டாக்டர் அமர்த்தியாசென்
பிரதமர் நரேந்திர மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது புத்திசாலித்தனமான செய்கையும் கிடையாது. மனிதாபிமானமுள்ள செய்கையும் கிடையாது.மோடியின் இந்நடவடிக்கையானது, கொடுங்கோன்மைமிக்கதும் எதேச்சதிகாரமானதும் ஆகும். கறுப்புப்பணத்தைக் கையாண்டிட இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவதானது, அனைத்து இந்தியர்களும் சிரிக்கத்தக்க ஓர் நடவடிக்கையாகும்.
நவம்பர் 8 அன்று தொலைக்காட்சியில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி தோன்றி, இவ்வாறு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார்.புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவீத அளவிற்கு மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், ரொக்க நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பிரதமர், இதனைச் சரிசெய்திட, ‘50 நாட்கள்’ ஆகும் என்றும், ‘ஊழல்’ மற்றும் ‘வரி ஏய்ப்பு’ ஆகியவற்றிற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டிருப்பதால் அதுவரைக்கும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.மொத்தம் உள்ள கறுப்புப்பண அளவில் வெறும் 6 சதவீத அளவிற்குத்தான் நாட்டிற்குள் பணப் புழக்கத்தில் கறுப்புப்பணம் இருந்து வருகிறது. நிச்சயமாக அது 10 சதவீதத்திற்குள்தான் இருந்திடும்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததானது, சாதனை என்று பார்த்தோமானால் மிகமிகச்சிறிய அளவிற்குத்தான், ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் சீர்குலைவினை ஏற்படுத்தி இருக்கிறது. கறுப்புப்பணத்தைக் கருவறுக்க ஏதாவது செய்ய வேண்டும்தான்; ஆனால் அது புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானத்துடனும் இருந்திட வேண்டும்.புதிய நோட்டுகள் இன்னமும் புழக்கத்திற்கு வராததால், வங்கிகள் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் திண்டாடுகின்றன. ஏடிஎம் மிஷின்கள் புதிய நோட்டுகளை வைக்கக்கூடிய அளவிற்கு இன்னமும் மாற்றியமைக்கப்படாமல் மூடிக் கிடக்கின்றன. கிராமப்புறங்கள் முறையான வங்கிச் செயல்பாடு இல்லாமல் துண்டித்துவிடப்பட்டுள்ளன.இதைக் கொடுங்கோன்மை என்று சொல்வேன். கொடுங்கோன்மை என்று சொல்வது ஏனென்றால், இது கரன்சி மீதான நம்பகத்தன்மையையே தகர்த்தெறிந்துவிட்டது என்பதால்தான்.
ரூபாய் நோட்டுகள் என்பவை பிராமிசரி நோட்டுகளாகும். அதாவது அரசாங்கம் மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கும் மதிப்பு மிக்க தாள்கள் ஆகும். எந்தவொரு அரசாங்கமும் அதனை மதித்திடவில்லை என்றால் அது மக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறிய செயலாகும். திடீரென்று மக்களைப் பார்த்து அரசாங்கம் உனக்கு இந்த நோட்டுக்கு ரூபாய் தர மாட்டேன் என்று சொல்கிறது என்றால் அது கொடுங்கோன்மை இல்லாமல் வேறென்ன? நான் ஒன்றும் முதலாளித்துவத்தின் விசிறி அல்ல. முதலாளித்துவத்திற்கும் நம்பகத்தன்மைதான் (trust) திறவுகோலாகும். இந்த நடவடிக்கையானது அத்தகைய நம்பகத்தன்மைக்கு எதிரான ஒன்றாகும்.
முதலாளித்துவத்திற்குக் கூட மிகவும் அடிப்படையாக உள்ள பொருளாதாரத்தையே கீழறுத்திடும் அபாயம் இந்த நடவடிக்கையில் மறைந்திருக்கிறது. இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை என்றால், இன்று இதனை செய்த அரசாங்கம் நாளை இதனையே வங்கியில் உள்ள நோட்டுகளுக்கும் செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எதுவும் செல்லாது என்று கூறமுடியும். என்னுடைய சங்கடம் என்னவென்றால், இந்த நடவடிக்கையின் காரணமாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்துவருகிற பிரஜைகளும், வெள்ளைப் பணம் வைத்திருக்கிற சாமானிய மக்களும் கடும் துன்பங்களை அனுபவிக்கத் தள்ளப்பட்டிருப்பதுதான். அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்று கூறுவதற்கு 31 சதவீத மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக உரிமம் பெற்றதாகக் கூற முடியாது.
-(டாக்டர் அமர்த்தியாசென் என்டிடிவிக்கு
அளித்துள்ள பேட்டியிலிருந்து)
(தமிழில்:
ச.வீரமணி)
1 comment:
சென்னுக்கு பொருளாதாரம் பற்றி என்ன அறிவு இருக்கிறது....? இந்த கேள்வி சத்தியமா நான் கேட்கமாட்டேன்...ஆனா ஒரு கூட்டம் கேட்கும்...
http://naanoruindian.blogspot.in/2016/11/blog-post_23.html
Post a Comment