Sunday, December 4, 2016

மதவெறி அபாயத்தை எதிர்த்து முறியடித்திடுவதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்திடுவோம்



டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இருண்ட  செயலினை அனுசரித்திடும் நாளாகும்.  முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா வெறிக்கும்பல் பாபர் மசூதியை இடித்துத்தரைமட்டமாக்கியதன் மூலம் இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின்மீதே கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்தது. இந்த ஒரு செய்கையின் மூலம், அவை அரசமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி,  அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற உருவரையை இடித்துத்தரைமட்டமாக்கிடுவதே தங்கள் நோக்கம் என்பதையும் அறிவித்தார்கள்.  
சங் பரிவாரக்கும்பல் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிட டிசம்பர் 6 தேதியைத் தேர்ந்தெடுத்தது என்பதும்கூட, ஏதோ ஒரு தேதி என்றமுறையில் மட்டும்  அல்ல.  டிசம்பர் 6 அன்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பியான  டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவுதினம் நாடு முழுதும் வெகுவிமரிசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான மக்கள், (இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்,) மும்பை, தாதர் கடற்கரையில் அம்பேத்கரின் அஸ்தி தூவப்பட்ட இடத்தில் குழுமுவார்கள். 
பாபர் மசூதியைத் தகர்த்திட, சங்பரிவாரம் இந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம், அவை அம்பேத்கர் மீது மிகவும் ஆழமான முறையில் பகைமையைக் கொண்டிருந்ததாகும். டாக்டர் அம்பேத்கர் இந்து சட்டங்களில் அவர்கள் விரும்பாத விதங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்ததை முதலில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளாலும், அதன் துணை அமைப்புகளான இந்து மகா சபா, இந்துத்துவா பேர்வழிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அரசியல் நிர்ணய சபையில் கடைசியாக அரசமைப்புச் சட்டம் அரசமைப்புச்சட்டக் குழுவின் தலைவர் என்ற முறையில் அவரால் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டபோது, ஆர்எஸ்எஸ் இயக்கமானது அதனை உடனடியாகக் கண்டிக்கத் தவறவில்லை.  அவர்களைப் பொறுத்தவரை அவர்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரே தர்மசாஸ்திரம் என்பது மனு தர்மம் மட்டுமேயாகும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மக்களை அணிதிரட்டிட அது மேற்கொண்ட பிரச்சாரம்தான் நாட்டில் பல மாநிலங்களிலும், 1998இல் மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாஜகவை முன்னுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமைந்த வாஜ்பாயி அரசாங்கம்,  அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஆட்களை அமர்த்திடுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தது. தங்களுடைய பிளவுவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப, மதவெறித் தீயை விசிறிவிடக்கூடிய விதத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான வேலைகளிலும் இறங்கியது. 
பத்தாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பான்மையுடன் மக்களவையில் மோடி அரசாங்கம்ஆட்சிக்கு வந்தது.  இதன்பின்னர் இவர்கள் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலை மேலும் மூர்க்கத்தனத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கினர்.  உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் ஊடுருவத் தொடங்கினர். `வீட்டிற்குத் திரும்புவோம்(ghar vapsi)`, `புனித காதல்(love jihad)` மற்றும் `பசுவைப் பாதுகாப்போம் (gau raksha)` என்ற வேடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கொடூரமானமுறையில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். முஸ்லீம்களை பயங்கரவாதிகள் என்றும் தேசவிரோத சக்திகள் என்றும் முத்திரை குத்தினர். ஜனநாயக உரிமைகள் மீது எதேச்சாதிகாரமான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமையும் இரக்கமின்றி நசுக்கப்படுகின்றன. நீதித்துறை நியமனங்களிலும் தலையிடுவதற்கு மிகவும் தீவிரமானமுறையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகை சுதந்திரமும் மிகவும் மோசமானமுறையில் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 
இவ்வாறு பாபர் மசூதி தகர்ப்பு என்பது, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக இந்தியாவிற்கு எதிரான ஒரு நீண்டகால  யுத்தத்தின் தொடக்கமாகும்.  எனவே, டிசம்பர் 6 என்பது இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு நாளாகவே அனுசரிக்கப்பட வேண்டும். மிகவும் விரிவான முறையில் மக்களை ஒன்றுபடுத்தி,  இவர்களின் எதேச்சாதிகார - மதவெறித் தாக்குதல்களை, எதிர்த்து முறியடித்திட, நம் உறுதியை மீளவும் புதுப்பித்துக்கொள்ள இந்த நாளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  நவீன தாராளமயம் மற்றும் பிளவுவாத மதவெறி ஆகிய இரண்டுக்கும் எதிராக, வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களைக் கட்டி எழுப்பி இதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)
 

No comments: