஒற்றுமைக்கு ஓர் ஆழமான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.  இது மாநிலங்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்கி இருக்கிறது. இதன்காரணமாக மத்திய ஆட்சி எதேச்சதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான பாதையை அமைத்துத்தந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான  நிகழ்ச்சிப்போக்காகும்.  மாநில அரசுகள் தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் தங்கள் தேவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசின் தயவையே நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது மத்திய அரசுக்கு, மாநில அரசுகளைத் தங்கள் இஷ்டத்திற்கு, தங்கள் விருப்பம்போல் ஆட்டிப்படைப்பதற்கான வாய்ப்பினை அளித்திடும்.  “குடியரசுத்தலைவருக்கான எங்கள் வேட்பாளரை ஆதரிக்கவும், உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்,” என்றோ அல்லதுநாங்கள் விரும்பும் அல்லது நாங்கள் கோரும் இந்து ராஷ்ட்ரத்தை ஆதரிக்கவும், உங்கள் தேவைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்,” என்கிற ரீதியிலோ அவை அமையும். சுருக்கமாகச் சொல்வதானால், மதச்சார்பின்மைக்கான போராட்டமும், ஜனநாயகத்திற்கான போராட்டமும் நம் நாட்டின் கூட்டாட்சித்தத்துவத்தின் மீது அமைந்துள்ள  அரசியலமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்ததாகும்இவ்வாறு ஜிஎஸ்டி மாநில அரசுகளின் நிதிக் கட்டமைப்பின் மீது கைவைத்திருக்கிறது. இது மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும்.
மத்தியில் அதிகாரம் குவிவதற்கு எதிராக ஏற்கனவே பல மாநிலங்களில் எதிர்ப்புக்கிளர்ச்சிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அம்மாநிலத்தின்  அரசமைப்புச்சட்டத்தின் 370 ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களை வெட்டிச் சுருக்கும் என்பதால் ஜிஎஸ்டிக்கு எதிராக கிளர்ச்சிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் ஆளும் வர்க்கங்களோ, கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இயங்கிடும் ஊடகங்களோ கவலைப்படவில்லைஉண்மையில் இது தொடர்பாக விவாதம் எதுவும் புதுதில்லியில்  நடைபெறவில்லை.
ஜிஎஸ்டி ஏற்பாட்டின்மூலமாக ஒரு குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் அளிக்கப்பட்டு, அதற்கும் மேல் மாநில அரசுகள் தாங்கள் விரும்பிய வண்ணம் வரி விதித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டால் பிரச்சனைகள் வேறுமாதிரியாக இருக்கக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படாது இருக்கக்கூடும்ஆனால், மாநிலங்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில்தான் நிர்ணயித்திடும் எனக்கூறி மாநிலங்கள் அதற்குள் கட்டிப்போடப்படுமானால், அது மாநிலங்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களாகும். அதனை நம்முடைய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அனுமதிக்க முடியாது.
(தமிழில்: . வீரமணி)


No comments: